தாயகம் ஆசிரியர் ஜோர்ச் எழுதியுள்ள கட்டுரை…

இவர்களுக்கு அந்தந்த நேரத்தில் எங்கே அரிப்பு எடுக்கிறதோ அதற்கு தகுந்த மாதிரி, தங்களுடைய தோல்விகளுக்கு ஒருவரைத் தேர்ந்தெடுத்து திட்டிக் கொள்வார்கள். நேற்று திட்டியவரை நாளைக்கு இவர்களுக்கு நினைவிருக்காது.

ஒருபோதும், தங்களின் தோல்விக்கு மேதகு தான் காரணம் என்பதையோ, அவ்வாறானதொரு மேதகு அறிவுப் பெருந்தகையில் மட்டுமே தாங்கள் ‘அடிச்சுப் பறிக்கப் போறார்!’ என்று நம்பிக்கை கொண்டிருந்த முட்டாள் தனம் பற்றியோ இவர்கள் ஒரு போதும் ஒப்புக் கொண்டதில்லை.
சரத் பொன்சேகா ஜனாதிபதியாக வேண்டும் என்று தலையால் மண் கிண்டிய கூட்டம் அல்லவா?

முன்பு புலிகள் கோலோச்சிய காலத்தில், எங்கேயோ நடந்த தாக்குதல் ஒன்றில் புலிகள் வாங்கிக் கட்டிய போது, ‘தோல்விக்கு துரோகிகளே காரணம்!’ என்பதைக் கேட்ட புலிகளின் முக்கிய புள்ளி ஒருவர், கடுமையான கடுப்பில், ‘வென்றால் தலைவரின் தீர்க்கதரிசனம், தோற்றால் துரோகிகளின் சதி!’ என்று சொன்னதை, வழமை போல யாரோ தலைவருக்கு தகடு கொடுத்து, அவர் இயக்கத்திலிருந்து ஒதுக்கப்பட்டு தற்போது நோர்வேயில் உள்ளதாக இயக்க தொடர்புகள் உள்ள நண்பர்கள் ஒரு தடவை சொல்லியிருந்தார்கள்.

இப்படியாக தற்போது கழுவேற்றப்பட்டிருப்பவர் கருணாநிதி.
தங்களுடைய யுத்தம் (தமிழர்களின் போராட்டம் இல்லை!) தோற்றதற்கான காரணம் கருணாநிதி தான் என்று பழி போடும் புலி ஆதரவாளர்களுக்கு, புலிகளை வைத்து பிழைப்பு நடத்தும் சீமான், திருமுருகன் காந்தி முதல் திராவிட இயக்கத்தினர்கள் முட்டுக் கொடுப்பது ஒன்றும் புதிய விடயம் இல்லை.

எலும்புத் துண்டுகளை எறியும் எஜமானர்களுக்காக நாய்கள் யாரையும் பார்த்து குலைக்கத் தான் செய்யும்.

தன்னால் தோற்கடிக்க முடியாத ராஜபக்ஷவை பிரபாகரன் மூக்குடைக்க வசதியாக, பொழுதுபோக்கு மல்யுத்தம் மாதிரி, கருணாநிதி பின்னால் இருந்து கட்டிப் பிடிக்கவில்லை என்பது தான் இவர்களின் கவலை.
உலகின் நான்காவது பெரிய இராணுவத்தை விரட்டியடித்தோம் என்று பல ஆண்டுகளாக பீலா விட்டுக் கொண்டிருந்த புலிகள், இந்த தம்மாத்துண்டு இலங்கை இராணுவத்திடம் வாங்கிக் கட்டிய போது, தங்களை கருணாநிதி காப்பாற்றவில்லையே என்று புலம்புவது உங்களுக்கு சிரிப்பாக இருக்கலாம்.

ஆனால் புலிவால்களுக்கு அது ‘தலைவரின் தீர்க்கதரிசனத்தால் வெற்றியைப் பெற முடியாதபடிக்கு துரோகி கருணாநிதி செய்த சதி’!
இல்லாட்டி தலைவர் ‘அடிச்சுப் பறிச்சிருப்பார்!’ தான்.
இதற்கு முன்னர், இந்த அறிவுக்கொழுந்துகளின் சிந்தனை வளர்ச்சியை மெச்சி, சில disclaimer களை சொல்லியாக வேண்டும்.

கருணாநிதியின் வாரிசு அரசியல், மூன்று மணி நேர உண்ணாவிரதம் பற்றிய கேள்விகளுக்கு எல்லாம் பதிலளிக்க வேண்டியது நான் இல்லை.
அத்துடன் இது திமுக கட்டணம் செலுத்திய விளம்பரமும் இல்லை.
தங்களால் தர்க்க ரீதியாக விவாதிக்க முடியாத போதெல்லாம், துரோகி என்று முத்திரை குத்தி அப்பால் போகும் இந்த அறிவுக் கொழுந்துகளுக்கு இதைச் சொல்லாவிட்டால், இதே கதையைத் தான் பின்னூட்டங்களில் சொல்லப் போகிறார்கள். அதை நானே முதலில் சொல்லி வைப்பது அவர்களுக்கு பெரிய உதவியாகவும் இருக்கும்.

அத்தோடு கலைஞர் என்று அழைக்கவில்லையே என்று உடன்பிறப்புகள் டென்ஷன் ஆகக் கூடாது!

கலைஞர் என்று அழைத்தால், பிறகு Me too வைரமுத்துவை கவிப்பேரரசு என்றும் அழைக்க வேண்டி வரும்!

திராவிட ஒவ்வாமை என்று நண்பர்கள் கிளம்பி வர வேண்டாம். திராவிட ஒவ்வுமையை வைச்சு நான் ஒன்றும் பண்ண முடியாது.

ஈழப்போராட்டத்திற்கு இந்திய மாநிலங்களின் ஒன்றிய அரசு (I got you there!) ஆயுதம் கொடுத்த போது, இயக்கங்களுக்கான ஆதரவு வழங்குவதில் தமிழ்நாட்டில் கட்சிகளுக்கு இடையே போட்டியே நடந்தது.
டெலோ சிறிசபாரத்தினம் கருணாநிதியோடு நெருக்கமானதும், வாத்யார் ரசிகரான பிரபாகரன் வாத்தியாரோடு நெருக்கமானதும் நடந்தது. கருணாநிதி சேர்த்து கொடுத்த பணத்தை, வாத்யார் கோபித்துக் கொள்வார் என்பதற்காகவே புலிகள் அதை வாங்காமல் விட்டதும், அதற்கு முரசொலியில் கருணாநிதி உடன்பிறப்புகளுக்கு கண்ணீர் கதை சொன்னதாகவும் ஞாபகம்.

திமுக தளபதியான வைகோவை, இலங்கைக்கு திருட்டுத் தனமாகச் சென்று புலிகளோடு உறவாடியதை வைத்து, வாரிசுப் போட்டியில் தலைவலி இல்லாமல் கழற்றி விடுவதற்கு வாய்ப்பாக அமைந்தது.
புலிகள் வைகோவுடன் நெருக்கமாக இருந்த அளவுக்கு கருணாநிதியுடன் இருந்ததில்லை. வைகோ முதல்வரானால் தங்களுக்கு வாய்ப்பாக இருக்கும் என்ற பிரபாகரனின் தீர்க்கதரிசனம் அவரில் முதலீடு செய்ய வைத்தது. கருணாநிதிக்கு போட்டியாக வைகோ கிளம்புவதை பிரபாகரன் விரும்பியிருந்தார்.

அத்துடன் தான் நெருக்கமாக இருந்த சபாரத்தினத்தைக் கொன்றது கருணாநிதி மனதில் உறுத்தாமலா இருந்திருக்கும்?
ஆனாலும் கருணாநிதி புலிகள் மீது மெத்தனமான போக்கை கடைப்பிடித்தார் என்பது எல்லாருக்கும் தெரியும். அந்த மெத்தனமான போக்கை வைத்து தமிழ்நாட்டில் தங்கள் சேஷ்டைகளை புலிகள் தொடர்ந்து கொண்டே இருந்தார்கள்.

தங்களுடைய சேஷ்டைகள் எவ்வளவு தூரம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பற்றி எந்தக் கவலையும் இல்லாத புலிகள் பத்மநாபாவை தமிழ்நாட்டில் கொன்றதும், கொலையாளிகளை கருணாநிதி தப்ப விட்டதும் பரம ரகசியங்கள். ஈபிஆர்எல்எப்பை புலிகளின் பொய்களை நம்பி துரோகிகளாகத் தான் கருணாநிதி பார்த்திருந்தார்.

இதைக் காரணமாக வைத்து, சட்டமும் ஒழுங்கும் நிலை குலைந்திருப்பதாகக் கூறி, கருணாநிதியின் ஆட்சி கலைக்கப்பட்டது. புலிகளால் தனது ஆட்சியை இழக்க நேரிட்டாலும், கருணாநிதி இன்றைக்கு புலிவால்கள் செய்வது போல, புலிகளைத் திட்டியதில்லை.
அப்படியிருந்தும், சிறுநீர் கழிக்கும் நாய்க்கு செக்கென்ன? சிவலிங்கம் என்ன? என்பது மாதிரி, கொலை செய்யும் புலிக்கு நாபா என்ன? ராஜீவ் என்ன?

தங்களுடைய நாட்டின் பிரதமர் கொல்லப்பட வழி வகுத்துக் கொடுத்தார் என்ற கோபம் தான் கருணாநிதி அந்த தேர்தலில் தோற்பதற்கான காரணமாக இருந்தது.

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். புலிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்கும் முயற்சி தான் நடந்தது.

அப்பாவி இலங்கைத் தமிழர்கள் இதனால் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள்.
கருணாநிதி ஆட்சியில் இருந்த போது, அகதிகளாக வந்த தமிழர்களின் பிள்ளைகள் கல்வி பெறுவதற்கு பெரும் வசதிகள் செய்து கொடுத்தார்.
ஆனால் ஜெயலலிதாவின் ஆட்சியில் இலங்கை மாணவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள்.

புலிகள் பற்றி மோசமாக பகிரங்கமாக பேசியவர் ஜெயலலிதா. புலிகள் மீதும், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் ஈழத் தமிழர்கள் மேலும் கடும் நடவடிக்கைள் எடுத்துவர் அவர்.

ஆனால் அவர் இன்றைக்கு ஈழத்தாய் என்றும் கருணாநிதி துரோகியாகவும் சித்தரிக்கப்படுவதன் பின்னணி என்ன?

வி.பி.சிங் அரசின் உதவியுடன் இலங்கையில் இருந்து இந்திய இராணுவத்தை திரும்பி வரச் செய்ததில் கருணாநிதிக்கு பெரும் பங்குண்டு. இந்திய இராணுவம் திரும்பி வரும்போது, வரவேற்கச் செல்வதைக் கூட கருணாநிதி தவிர்த்திருந்தார்.

பிரேமதாசா அரசு மாற்றம், ஒன்றிய அரசு பலமில்லாத கூட்டணி அரசாக இருந்த நிலை, கருணாநிதியின் அழுத்தம் என்று இந்திய இராணுவம் திருப்பி அழைக்கப்பட்டதைத் தான் ‘நான்காவது இராணுவத்தை விரட்டியடித்தோம்!’ என்று புலிகள் பீற்றிக் கொண்டிருந்தார்கள்.
இம்மாம்பெரிய இராணுவத்தை விரட்டின உங்களை, தம்மாத்துண்டு இலங்கை இராணுவம் நொருக்கித் தள்ளும்போது, நீங்கள் விரட்டின இராணுவம் வந்து காப்பாற்ற வேண்டும், அதற்கு கருணாநிதி வழி வகுத்துக் கொடுக்கவில்லையே என்று எப்படிக் கேட்பீர்கள் என்றெல்லாம் விசயம் தெரியாமல் இந்த புலிவால்களிடம் கேட்கப் போகாதீர்கள்.

யுத்தத்தை தொடங்கியது பிரபாகரன். வாங்கிக் கட்டினார். அதற்கு மற்றவர்கள் வந்து உதவி செய்து தான் காப்பாற்ற வேண்டும் என்பது என்ன நியாயம் என்றெல்லாம் கேட்காதீர்கள்.

இந்தியாவில் அதிகாரத்தில் உள்ளவர்களை கைக்குள் வைத்திருந்தால் தான், இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையில் ராஜதந்திர ரீதியில் ஏதோ வகையில் அழுத்தங்களைக் கொடுக்க முடியும் என்ற சிந்தனை இல்லாமல், வை.கோ, நெடுமாறன், மற்றும் திராவிட இயக்கங்கள் என்று, தமிழக அரசியலின் சில்லறைகள், செல்லாக்காசுகளை மட்டுமே புலிகள் நம்பினார்கள்.

தமிழ்நாட்டில் புலிகளின் பல முதலீடுகளுக்கு இவர்களின் பலர் பினாமிகளாக இருக்கிறார்கள். அந்தப் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் இருப்பதற்காக, இங்கே புலி முகவர்கள் தலைவர் வந்தததும் திருப்பி ஒப்படைப்பதாக கதை விடுவது போல, பிரபாகரன் உயிரோடு இருப்பதாக இவர்கள் கதை விடுவது நடந்து கொண்டிருக்கிறது.

ஒருவருமே பிரபாகரன் உயிரோடு இருந்தால், இப்படி கோமாளித்தனங்களுக்கு விட்டு வைத்திருப்பாரா? மண்டையில் போட்டுத் தள்ளியிருக்க மாட்டாரா? என்றெல்லாம் கேட்பதில்லை.

வெளிநாடுகளில் புலிகளின் பெயரையும் மேதகுவின் படத்தையும் வைத்து இன்றைக்கும் பிழைப்பு நடத்துகின்றவர்களுக்கு, பிரபாகரன் பற்றிய மாயையை தொடர வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதன் அடிப்படையில் தான் சீமான், திருமுருகன் காந்தி, மற்றும் திராவிடச் சிந்தாந்தத்தினர் மீது அவர்கள் முதலீடு செய்து கொண்டிருக்கிறார்கள். தற்போதைய விசா சிக்கல்கள் இல்லாவிட்டால், மாவீரர் தினங்களின் சிறப்பு பேச்சாளர்கள் இவர்கள் தானே.

மேதகு பற்றிய பிம்பத்தை ஊதிப் பெருப்பிப்பது இன்னொரு பெரிய கதை.
உலகில் உள்ள சகல ஜீவராசிகளையும் தங்களுடைய தோல்விக்கு காரணமாக சொல்லிக் கொண்ட புலி ஆதரவாளர்களும், பெரியாரிய சித்தாந்தவாதிகளும் ஏன் திடீரென்று கருணாநிதியையும் திமுகவையும் வில்லர்களாகச் சித்தரிக்கின்றார்கள்?

ஒரு சமூகத்தில் பெரும் சிந்தனை எழுச்சிய ஏற்படுத்திய பெரியாரை விட, ஒரு இனத்தை அழிவுக்கு கொண்டு போய், அதன் எதிர்காலத்தை சூனியமாக்கிய பிரபாகரன் எதற்காக தமிழர்களின் மீட்பராக்கப்படுகிறார்?
அந்த நேரம் திமுகவோடு இருந்த ஜெகத் கஸ்பார் இப்போது எப்படி திடீரென்று தமிழ் தேசியவாதியாகிறார்?

இறுதி யுத்தத்தின் போது, பாஜக ஆட்சிக்கு வரப் போகிறது, தாமரையும் ஈழமும் மலரப் போகிறது என்று பிரபாகரனுக்கு நம்பிக்கையை ஏற்படுத்திய வைகோ வகையறாக்களும், வாங்கிக் கட்டட்டும் என்று போனை off பண்ணி விட்டு தலைமறைவான நெடுமாறன், மற்றும் இந்த திராவிடத்தினரும் பற்றி எந்தக் கோபமும் இல்லாமல்…

பிரபாகரனோடு செலவிட்ட பத்து நிமிடங்களை வைத்தே அரசியல் செய்து கொண்டிருக்கும் சீமான், எந்த பின்னணியும் இல்லாமல் இயக்கம் நடத்தும் திருமுருகன் காந்தி போன்றோர் மீது எந்த சந்தேகமும் இல்லாமல்…
திமுகவும் கருணாநிதியும் எதிரிகளாகச் சித்தரிக்கப்படுவது ஏன்?
இதுதான் இன்றைய பதினைந்து லட்சம் ரூபா வங்கிக் கணக்கு கேள்வி!
நீண்ட காலமாக, பார்ப்பனியத்தின் எதிரியாக திமுக சித்தரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. திராவிட இயக்கங்கள் சமூக இயக்கங்களாக இருந்தாலும், திமுக தான் பெரியாரியத்தை அரசியல் அதிகாரமாக்கிய ஒன்று.

அது பிராமணர்களின் மேலாதிக்கத்தை மட்டுப்படுத்தி வைத்திருந்திருக்கிறது.

எம்.ஜி.ஆரும், பார்ப்பன வம்ச ஜெயலலிதாவும் ஆட்சியில் இருந்தது திராவிட சிந்தனையின் அடிப்படையில் இல்லை. எம்.ஜி.ஆரின் அண்ணாயிசமோ, ஜெயலலிதாவோ பார்ப்பனியத்திற்கு அச்சுறுத்தலாக இருந்ததில்லை.

இத்தனை வருடங்கள் ஆட்சியில் இல்லாமல் இருந்தாலும், ஆட்சியில் இருந்த ஜெயலலிதாவையோ, அவரது கொத்தடிமை சித்தப்பாக்களையோ, அதிமுக அரசையோ மாரிதாஸ், எச்.ராஜா, எஸ்.வி.சேகர் வகையறாக்கள் எவருமே விமர்சித்ததில்லை.

எதிர்க்கட்சியாக இருந்த திமுகவைத் தான் இவர்கள் எல்லாரும் குறி வைத்திருக்கிறார்கள்.

பார்ப்பனிய பின்னணி கொண்ட இவர்களோடு, பெரியாரிய திராவிடம் பேசுவோரும், திராவிடத்தால் வீழ்ந்தோம் என்கிற சீமான், திருமுருகன் காந்தி போன்றோரும் ஒரே நேர்கோட்டில் இணைவதன் நோக்கம் என்ன?
அதிமுக கட்சி, சசிகலா எல்லாரையும் ஊழலை வைத்தே பிளாக்மெயில் பண்ணலாம். எந்த ஆளுமையும் இல்லாத அந்தக் கட்சியை இலகுவாக சிதைத்து விடலாம்.

இந்தியா முழுவதையும் இந்துத்துவ கொள்கையைக் காட்டி, குஜராத்திகள் பொருளாதாரத்தைக் கைக்குள் கொண்டு வருவதை தென் மாநிலங்களில் தமிழ்நாடும் கேரளாவும் தான் தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கின்றன.
அதை, தமிழ்தேசியம் என்ற போர்வையில் சில சக்திகளைக் கிளப்பி, வாக்குகளைப் பிரித்து, திமுகவின் ஆதரவுக் கோட்டையைத் தகர்ப்பதன் மூலமே தமிழ்நாட்டைக் கைக்குள் கொண்டு வர முடியும்.

இதன் முதல் படியாக சீமானும், கமலும் பிரித்த வாக்குகளால் தான் பாஜக நான்கு ஆசனங்களைப் பெற்றிருக்கிறது.

அவர்களுடைய நீண்ட காலத் திட்டப்படி, அதிமுகவை சிதைத்து பாஜக எதிர்க்கட்சியாவது தான் முதல் நோக்கம்.

அதற்கு பார்ப்பனர்கள் மீதான தமிழ்நாட்டில் உள்ள எதிர்ப்பை மனதில் கொண்டு, அவர்களைத் தவிர்த்து அருந்ததியர் சமூகம், கவுண்டர் சமூகம் என பிரித்து கொம்பு சீவுவதன் மூலம் இந்த வாக்குகளைப் பிரிக்கலாம். இவ்வாறான வாக்குப்பிரிப்புகளால் தான் வடக்கில் பல மாநிலங்கள் பாஜகவின் கட்டுப்பாட்டில் வந்திருக்கிறது.

தற்போது தமிழ்நாட்டில் பொருளாதாரம் மெதுமெதுவாக வடக்கில் உள்ளோரின் கைகளில் வந்து கொண்டிருக்கிறது. வடக்கில் இருந்து பெருமளவில் குடியேற்றக்காரர்கள் வந்து குடியேறுகிறார்கள். இதெல்லாம் நீண்ட காலத் திட்டத்தின் அடிப்படையிலானது.

இந்த நோக்கத்தில் தான் தமிழ்த்தேசியம் கிளப்பி விடப்படுகிறது.
இந்தப் புள்ளியில் இந்துத்துவக் கூட்டமும் புலிக் கூட்டமும் ஒன்றிணைகிறது. இந்துத்துவத்தைக் கையில் எடுத்தால் ஈழம் கிடைக்கும் என்ற எண்ணம் யாழ்ப்பாணிகளுக்கு வேறு வரத் தொடங்கியிருக்கிறது.
ஒரு மூடனின் யாழ்ப்பாணித் தமிழ்த்தேசியம் ஒரு இனத்தை பாதாளப் படுகுழிக்குள் தள்ளியிருக்கிறது.

தற்போது பல மூடர்கள் மூலைக்கு மூலை தமிழ்த்தேசியத்தோடு தமிழ்நாட்டில் கிளம்பியிருக்கிறார்கள்.

அடிச்சுப் பறிப்பார் என்று நம்பிய மேதகுவின் யாழ்ப்பாணம் இராணுவம் பரவலாகவும் பௌத்தம் வீதியெங்கும் மலிந்து காணப்படும் நிலையில் வந்து நிற்கிறது.

இதே நிலைமை தமிழ்நாட்டில் வர, குஜராத்திகளுக்கு சேவகம் செய்யும் நிலை வர, அதிக நாள் எடுக்காது.

ஒரு இனத்தையே பகுத்தறிவு சிந்தனைக்குள் கொண்டு வந்து, சிந்தனை எழுச்சியை உருவாக்கிய ஒரு பெருமனிதரை புறம் தள்ளி, ஒரு கொலைகாரனை வழிபாட்டுக்குரியவனாக்குவது…

சுருக்கமாகச் சொன்னால்,
நல்லதுக்கு இல்லை!
அப்புறம் உங்க பாடு!

(George RC)