சர்வகட்சி அரசாங்கம் தீர்வைத் தருமா?

இந்தக் கடிதமும் சர்வகட்சி அரசாங்கம் என்ற எண்ணக்கருவும், இப்போது அரசியல் கட்சிகளுக்கு இடையேயும் அரசியல்வாதிகளுக்கு இடையேயும் பல்வேறு வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்துள்ளன. 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், சர்வகட்சி அரசாங்கம் ஒன்றில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக அக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரனை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது. 

ரணில் விக்கிரமசிங்க, சிங்கள மக்களின் துரோகி என்றும் நாட்டை புலிகளுக்கு தாரைவார்த்துக் கொடுக்க முற்பட்டவர் என்றும் ஏகாதிபத்தியவாதிகளின் அடிவருடி என்றும் கூறி வந்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவும் அரசாங்கத்தில் சேர முயல்வதாகத் தெரிகிறது. 

அதேவேளை, சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க, நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுக்காமல், அக்கட்சிகளின் உறுப்பினர்களுக்கு தனித்தனியாக கடிதம் அனுப்பியதன் மூலம், அக்கட்சிகளுக்குள் பிரச்சினைகளை உருவாக்க முயல்வதாக, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது. 

அது நியாயமான குற்றச்சாட்டாகும். ஏனெனில், தனித்தனியாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவ்வாறான கடிதங்கள் அனுப்புவதன் மூலம், அந்த உறுப்பினர்கள் ஒவ்வொருவர் மனதிலும் அமைச்சர் பதவிகளுக்கான ஆசை ஊட்டப்படுகிறது. அதன் மூலம் அவர்கள் தத்தமது கட்சித் தலைமையை புறக்கணித்து, அரசாங்கத்தில் இணைய முற்படலாம். அது அக்கட்சிகளுக்குள் பல்வேறு பிரச்சினைகள் உருவாகக் காரணமாகலாம். 

உண்மையிலேயே சர்வகட்சி அரசாங்கம் என்பது, சகல கட்சிகளினது தலைவர்களுக்கும் அமைச்சர் பதவிகள் கிடைக்கும் அரசாங்கம் என்றதொரு  கருத்தையே கொடுக்கிறது. எனவே, தமிழ் தேசிய கூட்டமைப்பு, சர்வகட்சி அரசாங்கத்தில் இணைய விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்படும் செய்தியைக் கேட்ட உடனேயே, அக்கட்சியின் தலைவர்களும் அமைச்சர் பதவிகளை ஏற்கப் போகிறார்கள் என்றதோர் எண்ணமே மனதில் உருவாகிறது. நடைமுறையில் ஓர்  அரசாங்கம், சர்வகட்சி அரசாங்கம் என்று கூறுவதற்கு அதைத் தவிர வேறு வழியே இல்லை.

இம்முறை, சர்வகட்சி அரசாங்கம் என்ற கருத்து நாடு எதிர்நோக்கி இருக்கும் சமூகப் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான முயற்சியாக எடுத்துக் காட்டப்பட்ட போதிலும், அது, அமைச்சர் பதவிகளைப் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்திலேயே முதன்முதலில் முன்வைக்கப்பட்டது. இன்றும் பல சிறிய கட்சிகளின் நோக்கம் அதுவேயாகும்.

கடந்த மார்ச் மாதம் இரண்டாம் திகதி தலவத்துகொடையில் நடைபெற்ற கூட்டமொன்றின் போது, அமைச்சர்களான விமல் வீரவன்சவும் உதய கம்மன்பிலவும் அரசாங்கத்தை விமர்சித்ததை அடுத்து, மூன்றாம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவ்விருவரையும் அமைச்சரவையில் இருந்து நீக்கினார். 

அந்நாள்களில், பொருளாதார பிரச்சினைகள் காரணமாக, நாளுக்கு நாள் நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்து வந்தன. அரசாங்கம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது தத்தளித்தது. மார்ச் மாதம் 31 ஆம் திகதி, மிரிஹானையில் உள்ள ஜனாதிபதியின் சொந்த இல்லத்தின் முன்னால், பாரியதோர் ஆரப்பாட்டம் நடைபெற்றது.

இவ்வாறான பின்னணியில், விமலும் கம்மன்பிலவும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மேலும் எட்டு சிறிய கட்சிகளின் தலைவர்களும், ஏப்ரல் முதலாம் திகதி ஜனாதிபதியுடன் நாட்டு நிலைமையைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சர்வகட்சி இடைக்கால அரசாங்கம் ஒன்றை உருவாக்கி, நாட்டில் அவசர பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு, விரைவில் பொதுத்தேர்தலை நடத்தி புதிய அரசாங்கத்தை தெரிவு செய்ய வேண்டும் என்ற கருத்தை, அச்சிறிய கட்சிகள் முன்வைத்தன.

இவ்வாறுதான், சர்வகடசி அரசாங்கம் என்ற எண்ணக்கரு தோன்றியது. சகல கட்சிகளும் ஒன்று சேர்ந்தால், வெளிநாட்டு செலாவணிப் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்ற கேள்வி இங்கே எழுகிறது. சில அரசியல்வாதிகளுக்கு அமைச்சுப் பதவிகள் இல்லாமல் வாழவே முடியாது. அவ்வாறான சில தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். இந்த விடயத்திலும் தாம் இழந்த அமைச்சர் பதவிகளை மீண்டும் அடைவதே விமல், கம்மன்பில ஆகியோரின் நோக்கமாகியது. 

அப்போது, கோட்டாபயவின் அரசாங்கம், எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனங்களுக்கு இலக்காகியது. அந்த நிலையில், சகல கட்சிகளும் அரசாங்கத்தில் இணைந்தால், எவரும் தமது அரசாங்கத்தை விமர்சிக்க மாட்டார்கள் என்று நினைத்தோ என்னவோ, கோட்டாவும் அந்த ஆலோசனையை ஏற்று, ஏப்ரல் மூன்றாம் திகதி தமது சகோதரரான பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவைத் தவிர, ஏனைய சகல அமைச்சர்களையும் இராஜினாமாச் செய்யுமாறு பணித்தார். பின்னர், சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை நிறுவ முன்வருமாறு, நாடாளுமன்றத்தில் உள்ள சகல அரசியல் கட்சிகளையும் கேட்டுக் கொண்டார். 

ஆனால், மூன்றாம் திகதி சமூக வலைத்தளங்கள் மூலம் அழைக்கப்பட்டு, கொழும்பில் பாரியதோர் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எனவே, சர்வகட்சி அரசாங்கம் என்ற கருத்தை முன்வைத்த சிறு கட்சிகளும் கூட,  அரசாங்கத்தில் இணையத் தயங்கின. எனினும், இந்தக் கருத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. மக்கள் விடுதலை முன்னணி தவிர்ந்த சகல கட்சிகளும், நாடாளுமன்றத்தில் இதனை ஏற்றுக் கொண்டன. “நாம் இவ்வாறான அரசாங்கத்தில் சேர்வதில்லை; ஆனால், இதற்கு ஒத்துழைப்போம்” என மக்கள் விடுதலை முன்னணி கூறியது.

நாட்டில், நிலவும் பெரும் சமூகப் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பதே, சர்வகட்சி அரசாங்கத்தின் நோக்கம் எனக் கூறப்படுகிறது. ஆயினும் சகல கட்சிகளும் ஒன்று சேர்ந்தால், தீர்வு எவ்வாறு வரும் என்ற கேள்விக்கு எந்தவொரு கட்சியும் பதிலளிப்பதில்லை. 

தீர்வு என்பது, உடல் உழைப்பால் காணக்கூடியதல்ல; அறிவால் காணவேண்டியதாகும். நாடாளுமன்றத்தில் சகல கட்சிகளும் ஆளும் கட்சியாக ஒன்று சேர்ந்து கலந்துரையாடினால், தீர்வைக் காணமுடியும் என்றால் அதே கட்சிகள், நாடாளுமன்ற கூட்டங்களின் போது கலந்துரையாடி ஏன் தீர்வு காண முடியாது? நாடாளுமன்றத்தில் முடியாது; ஆளும் கட்சிக் கூட்டத்தில் தான் முடியும் என்றால் நாடாளுமன்றம் எதற்கு? 

சர்வகட்சி அரசாங்கம் என்ற பெயரில், அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்தாலும் அரசியலமைப்பின் பிரகாரம் அது தேசிய அரசாங்கமாகவே அழைக்கப்படும். அரசியலமைப்பின் படி சாதாரண நிலைமையின் கீழ் அரசாங்கத்தில் 30 அமைச்சர்கள் தான் இருக்க முடியும். ஆனால், தேசிய அரசாங்கம் ஒன்றில் அமைச்சர்களின் எண்ணிக்கைக்கு வரையறை இல்லை. எனவே, சர்வகட்சி அரசாங்கம் அல்லது தேசிய அரசாங்கம் என்ற பெயரில் ஒன்றிணைய, குறிப்பாக சிறுகட்சிகள் விரும்புகின்றன. 

நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதே சர்வகட்சி அரசாங்கத்தின் நோக்கம் என்றால், எந்தவொரு கட்சியும் அமைச்சுப் பதவிகளைப் பற்றி அக்கறை செலுத்தத் தேவையில்லை. அமைச்சர் பதவிகளைப் பெறாமலே, அரசாங்கத்தில் இணைய சிறு கட்சிகள் முன்வர வேண்டும். அல்லது, அக்கட்சிகளின் திறமையானவர்களுடன் அந்த 30 அமைச்சர் பதவிகளை பகிர்ந்து கொள்ள பெரிய கட்சிகள் தயாராக வேண்டும். அதற்கு சிறிய, பெரிய கட்சிகள் தயாரில்லை என்றால், சர்வகட்சி அரசாங்கம் என்பது அமைச்சர் பதவிகளைப் பெறுவதற்கும் அதிகாரத்தை பலப்படுத்திக் கொள்வதற்குமான முயற்சியேயன்றி, பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் முயற்சி அல்ல. 

ஆளும் கட்சி, ஏனைய கட்சிகளுக்கு அமைச்சர் பதவிகளை வழங்கினால் தான், அக்கட்சிகள் ஆளும் கட்சியோடு இணையும் என்றால், அது இலஞ்சமேயன்றி வேறொன்றுமல்ல. எனினும், தேசிய அரசாங்கத்தை நிறுவ அவ்வாறு இலஞ்சம் வழங்குவதையும் பெறுவதையும் அரசியலமைப்பு அங்கிகரிக்கிறது. அதனால் தான், தேசிய அரசாங்கம் என்றால் அமைச்சர் பதவிகளை 30 மேலாக அதிகரிக்க இடமளிக்கிறது. 

சர்வகட்சி அரசாங்கம் ஒன்றில்  கட்சிகள் ஒன்றிணைவதாக இருந்தால் அவ்வாறு இணைவதற்கான கொள்கை அடிப்படையிலான இணக்கப்பாடொன்று இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அவ்வாறான கூட்டுகள் வெறும் சந்தர்ப்பவாத கூட்டுகளேயாகும். அங்கே, பிரதான கட்சி விமர்சனங்களை தவிர்ப்பதற்காகவும் ஏனைய கட்சிகள் அமைச்சர் பதவிகளுக்காகவும் ஏனைய உயர் மட்ட பதவிகளுக்காகவுமே ஒன்றிணைகின்றன.

தற்போதைய நிலையில், நாடு எதிர்நோக்கியிருக்கும் பொருளாதார பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக, சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை நிறுவுவதாக இருந்தால், முதலில் சம்பந்தப்பட்ட கட்சிகளின் தலைவர்களும் நிபுணர்களும் கலந்துரையாடி, தீர்வைத் திட்டமிட வேண்டும். தீர்வுத் திட்டம் இல்லாததால்த்தான், இலங்கைக்கு நிதி உதவி, தற்போதைக்கு வழங்கப் போவதில்லை என்று உலக வங்கியும் கூறியுள்ளது. 

கட்சிகள் அவ்வாறானதொரு திட்டத்தை வகுத்துக் கொண்டால், பின்னர் அத்திட்டத்தை நிறைவேற்ற அரசியல் ரீதியாக ஒன்றிணையலாம். தீர்வு தேடும் முயற்சி தோல்வியடைந்தால், சர்வகட்சி அரசாங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். முதலில், சர்வகட்சி அரசாங்கத்தை நிறுவி, அமைச்சர் பதவிகளை அதிகரித்து தம்மிடையே பகிர்ந்து கொண்ட பின்னர், தீர்வு தேடும் முயற்சி தோல்வியடைந்தாலும் பட்டம், பதவிகள் காரணமாக இக்கூட்டுகள் கலைவதில்லை. அதிகரிக்கும் பட்டம், பதவிகளுக்காக மக்களின் வரிப் பணமே செலவாகும்.