தமிழ் பெண்ணின் வீட்டுக்குள் இரகசியமாக புகுந்த சிங்கள அரச அதிபர்! நடந்தது என்ன?

பௌத்த தீவிரவாத அமைப்பாக புதிதாக நாட்டில் முளைத்து சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கி விட்ட பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரரை நாய் கூண்டில் அடைப்பார்கள் என்று கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது எதிர் கட்சியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, இவரை ஆதரித்து பிரசாரம் செய்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் மேடைகளில் முழங்கினார்கள். இப்பேச்சுகள் முஸ்லிம் மக்கள் மத்தியில் பெரிதும் எடுபட்டன. இதனால் அத்தேர்தலில் ஆட்சி மாற்றத்தை வேண்டி முஸ்லிம் மக்கள் ஒன்று திரண்டு வாக்களித்தனர். சில இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தோல்வி அடைவதற்கும், மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக ஆட்சி பீடம் ஏறுவதற்கும் அவ்வாக்குகளே தீர்மானிக்கும் சக்திகளாக மாறின.ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இன்று முஸ்லிம்களுக்கு சிறிதும் நம்பிக்கை ஊட்டுவனவாக இல்லை. நல்லாட்சி அரசாங்கம் என்றும் தேசிய நல்லிணக்க அரசாங்கம் என்றும் சொல்லப்படுகின்ற இந்த அரசாங்கத்தில் நல்லாட்சியையும், தேசிய நல்லிணக்கத்தையும் முஸ்லிம்கள் காண முடியாத நிலையே நீடித்து செல்கின்றது. அதாவது ஆட்சி மாற்றத்துக்கு முஸ்லிம் மக்கள் வாக்களித்தனர், ஜனாதிபதி மாற்றப்பட்டார், அரசாங்கம் மாற்றப்பட்டது.

ஆனால் மாற்றம் பெறாத ஒரு விடயம் முஸ்லிம் மக்களால் பாராளுமன்றத்துக்கு அனுப்பப்பட்ட முஸ்லிம் தலைமைகள் வழக்கம் போல அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றன. அதே போலவே மாற்றம் பெறாத பிரதான விடயம் பௌத்த தீவிரவாத அமைப்பான பொதுபலசேனாவின் முஸ்லிம் விரோத நடவடிக்கைகள் அரசாங்கத்தின் ஆசியுடன் தொடர்ந்து இடம்பெறுகின்றன என்கிற கசப்பான உண்மை ஆகும்.

மஹிந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்து இருந்த பேரினவாத அமைச்சர்கள் இந்த அரசாங்கத்திலும் முக்கிய இடம்பிடித்து கொண்டு பொதுபலசேனாவின் செயற்பாடுகளுக்கு துணை போகின்றனர். மேலும் பொதுபலசேனாவின் முஸ்லிம் விரோத செயற்பாடுகள் தொடர்பாக முறையிட ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை முஸ்லிம் எம். பிகள் அவசியமும், அவசரமுமான தருணங்களில் சந்திக்க முடியாமல் உள்ளது. எனவே ஆட்சி, அரசாங்கம் ஆகியன மாற்றத்துக்கு உள்ளாகி உள்ளபோதிலும் மொத்தத்தில் ஏமாற்றம்தான் முஸ்லிம்களுக்கு மிஞ்சி உள்ளது.

ஒரே ஒரு வித்தியாசம் நல்லாட்சி என்கிற ஈர துணியை உடுக்க வைத்து பொல்லால் அடிக்கின்றனர் என்பதாகும்.
நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக 117 சம்பவங்கள் இடம்பெற்று இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 06 மாத காலத்தில் 1000 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதி உடைய சொத்துக்களை முஸ்லிம்கள் இழந்து உள்ளனர் என்றும் இவ்விபரங்கள் கூறுகின்றன. பள்ளிவாசல்கள், முஸ்லிம் கிராமங்கள், முஸ்லிம்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள் ஆகியவற்றையே இலக்கு வைத்து தாக்குகின்றனர்.

ஆனால் சம்பவங்களோடு தொடர்புபட்டு எந்தவொரு கைதுகளும் இடம்பெற்று இருப்பதாக தெரியவில்லை. குறிப்பாக ஞானசார தேரரை கைது செய்வதாகவும், கட்டுப்படுத்துவதாகவும் காட்டப்பட்ட நடவடிக்கைகள் பிசுபிசுத்து போய் விட்டன என்பதே உண்மை ஆகும். இதனால் ஞானசார தேரர் அடங்கலாக பொதுபலசேனா பிக்குகளின் அட்டகாசம் இன்னமும் அதிகரித்து விட்டதுடன் முஸ்லிம்களை ஒரு கை பார்ப்பார்கள் என்று வெளிப்படையாகவே கறுவி கொண்டு நிற்கின்றனர். ஞானசார தேரருக்கு உயிராபத்து உள்ளதாக தெரிவித்து பொலிஸ் பாதுகாப்பு நல்லாட்சியில் வழங்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

வழக்கம் போலவே இந்த அரசாங்கத்திலும் அங்கம் வகிக்கின்ற முஸ்லிம் அரசியல் தலைமைகள் முஸ்லிம் விரோத சம்பவங்கள் இடம்பெறுகின்றபோது அந்த இடங்களுக்கு நேரில் சென்று காட்சிகளை பார்வையிடுகின்றன, பாதிக்கப்படுகின்ற தரப்பினருடன் பேசுகின்றன, பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுகின்றன, பாராளுமன்றத்தில் சில வேளைகளில் உரையாற்றுகின்றன, ஜனாதிபதி, பிரதமர் போன்றோரை சந்தித்து பேச நேரம் கேட்கின்றன, தேர்தல் காலம் நெருங்குகின்றபோது சற்று வீராவேசமாக மேடைகளில் கொக்கரிக்கின்றன. இவற்றையே கடந்த மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்திலும் செய்திருந்தன. ஆனால் இவற்றுக்கு அரசாங்கத்தில் இருந்து விலகி, எதிர் கட்சியில் பின் வரிசையில் அமர்ந்து எதிர்ப்பு அரசியல் செய்கின்ற அளவுக்கு நெஞ்சில் உரமோ, நேர்மை திறனோ கிடையாது என்று பொதுவாக விமர்சிக்கப்படுகின்றது.

முஸ்லிம்களின் எழுச்சி அவசியம்
அரசாங்க ஆதரவுடன் கூடிய முஸ்லிம் விரோத செயற்பாடுகள் நாளுக்கு நாள் நாடு பூராவும் அதிகரித்து கொண்டே வருகின்ற நிலையில் முஸ்லிம்களின் ஒருமித்த எழுச்சியை பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள முஸ்லிம் அரசியல் தலைமைகளும், முஸ்லிம் மக்களும் ஒன்றுபட்டு நின்று அரசாங்கத்துக்கும், சிங்கள பேரினவாதத்துக்கும், பௌத்த தீவிரவாதத்துக்கும் மட்டும் அன்றி சர்வதேச சமூகத்துக்கும் எடுத்து காட்ட வேண்டிய தருணம் இது ஆகும்.

தேசிய காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான அதாவுல்லாவின் ஆசியுடன் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த புத்திஜீவிகளை உள்வாங்கி சுயாதீனமான, சுதந்திர அமைப்பாக உருவாக்கப்பட்டு உள்ள கிழக்கு மக்கள் அவையம் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவையை போல செயற்படுவதுடன் முஸ்லிம்களின் எழுச்சியை கடந்த வாரம் ஆரம்பித்து வைத்தது.

இறக்காமத்தில் புதிய சரித்திரம்
கிழக்கு மக்கள் அவையத்தினரால் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் காணி பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்கின்ற கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை இறக்காமத்தில் நடத்தப்பட்டது. அங்குரார்ப்பண வைபவம் போன்றவற்றுக்கு பிற்பாடு கிழக்கு மக்கள் அவையம் நடத்திய முதலாவது கூட்டம் இதுவே ஆகும்.இங்கு இக்கூட்டத்தை நடத்த தீர்மானித்ததில் ஒரு நுட்பம் நிச்சயம் பின்னால் இருக்கவே செய்கின்றது. என்னவென்றால் இங்கு உள்ள மாணிக்கமடு பிரதேசத்தின் மாயக்கல்லி மலையில்தான் பேரினவாத அமைச்சர் தயா கமகேயால் ஒரு வருடத்துக்கு முன்னர் புத்தர் சிலை வைக்கப்பட்டது, மலையை சுற்றி முஸ்லிம்களுக்கு சொந்தமாக உள்ள காணிகளில்தான் தீவிரவாத பிக்குகள் அடாவடியாக விகாரை அமைக்க முயன்றனர். கிழக்கு மாகாணத்துக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களின் பிரச்சினையாக இப்போது இது மாறி உள்ளது.

இக்கூட்டத்தில் கலந்து கொள்ள முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரமுகர்களுக்கு அவையத்தால் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமாக இருந்த ஹசன் அலி, இதே கட்சியின் தவிசாளராக இருந்த பஷீர் சேகு தாவூத், தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா போன்றோருடன் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதிநிதிகள் பலரும் அவையத்தின் அழைப்பின் பெயரில் இதில் கலந்து கொண்டனர். அரசியல்வாதிகளை விட சமூக மாற்றத்தின் பிரதான பங்காளிகளான சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோரும் கணிசமான அளவில் பங்கேற்று இருந்தனர்.

அரசாங்கத்தால் வன பரிபாலன திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருட்கள் திணைக்களம் ஆகியவற்றின் ஊடாக முஸ்லிம்களின் காணிகள் திட்டமிடப்பட்ட வகையில் கையகப்படுத்தப்படுவது குறித்து துறை சார்ந்த நிபுணர்களால் இக்கூட்டத்தில் ஆதாரங்களுடன் எடுத்து சொல்லப்பட்டது. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் முக்கியமாக 08 இடங்கள் இவ்விதம் கபளீகரம் செய்யப்பட்டு உள்ளன என்று காண்பிக்கப்பட்டது. அதே போல மாயக்கல்லி மலை மீட்பு குழுவை சேர்ந்த சட்டத்தரணி பாருக் உரையாற்றியபோது அதிர்ச்சி தகவல்கள் பலவற்றை சான்றுகள் சகிதம் சொல்லினார்.

மாயக்கல்லி மலையை சுற்றி முஸ்லிம்களுக்கு சொந்தமாக உள்ள காணிகளில் விகாரை அமைக்கின்ற முன்னெடுப்புகளை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு வசதியாக ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம், தொல்பொருள் திணைக்கள தலைமை காரியாலயம், கிழக்கு மாகாண காணி அமைச்சரின் அலுவலகம் ஆகியவற்றில் இருந்து உத்தியோகபூர்வ சிபாரிசு கடிதங்கள் தீவிரவாத பிக்குகளால் பெறப்பட்டு இருந்தன என்பதை விளக்கினார். மேலும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அவருடைய அதிகாரங்களை துஷ்பிரயோகங்கள் செய்தும், அவருக்கு இருக்க முடியாத அதிகாரங்களை சட்டத்துக்கு புறம்பான வகையில் பயன்படுத்தியும் தீவிரவாத பிக்குகளின் காணி கபளீகரத்துக்கு உதவி, ஒத்தாசை புரிந்து வருகின்றார் என்பதையும் விபரமாக கூறினார் பாருக்.

இங்கு விகாரை அமைக்க முஸ்லிம்களின் காணிகள் தேவை இல்லை என்று இப்போது தீவிரவாத பிக்குகள் குத்துக்கரணம் அடித்து இருப்பதன் இரகசியத்தை அறிய முற்பட்டபோது தமிழ் பெண் ஒன்றை அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் பிரத்தியேகமாக அணுகி அப்பெண்ணின் குடும்பத்துக்கு சொந்தமான காணியை விலைக்கு தருமாறு கேட்டார் என்றும் வேறு பல சலுகைகள் பெற்று தரப்படும் என்று ஆசை வார்த்தைகள் கூறினார் என்றும் தெரிய வந்து உள்ளது என்று அம்பலப்படுத்தினார். அரசியல் பிரமுகர்களுக்கு அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்று உள்ள காணி கபளீகரங்கள், மாணிக்கமடு மாயக்கல்லி மலை காணி கபளீகர முயற்சிகள் குறித்த ஆவணங்கள் சம்பிரதாயபூர்வமாக கூட்டத்தில் வைத்து கையளிக்கப்பட்டன.

அதே போல அம்பாறை மாவட்டத்தில் நிலவுகின்ற காணி பிரச்சினைகள் குறித்த விடயங்களை கையாள விசேட நிபுணர்கள் குழு ஒன்றும் உருவாக்கப்பட்டது. இக்குழு மக்கள் சந்திப்புகளை எதிர்காலத்தில் மேற்கொண்டு காணி பிரச்சினைகளை செவிமடுக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

பஷீர் சேகு தாவூத் இங்கு பேசியபோது தமிழர்களை இனி மேல் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது என்கிற நிலையிலேயே முஸ்லிம்கள் மீது கை வைத்து உள்ளார்கள், வடக்கில் தமிழர்களும், கிழக்கில் முஸ்லிம்களும் பெரும்பான்மையாக வாழ்கின்ற நிலையில் இம்மாகாணங்களில் இவர்களை சிறுபான்மையினராக மாற்றவே திட்டமிடப்பட்ட வகையில் நில ஆக்கிரமிப்புகளை மேற்கொள்கின்றார்கள், முஸ்லிம்களை பீதி அடைய வைக்கின்றனர், எனவே கட்சி பேதங்கள், பிரதேச வேறுபாடுகள் போன்றவற்றை மறந்து முஸ்லிம் சமூகத்தின் எழுச்சிக்கும், எதிர்காலத்துக்குமாக ஒற்றுமைப்பட்டு செயற்பட வேண்டி உள்ளது என்று முழங்கினார்.

ஹக்கீம் காங்கிரஸ் தவிர்ந்த ஏனைய முஸ்லிம் கட்சிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உள்ளன, தமிழ் தேசிய கூட்டமைப்பு போல முஸ்லிம் தேசிய கூட்டமைப்பை உருவாக்கி எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவர் ஏ. எம். ஜெமீல் மிக உற்சாகமாக பேசினார்.

இதே கட்சியின் தவிசாளர் பிரதி அமைச்சர் எம். எஸ். அமீர் அலி பேசியபோது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சி ஆகிய இரு பிரதான கட்சிகளினதும் கூட்டு தலைமையில் புதிய அரசாங்கத்தை உருவாக்கி கொடுத்ததன் மூலம் தவறு இழைத்து விட்டனரோ? என்று சிந்திக்க வேண்டி நேர்ந்து உள்ளது என்றார். பேரினவாதிகளின் சூழ்ச்சிகளில் இருந்து முஸ்லிம் மக்களை பாதுகாக்க தலைவர்கள் முன்வர வேண்டும், முஸ்லிம் தலைவர்கள் பிரிந்து நிற்பதால் எதையும் சாதிக்க முடியாது, கட்சி பேதங்களுக்கு அப்பால் சமூக நலனுக்காக தலைவர்கள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் அன்றி மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார் போன்ற மாவட்டங்களிலும் முஸ்லிம்கள் காணி பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர் என்று சொன்னார்.

அதாவுல்லாவின் அதிரடி
முன்னாள் அமைச்சர் அதாவுல்லா பேசியபோது கிழக்கு மக்கள் அவையம் அதன் கூட்டங்களை கிழக்கு மாகாணம் முழுவதும் நடத்தும் என்று நம்பிக்கை வெளியிட்டார். அத்துடன் கிழக்கின் அவையம் போல முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்கள் தோறும் ஏதேனும் ஒரு பெயரில் அமைப்புகள் இயங்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று பேசினார்.

தேசத்தின் தந்தை என்று வர்ணிக்கப்படுகின்ற டி. எஸ். சேனநாயக்கவின் காலத்தில்கூட அபிவிருத்தி என்கிற பெயரில் கிழக்கு முஸ்லிம்களுக்கு அநியாயம் மேற்கொள்ளப்பட்டு காணிகள் சூறையாடப்பட்டன என்று சுட்டி காட்டினார். தமிழ் இளையோர்கள் போன்று முஸ்லிம் இளையோர்கள் ஆயுதம் தாங்கி போராட கூடாது என்பதற்காகதான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்கிற முஸ்லிம் அரசியல் இயக்கத்தை பெருந்தலைவர் அஷ்ரப் உருவாக்கினார், எனவே முஸ்லிம் இளையோர்களை வன்முறைக்கு தூண்டுகின்ற வகையில் சில அரசியல்வாதிகள் விட்டிருக்கின்ற அறிக்கைகளும், அறைகூவல்களும் தவறான அணுகுமுறைகள் ஆகும் என்று சொல்லி கண்டித்தார்.

அரசியல் நோக்கத்துக்காக அன்றி சமூகத்துக்காகவே அரசியல் தலைவர்கள் ஒன்றுபட்டு இங்கு வந்து உள்ளனர், எல்லா முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகளும் இங்கு உள்ளனர் என்று தெரிவித்த இவர் கிழக்கு மக்கள் அவையம் அனைத்து முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்து உள்ள நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாண சபை உறுப்பினர்களும் எதிர்காலத்தில் அவையத்தின் கூட்டங்களில் பங்கேற்க வேண்டும் என்று பகிரங்க கோரிக்கை விடுத்தார்.

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களே மிக அதிகமாக உள்ளபோதிலும் மிக சொற்ப தொகையினரான சிங்களவர்களே அதிக காணிகளை இங்கு வைத்திருக்கின்றனர், இது இங்கு நிலவுகின்ற இன விகிதாசாரத்துக்கு புறம்பானதும், விரோதமானதும் ஆகும் என்று தெரிவித்த அதாவுல்லா ஏனைய அரசியல் பிரமுகர்களின் சம்மதத்தை பெற்று முக்கியமான தீர்மானம் ஒன்றை இக்கூட்டத்தில் அறிவித்தார்.

முஸ்லிம்கள் தற்போது எதிர் நோக்கி வருகின்ற காணி பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதோடு முஸ்லிம்கள் மாவட்டங்கள் தோறும் வாழ்கின்ற விகிதாசாரத்துக்கு ஏற்ப அவர்களுக்கு காணிகள் வழங்கப்பட வேண்டும் என்பதே இத்தீர்மானம் ஆகும். மாவட்டங்களில் ஒவ்வொரு இனமும் வாழ்கின்ற விகிதாசாரத்துக்கு அமையவே அவற்றுக்கு காணிகள் வழங்கப்பட வேண்டும் என்பதாக அரசியல் அமைப்பு மாற்றத்தின்போது உறுப்புரை ஒன்றை கொண்டு வர வேண்டும் என்பதே இவரின் முன்மொழிவு ஆகும்.

இம்முன்மொழிவு அரசியல் அமைப்பில் சேர்க்கப்படுகின்ற பட்சத்தில் முஸ்லிம்களினதும், தமிழர்களினதும் இருப்பு, எதிர்காலம், பாதுகாப்பு ஆகியன உறுதிப்படுத்தப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.
மேற்படி கூட்டத்தின் ஆரம்பம் முதல் நிறைவு வரை ஹசன் அலி முக மலர்ச்சியோடும், மிக்க மகிழ்ச்சியோடும் காணப்பட்டார். நாம் அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது இக்கூட்டம் ஒரு பூர்வாங்க முன்னெடுப்பாக, முன்னோடி நடவடிக்கையாக அமைந்தபோதிலும் எதிர்காலத்தில் இடம்பெற கூடிய பிரமாண்ட எழுச்சிகளுக்கு நம்பிக்கை ஊட்டுவதாகவும், கட்டியம் கூறுவதாகவும் இருந்தது என்று தெரிவித்தார்.

முன்னிலை வகிக்கின்ற சமூக இணைப்பு தளமான முகநூலில் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் அண்மைய தினங்களில் அதிகம் சூடு பிடித்த விடயமாகவும் அவையத்தின் கூட்டமே அமைந்து நின்றது. முஸ்லிம் உணர்வாளர்கள் இதற்கு ஆதரவாக பதிவுகளை ஏற்றியும், அவற்றை நண்பர்களுடன் பகிர்ந்தும், கருத்துகளை பின்னூட்டங்கள் செய்தும் உள்ளனர்.

(Arivu Com)