டயறிக் குறிப்பு: யாழ்ப்பாணத்தில் யூதர்கள்.

‘சாவகர்’ கோட்டை என்பதே சாவாங்கோட்டையாக மருவியதாகச் சொன்ன கவிஞர் அம்பி, தொடர்ந்து புதியதொரு தகவலைச் சொன்னார்.

‘சாவகர்’ என்ற சொல் யூதர்களைக் குறிக்கும். யூதர்கள் உலகமெங்கும் சிதறி ஓடிய காலத்தில் இந்தியாவின் கேரளத்துக்கும் வந்தார்கள். அங்கிருந்து பின்னர் சிரண்டிப்புக்கு புலம் பெயர்ந்து நாற்குழியிலும் குடியேறினார்கள்…, என்ற அம்பியை இடைமறித்து, அதுவென்ன சிரண்டிப்? எனக்கேட்டார் என்னுடைய மனைவி.

சிரண்டிப் என்பது இலங்கையின் ஆதிகால அராபியப் பெயர். ஈரானியர்களின் பேர்சிய மொழியிலும் இலங்கையை சிரண்டிப் என்றே குறிப்பிட்டுள்ளார்கள், என விளக்கம் சொன்னவர் மீண்டும் யூதர்களின் சமாச்சாரத்துக்கு வந்தார். சாவகர் என்னும் யூதர்கள் குடியேறிய நாவற்குழி சாவகர் கோட்டை என்றாகி, பின்னர் சாவாங் கோட்டை ஆகியது.

அப்போ நாவற்குழியில் பிறந்த நீங்களும் யூத வழித்தோன்றலோ? எனக் கண்சிமிட்டினேன்.

பின்னை என்ன நினைக்கிறாய்? என வாய்விட்டுச் சிரித்தவர் மேலும் கேள் எனத்தொடர்ந்தார்.

சாவகச்சேரியின் பழைய பெயர், ‘சாவகர்’ சேரி!

நாவற்குழியில் வாழ்ந்த சாவகர்கள் (யூதர்கள்) இன்றைய சாவகச்சேரிக்கும் இடம் பெயர்ந்து செறிந்து (சேரி) வாழத் தொடங்கினார்கள். இதனால் அது ‘சாவகர்’ சேரியாகி பின்னர் சாவகச்சேரியாக மருவியது என்றவர் சற்று நேரம் அமைதியாக இருந்தார். முதுமையின் களைப்பு அவர் முகத்தில் தெரிந்தது. பின்னர் தன்னை சுதாகரித்து , நானும் மனைவியும் கொண்டுபோன அவருக்குப் பிடித்தமான கொழுக்கட்டையை எடுத்துக் கடித்தபடி, கண்களை மூடி நாவற்குழி நினைவுகளில் நனவிடைதோய்ந்தார்.

கொசுறுச் செய்தி: அம்பி அவர்கள் சென்ற வருடம் அகவை 90 கண்டுள்ளார். கடவுள் கிருபையால் சிட்னியில் இன்றும் நல்ல நினைவுடன் வாழ்கிறார்.