கோட்டாபய வெற்றியால் இந்திய – இலங்கை உறவு மாறிவிடாது”: என். ராம்

கே. இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரும் முந்தைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றிருக்கிறார். இந்த தேர்தல் முடிவு சொல்வதென்ன?

ப. ஒரு கணிசமான வாக்குகளைப் பெற்றுத்தான் அவர் வெற்றிபெற்றிருக்கிறார். அங்கே வெற்றிபெற ஐம்பது சதவீத வாக்குகளைத் தாண்டினால் போதும். கோட்டாபய அதைவிட அதிகமான வாக்குகளையே பெற்றிருக்கிறார். இதை நாம் ஏற்க வேண்டும். வடக்கிலும் கிழக்கிலும் உள்ள சிறுபான்மையினர் சஜீத்திற்கு வாக்களித்திருந்தபோதிலும் ஒட்டுமொத்தமாக இலங்கை வாக்காளர்கள் கோட்டாபயவிற்கு வாக்களித்துள்ளனர். இந்த வெற்றியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பெரும் பங்கு இருக்கிறது. ஒரு புதிய யுகத்தை இவர் துவங்கி வைப்பாரா என்பதைப் பார்க்க வேண்டும். தவிர, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கும் நாடாளுமன்றத்திற்கும் இடையில் ஒரு மோதல் இருக்கிறது. அந்த மோதலை இவர் எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்பதையும் கவனிக்க வேண்டும்.

கே. வடக்கிலும் கிழக்கிலும் உள்ள சிறுபான்மை மக்கள் பெரும்பாலும் சஜீத் பிரேமதாஸவுக்கு வாக்களித்திருக்கின்றனர். ஆனால், அவர்கள் வாக்குகளுக்கு எதிராக முடிவு வந்திருக்கிறது..

ப. இதை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான். ஆனால், தமிழ்த் தலைவர்கள் ஏற்கனவே ராஜபக்ஷ தரப்புடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், இந்த புதிய ஜனாதிபதி அதிகாரப் பகிர்வை ஒப்புக்கொள்வாரா என்பதுதான் முக்கியமான கேள்வி. அதிகாரப்பகிர்வு போதுமானதாக இல்லை என்பது தமிழர்களுடைய குற்றச்சாட்டு. வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், அதிகாரப் பகிர்வு கிடைப்பது கடினம் என்றுதான் தோன்றுகிறது. ஆனால், புதிய வாய்ப்பு உருவாகியிருக்கிறது. ஆகவே தமிழர்கள் தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். தேவையானால் போராட வேண்டும்.

கே. புதிய ஜனாதிபதி தமக்கு வாக்களிக்காத சிறுபான்மை மக்களை எப்படி அணுகுவார் எனக் கருதுகிறீர்கள்?

ப. தேர்தலில் வெற்றி – தோல்வி என்பது சாதாரணமான விஷயம்தான். தேர்தலில் தாங்கள் ஆதரித்த தரப்பு வெற்றிபெறவில்லையென்ற ஏமாற்றம் தமிழ் மக்களுக்கு இருக்கலாம். ஆனால், அதை ஏற்றுக்கொண்டு அவர்கள், ஜனாதிபதியுடன் பேசி கோரிக்கைகளை வைக்க வேண்டும்.

இலங்கையில் உள்ள மற்றொரு பிரச்சனை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை. ஜனாதிபதி அதிக அதிகாரம் கொண்டவராக இருந்தால் அவர் ஜனநாயக நடைமுறைகளை மதிக்க மாட்டார். அமெரிக்காவில் அதுதான் நடக்கிறது. ஆனால், இலங்கையில் விகிதாச்சார பிரதிநிதித்துவம் இருப்பதால் நாடாளுமன்றத்திற்கு ஒரு அதிகாரம் இருக்கிறது. அதை மதித்து கோட்டாபய நடப்பார் என எதிர்பார்க்கிறேன்.

ஆனால், எதிர்காலத்தில் மஹிந்த பிரதமராகக்கூடும். இப்போது அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். இப்போதே ஆட்களை தம் பக்கம் இழுத்து பிரதமராவாரா அல்லது பாராளுமன்றத்தைக் கலைத்து போட்டியிடுவாரா என்பதைப் பார்க்க வேண்டும். அவர் அதில் வெற்றிபெற்று பிரதமரானால், அதற்குப் பிறகு யார் அரசின் தலைவராக இருப்பார் என்பதைக் கவனிக்க வேண்டும். அது ஒரு முக்கியமான விஷயம்.

என். ராம்
Image caption என். ராம்
கே. இந்தத் தோல்விக்குப் பிறகு ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சந்திரிகா குமாரதுங்க ஆகியோரின் அரசியல் எதிர்காலம் என்ன?

ப. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் (எஸ்எல்எஃப்பி) பொறுத்தவரை, அந்தக் கட்சி அமைப்பு முழுமையாக பலவீனமடைந்துவிட்டது. உண்மையான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்பது மஹிந்த தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனதான். இரு கட்சிகளும் இணைந்தால் இன்னும் வலுவாவார்கள். ஆனால், எஸ்எல்எஃப்பி விதிகளின்படி யார் ஜனாதிபதியோ அவர்கள்தான் கட்சித் தலைவராவார்கள். இப்போது மைத்திரிபால சிறிசேன கட்சித் தலைவராக இருக்கிறார். இனி அவர் கிட்டத்தட்ட அரசியலில் இருந்து ஓய்வுபெற வேண்டியதுதான்.

ரணிலைப் பொறுத்தவரை அவருக்கென ஒரு அரசியல் அந்தஸ்து இருக்கிறது. இந்தத் தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்த்தால் அரசுக்கு எதிரான மனநிலை தீவிரமாக இருக்கிறதென்றுதான் சொல்ல வேண்டும். நாடு முழுவதுமே இருந்தாலும் தெற்கில் அதிகம் அது பிரதிபலித்திருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, மஹிந்த தரப்பு வெற்றிபெற்றால், ரணில் எதிர்க்கட்சித் தலைவராக வேண்டியிருக்கும் ஆனால், அவருடைய அரசியல் பயணம் தொடரும் என்பதில் சந்தேகமில்லை.

கோட்டாபய ராஜபக்ஷ
கே. கடந்த ஆட்சிக் காலத்தில் புதிய அரசியல் சாஸனத்தை எழுதும் நடவடிக்கைகள் துவங்கின. அந்தப் பணி பாதியில் நிற்கிறது. இனி என்ன நடக்கும்?

ப. அதில் ஒன்றும் நடக்காது என்றுதான் கருதுகிறேன். கடந்த அரசிலேயே பாதியில் விட்டுவிட்டார்கள். இனி அதை அப்படியே ஓரங்கட்டிவிடுவார்கள். அவ்வளவுதான்.

கே. மஹிந்த தரப்பைப் பொறுத்தவரை அவர்கள் தலைமையிலான அரசு எப்போதும் சீனாவுக்கு நெருக்கமான அரசு என்ற எண்ணம் உண்டு. இந்த வெற்றி இந்தியா – இலங்கை உறவில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?

ப. இலங்கை முழுவதுமாக சீனா பக்கம் நிற்கிறது என்பது ஒரு மிகைப்படுத்தப்பட்ட தோற்றம். அது உண்மையல்ல. தவிர, கோட்டபய இந்தியாவோடு நெருக்கமாகவேதான் இருந்திருக்கிறார். ஆகவே, அவர் ஜனாதிபதியாக வருவதால் இலங்கை – இந்திய உறவில் ஏதும் மாறாது. ஒரு வழக்கமான உறவே நீடிக்கும். உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும்.

ராஜீவ் காந்தி மரணத்திற்குப் பிறகு, இந்தியா தொடர்ந்து இலங்கை அரசுடன் நெருக்கமாகத்தான் இருந்து வருகிறது. நரசிம்மராவ் துவங்கி, யார் பிரதமராக இருந்தாலும் இந்தக் கொள்கையில் மாற்றம் ஏற்படவில்லை. ஆகவே கோட்டபய ஜனாதிபதியாகியிருப்பதால் எதுவும் மாறிவிடாது.