தமிழ்த் தேசிய அரசியலில் மாற்றுத் தலைமை சாத்தியமா?

(எஸ்.கருணாகரன்)

‘மாற்றுத் தலைமை’ ஒன்றை உருவாக்குவதற்கான வாய்ப்பை, தமிழ்ச் சமூகம் இழந்து வருகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சமகால அரசியல் கள நிலைவரங்களும் மக்களுடைய புரிதலும் இந்தக் கேள்வியை எழுப்பக் காரணமாகியுள்ளன. புதிய தலைமையை எதிர்பார்த்திருந்த மக்களுக்கும் அரசியற் சூழலுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும் விதமாகவே நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. “இந்தா வருகிறது; அந்தா வருகிறது என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே, அந்த மாற்று அணி எங்கே?” என்று ஆர்வமுடையவர்கள் கேட்கிறார்கள்.

இதற்குச் சிலர், சில மாதங்களுக்கு முன்புவரை, தமிழ் மக்கள் பேரவையை அடையாளப்படுத்த முனைந்தனர். சிலர் தற்போது உருவாகிக் கொண்டிருக்கும் கஜேந்திரகுமார் – சுரேஷ் பிரேமச்சந்திரன் முன்னணியை அடையாளப்படுத்த முயற்சிக்கின்றனர். இவர்களில் பலரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வெளிப்பரப்பில் நிற்பவர்கள்.

தான் ஓர் அரசியல் கட்சியாகச் செயற்படப்போவதில்லை என்று அறிவித்ததால், அது மாற்றுத் தலைமை இல்லை என்பதைப் பேரவை உறுதிப்படுத்தி விட்டது. ஆகவே, சுரேஷ் – கஜேந்திரகுமார் அணியே அந்த மாற்றுத்தலைமை என அடையாளப்படுத்துவதற்கு இவர்கள் முயல்கின்றனர்.

ஆனால், இது சரியானதா என்றால், ‘இல்லை’ என்பதே தெளிவான பதிலாகும். இது ‘மாற்றுத் தலைமை’ இல்லை; வேண்டுமானால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ‘மாற்றான அணி’ எனக் கூறிக் கொள்ளலாம்.

இதுவரையும் ஈ.பி.டி.பியே கூட்டமைப்புக்கு மாற்றான, எதிரான அணியாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக, குறிப்பாகக் கடந்த பொதுத் தேர்தலின்போது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, கூட்டமைப்புக்கு எதிரான தரப்பாகத் தோற்றமளித்தாலும் அந்த இடத்தைப் பெறத் தவறி விட்டது.

இப்பொழுது, சுரேஷ் – கஜேந்திரகுமார் அணி, அந்த இடத்தைப் பெறுவதற்கு மீண்டும் முயற்சிக்கிறது. எனவே, கூட்டமைப்பு இப்பொழுது, ஈ.பி.டி.பி, சுரேஷ் – கஜேந்திரகுமார் அணி ஆகிய இரண்டு எதிரணிகளோடு மோதவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இது கூட்டமைப்புக்கு வலுவானதொரு சவாலே.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகிச் செல்லும் சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தரப்புடன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன்) சேர்கிறார். அல்லது கூட்டு வைக்கிறார். இதற்குத் தமிழ் மக்கள் பேரவை ஆதரவளிக்கிறது. கூட்டமைப்பின் ஆதரவாளர்களில் ஒரு தொகுதியினரும் இந்த அணிக்கான ஆதரவை வழங்கும் நிலை உள்ளது. கூட்டமைப்பின் மீதான அதிருப்தியும் கோபங்களும் அவர்களை இந்த அணியை நோக்கித் திருப்பியுள்ளன. எனவே, இந்த அணி வரும் காலத்தில் கூட்டமைப்புக்கு நெருக்கடியை உருவாக்கக்கூடும்.

ஆனால், இந்த அணிக்கும் இதனுடைய நிலைப்பாட்டுக்கும் ஆதரவளிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்ட முதலமைச்சர் விக்னேஸ்வரன், இதற்குப் புறம்பாக விலகி நிற்கிறார். விக்னேஸ்வரன் என்ற அடையாளம் ஆதரவு என்று மக்களுக்கு உணர்த்துவதற்கு, மக்களுக்குக் காட்டுவதற்கு முயற்சிக்கின்றனர்.

எனினும், அதற்கான சாத்தியங்கள் மிகக்குறைவாகவே உள்ளன. உண்மையில் இந்தத் தரப்புகள் தங்கள் கொள்கை, கோட்பாடு, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள், செயற்பாட்டு வீரியம், இவற்றுள் கொண்டிருக்கும் புதிய பண்பு போன்றவற்றின் மூலமாகவே, தம்மைத் தனித்துக் காண்பிக்க வேண்டும். அதுவே மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கான வழிமுறையாகும்.

இப்படி விக்னேஸ்வரன் என்ற பிம்பத்தைக் காட்டிப் பிரமிக்க வைப்பதோ, மக்களின் கவனத்தைக் கவர முனைவதோ பொருத்தமானதல்ல. இது பிரமுகர் அரசியலில் தொங்கிக் கொண்டிருக்கும் இன்னொரு முனைப்பாகும். இருந்தாலும் இதைச் சிலர் ‘மாற்று அணி’, ‘மாற்றுத் தலைமை’ என்கிறார்கள். இதுவே இவர்களுடைய குழப்பமாகும்.
மாற்றுத் தலைமை என்பது வேறு; மாற்று அணி என்பது வேறு.

மாற்றுத் தலைமை என்பது, ஏற்கெனவே இருக்கின்ற தலைமையின் குணாம்சத்திலிருந்தும் நடைமுறைகளிலிருந்தும் வேறுபட்ட பண்பைக் கொண்டதாக இருக்க வேண்டும்.

முன்னைய தலைமையின் கொள்கை, கோட்பாடு, அவற்றைச் செயற்படுத்தும் வழிமுறை, அவற்றின் போதாமை அல்லது குறைபாடுகள், தவறுகள் போன்றவற்றுக்கு மாற்றாக, அவற்றை ஈடு செய்யக்கூடியதாக இருக்க வேண்டும். அதனுடைய சிந்தனை முறையும், செயற்பாட்டு முறையும் வேறானதாகவே இருக்கும்.

இது சுரேஷ் – கஜேந்திரகுமார் அணியென்ற புதிய முன்னணிக்கு உண்டா? உண்டாயின் அது எந்த வகையிலானதாக இருக்கும்? இதைத் துருவித்துருவிப் பார்த்தாலும் தெளிவாகவில்லை.

உண்மையில் இந்த அணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள் முரண்பாடுகளால், அதனுடைய நடைமுறைக் குறைபாடுகளினாலும் தமிழரசுக் கட்சியின் பிடிவாதங்களால் ஏற்பட்ட உடைவின் விளைவான பிறப்பேயாகும்.

இதைச் சரியாகச் சொன்னால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள்ளே நிலவிக் கொண்டிருந்த உள்மனக் குடைச்சல்களின், வெளிப்பாட்டின் விளைவாகும். முதல் வெளியேற்றத்தில் கஜேந்திரகுமார், கஜேந்திரன், பத்மினி போன்றோர் இருந்தனர்; இப்போது சுரேஷ் இருக்கிறார்.

ஆகவேதான், இது ஒரு குணாம்ச அடிப்படையிலான, மாற்றுச் சிந்தனையின்பாற்பட்ட, மாற்று அரசியலுக்கான வெளியேற்றமாக உணரமுடியாதிருக்கிறது. பதிலாக அதிகாரப் போட்டியின் விளைவான, உள் நெருக்கடிகளின் விளைவான வெளியேற்றமாகவே உணரமுடிகிறது.

சுரேஷ் தன்னுடைய வெளியேற்றம் எந்த அடிப்படையில் நிகழ்கிறது என்பதை இன்னும் தெளிவாக்கவில்லை. “தமிழ் மக்களுடைய கோரிக்கைகளை கூட்டமைப்பும் அதனுடைய தலைமையும் மதிக்கத் தவறி விட்டன. தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தோர் எடுக்கின்ற தீர்மானங்களுக்கு ஏனையவர்கள் கூட்டமைப்பின் பேரில் ஆதவளிக்க முடியாது” என்று அவர் கூறிவரும் குற்றச்சாட்டுகள் எல்லாமே பழையவை. அவற்றை அவர் தொடர்ச்சியாகவே கூறி வந்திருக்கிறார். அவை புறக்கணிக்கக் கூடியவையல்ல; அவற்றில் நியாயமுண்டு.

ஆனால், அவற்றையிட்டு அவர் வெளியேற வேண்டுமாக இருந்திருந்தால், 2010 இற்கு முன்பே அது நடந்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், அன்றைய சூழலில் ஒரு வலுவான மாற்று அணியை உருவாக்கியிருக்க முடியும். அதற்கான பங்களிப்பையும் சுரேஷ் வழங்கியிருக்க முடியும். அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் (தமிழரசுக் கட்சியும்) அதனுடைய தலைமையும் தன்னுடைய நிலைப்பாடுகளைக் கூட, மாற்றியமைத்திருக்கக் கூடிய ஒரு நெருக்கடி நிலை உருவாகியிருக்கும்.

ஆகவே, குறிப்பிடத்தக்க விளைவுகளை சுரேஷ் உருவாக்கியிருக்கலாம். ஆனால், அவற்றையெல்லாம் அவர் தவற விட்டார். இதனால், மிகப் பலவீனப்படுத்தப்பட்ட நிலையில், இனியும் கூட்டமைப்புக்குள்ளிருந்து கொண்டு சமாளிக்க முடியாது; தாக்குப்பிடிக்க முடியாது என்ற நிலையிலேயே இப்பொழுது அவருடைய வெளியேற்றம் நிகழ்ந்துள்ளது. ஆகவேதான், இது ஒரு மாற்றுத் தலைமைக்கான வெளியேற்றமாக நிகழவில்லை என்று சொல்ல வேண்டியுள்ளது.

கூட்டமைப்பிலிருந்து வெளியேறி வரும் சுரேஷை, கஜேந்திரகுமார் அணி மகிழ்ச்சியோடு வரவேற்று இணைத்துக் கொள்கிறது. கூட்டமைப்பிலிருந்து சுரேஷை உடைத்து வெளியே எடுக்க வேண்டும் என்பதில் அது ஏற்கெனவே குறியாக இருந்தது. இதைத் தமிழ் மக்கள் பேரவை சாதகமாக்கிக் கொடுத்திருக்கிறது.

இவற்றின் விளைவாக, ஏறக்குறைய தற்போது ஒரு மாற்று அணி உருவாகி விட்டது எனலாம். ஆனால், இது இன்னமும் முழுமையான வடிவத்தைப் பெறவில்லை. முன்னெடுக்கப்படவுள்ள அரசியல், எதிர்கொள்கின்ற தேர்தல்கள், அவற்றில் உள்ள பங்கீடுகள் என இதற்குள் ஏராளம் அடிப்படையான விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியுள்ளன. அவற்றுக்குள்ளும் உடன்பாடுகள் காணப்பட வேண்டும். அதன்பிறகே வலுவான கூட்டும் வலுவான அணியும் என்ற அடையாளத்தைப் பெறமுடியும்.

அப்படியென்றால், மாற்றுத் தலைமை என்ற கதைக்கு என்ன நடந்தது? அது சாத்தியமாகும் ஒரு நிகழ்வாகுமா?

மாற்றுத் தலைமை ஒன்றை உருவாக்கியிருக்கக் கூடிய வாய்ப்புகள் சுரேஷுக்கிருந்தன. அல்லது மாற்றுத் தலைமை ஒன்றுக்கான பங்களிப்புகளை அவரால் செய்திருக்க முடியும். அந்தக் கடப்பாடும் தகுதியும் அவருக்கிருந்தது. உண்மையில், அவர் சேர்ந்திருக்க வேண்டிய இடம் கஜேந்திரகுமார் அணி அல்ல; இது சுரேஷுக்கு இன்னொரு வீழ்ச்சியாக, அவருடைய அரசியல் வரலாற்றுக்கு பொருத்தமற்றதாகவே அமையும்.

தமிழரசுக் கட்சிக்கு நிகரான அல்லது மாற்றான ஒரு தரப்பாக இன்றுள்ளது ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பாகும். இன்னும் அரசியல் அரங்கில் மக்கள் தெரிவையும் பிரதிநிதித்துவத்தையும் இது கொண்டுள்ளது.

ஆனால், இது இன்று நான்காகப் பிளவுண்டுள்ளது. சுரேஷ் அணி, டக்ளஸ் அணி
(ஈ.பி.டி.பி), சந்திரகுமார் அணி (சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு), சுகுஸ்ரீதரன் – வரதர் அணி (தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி) என, இந்த நான்கும் ஒரு புள்ளியில் மீளிணைவு கொண்டிருக்கலாம். இந்த மீளிணைவு தமிழ்ச் சமூகத்தில் எத்தகைய சாத்தியங்களைப் பெறும்? என்ற ஐயப்பாடுகள் பலருக்கிருக்கலாம்.

ஆனால், இந்த நான்கு அணிகளும் தமக்கிடையில் இசைவுற்று மீளிணக்கம் கொண்டிருந்தால், இவற்றோடு புளொட்டும் நெருங்கி வந்திருக்கக் கூடிய சாத்தியங்கள் அதிகமாக இருந்தன. இது முழுமையானதொரு மாற்றுத் தலைமைக்குரிய வடிவம் என்று கூற முடியாது விட்டாலும், குறைந்த பட்சமாக அதை நெருங்கக் கூடிய தன்மை இருந்தது.
ஏனெனில், இந்தத் தரப்பினரிடத்தில் கோட்பாட்டுக்கும் நடைமுறைக்கும் இடையிலான இடைவெளிகள் குறைவு. கற்பனையை விட யதார்த்தத்தைப் பற்றிய நம்பிக்கையும் புரிதலும் அதிகமுண்டு. எல்லாவற்றுக்கும் அப்பால், மக்களைக் குறித்த கரிசனை அதிகமுண்டு. ஆகவே இந்தத் தரப்புகள் ஒன்றிணைந்திருக்க வேண்டும். கூட்டமைப்பை நிராகரிப்போரும் யதார்த்தவாத அரசியலை விரும்புவோரும் இந்தத் தரப்பை வலுவாக்கியிருப்பர்.

ஆனால், இதற்குப் பிரதான குறைபாடாக இருப்பது இந்தத் தரப்புகளுக்கிடையே இருக்கின்ற கசப்புகளாகும். இதிலே வேடிக்கை என்னவென்றால், தமது அடிப்படைகளுக்கே எதிரான சக்திகளோடு இணக்கம் காண்பதற்குத் தயாராகவுள்ள இவை, தமக்குள் இணக்கம் காணவும் சேர்ந்து வேலை செய்யவும் தயாரில்லாமல் இருப்பதேயாகும்.

அரசாங்கத்தோடு இணைந்து வேலைசெய்யத் தயாராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தாவுக்கு சுரேஷுடன் இணைய முடியாது. கஜேந்திரகுமாருடன் இணையத் தயாராகவுள்ள சுரேஷுக்கு வரதர் – சுகு ஸ்ரீதரனுடன் இணைய முடியாது. கூட்டமைப்போடு இணையத் தயாராகவுள்ள வரதர் – சுகு ஸ்ரீதரன் தரப்புக்கு சுரேஷுடன் இணைய முடியாது. இது இந்தத் தரப்பினால் மாற்றுத் தலைமையைக் குறித்துச் சிந்திக்கவே முடியாத கையறு நிலையையே காட்டுகிறது.

ஆகவேதான், மாற்றுத் தலைமை என்பது, புதிய இளைய தலைமுறையிடத்திலிருந்தே உருவாக வேண்டும் என்று கூறுகிறேன். செறிவும் செழிப்புமான அனுபவத்தைக் கொண்டிருக்கும் கடந்த கால அரசியல் விளைவுகளுக்குப் பொறுப்புள்ள தரப்புகள் உரிய முறையில் செயற்படவில்லை என்றால், அதைப் புதிய தலைமுறையாளர்களே செய்வர்.

காலம் படிப்பினைகளின் வழியே பயணிக்கும். அது என்றும் வெற்றிடங்களை விட்டுச் செல்வதில்லை.