செல்லாக் காசாக்கல்: அமெரிக்கா தீர்மானித்த இந்தியா

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

நாட்டுமக்கள் விரும்புவதை அரசாங்கங்கள் செய்வது மிகக்குறைவு. அதேபோல அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பெரும்பாலும் மக்கள் ஆதரவை வேண்டி நிற்பதில்லை. ஆனால் மக்கள் விரும்பாத, ஆதரவு தராத செயல்களை மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கள் செய்கின்றன. இது ஒருவகை முரண்நகை.

அடுத்த தேர்தலில் தோல்வியடையக் கூடும் எனத் தெரிந்தும் மக்களுக்கு எதிரான ஒரு செயலை அரசாங்கங்கள் ஏன் செய்கின்றன? அவ்வாறாயின் வேறு எவருடையதோ நலன்கள் எல்லாவற்றுக்கும் முக்கியமானதாகின்றன. அரசாங்கங்களுக்கு நாட்டு மக்களை விட முக்கியமானவர்கள் யார்? அம்முக்கியத்துவத்தின் பெறுமதி என்ன?

கடந்தாண்டு நவம்பர் மாதம் எட்டாம் திகதி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, “இன்றிலிருந்து புழக்கத்தில் உள்ள 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது” என அறிவித்து, இரண்டு மாதங்களுக்கு மேலாகின்றன.

புழக்கத்தில் இருந்த நோட்டுக்களை மாற்றுவதற்கான கடைசித் திகதியான 31 டிசெம்பர் 2016 முடிவடைந்து விட்டது. ஆனால், இச்செயலின் விளைவால், 2017ஆம் ஆண்டு பிறக்கும் போது, ‘புதிய இந்தியா’ தோன்றும் என்று சவடால் அடித்த பிரதமர் மோடியின் புதிய இந்தியாவைதான் இன்னமும் காணவில்லை.

இந்திய அரசாங்கத்தின் செல்லாக் காசாக்கல் நடவடிக்கை பற்றி இரண்டு மாதங்களின் பின்னர் எழுதுவதற்கு வலுவான காரணங்கள் உண்டு.

செல்லாக் காசாக்கல்

செல்லாக் காசாக்கல் அறிமுகம் செய்யப்பட்டவுடன், அதற்கெதிராக வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கும், பொருளாதாரக் கொள்கை என்பதனடிப்படையில் சொல்லப்பட்ட கருத்துக்களுக்கும் ஆளும் பி.ஜே.பி அரசாங்கத்திடமும் அதன் ஆதரவாளர்களிடமிருந்தும் இரண்டு வகையான பதில்கள் வந்தன.

ஒன்று, பிரதமர் மோடியும் அவரது சகாக்களும் குறித்த விடயத்தில் கடும் மௌனத்தைச் சாதித்தனர்.

இரண்டு, செல்லாக் காசாக்கலை விமர்சிப்பவர்களுக்கு பொருளாதார அறிவு போதாது என்றும், புதிய ஆண்டு பிறக்கும்போது செல்லாக் காசாக்கலின் நற்பலன்கள், ஆண்டுக்கான இராசிபலன்கள் போலத் தெரியவரும் எனவும் மோடி ஆதரவாளர்கள் வாதிட்டனர். ஆதலால் ‘புதிய இந்தியா’ தோன்றிய பின்னர், இது குறித்து எழுதலாம் எனப் பொறுத்திருந்தது முதற்காரணம்.

மக்கள் விரோத நடவடிக்கை என்பதை நன்கறிந்தும், இந்நடவடிக்கை இந்தியாவையே ஸ்தம்பிக்க வைக்கும் என்பதை விளங்கியும் ஏன் இதை இந்திய அரசாங்கம் முன்னெடுத்தது என்பதை விளங்கிக் கொள்வதோடு, அதற்கான உண்மையான காரணிகள் துலங்கக் காலமெடுக்கும் எனக் காத்திருந்தது இரண்டாவது காரணம்.

கறுப்புப் பண ஒழிப்பு

இந்திய அரசாங்கத்தின் இந்நடவடிக்கைக்கான பிரதான நோக்கமாகச் சொல்லப்படுவது, ‘கறுப்புப் பண ஒழிப்பு’ ஆகும்.
இவ்விடத்தில் கறுப்புப் பணம் தொடர்பிலான சில விடயங்களை ஆராயலாம்.

கறுப்புப் பணத்தை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கட்டுக்கட்டாகக் கட்டி, இரும்புப் பெட்டிக்குள் போட்டு, பூமிக்கடியில் புதைத்து வைத்திருக்கிறார்கள், கட்டிலுக்கு அடியில் மெத்தையில் வைத்துத் திணித்துத் தைத்து வைத்திருக்கிறார்கள் போன்றதொரு படிமம், ஊடகங்களின் வாயிலாகவும் தமிழ் சினிமாவின் புண்ணியத்திலும் மக்கள் மனதில் நம்பவைக்கப்பட்டுள்ளது.

ஆனால், கறுப்புப் பணம் அதைவிட நுணுக்கமான முறைகளில் பத்திரமாக்கப்படுகிறது. அடிப்படையில் கணக்கில் காட்டப்படாத அனைத்துப் பணமும் கறுப்புப் பணம்தான்.

முறையற்ற வகையில் சேர்த்த பணம், இலஞ்சம் மற்றும் ஊழலில் பெற்ற பணம், வரிஏய்ப்புச் செய்த பணம் என அனைத்துமே கறுப்புப் பணம்தான்.

செல்லாக் காசாக்கல் நடவடிக்கையானது கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கையா என்றால், அதுவல்ல. மாறாக, ‘கறுப்பை’ வரிசெலுத்துவதன் ஊடு, வெள்ளையாக்குவதற்கான ஒருவழியாகிறது.

ஏனெனில், கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் அதில் 30%யை வரியாகக் கட்டிவிட்டால், அவர்களின் கறுப்புப் பணம் வெள்ளையாகிவிடும். மேலும் இப்பணம் எப்படி வந்தது என்று கேள்வி கேட்கப்படமாட்டாது, என்றும் மோடி அறிவித்துள்ளார்.

மொத்தத்தில், இந்நடவடிக்கை கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கையல்ல.

இதுவரை சுவிஸ் வங்கிகளில், இந்தியர்களால் வைப்பிலிடப்பட்டுள்ள 100 இலட்சம் கோடிக்கும் மேற்பட்ட இந்திய ரூபாய்களை மீட்டுக்கொண்டு வந்துவிட வேண்டியதுதானே.

தனது தேர்தல் பிரசாரத்தின் போது “நான் ஆட்சிக்கு வந்தால், கறுப்புப் பணத்தைக் கைப்பற்றி, ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் 15 இலட்சம் போடுவேன்” என மோடி அறிவித்திருந்தார்.

இன்று தடுமாறுகிற ஓர் அரசாங்கம், ‘கறுப்புப்பண ஒழிப்பு’ என்ற புதிய கிலுகிலுப்பையை கைகளில் எடுத்துள்ளது. இதன் பின்னால், எவர் கண்களுக்கும் தெரியாமல் மிகக் கவனமாகத் திட்டமிடப்பட்ட மக்கள் விரோத நடவடிக்கை மறைந்துள்ளது.

செல்லாக் காசாக்கல் நடவடிக்கையை, ‘கறுப்புப்பண ஒழிப்பு’ என்ற பெயரில் தொடங்கியதோடு, கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்குக் ‘காசற்ற பொருளாதாரமாக’ (cashless economy) இந்தியாவை மாற்ற வேண்டும் என அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி.

அனைவருக்கும் வங்கிக் கணக்கு அவசியம்; மானியங்கள் வங்கிக் கணக்கில் அளிக்கப்படும்; வணிக நடவடிக்கைகளில் ரொக்க புழக்கத்தை குறைத்து, டிஜிட்டல் பரிவர்தனையை அதிகமாக்குதல் போன்ற அறிவிப்புகள், மக்கள் செல்லாக் காசாக்கல் என்ற சூறாவளியில் சிக்கி அல்லல்படுகையில், சத்தமில்லாமல் அரங்கேறின. இந்தியாவை டிஜிட்டல் வல்லரசாக்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இவையனைத்தும் முக்கியமான ஒரு செய்தியைத் திட்டமிட்டு மறைக்கின்றன. மொத்த இந்திய சனத்தொகையில், 70%க்கும் மேற்பட்டவர்கள் இன்னமும் கிராமங்களிலேயே வசிக்கிறார்கள்; இந்திய சனத்தொகையின் காற்பங்குக்கு மேற்பட்டவர்கள் உத்தியோகபூர்வமாக வறுமைக்கோட்டுக்குக் கீழே இருக்கிறார்கள்; 50%க்கும் மேற்பட்டோருக்கு வாழ்விடம் கிடையாது; 35%மானவர்களுக்கு குடிநீர் வசதிகள் இல்லை; 70%க்கு மேற்பட்டோருக்கு மலசலகூட வசதிகள் இல்லை.

இந்த இந்தியாவில்தான், காசற்ற டிஜிட்டல் வர்த்தகத்தையும் பணப்பரிமாற்றலையும் பிரதமர் மோடி கோரியிருக்கிறார்.
பணத்துக்கு அப்பால் மோடியின் செல்லாக் காசாக்கல் அறிவிப்பு வருவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னர், அமெரிக்க அபிவிருத்தி நிறுவனமான யு.எஸ்.எயிட், இந்தியாவின் நிதி அமைச்சுடன் இணைந்து ‘காசற்ற பணப்பரிமாற்ற கூட்டுப்பங்காண்மையை’ உருவாக்கியிருப்பதாக, அதனது ஊடகக்குறிப்பில் குறிப்பிட்டிருந்தது.

அவ்வூடகக் குறிப்பில், ‘உலகளாவிய பொருளாதாரத்தினை உள்வாங்குவதற்கு வசதியளிக்கும் வகையில் டிஜிட்டல் பரிவர்த்தனையை அறிமுகப்படுத்தி, செயற்படுத்துவதற்கான திட்டத்தில் இந்தியாவின் நிதி அமைச்சுக்கு, அமெரிக்க அபிவிருத்தி நிறுவனம் உதவுகிறது’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது, இந்தியாவின் செல்லாக் காசாக்கல் நடவடிக்கையில், அமெரிக்காவின் பங்கை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறது. இக்கதையின் வேர்கள் கொஞ்சம் ஆழமானவை.

கடந்தாண்டு, யு.எஸ்.எயிட் இந்தியாவின் பணப்பரிமாற்றம் தொடர்பிலான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான வழிமுறைகளைக் கோருகின்ற அறிக்கையொன்றைத் தயாரிக்க அழைப்பு விடுத்திருந்தது.

‘பணத்துக்கு அப்பால்’ (Beyond Cash) எனத் தலைப்பிடப்பட்ட அறிக்கையானது, 2016 ஜனவரியில் சமர்ப்பிக்கப்பட்டது. இவ்வறிக்கையானது, பெருவர்த்தகர்களுக்கும் பல்தேசியக் கம்பனிகளுக்கும் வங்கிகளுக்கும் பயனுள்ள, தேவையான, இலாபகரமான முறையாகப் பணமற்ற பரிமாற்றத்தையும் டிஜிட்டல் முறையில் அமைந்த பரிமாற்றத்தையும் முன்மொழிந்தது.

சர்வதேச நிதி மூலதனம் எவ்வித தங்குதடையின்றி இந்தியாவெங்கும் பாயவும் இது வழிவகுக்கும் எனவும் சொல்லியது. இந்தியக் கிராமங்களில் உலகமயமாக்கலும் அதன் விளைவால் உருப்பெற்ற நுகர்வுப் பொருளாதாரமும் செய்து முடிக்காத பணியை, டிஜிட்டல் முறையில் அமைந்த வர்த்தகமும் பணப் பரிவர்த்தனையும் செய்து முடிக்கக் கங்கணம் கட்டியுள்ளன.

இவ்வறிக்கையின் முன்மொழிவானது, முதற்கட்டமாக, ஒவ்வொரு நகரத்திலும் டிஜிட்டல் முறையிலமைந்த பணக் கொடுக்கல் வாங்கல்களை, ஆறு மாதங்களில் பத்து மடங்காக மாற்றுவதை இலக்காக அறிவித்தது. மோடி, அதைச் சத்தமின்றி ஒரே நாளில் செய்து முடித்தார்.

அவ்வறிக்கையை வெளியிட்டபோது, யு.எஸ்.எயிட் பின்வருமாறு சொன்னது: “இந்திய நிதி அமைச்சு மற்றும்
யு.எஸ்.எயிட் ஆகியவற்றுடன் 35 பிரதான இந்திய – அமெரிக்க நிறுவனங்கள், இந்தியாவில் நாணயமற்ற பரிவர்த்தனையைச் சாத்தியமாக்கக் கைகோர்த்துள்ளன”

இதில், கடனட்டைச் சேவை வழங்குநர்களான விசா, மாஸ்டர்கார்ட், ஒன்லைன் விற்பனையாளர்களான ஈபே, அமேசன் மற்றும் கணினித்துறைசார் மைக்கிரோசொப்ட், டெல் ஆகியன முக்கிய பங்காளிகளாகியுள்ளன.

செல்லாக் காசாக்கல் அறிவிப்பானது, அதன் துயரங்களை நன்கறிந்த பின்னரே நடைபெற்றது, என்பதை உறுதியாக நம்பவியலும். தயாரிக்கப்பட்ட அறிக்கையானது, சில முக்கிய புள்ளிவிபரங்களைத் தருகிறது.

இந்தியாவில் 97%மான பணக்கொடுக்கல் வாங்கல்கள் நாணயத்தாள்கள் மற்றும் நாணயக்குற்றிகளை உள்ளடக்கியதாகவே நடைபெறுகின்றன.

மொத்த இந்தியர்களில் வெறும் 55%மானவர்களுக்கே வங்கிக் கணக்குகள் உள்ளன. அதில் 29%மானோரே தங்கள் வங்கிக்கணக்குகளை கடந்த மூன்று மாதங்களில் பயன்படுத்தியுள்ளனர். இத்தரவுகளை நன்கறிந்தே இந்திய அரசாங்கம் செல்லாக் காசாக்கல் நடவடிக்கையை எடுத்தது.

செல்லாக் காசாக்கல் நடவடிக்கையானது, சிறு வணிகர்கள், அன்றாடம் காய்ச்சிகள், சிறிய தொழில்முனைவோர் ஆகியோரை வெகுவாகப் பாதித்துள்ளது.

இன்னொரு வகையில் சொல்வதானால் இச்செயல் அவர்களின் வாழ்வாதாரத்தை முற்றாக அழித்துள்ளது. இதனால் பெட்டிக்கடையில் பொருட்கள் வாங்குவது; தள்ளுவண்டியில் மரக்கறி விற்பது; வீட்டுக் கைத்தொழிலாக பொருட்கள் செய்வது; ஆடைகள் நெய்வது; எதுவுமே இனிச் சாத்தியமாகாத முறையில் டிஜிட்டல் வணிகம் பார்த்துக் கொண்டுள்ளது.

பல்தேசியக் கம்பெனிகளும் பெரு வணிக நிறுவனங்களும் கடைவிரிக்கும், பல்தேசியக் கம்பெனிகளில் அனைத்தும் ஒன்லைனில் பெற்றுக் கொள்ள வசதி செய்யப்படுகிறது. கைகளில் உள்ள மொபைலில் உள்ள ஆப்கள் அதற்கு வழி செய்கின்றன.

ஆக, இந்நடவடிக்கை சுதேசப் பொருளாதாரத்தைக் குழி தோண்டிப் புதைக்கிறது. சாதாரண உழைக்கும் மக்களை இன்னும் வகைவகையாகச் சுரண்ட, புதிய வழிகளை நிதிமூலதனமும் அதன் கரசேவகர்களும் கண்டு பிடிக்கிறார்கள்.
டிஜிட்டல் மயமான பணப்பரிமாற்றம் இன்னும் பல ஆபத்துகளைத் தன்னுள்ளே கொண்டுள்ளது.

முதன்மையானது யாதெனில், இப்பரிமாற்றச் செயன்முறையை நடாத்துகின்ற, கட்டுப்படுத்துகின்ற நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்கள் ஆகும். ஆகவே, உலகளாவிய ரீதியில் நடைபெறுகின்ற அனைத்துப் பரிவர்த்தனைகளையும் கண்காணிக்க இயலும். இதன்மூலம் உலகளாவிய டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தினைக் கட்டுப்படுத்த இயலும்.

அதேவேளை இந்நடைமுறைக்குட்பட்ட வங்கிகள், நிறுவனங்கள் ஆகியவற்றில் அமெரிக்க சட்டங்களைப் பயன்படுத்திக் கட்டுப்படுத்தவியலும். ஏனெனில், அமெரிக்க நிறுவனத்துக்குச் சொந்தமான சேவைகளைப் பயன்படுத்தும்போது, அங்கு அமெரிக்கச் சட்டங்கள் செல்லுபடியாகும்.

இவ்வடிப்படையில் நாடுகளைப் பொருளாதார ரீதியாகக் கட்டுப்படுத்துவதோடு உலகின் பிரதானமான அந்நியச் செலாவணியாக அமெரிக்க டொலரைப் பேணவும் இது வழிவகுக்கும்.

இதை இன்னொரு வகையில் விளங்குவதாயின், நாம் எமது நண்பர்களுடன் பேசுவதற்கும் பழகுவதற்கும் மார்க் சுக்கபேர்க்கோ அல்லது பேஸ்புக்கோ தேவையா? இல்லை என்பதே அதன் பதிலாகும்.

தொடர்பாடல், சமூகமாக வாழ்தல், நட்புப்பாராட்டுதல், தொடர்பு வலைப்பின்னல்கள் என்பன சமூகங்களின் இருப்புக்குத் தேவையான ஆதாரமாகும். ஆனால், அவற்றை இந்த டிஜிட்டல் உலகில் இழந்துவிட்டு, அனைத்தையும் பேஸ்புக்குக்குள் அடக்குவதன் ஊடு, எம்மை நாமே கண்காணிப்புக்கு உட்படுத்துகின்றோம்.

அத்துடன், ‘தகவல்’ என்ற பொக்கிஷத்தை எவ்வித சிக்கலுமில்லால் கண்காணிப்பவர்கள் பெற்றுக் கொள்ள வழிசெய்கிறோம். இவை, ஒருவகையில் எம்மைச் சமூக நீக்கம் செய்கின்றன. இன்னொரு வகையில் எம்மைக் கண்காணிக்கின்றன.

சமூக வலைத்தளங்கள், எவ்வாறு எமது ஊடாட்டத்தையும் தொடர்பாடலையும் கட்டுப்படுத்துகிறதோ அதேபோல, மக்களது பொருளாதாரத்தையும் வாங்கும் தெரிவையும் இந்த டிஜிட்டல் மயமாக்கல் தீர்மானிக்கின்றன.

தற்போதைய பணப்பரிமாற்ற முறையில் 100 ரூபாயை எத்தனை முறை மாற்றினாலும் அதன் பெறுமதி மாறாது. ஆனால், டிஜிட்டல் பரிவர்த்தனையில் அதற்கான உத்தரவாதம் இல்லை.

ஒவ்வொரு சேவைக்கும் ஒரு பெறுமதி உண்டு. அத்தொகை அப்பணத்தைச் செலவழிப்பவரிடமிருந்தே பெறப்படுகிறது. அவ்வகையில் 100 ரூபாய் மாற்றப்படும் ஒவ்வொரு தடவையும் யாரோ ஒருவர் இலாபமடைகிறார்.

அனைத்தும் டிஜிட்டலில் நிகழ்வதால் அதைத் கேட்கவோ மறுக்கவோ இயலாததாகிறது. கையறு நிலையை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம். இதை இன்னொரு வகையில் ‘டிஜிட்டல் சர்வாதிகாரம்’ எனவும் அழைக்கலாம்.

இன்னமும் பிரதமர் மோடியின் துதிபாடிகள், கறுப்புப்பணத்தை ஒழிப்பதற்கான முக்கிய நடவடிக்கையாக இதைக் கொண்டாடுகின்றனர். இது இந்தியாவுக்குரிய கோடிக்கணக்கான பணத்தை மீட்டுத் தரும் எனப் புகழ்கின்றனர். அவர்களிடம் கேட்பதற்கு சில கேள்விகள் உண்டு.

வோடோபோன், நோக்கியா போன்ற பல்தேசிய நிறுவனங்கள், இந்தியாவில் அமைத்த தொழிற்சாலைகள் மூலம் வரி ஏய்ப்பில் கொண்டு சென்ற பணம் எத்தனை ஆயிரம் கோடி?

தற்போதைய பி.ஜே.பி அரசாங்கம் சரி, அதற்கு முந்தைய காங்கிரஸ் அரசாங்கம் சரி முதலாளிகளுக்குத் தள்ளுபடி செய்த வராக்கடன் எத்தனை இலட்சம் கோடி?

சமீபத்திய பனாமா லீக்சில் இந்திய முதலாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் முதலீடு செய்திருப்பது எத்தனை இலட்சம் கோடி? இதை மீட்கப்போவது யார்?

இவற்றையெல்லாம் யாரும் கொண்டு வரவோ மீட்கவோ முடியாது. கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கை என்பது செல்லாக் காசாக்கல் நடவடிக்கையை நியாயப்படுத்துவதற்கான நல்லதொரு சாட்டு.

இந்திய அலுவல்களை அமெரிக்கா தீர்மானிப்பதைத்தான், ஒருவேளை நரேந்திர மோடி, “2017 இல் புதிய இந்தியா மலரும்” என அறிவித்தார் போலும். அசாத்தியங்களைக் கனவு காண்பததென்பது இதுதானோ?