தோழர் வே. ஆனைமுத்து தனது சிந்தனையை நிறுத்திக் கெண்டார்.

அன்றைய திருச்சி மாவட்டத்தின் பெரம்பலூர் வட்டத்தில் உள்ள முருக்கன்குடியில் பிறந்தவர் ஆனைமுத்து. வேம்பாயி – பூவாயி அம்மாள் தம்பதியின் மூத்த மகனாக 21.06.1925ல் பிறந்தார் ஆனைமுத்து,

சிறுவயதில் இறை நம்பிக்கை உள்ளவராய் கிராமத்துத் திருவிழாக்களின்போது நாடகங்களிலும் கூத்துகளிலும் புராணக் கதாபாத்திரங்களில் நடித்தவர். எனினும், தீண்டாமைக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கும் எதிரான கோபம் அவரது மனதில் பள்ளிநாட்களிலேயே உருவாகத் தொடங்கியது.

நாற்பதுகளின் தொடக்கத்தில் அவரது பள்ளி ஆசிரியர் கணபதியால் பெரியாரின் குடியரசு பத்திரிகை அவருக்கு அறிமுகமானது. நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான ஏ.டி.பன்னீர்செல்வம் விமான விபத்தில் இறந்தபோது, அதை சமூகத்தில் ஒரு பிரிவினர் கொண்டாடியது ஆனைமுத்துவை அதிரவைத்தது

முழுமையான திராவிட இயக்க உணர்வாளராக அவரை உருமாற்றியது இந்தச் சம்பவம் ஆகும். தனது 19வது வயதில் 1944ல் வேலூரில் நடந்த ஒரு கூட்டத்தில் பெரியாரின் பேச்சை கேட்டு அவரைப் பின்பற்றும் சிந்தனையிற்குள் தள்ளப்பட்டார்.

தனது கல்லூரிப படிப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டார். எனினும், அவரது ஆர்வம் தமிழ் இலக்கியங்களிலும் வரலாற்றிலும்தான் அதிகம் இருந்தது.
ஆரம்பத்தில் பத்திரிகைத் துறையில் இருந்த ஆர்வத்தின் காரணமாக பலவேறு பத்திரிகைகளை நடாத்தி வந்தார். அவை ‘குறள் மலர்’, ‘குறள் முரசு’, ‘சிந்தனையாளன்’ Periyar Era ஆகியவை அடங்கும்.

1980 களின் முற்கூற்றில் ஈழவிடுதலைப் போராட்டத்தில் மிகத் தீவிரமான செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த காலகட்டம். தமிழ் நாட்டை ஈழவிடுதலைப் போராட்ட அமைப்புகள் பின்புலமாக பாவித்த நிகழ்வுகள் நடந்தேறிய நிலமை. ஒவ்வொரு விடுதலை அமைப்புகளும் தமிழகத்தை, அங்குள்ள அரசியல் கட்சிகளை, மக்களை எமது தொப்புள் கொடி உறவாளர் என்ற வகையில் அணுகி தமது ஆதரவு தளத்தை உருவாக்கிக் விரிவாக்கிக் கொண்ட கால கட்டம்

இதற்கு அப்பால் ஈழவிடுதலை அமைப்புகள் தாம் நம்பும் சித்தாந்தங்களை அடிப்படையாக கொண்ட தமிழக அரசியல் கட்சிகள், தலைவர்கள் நபர்களை அணுகி ஈழவிடுலைப் போராட்டதிற்கான செயற்பாடுகளை மேற்கொண்டிருந்த ஒரு சூழலில் தோழர் பத்மநாபாவின் விருப்பமான தொடர்பிற்குள் வந்தவர்களில் முதன்மையானவர் தோழர் ஆணைமுத்து ஆவார். தோழர் பத்மநாபாவுடன் சேர்ந்து சில தடவைகள் அவரை சந்தித்த அனுபவமும் என(ம)க்கு உண்டு.

தனது பெயரிற்கு முன்பு ஏதாவது ஒரு பட்டத்தை வைத்திருத்தல் என்பதை பெருமையாக கொள்ளும் பலரில் ஆனைமுத்து தோழர் என்ற பதத்தை விருப்புடன் தனது பெயருக்கு முன்பு வைத்துக் கொண்டார்.

தோழர் என்ற அடைமொழியை தனது பெயருக்கு முன்பு வைப்பதற்குரிய சகல தகுதிகளையை கொண்டிருந்தவராக ஆனைமுத்து இருந்தார். சமதர்மக் கொள்கைகளை தனக்குள் உள்வாங்கிக் கொண்டு செயற்பட்டு தமிழ் நாட்டிலும் ஏன் இந்தியாவில் சாதி அமைப்பை உடைத்தெறிவதற்கு தேவையான சமூக நிதி செயற்பாட்டைக் கொண்டிருந்த பெரியாருடன் கம்யூனிஸ்டகளும் இணைந்து செயற்பட வேண்டும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கைகளை வைத்து இருவரையும் சமாந்தரமாக பயணிப்பதற்குரிய சூழலை உவாக்கியதில் தோழர் ஆனைமுத்துவின் பங்கு மகத்தானது

ஆரம்பத்தில் ஆனைமுத்துவின் மேடைப் பேச்சொன்றை செவிமடுத்த பெரியார் அந்த பொது கூட்டத்தின் பின்பு ஆனைமுத்துவை தன்னுடன் இணைந்து செயற்படுமாறு அழைத்த போது மறுத்துரைத்த தோழர் ஆனைமுத்து.

தனது 19வது வயதில் 1944ல் வேலூரில் நடந்த ஒரு கூட்டத்தில் பெரியாரின் பேச்சை கேட்டு, அவரைப் பின்பற்ற முடிவு செய்தாலும் 1957ல் பெரியாரால் அறிவிக்கப்பட்ட அரசியல் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு 18 மாதங்கள் வேலுர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு கிடைத்த நேர அவகாசத்தில் தமிழ் நாட்டின் சாதிய ஒடுக்க முறை என்பது பற்றியும் அதற்காக பெரியாரின் போராட்டங்கள் பற்றியும் ஆழ்ந்து வாசித்து அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டத்தினால் பெரியாருடன் இணைத்த செயற்படுவதற்கு அவரை இழுத்துச் சென்றது என்றால் மிகையாகாது.

அது அவர் வாழ்நாள் முழுவதும் பெரியாரின் படைப்புக்களை தொகுத்து வெளியிடும் பணியை இடைவிடாது செயற்படுத்தியவராக தமது பெயரை பதிவதற்கு வாய்பை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது.
பெரியார் உயிரோடு இருந்த காலகட்டத்திலேயே அவரது உரைகள், எழுத்துகள் ஆகியவற்றைத் தொகுக்க ஆரம்பித்த ஆனைமுத்து, அவற்றை ‘பெரியார் – ஈ.வெ.ரா. சிந்தனைகள்’ என்ற பெயரில் 2170 பக்க புத்தகமாக வெளியிட்டார்.

இந்தத் தொகுப்புகள் பின்பு விரிவாக்கம் செய்யப்பட்டு, 20 பாகங்களாக வெளியாயின. பெரியாரின் கருத்துகள் குறித்த ஆய்வில், ஆனைமுத்துவின் இந்தத் தொகுப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இவை தவிர, சிந்தனையாளர்களுக்கு சீரியவிருந்து, தீண்டாமை நால்வருணம் ஒழிப்போம், பெரியார் கொள்கைகள் வெற்றிபெற பெரியார் தொண்டர்கள் செய்ய வேண்டியது என்ன?, விகிதாசார இடஒதுக்கீடு செய் ஆகிய புத்தகங்களையும் அவர் எழுதியிருக்கிறார்.
பெரியாரின் சிந்தனைகளோடு, மார்க்சிய சிந்தனைகளாலும் ஆனைமுத்து ஈர்க்கப்பட்டிருந்தார்.

பெரியார் இறந்த பிறகு, 1976 வாக்கில் பெரியார் சமஉரிமைக் கழகம் என்ற அமைப்பைத் துவங்கினார். 1988ல் இந்த அமைப்பை மார்க்சிய – பெரியாரிய பொதுவுடமைக் கட்சி என்று பெயர் மாற்றம் செய்து அதன் தலைவராகச் செயல்பட்டு வந்தார். இந்த கட்சிப் பெயரை வைத்தே அவருக்கு பொதுவுடமைச் சிந்தனையில் இருந்த ஈடுபாட்டை நாம் அறிய முடியும்.

‘திராவிட இயக்கத்தினுடைய கோட்பாடுகளையும் மார்க்சிய வழிகாட்டலையும் நன்குணர்ந்தவர் ஆனைமுத்து. ஆகவே, தன் இயக்கத்தின் பெயரை மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி என்று மாற்றி அமைத்தார். ஆனால் மிகப் பெரிய இலக்குகள் மிகத் தொலைவில் இருக்கின்றன என்பதை நன்குணர்ந்திருந்ததால், நடைமுறையில் சமூக நீதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு, கூட்டாட்சி, தன்னாட்சி போன்ற உடனடி இலக்குகளை மையப்படுத்தி செயல்பட்டார்” என்கிறார் தன்னாட்சித் தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளரான ஆழி செந்தில்நாதன்.

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஐம்பது சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டதில், இவரது அழுத்தம் முக்கியமானது. இதுதவிர, இந்தியா முழுவதும் பயணம் செய்து இடஒதுக்கீடு தொடர்பான கருத்துக்களை ஆனைமுத்து பேசிவந்தார். மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென இந்திராகாந்தி, மொரார்ஜி தேசாய், பாபு ஜெகஜீவன் ராம், ஜெயில்சிங், வி.பி.சிங், கன்ஷிராம் உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்து வலியுறுத்தியிருக்கிறார் ஆனைமுத்து.

தமிழ் நாட்டிற்கு அப்பால் பெரியாரின் சிந்தனைகளை சாதியத்திற்கு எதிரான போராட்டங்களையும் சமூக நீதி செயற்பாடுகளையும் கொண்டு சென்ற இந்திய அளவிலான செயற்பாட்டை ஆனைமுத்து கொண்டிருந்தது என்பது அம்பேத்கார் போன்று தேசியத் தலைவராக தோழர் ஆனைமுத்துவை பார்க்க முடியும்.

‘1978ல் பிஹாரின் முப்பது மாவட்டங்களில் பெரியாரின் நூற்றாண்டு விழாவை நடத்திய ஆனைமுத்து, பிறகு தில்லியிலும் பெரிய அளவில் ஒரு நூற்றாண்டு விழா மாநாட்டை நடத்தினார். பெரியாரிய சிந்தனைகளை இந்தியாவின் வட மாநிலங்களில் கொண்டு சென்று சேர்த்ததில் ஆனைமுத்துவுக்கு மிகப் பெரிய பங்கு இருந்தது” என்கிறார் மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் சென்னை மாவட்டச் செயலாளரான வாலாசா வல்லவன்.

பெரியார் ஈரோடு நகர்மன்றத் தலைவராக இருந்தபோது எழுதிய குறிப்புகளை தொகுத்திருக்கும் ஆனைமுத்து, அவற்றின் ஒரு பகுதியை பதிப்பித்துவிட்டார். மீதமுள்ளவற்றையும் அவர் பதிப்பிக்க நினைத்திருந்தார். அந்த முயற்சி முழுமை பெறும் முன்னரே அவர் தனது சிந்தனையை நிறுத்திக் கொண்டார்

ஈழவிடுதலைப் போராட்டத்தில் இடதுசாரி சிந்தனையை கொண்டிருந்த தோழர் பத்மநாபாவின் ஈழவிடுதலை அமைப்பின் செயற்பாட்டிற்கு சமாந்தரமான ஆதரவையும் கருத்துப் பரிமாற்றத்தையும் தோழர் ஆனைமுத்து கொண்டிருந்தார் என்பது இங்கு விசேடமாக கருத்தில் கொள்ளப்பட வேண்டியுள்ளது.

அந்த வகையில் தோழர் ஆனைமுத்துவின் இழப்பு ஈழம் வாழ் தமிழ் மக்ளின் அரசியல் செயற்பாட்டிற்கு பாரிய இழப்பாகவே பதிவு செய்ய விரும்புகின்றது வரலாறு.