தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமைக்கான அறைகூவலும் சாத்தியமின்மையும்

தமிழர் அரசியலைப் பற்றி கருத்துரைப்பவர்கள், தமிழர் அரசியலில் ஒற்றுமை இல்லை என்றும், தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்றும் சொல்வதை, பெரும்பாலும் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.

அந்தப் பொது மனநிலைக்குத் தீனி போடுமாற்போல, அரசியல்வாதிகளும் அவ்வப்போது ஒற்றுமைக்கான அறைகூவலையும் சிலவேளைகளில் ஒற்றுமையின்மை பற்றிய ஒப்பாரியையும் அரங்கேற்றுவதையும் காணக்கூடியதாக இருக்கிறது. ஆனால், இதைப்பற்றி யாரும் கொஞ்சமேனும் அலசியாராய்ந்து பார்த்ததாகத் தெரியவில்லை.

தமிழ்க் கட்சிகளிடையே ஒற்றுமை என்று இங்கு பொதுவாக விளிக்கப்படுவது, கொள்கையளவில் வேறுபட்டிருக்கும் தமிழ்க் கட்சிகளிடையேயான ஒற்றுமையை அல்ல. மாறாக கொள்கையளவில் ஒற்றுமைகளைக் கொண்ட கட்சிகளிடையேயான ஒற்றுமையைத்தான்.
அது என்ன கொள்கையளவிலான ஒற்றுமை என்று சிலர் வினவலாம்.

தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவரையில், தமிழ்த் தேசத்தின் அபிலாஷைகளாக தீர்க்கமாக இனங்காணப்பட்டுள்ள தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்பவையே தமிழ்த் தேசிய அரசியல் கொள்கைகளாக ஏற்கப்பட்டுள்ளன. ‘தமிழ்த் தேசிய கட்சி’களாகத் தம்மை முன்னிறுத்துபவை, இதையே தமது அடிப்படைக் கொள்கையாக முன்னிறுத்துகின்றன.

இந்த அபிலாஷைகளை அடைந்துகொள்வதற்கான வழிவகைகள், ஆரம்பப்புள்ளி, அணுகுமுறை பற்றி அவற்றிடையே சில கருத்து வேறுபாடுகளை அடையாளம் காண முடியுமாயினும், அவற்றின் நோக்கங்களில் பெரும் வேறுபாடுகள் இல்லை.

மறுபுறத்தில், தமிழ் அரசியல் பரப்பில், தேசிய கட்சிகளும் தேசிய கட்சிகளோடு கூட்டணியிலுள்ள கட்சிகளும் உண்டு. இந்தக் கட்சிகளைச் சார்ந்த தமிழ் அரசியல்வாதிகள், தமிழ்த் தேசியத்தின் சில பகட்டாரவாரக் கருத்துகளை முன்வைத்தாலும், தமிழ்த் தேசியம் பற்றி, சமஷ்டி பற்றியெல்லாம் பேசுவதில்லை.

அது தேசிய கட்சிகளின் கொள்கையோடு சில இடங்களில் முரண்படும் என்பது அதற்குக் காரணமாக இருக்கலாம். ஆகவே இவர்கள் அதிகமாக அபிவிருத்தி பற்றிப் பேசுவதையும், ஆதரவுத்தள அரசியலை முன்னெடுப்பதையும் நாம் காணலாம்.

தேசிய கட்சிகளோடு, தமிழ்த் தேசிய அரசியல் கொள்கை ரீதியில் ஒன்றுபட முடியாத நிலை இருப்பதால், தமிழ் அரசியலில் ஒற்றுமை பற்றிப் பேசுபவர்கள், இந்தத் தேசிய கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகளோடு கூட்டணியில் உள்ள கட்சிகளை அந்த ‘ஒற்றுமை’ எனும் பெயருக்குள் உள்ளடக்குவதில்லை.

அப்படியானால், இங்கு தமிழ் அரசியலில் ஒற்றுமை என்பது, தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்கும் கட்சிகளிடையேயான ஒற்றுமை என்ற பொருளிலேயே பயன்படுத்துவதை புரிந்துகொள்ளலாம்.

அப்படியானால், தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்கும் கட்சிகளிடையே ஒற்றுமை ஏற்படுத்துவதில் என்ன சவால்கள் இருக்கின்றன என்ற கேள்வி எழுகிறது. அந்தக் கேள்விக்கு விடை காணும் முன்பு, தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்கும் கட்சிகளிடையே, ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான தேவை என்ன என்பது பற்றியும் சிந்தித்தல் அவசியமாகிறது.

தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்கும் கட்சிகளிடையே ஒற்றுமை ஏற்படுத்துவதற்கா, தேர்தல் அரசியல் தவிர்த்த பிரதான காரணமாகக் குறிப்பிடப்படுவது, ‘ஒரே குரலாக ஒலிக்கும் போது, அந்தக் குரல் பலமான குரலாக இருக்கும்’ என்பதும், தேர்தல் அரசியல் காரணமாகச் சொல்லப்படுவது, ‘வாக்குச் சிதறலைத் தவிர்ப்பதன் மூலம், அதிக பிரதிநிதிகளை தமிழ்த் தேசிய கட்சிகளால் வென்றெடுக்க முடியும்’ என்பதுமாகும்.

ஒரு குரலாகத் தமிழ்த் தேசிய கட்சிகள், தமிழ் மக்கள் பிரச்சினைகளுக்காகக் குரல்கொடுக்கும் போது, அந்தக் குரல் பலமானதாகத்தான் இருக்கும். ஒரு குரலைவிட, பல குரல்கள் எப்போதும் பலமானவையே. ஆனால், மக்கள் பிரச்சினைக்காக குரல்கொடுக்க எல்லாக் கட்சிகளும் ஒன்றிணைந்து, ஒரு கட்சியாக இருந்தால்தான் அது சாத்தியம் என்று சொல்வதில் எந்த உண்மையுமில்லை. வேறுவேறு கட்சிகளாக இருந்தால் கூட தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக, அவை ஒன்றாகக் குரல் கொடுக்க முடியும்.

ஒரே கட்சியாகவோ கூட்டணியாகவோ இணைந்துவிட்டால் மட்டும் தான், எல்லோரும் ஒன்றிணைந்து குரல் கொடுப்பார்கள் என்று சொல்வதில் உண்மையிருக்க முடியாது. ஆகவே, இந்த ஒற்றுமைக்கான தேவைக்கான உண்மையான காரணமாக இருப்பது, தேர்தல் அரசியல் காரணிகள்தான்.

வாக்குச் சிதறலால், தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் பிளவுபட்டுவிடக்கூடாது என்பதை முன்வைத்துத்தான், தேர்தல் அரசியல் காரணத்துக்காகவேதான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கூட உருவானது. இது உருவான போது, அதில் அங்கம் வகித்த எல்லாக் கட்சிகளுக்கும் அந்த ஒற்றுமை தேர்தலில் நல்ல பலனைத் தந்தது. இது கூட்டமைப்பில் போட்டியிட்டால், வெற்றிபெற்றுவிடலாம் என்ற தேர்தல் ஆதாயம்தான் ‘கூட்டமைப்பு’ என்ற எண்ணக்கருவுக்கு வலுச்சேர்ப்பதாக இருந்தது.

‘தமிழ்த் தேசியம்’, ‘ஒற்றுமை’, ‘ஏக பிரதிநிதிகள்’ என்ற குறியீடுகளின் மதிப்பு, தேர்தல் அரசியலில் முக்கியத்துவம் பெற்றது. ஆகவே, கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கான ஆசனத்தைப் பெற்றுக்கொள்வதற்கு, தேர்தல் அரசியலில் கேள்வி அதிகமாக இருந்தது.

அது, கட்சிகளிடையே ஆசனப்பங்கீட்டுப் பிரச்சினைகளை உருவாக்கியது. கூட்டமைப்புக்குள் பெரும்பான்மைப் பலத்தைக் கொண்ட கட்சி, தனது மேலாதிக்கத்தை செலுத்தத்தொடங்கிய போது, அங்கு பிளவுகள் ஏற்பட்டன.

கூட்டமைப்புக்குள் பெரும்பான்மைப் பலத்தைக் கொண்ட கட்சியோடு இன்றும் ஒட்டிக்கொண்டிருக்கும் கட்சிகள், தேர்தல் ஆதாயத்துக்காக மட்டும்தான் அங்கு ஒட்டிக்கொண்டு நின்கின்றன என்றால் அது மிகையல்ல.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்துக்கும் எழுச்சிக்கும் பின்பு, கடந்த பொதுத் தேர்தல்தான் அதற்கு மிகச் சவாலான தேர்தல் எனலாம். கூட்டமைப்பைத் தாண்டிய தமிழ் வேட்பாளர்கள், கணிசமான வெற்றியைப் பெற்றிருந்தார்கள்.

இதனால், கூட்டமைப்பில் தேர்தல் கேட்டால் வெற்றிதான், என்று மக்கள் பணிசெய்யாது, கூட்டமைப்பு ஆசனத்தில் அமர்ந்து தேர்தல் ருசி கண்டவர்கள் பலர்; கூட்டமைப்பு பெற்றுக்கொண்ட ஆசனங்கள் குறைவடைந்ததனால் தேர்தலில் தோல்வி கண்டிருந்தனர்.

மேலும், ஒரே கூட்டமைப்பாக இயங்கும் போது, தமக்கள் சிலர் விடும் பிழைகளைக் கூட விமர்சிக்க முடியாது. இது தமிழ்த் தேசிய அரசியலுக்குள் அரசியல் ஜனநாயகத்தை மட்டுமல்ல, பொறுப்புக்கூறலையும் இல்லாதொழிப்பதாகவே அமையும்.

இந்தப் பின்புலத்தை வைத்துப் பார்க்கும் போது, இங்கு அரசியல்வாதிகளிடமிருந்து வரும் ஒற்றுமைக்கான கோஷம் என்பது, தேர்தல் அரசியல் சார்ந்ததாகவே இருக்கிறதேயன்றி, அது கொள்கைக்கானதாகவோ, மக்களுக்கானதாகவோ இல்லை.

மேலும், இத்தகைய தேர்தல் ஒற்றுமை என்பது, அந்தக் கூட்டமைப்புக்குள் ஆதிக்கம் செலுத்தும் கட்சிக்கு சாதகமானதாகவே இருக்கும். தமிழ் மக்கள் விரும்பும் ஒற்றுமை, இத்தகைய தேர்தல் அரசியல் சார்ந்த ஒற்றுமையை அல்ல.

இங்குதான் மக்கள் கேட்கும் ‘ஒற்றுமை’க்கும், அரசியல்வாதிகள் கேட்கும் ஒற்றுமைக்கும் வேறுபாடுண்டு. இங்கு மக்கள் விரும்பும் ‘ஒற்றுமை’ என்பது, மக்கள் பிரச்சினைகளில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்பதையே!

அந்த விடயத்தில், தேர்தல் அரசியல், சுயநலக் காரணிகள் என்பவை தலையிட்டுவிடக்கூடாது என்பதே, தமிழ் மக்களின் அவா!
ஆனால், தமிழ்த் தேசிய அரசியலில் மக்கள் மையப் பணியொன்று, ஒரு தரப்பால் அல்லது கட்சியால் முன்னெடுக்கப்படும் போது, எங்கே அது வெற்றிபெற்றுவிட்டால், அது அந்தத்தரப்பினது அல்லது கட்சியினது வெற்றியாகிவிடும் என்று மக்கள் எண்ணிவிடுவார்களோ என்று, ஏனைய தரப்புகள் மற்றும் கட்சிகள் அதற்கு ஆதரவு தர மறுக்கின்றன. இந்த நிலை மாற வேண்டும்.

இதற்காகத்தான் தமிழ் மக்களின் நலனில் அக்கறையுள்ள கட்சிகள் அனைத்தும், ஓர் அரங்கத்தில், அல்லது வட்டமேசையில் இணையவேண்டும். அது தேர்தலைக் கடந்த தமிழ்த் தேசத்துக்காகக் குரல்கொடுக்கின்ற அரங்கமாக மாற வேண்டும். அதுதான் நீடித்து நிலைக்கத்தக்க ஒற்றுமையாக இருக்கும்.

தேர்தலை மையப்படுத்திய ஒற்றுமை என்பது, அடிபாடுகளிலும் முரண்பாடுகளிலும்தான் முடியும். ஏனென்றால், தேர்தலுக்கான ஒற்றுமை என்பது மக்களை மையப்படுத்தியதல்ல; அது தனிநபர்களின் தேர்தல் ஆதாயங்களை மையப்படுத்தியது. இந்த இடத்தில்தான், தமிழ்த் தேசத்தின் அரசியலும் ஒற்றுமைக்கான அறைகூவலும் தோற்றுக்கொண்டிருக்கின்றன.