சீகா வைரஸ்: விஞ்ஞான விபரீதம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

விபரீதங்கள் நிகழ்வதற்கும் நிகழ்த்தப்படுவதற்கும் இடையிலான வேறுபாடு பெரிது. விபரீதங்கள் பெரும்பாலும் எதிர்பாராமால் திடீரென நிகழ்பவை. ஆனால், நிகழ்த்தப்படுகின்ற விபரீதங்கள் அவ்வாறல்ல. அவை மனிதர்களால் தெரிந்து திட்டமிட்டு அரங்கேற்றப்படுபவை. ஆனால், அதற்கும் அறிந்தும் அறியாமல் நிகழ்ந்தது போன்றதொரு தோற்றமயக்கம் உருவாக்கப்பட்டு நிகழ்த்தப்பட்ட விபரீதங்களும் நிகழ்ந்த விபரீதங்களாக அறிவிக்கப்படுகின்றன. இப்போது உலகின் கவனம் சீகா வைரஸை நோக்கியதாகத் திரும்பியிருக்கிறது. வடகிழக்கு பிரேசிலில் கடந்தாண்டு ஓகஸ்ட் முதல் குழந்தைகள் சிறிய தலைகளுடன் பிறக்கத் தொடங்கியதன் பின்னணியிலேயே சீகா வைரஸ் அறியப்பட்டது. இக்காலப்பகுதியில் அப்பகுதியில் பிறந்த 4,180 குழந்தைகள் சிறிய தலைகளுடனும் பிற குறைபாடுகளுடன் பிறந்தன. பின்னர் இவ்வைரஸ் பிறக்கும் குழந்தைகளை மட்டுமன்றிப் அனைவரையும் தாக்கக் கூடியது என அறியப்பட்டது. இப்போது உலகளாவிய ரீதியில் 17 இலட்சம் மக்கள் இவ்வைரஸின் தாக்கத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

பிரேசிலில் முதலில் அறியப்பட்ட சீகா வைரஸின் தாக்கம் பின்னர் முழு தென்னமெரிக்க மத்திய அமெரிக்க மற்றும் கரீபிய நாடுகளுக்கும் பரவியுள்ளது. கடந்த மாதம் உலக சுகாதார நிறுவனம் இத்தொற்று இவ்வாண்டு இறுதிக்குள் முழு அமெரிக்கக் கண்டத்துக்கும் பரவும் என அறிவித்தது. அதேவேளை, அமெரிக்கக் கண்டத்தைத் தாண்டி, உலகின் ஏனைய நாடுகளுக்கும் இது மெதுமெதுவாகப் பரவ ஆரம்பித்துள்ளது. இதனால் இதை சர்வதேசத்தின் கவனத்தை வேண்டுகின்ற பொது மருத்துவ அவசர நிலையை உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.

சீகா வைரஸ் இப்போதுதான் தோற்றம் பெற்றது போன்றதொரு எண்ணம் வலுவாகக் கட்டியெழுப்பப்படுகிறது. ஆனால், இது முதன்முதலில் 1947ஆம் ஆண்டு உகாண்டா நாட்டில் சீகா பகுதியில் உள்ள ரீசஸ் வகைக் குரங்கொன்று இத்தாக்கத்துக்கு உள்ளானதன் ஊடாகவே அறியப்பட்டது. இது சீகா பகுதியிலேயே முதன்முதலில் அடையாளங் காணப்பட்டதால் இதற்கு சீகா வைரஸ் எனப் பெயரிடப்பட்டது.

இவ்வைரஸ் மனிதர்களைத் தாக்கும் தன்மையுடையது என்பது 1952ஆம் ஆண்டு ஆய்வுகளின் ஊடாக வெளிப்படுத்தப்பட்டது. குறிப்பாக இந்தியாவில் பரிசோதனைக்குட்பட்ட பலருக்கு இவ்வைரஸ் தொற்று உள்ளமை கண்டுபிடிக்கப்பட்ட அதேவேளை, மனிதர்களது நிர்ப்பீடன நோயெதிர்ப்புச் சக்தி இவ்வைரஸ் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாவண்ணம் மக்களைத் தற்காத்து வருவதும் உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் இவ்வைரஸ் மனிதகுலத்துக்குப் பாதிப்பற்ற வைரஸாகக் கருதப்பட்டது.

ஆனால், 2014ஆம் ஆண்டு பிரேசிலில் கால்பந்தாட்ட உலகக்கிண்ணப் போட்டிகள் நடைபெறவிருந்த நிலையில் ஆபத்தான சீகா வைரஸ் பரவும் ஆபத்து உள்ளதாக அமெரிக்கா, பிரேசிலுக்கு அறிவித்ததன் பின்னணியில் அதிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக பிரேசில் அரசாங்கம் பல்தேசிய மருத்துவ நிறுவனங்களின் துணையை நாடியது. அந்நிறுவனங்கள் உலகக் கிண்ணப் போட்டிகளின் போது இவ்வைரஸ் பரவாமல் பார்த்துக் கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஆலோசனை வழங்கின.

இதற்காக பலமில்லியன் கணக்கான பணம் பிரேசில் அரசால் செலவழிக்கப்பட்டது. இத்தகவல் பொது வெளிக்கு வரவில்லை. இது பொதுவெளிக்கு வருவது பிரேசிலுக்கு உல்லாசப் பயணிகளின் வருகையையும் கால்பந்தாட்டப் போட்டிகளை காண வருபவர்களையும் அச்சத்துக்குள்ளாக்கி அவர்களின் வருகையை தடுக்கும் என்பதால் இதை இரகசியமாகவே பிரேசில் அரசாங்கம் வைத்திருந்தது.

இதுவரை உலகக்கிண்ணப் போட்டிகளின் போது எவ்வாறு இவ்வைரஸ் பரவாமல் தடுக்கப்பட்டது. தடுப்பு மருந்து ஏதேனும் கண்டுபிடிக்கப்பட்டதா, அல்லது இவ்வைரஸைப் பரப்பும் நுளம்புகள் அழிக்கப்பட்டனவா போன்ற எந்தவொரு தகவலும் இல்லை. இரண்டு ஆண்டுகளின் பின்னர் இப்போது அதேவைரஸ் மனிதகுலத்தை அச்சுறுத்தும் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு தசாப்தகாலத்தில் உலகை பல்வேறு நோய்கள் காலத்துக்குக் காலம் ஆட்டிப் படைத்து வந்துள்ளன. பறவைக் காய்ச்சல், சிக்கன் குன்னியா, பன்றிக் காய்ச்சல் அண்மையில் எபோலா எனப் பலவகைப்பட்ட நோய்கள் உலகளாவிய ரீதியிலும் பிராந்திய ரீதியிலும் அச்சுறுத்தி வந்துள்ளன. இவ்வரிசையில் புதிய வரவுதான் சீகா வைரஸ்.

இவ்வாறான நோய்கள் புதிது புதிதாக ஏன் முளைக்கின்றன என்ற கேள்வி தொடர்ச்சியாக எழுந்தவண்ணம் உள்ளது. இவ்விடத்தில் உருவாகும் நோய்களுக்கும் தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்யும் பராசுர மருந்துக் கம்பெனிகளுக்கும் இருக்கும் தொடர்பை அவதானிக்க வேண்டும். காலத்துக்குக்காலம் தோற்றம் பெறுகின்ற நோய்களுக்கான மருந்துகளை, தடுப்பு ஊசிகளைக் கண்டுபிடிக்கும் ஆய்வுகளில் இப்பல்தேசியக் கம்பெனிகளின் ஆய்வகங்கள் ஈடுபடுகின்றன. அவை கண்டுபிடித்த மருந்துக்களை தாங்கள் நிர்ணயிக்கும் விலைக்கு விற்பனை செய்கின்றன. அம்மருந்துகளுக்கான காப்புரிமையை அந்நிறுவனங்கள் பெற்றுவிட்ட நிலையில் அம்மருந்தை எவ்விலைக்கு விற்பனை செய்வது என்பதை அவர்களே தீர்மானிக்கிறார்கள்.

கடந்தாண்டு அமெரிக்காவில் டூரிங் பார்மசூட்டிகல்ஸ் என்ற நிறுவனம் ‘டராபிரிம்’ என்கிற மலேரியா தடுப்பு மருந்தின் வில்லையொன்றின் விலையை 13.50 அமெரிக்க டாலர்களிலிருந்து 750 அமெரிக்கா டொலர்களான உயர்த்தியது. இம்மருந்து வில்லையைத் தயாரிப்பதற்கு ஆகும் செலவு, அமெரிக்க டொலரொன்றைவிடக் குறைவானது. உயிர்காக்கும் மருந்தாக இருந்தபோதும் அதன் விலையை நிர்ணயிக்கும் உரிமை காப்புரிமைத் தத்துவத்தின் அடிப்படையில் அதைக் கண்டுபிடித்த நிறுவனத்துக்கே உரியது. எனவே இவ்விலையுயர்வை எதிர்த்து எதுவும் செய்ய முடியவில்லை.

இன்று மருத்துவம் தனியார்மயமாக்கலுக்கு உள்ளாகி மாபெரும் வியாபாரமாக உருமாறியுள்ள நிலையில், மருந்துகளுக்கு மருந்துக் கம்பெனிகள் உரிமைகொண்டாடுவது இயல்பானது. அரசுகள் தங்கள் வகிபாகங்களைக் குறுக்கிக் கொண்டு அனைத்தையும் தனியாரிடம் ஒப்படைத்துவிட்ட சூழலில் தனியார் கம்பெனிகள் மருத்துவத் துறையில் கோலோட்சுகின்றன.

இன்று விளம்பரங்கள், தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகள், பத்திரிகைச் செய்திகள் அனைத்தும் நலமாக வாழ்வது பற்றியும் நோய்கள் பற்றியும் அளவுக்கதிகமாகவே சொல்கின்றன. அவை மக்களை நம்பவைக்கும் தொனியில் செய்திகளாகின்றன. நலமான வாழ்வுக்கான வழியாக வித்தியாசமான பால்மாக்கள், வலுவூட்டல் பானங்கள், உடற்பயிற்சி உபகரணங்கள் என வேறு கோணத்தில் ஒருபுறம் வியாபாரம் நடக்கையிலே, வரமுன் காப்பது, முதன் நிலை மருத்துவம் என இன்னொரு புறம் பல்வேறு பெயர்களில் மருந்துகளும், ஊசிகளும் வழங்கப்படுகின்றன. இவை ஒரு நச்சுச் சுழல் போல ஒன்றையொன்று முன்தள்ளுகின்றன.

கடந்த பத்து ஆண்டுகளில் புதிதாக தோற்றம் பெற்ற நோய்களுக்கான மருந்துகளை கண்டுபிடிக்கும் கம்பெனிகள் கோடிக்கணக்கில் இலாபம் சம்பாதிக்கின்றன. உலகளாவிய ரீதியில் அதிகளவு பணம் சம்பாதிக்கும் தனியார் துறைகளின் வரிசையில் நான்காவது இடத்தில் மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்யும் துறையானது திகழ்கிறது. இத்துறையானது, ஆண்டொன்றுக்கு 1.5 ட்ரிலியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் இலாபம் சம்பாதிக்கின்றது.

இவை புதிது புதிதாக தோற்றம் பெறும் நோய்களுக்கும் இக்கம்பெனிகளுக்கும் இடையிலான தொடர்பைக் கேள்விக்குட்படுத்துகிறது. பல ஆய்வாளர்கள் இம்மருந்துக் கம்பெனிகள் தான் இந்நோய்களைத் தோற்றுவிக்கின்றன எனத் தொடர்ச்சியாக சொல்லி வருகிறார்கள்.

சீகா வைரஸின் கதை கொஞ்சம் வித்தியாசமானது. அமெரிக்க விஞ்ஞானிகள் 2011 மற்றும் 2012ம் ஆண்டுகளில் டெங்கு நோயைப் பரப்புகின்ற நுளம்புகளை அழிப்பதற்காக மரபணு மாற்றப்பட்ட நுளம்புகளை பரிசோதனைக் கூடங்களில் உருவாக்கினார்கள். இந்நுளம்புகளின் செயற்றிறன் இப்போது சீகா வைரஸ் பரவியுள்ள வடகிழக்கு பிரேசிலின் அதே பகுதியிலேயே பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது. இதனால் இப்பரிசோதனைக்கும் இப்போது பரவும் சீகா வைரஸுக்கும் இடையிலான தொடர்பு இவ்விரண்டினதும் இடம் சார்ந்து கேள்விக்குட்படுகிறது.

இந்த மரபணு மாற்றப்பட்ட நுளம்பை உருவாக்கி விஞ்ஞானிகள் இந்நுளம்புகள் மலட்டுத் தன்மையுள்ள ஆண் நுளம்புகளாகவே உருவாக்கப்பட்டுள்ளன என்றும் இவை மிகக்குறுகிய வாழ் காலத்தை உடையவை என்பதால் இவையால் நீண்டகாலம் உயிரோடு இருக்க இயலாது எனக் கருத்துரைக்கின்றார்கள்.

ஆனால், இவர்களின் ஆய்வுகளில் புலப்பட்டதொரு விடயம் மறைக்கப்பட்டு விட்டது. அது யாதெனில் இந்நுளம்புகளில் 3-4 சதவீதமானவை தப்பிப் பிழைக்கின்றன. அவை ஏனைய சாதாரண நுளம்புகளுடன் இனப்பெருக்கம் செய்கின்றன. அதிலிருந்து உருவாகும் நுளம்புகளின் இனப்பெருக்கம் பாரியளவில் சீகா வைரஸைக் காவுகின்றன.

மலடாக்கப்பட்ட நுளம்புகள் எவ்வாறு இனப்பெருக்கம் செய்கின்றன என்ற வினாவுக்கான விடையையும் இவ்வாய்வு சொல்கிறது. கிருமியொடுக்கி மருந்தான டெற்றாசைக்கிளின் இந்நுளம்புகளின் இனப்பெருக்கச் சக்தியை இல்லாதொழிக்கிறது. அதேவேளை, சுற்றுச்சூழலில் டெற்றாசைக்கிளின் கலந்துள்ள நிலையில் மலட்டுத்தன்மையை இம்மரபணு மாற்றப்பட்ட நுளம்புகள் இழக்கின்றன.

பிரேசில் நாடானது உலகிலேயே விவசாயத்துக்கு அதிகளவில் டெற்றாசைக்கிளினைப் பயன்படுத்தும் நாடாகும். அவ்வகையில் நடந்ததென்ன என்பதை ஊகிப்பது சிரமமல்ல. மரபணு மாற்றப்பட்ட இந்நுளம்புகள் டெற்றாசைக்கிளின் குறிப்பிட்டளவு இருக்கின்ற பகுதியில் தப்பிப்பிழைப்பதற்கு 15 சதவீதம் வரை வாய்ப்புகள் உள்ளதாக அவ்வாய்வு தெரிவிக்கின்றது.

இவ்விடத்தில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். 2011இல் இவ்வகையான மரபணு மாற்றப்பட்ட 30,000 நுளம்புகள் சூழலுக்கு விடப்பட்ட வேளை 2012 ஜனவரியில் வாரமொன்று 540,000 மரபணு மாற்றப்பட்ட நுளம்புகள் சூழலுக்கு விடப்பட்டன. இவ்வாய்வின் முடிவில் இந்நுளம்புகள் டெங்கு நுளம்புகளை 95சதவீதம் இல்லாதொழிக்கின்றன என்ற முடிவுக்கு வந்தார்கள்.

உலகில் மிக நீண்டகாலமாக ஆபத்தான காய்ச்சலாகக் கருதப்பட்ட டெங்குக் காய்ச்சலுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், கியூப விஞ்ஞானிகள் டெங்குவைக் கட்டுப்படுத்த மருந்துகளைக் கண்டுபிடித்து உலக நாடுகளுக்கு இலவசமாக வழங்கியதன் தொடர்ச்சியாக அமெரிக்க மருந்து நிறுவனமொன்று டெங்குக்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்ததாக அறிவித்தது. இதைத் தொடர்ந்தே டெங்கு நுளம்புகளை அழிக்கும் இப்பரிசோதனை அரங்கேறியது. இவை இவ்வைரஸ் தொடர்பாகவும் உலகளாவிய மருத்துவத்துறை, மருந்துக் கம்பெனிகளின் ஆதிக்கம் தொடர்பாகவும் மிகவும் பயங்கரமான நிகழ்நிலையை எடுத்துக் கூறுகின்றன.

சீகா வைரஸுக்கும் பிரேசிலுக்கும் இடையிலான தொடர்பு பல்வேறு சந்தேகங்களை உருவாக்கியுள்ளது. 1947ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வைரஸுக்கான தடுப்பு மருந்து ஏன் கண்டுபிடிக்கப்படவில்லை. இவ்வளவு காலமும் எதுவித பாதிப்பபையும் ஏற்படுத்தாத இவ்வைரஸ் கிட்டத்தட்ட 70 ஆண்டுகளின் பின் மீள உயிர்பெற்றதற்கான காரணம் என்ன. மரபணு மாற்றப்பட்ட நுளம்புகளை பரிசோதனை செய்ய பிரேசில் ஏன் அனுமதித்தது. இவை பதில்களுக்காகக் காத்திருக்கும் வினாக்கள். சீகா வைரஸ் ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகள் பெரியன.

ஆறு இலட்சம் வெளிநாட்டவர்கள் பார்வையாளர்களாகக் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்ற ஒலிம்பிக் போட்டிகள் இன்னும் சில மாதங்களில் பிரேசிலின் ரியோ டி ஜெனேரோவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் பிரேசிலில் பல்கிப் பெருகுகின்ற சீகா வைரஸ் உலகளாவிய ரீதியில் மிகுந்த கவனம் பெற இன்னொரு காரணியாகியுள்ளது. மனித உயிர்கள் பண்டங்களுக்கு நிகராக மதிப்பிடப்படுகின்ற இலாபத்தை மையப்படுத்திய உலகளாவிய சந்தையில் மனித உயிர்கள் பெறுமதி அற்றுப் போகின்றன. இவை, விஞ்ஞானம் யாருக்கானது என்ற கேள்வியை மீண்டுமொருமுறை எழுப்பியுள்ளது.