நேர்காணல்:

“துவக்குகள் பேசிய காலத்தில் வண்டிலுக்குப் பின்னால் பூட்டிய மாடுகள் போல் பேனைகள் இருந்தன.”

(வி. ரி. இளங்கோவன்)

அலட்டல்கள் இல்லாத இலகு தமிழ் சொல்லாடல்களுக்குச் சொந்தக்காரர் வி. ரி. இளங்கோவன். அன்றில் இருந்து இன்றுவரை இவரது பேனை ஓய்ந்தது இல்லை. ஈழத்தின் வடபுலமான தீவகங்களில் ஒன்றான புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டு பாரிஸில் வாழ்ந்துவரும் வி. ரி. இளங்கோவன் கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர், இடதுசாரிய சிந்தனையாளர், ஊடகவியலாளர், சித்த ஆயுர்வேத மருத்துவர் என்று பல்துறைசார் ஆளுமைகளை தன்னகத்தே கொண்ட பாரிஸின் மூத்த இலக்கிய ஆளுமையாக எம்மிடையே இருக்கின்றார். கே.டானியலின் பாசறையில் வளர்ந்த முதன்மைப் போராளி. இவர் தனது புனைபெயரை ‘அசலகேசரி‘ என்று வைத்துக்கொண்டாலும் தனது சொந்தப் பெயரிலேயே பல படைப்புகளை எமக்குத் தந்திருக்கின்றார்.

இதுவரையில் கவிதைத் தொகுதிகளாக ‘கரும்பனைகள்’ ‘சிகரம்‘, ‘இது ஒரு வாக்குமூலம்‘,‘ஒளிக்கீற்று‘ என்பனவும், சிறுகதைத் தொகுப்புகளாக ‘இளங்கோவன் கதைகள்‘, ‘Tamil Stories from France’ – ‘இளங்கோவன் கதைகள்’ ஆங்கில மொழிபெயர்ப்பு, ‘இப்படியுமா..?’,’பிரான்ஸ் மண்ணிலிருந்து தமிழ்க்கதைகள்‘ – ‘இளங்கோவன் கதைகள்’ இந்தி மொழிபெயர்ப்பு என்பனவும், கட்டுரைத் தொகுப்புகளாக, கே. டானியல் வாழ்க்கைக் குறிப்புகள், மண் மறவா மனிதர்கள், மண் மறவாத் தொண்டர் திரு, மலைநாட்டுத் தமிழர்க்கு துரோகமிழைத்தது யார்..?, நோய் நீக்கும் மூலிகைகள், ஆரோக்கிய வாழ்வுக்குச் சில ஆலோசனைகள், தமிழர் மருத்துவம் அழிந்து விடுமா..?, அழியாத தடங்கள் என்பனவும் இவரால் தமிழ் இலக்கியப் பரப்புக்கு கிடைத்துள்ளன.

இவற்றைவிட இவர் பதிப்பாசிரியராகவிருந்து பத்துக்கு மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார்.

இலக்கிய சமூகப் பணிகளுக்கான விருதுகள் பல பெற்றவர்.

இவர் ‘தமிழன்” பத்திரிகை (1969 –1970) – இலங்கை, ‘வாகை”  இலக்கிய இதழ் (1981) –   இலங்கை,  ‘மூலிகை” குடும்ப மருத்துவ ஏடு (1985- 1986) – இலங்கை,  ‘நம்நாடு”  பத்திரிகை (1988) –  இலங்கை, “ஐரோப்பா முரசு” (1992) – பாரிஸ், ) ஆகியவற்றின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

இலங்கையில் தகவல் திணைக்களம், ஆளணிப் பயிற்சித் திணைக்களம் ஆகியவற்றில் பதிப்பபாசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.

ஐ. நா. தொண்டராக (U. N. Volunteer) பிலிப்பைன்ஸ் நாட்டில் பணியாற்றி அந்நாட்டிலும் விருதுகள் பல பெற்றுள்ளார்.

இந்த இலக்கிய ஆளுமையுடன் வாசகர்களுக்காக நான் கண்ட நேர்காணல் இது.

– கோமகன்

0000000000000000000000000000000000000000000000000000000000

உங்களை நான் எப்படியாக தெரிந்து கொள்ள முடியும்..?

 நான் ஈழத்தின் வடபகுதியில் இருக்கின்ற தீவகப்பகுதியில் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவன். எமது குடும்பத்தில் உள்ள அனைவருமே ஏதோ ஒருவிதத்தில் இலக்கியத்துறையுடனும் ஊடகத்துறையுடனும் அரசியலுடனும் தொடர்புடையவர்கள் தான். எனது மூத்த சகோதரர் காலஞ்சென்ற திருநாவுக்கரசு – நாவேந்தன் புகழ்பெற்ற பேச்சாளர். அரசியல் துறையிலும் எழுத்துத் துறையிலும் தனக்கென்று ஓர் தனிமுத்திரை பதித்தவர். இலங்கை சாகித்திய மண்டலத்தின் சிறந்த சிறுகதைத் தொகுதிக்கான விருதைப் (1964) பெற்றவர். அடுத்த சகோதரர் துரைசிங்கம் சாகித்திய மண்டலத்தின் சிறுவர் இலக்கியத்திற்கான விருதை நான்கு முறை பெற்றவர். எமது வீட்டில் உடன்பிறப்புகள் எல்லோருமே இலங்கையிலிருந்து வெளியாகிய அனைத்து பத்திரிகைகளுக்கும் செய்தியாளர்களாக இருந்திருக்கின்றோம். அதனால் அனைத்துப் பத்திரிகைகளின் ஒவ்வொரு பிரதியும் இலவசமாகவே எங்கள் வீடுநாடி வரும். அத்துடன் எனது சகோதரர்களது இலக்கியச் செயற்பாடுகளினால் வீட்டில் ஓர் பாரிய நூலகம் போன்று புத்தகங்கள் நிறைந்து கிடக்கும்.

அவை எனக்கு வாசிப்புத் தாகத்தை ஏற்படுத்தின. கல்லூரிக் காலத்திலேயே யான் ‘வீரகேசரி’ பத்திரிகை நிருபராக நியமனம் பெற்றேன். இத்தகைய பின்னணியில்  இயல்பாகவே இலக்கியத்துறையில் ஈடுபாடு ஏற்பட்டது.

உங்கள் இளமைக்காலம் எப்படியாக இருந்தது..?

 நான் சிறுவயதில் இருந்தபொழுது எனது சகோதரர்களான நாவேந்தன், துரைசிங்கம் மற்றும் எனது பெற்றோர்களே என்னை இந்த எழுத்துத்துறையில் ஈடுபாடுகொள்ள வழிகாட்டியாக இருந்தார்கள். எனது தந்தை புகழ்பெற்ற சித்த ஆயுர்வேத வைத்தியர். கைநாடி பார்த்து நோயறிந்து மருத்துவம் செய்வதில் வல்லவராக விளங்கியவர். நாடி பார்த்து இறப்பின் நேரத்தை மிகத் துல்லியமாகச் சொல்வதில் வல்லவர். அவர் எம்முடன் சாதாரணமாகக் கதைக்கும் பொழுதுகூட எதுகைமோனையுடன் கவிதை மொழியிலேயே தொடர்பாடுவார். தாயார் பாடசாலைக் கல்வியறிவு குறைவாக இருந்தபொழுதிலும் புராண இதிகாசக் கதைகள், பழந்தமிழ் இலக்கியங்களைச் சுவைபடச்சொல்லும் ஓர் கதைசொல்லி. பல்லாயிரம் பாடல்கள் அவருக்கு அத்துபடி. நான் சிறுவனாக இருந்தபொழுது எனது அம்மாவே எனக்கு முதல் கதைசொல்லியாக இருந்தார்.

நான் எனது பதினைந்தாவது வயதிலேயே அதாவது 1967-ம் ஆண்டு ஜனவரி மாதம் “வீரகேசரி” பத்திரிகைக்கு செய்தி நிருபராக நியமனம் பெற்றேன். இந்தக்காலத்தில் இதை நான் சொன்னால் இன்றைய தலைமுறை நம்புவதற்கு கடினமாகவே இருக்கும். அன்று எனது சகோதரர் நாவேந்தன் தமிழரசுக்கட்சியின் பிரசாரப் பீரங்கியாகவும் இலக்கிய பிரதிநிதியாகவும் இருந்தார். எனது சகோதரர் மூலமாக சிறுவயதிலேயே அரசியல், இலக்கியப் பிரமுகர் பலருடன் தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது.

நாவேந்தன் தமிழரசுக்கட்சி அணியின்  இலக்கியத்துறையில் இருந்தபொழுது எதிரணியில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இருந்தது. அப்பொழுது இலக்கியர்களின் சரணாலயமாக பூபாலசிங்கம் புத்தகசாலை இருந்தது. பழைய பூபாலசிங்கம் புத்தகசாலை இப்பொழுது இருக்கும் நவீன சந்தைப் பகுதியில் ஓர் தகரக்கொட்டகையுடன் இருந்தது. நான் எனது சகோதரரை அங்கு சந்திக்கச்செல்லும் பொழுது அன்றைய இலக்கிய ஆளுமைகள் பலரை அங்கு காணும் வாய்ப்புக் கிடைத்தது. பழைய பூபாலசிங்கம் புத்தகசாலைக்கு  அருகாமையில் ஆஸ்பத்திரி வீதியில் எமது ஊரைச் சேர்ந்தவரின் “பிருந்தாவனம்” என்றவோர் உணவகம் நடாத்தப்பட்டு வந்தது. ‘பிருந்தாவனம்” உணவகத்தின்        உரிமையாளர் பொன்னையா எனது சகோதர்களின் நண்பர். அந்த உணவகத்தில் எமது சகோதர்கள் தமது நண்பர்களைச் சந்தித்து உரையாடிக் கொள்வர். அங்கு ஓர் சிறிய அறையில் அமர்ந்து பத்திரிகைகளுக்கான செய்திகளையும் எழுதி அனுப்புவர். நானும் உடனிருந்து யாவற்றையும் அவதானித்துக் கொள்வேன். பூபாலசிங்கம் புத்தகசாலைக்குச் சென்றால் முற்போக்கு எழுத்தாளர்கள், மரபு எழுத்தாளர்கள், தமிழரசுக்கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர்கள் என்று பலரையும் சந்திப்போம். எனது சகோதரரே எனக்குப் பலரையும் அன்று அறிமுகம் செய்துவைத்தார். முதன்முதலாக தீவகப்பகுதிக்குத் தமிழரசுக் கட்சியைக் கொண்டு சென்றவர் எனது சகோதரர் நாவேந்தனே.

1952 -ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சட்டத்தரணி வி. நவரத்தினம் தீவுப்பகுதியில் ((ஊர்காவற்றுறைத் தொகுதி) தமிழரசுக்கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவ்வேளை பெருந்தனவந்தரான அல்பிரட் தம்பிஐயாவும் வேட்பாளராகப் போட்டியிட்டார். அன்றைய காலகட்டத்தில் கொழும்புத் துறைமுகம் இவரது ஆளுமைக்குட்பட்டிருந்தது.. அவர் பல கப்பல்களுக்குச் சொந்தக்காரராக இருந்தார். 1958 -ம் ஆண்டு நடைபெற்ற இன வன்முறையின்பின் அவருடைய கப்பலிலேயே சனங்கள் அகதிகளாக காங்கேசன்துறை துறைமுகத்தில் வந்து இறங்கினார்கள். 1956 -க்கு முன் அல்பிரட் தம்பிஐயாவே தீவகத்தில் தனிக்காட்டு ராஜாவாக இருந்தார். இவரை முறியடிக்க, தந்தை செல்வநாயகம் வி. நவரத்தினத்திடம் ஓர் கடிதம் கொடுத்து எனது சகோதரர் நாவேந்தனைச் சந்திக்கும்படி சொல்லியிருந்தார். அல்பிரட் தம்பிஐயாவை எதிர்த்து யாருமே பேசமுடியாத சூழலில் தமிழரசுக்கட்சி சார்பாக  இரண்டு மாபெரும் கூட்டங்களைச் சகோதரர் நாவேந்தன் முதன்முதலில் புங்குடுதீவில் நடாத்தினார். அந்தக் கூட்டத்தில் அமிர்தலிங்கம், கோப்பாய் கோமான் கு. வன்னியசிங்கம் ஆகியோர் முக்கிய பேச்சாளர்களாகக் கலந்து கொண்டனர்.

1952 -ம். ஆண்டு தேர்தலில் அல்பிரட் தம்பிஐயாவிடம் நவரத்தினம் தோல்வியடைந்தார். இருப்பினும் 1956 தேர்தலில் சிறந்த சட்டவாதியான வி. ஏ. கந்தையா தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு அல்பிரட் தம்பிஐயாவைத் தோற்கடித்தார். இந்தத் தேர்தல் பணிகளில் எமது குடும்பத்தினர் ஈடுபட்டபோது சிறுவனான நானும் அவற்றைக் கவனித்துக்கொள்ளத் தவறவில்லை.

சிங்கள ஸ்ரீ அழிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு சிறைவாசம் அனுபவித்தபின் அது தொடர்பான நூலை (சிறி அளித்த சிறை) எழுதியவர் சகோதரர் நாவேந்தனே. அன்றைய காலத்தில் அந்நூலின் முதல் பதிப்பே 5000 பிரதிகள் விற்றுச் சாதனை படைத்தது..

பின்னர் எனது சகோதரர் 1967 -ம் ஆண்டில் தமிழரசுக்கட்சியுடன்  ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக அதனைவிட்டு விலகினார். தமிழ்க்காங்கிரஸ் கட்சித் தலைவரான ஜீ. ஜீ. பொன்னம்பலம் இவரது ஆளுமையை அறிந்து இவரை அழைத்து தனது கட்சியின் பிரசாரப்பிரிவு செயலாளராக வைத்திருந்தார். அப்பொழுது கட்சிப் பத்திரிகையான “தமிழன்” பத்திரிகையை நடாத்தும் பொறுப்பு இவரிடம் கொடுக்கப்பட்டது. நாவேந்தன் கல்லூரி ஆசிரியராக இருந்ததினால் எனது பெயர் அப்பத்திரிகையின் ஆசிரியரெனப் பதிவுபெற்றது. சிறு செய்திகள், கட்டுரைகளை நான் எழுத, காரசாரமான அரசியல் கட்டுரைகள், அரசியல் பத்திகள் எனப் பலவும் நாவேந்தன் எழுதினார். இவ்வாறாக இளம்வயதிலேயே சகோதரர்கள் மூலமும் குடும்பத்துச் சூழல் காரணமாகவும் அரசியல், இலக்கிய ஈடுபாடுகள், தொடர்புகள் ஏற்பட்டன.

இருவேறுபட்ட துறைகளான  சித்த ஆயுர்வேத  மருத்துவமும் எழுத்தும் எப்படியாக உங்களை வசப்படுத்தின..?

 நான் ஏலவே கூறியவாறு எனது குடும்ப பாரம்பரியமே இவைகளில் என்னை ஈடுபாடு கொள்ளச்செய்தது.

ஆரம்பகாலத்தில் நீங்கள் ஊடகத்துறையில் இருந்திருக்கின்றீர்கள். நீங்கள் ஊடகத்துறையில் சுதந்திரமாக இயங்க முடிந்ததா..? அதுபற்றிய உங்கள் அனுபவங்களைக் குறிப்பிடுங்கள்..?

நிச்சயமாக… எதுவித குறுக்கீடுகளும் இன்றிச் சுதந்திரமாகவே இயங்கினேன். எமது வீட்டில் சகோதரர்கள் நிருபர்களாக இருந்ததினால் வீடே ஓர் செய்தி நிறுவனம் போல இருக்கும். ஓர் செய்தியைப் பல்வேறு கோணங்களில் எழுதி ஒவ்வொரு பத்திரிகைக்கும் அனுப்புவோம்.

சமகாலத்தில் இருக்கின்ற ஊடகத்துறை எமது காலத்தில் இருந்த ஊடகத்துறைபோல் இல்லை. சமகாலத்து ஊடகத்துறையானது, அது இணைய சஞ்சிகையானாலும் சரி, அச்சுப்பதிப்பானாலும் சரி புலனாய்வுத்துறை போலவே இயங்குகின்றது. அத்துடன் வசனப்பிழை, எழுத்துப்பிழை, இலக்கண வழுக்கள் நிறைந்து காணப்படுகின்றன. மொழியறிவு, அனுபவமற்ற செய்தியாளர்கள் – ஒப்புநோக்குநர்கள், ஆசிரியபீடத்தினரின் வரட்சி நிலைகளே இதற்கு முக்கியகாரணிகளாக அமைகின்றன. எனது காலத்து ஊடகத்துறையில் இரவு பகலாக ஒன்றிற்கு மேற்பட்ட ஒப்புநோக்குநர் குழுமம் கண்ணுக்குள் எண்ணெய் ஊற்றிக்கொண்டவர் போன்று விழிப்பாகத் தமது பணியில் இருப்பார்கள். அன்றைய பத்திரிகைகள் – சஞ்சிகைககள் யாவும் ஈய அச்சு எழுத்துக்கள் ஒவ்வொன்றாகக்   கோர்க்கப்பட்டே அச்சுப்பதிப்பாயின. அப்பொழுது ஓர் எழுத்துருவில் தவறு வந்தாலே அந்தத் தவறு வசனத்தின் பொருளையே  சிலவேளை மாற்றயமைத்து விடும்.

இவைகளை உற்றுநோக்கிச் சரி பார்ப்பது ஒப்புநோக்குநரின் கடமை.

உங்களுக்கு ஓர் சுவராசியமான கதை சொல்வேன்.

வீரகேசரி பத்திரிகையின் செய்தியாளர்களுக்கான   கருத்தரங்கொன்றிற்கு நான் சென்றிருந்தபோது நகைச்சுவையோடு  ஓர் கதை சொல்லப்பட்டது.

ஓர் மாவட்டக்  கல்விப்பணிப்பாளர் தனது தட்டச்சாளரை அழைத்து ஒரு கடிதத்தைத் தட்டச்சு செய்யும்படி சொல்கின்றார். எமது  மாவட்டத்தில் மாணவர்கள் இருபாலாரும் சமவிகிதத்தில் இருந்தாலும் ஆண் ஆசிரியர்கள் அதிகமாகவும் பெண் ஆசிரியர்கள் குறைந்தளவிலும் இருப்பதால் பெண் ஆசிரியர்களின் நியமனத்தை ஆண்களுக்குச் சமமாக அதிகரிக்கும்படி கல்வித் திணைக்களத்துக்கு அறிவுறுத்தலே அக்கடிதம். அதன் பின்னர் தட்டச்சாளர் தட்டச்சு செய்த கடிதத்தைப் படிக்கும் பொழுது எல்லாமே சரியாக இருந்தது ஆனால் ஒரு “குற்றை” காணவில்லை. “கல்வித் திணைக்களம்” என்ற சொல்லில் “ல்” ற்குப் பதிலாக “ல” தட்டச்சாகியிருந்தது. மொத்தத்தில் அந்தக்கடிதமே ஆபாசக்கடிதமாக மாறியிருந்தது.

இதை ஏன் சொல்கின்றேன் என்றால் சிறிய பிழைகள்கூட ஓர் தகவலின் பொருளை மாற்றியமைத்துவிடுகின்றன. சமகாலத்தில் “ஒப்புநோக்குநர்” தேவைப்பபடுவதில்லைப் போலும். அதனால் பத்திரிகைகளின் தரம் கேள்விக்குள்ளாகின்றது. அத்துடன் தமிழ் இலக்கண அறிவு என்பது இளையவர்களிடம் அருந்தலாகவே காணப்படுகின்றது. எங்கள் காலத்திலும் முன்னரும்  உயர்வகுப்புகளில் தமிழ்ப் பண்டிதர்களே தமிழை மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார்கள். அதன் பின்னர் வந்த காலங்களில் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் முறைப்படி தமிழ் இலக்கணம், இலக்கியம்  பயின்ற ஆசிரியர்களே மாணவர்களை வழிநடாத்தினார்கள். ஆனால் இன்று நிலமை தலைகீழாக மாறிவிட்டது. இதுவும் ஊடகத்துறையின் பின்னடைவுக்கு ஓர் முக்கிய காரணம்.

அன்றைய பத்திரிகைத்துறையின் பிரதம ஆசிரியர்கள் பல்துறை ஆற்றலாளர்களாகவும் அனுபவ முதிர்ச்சியுள்ளவர்களாகவும் இருந்தார்கள். நிருபர்கள் கொடுக்கின்ற செய்தியை அவர்களது எதிர்பார்ப்புக்கு மேலாகவே அழகாகப் பத்திரிகையில் பிரசுரம் செய்தார்கள். இதில் முதன்மையானவராக “தினபதி” பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எஸ். டி. சிவநாயகத்தைக் குறிப்பிடுவேன். ஆனால் இன்றோ  நவீன இயந்திர – கணினி வசதிகளினாலும் விளம்பரங்களின் பெருக்கத்தினாலும் பத்திரிகைகளின் பக்கங்களை நிரப்புவதிலேயே குறியாக ஆசிரிய பீடத்தினர் இருக்கின்றார்கள். இதற்கெனப் பக்கம் நிரப்புவதற்கு அரைத்த மாவையே அரைக்கும் கட்டுரையாளர்களும் இருக்கிறார்கள்.

இன்றுள்ள திறமைமிக்க  ஒரு சில பத்திரிகை ஆசிரியர்களும் பத்திரிகை நிறுவனப் பெரு முதலாளிகளின் விருப்பப்படி விற்பனைப் பெருக்கத்திற்காக எரியும் அரசியல் பிரச்சினைகளில் எண்ணெய் ஊற்றவேண்டிய நிர்ப்பந்தத்தில் பணியாற்ற வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது.

நீங்கள் ஒரு கம்யூனிச சிந்தனையாளராக எம்மிடையே அறிமுகமாயுள்ளீர்கள்.  இடதுசாரிய சித்தாந்தம் எப்படியாக உங்களை ஈர்த்து கொண்டது..?

 இடதுசாரிய –  கம்யூனிசக் கட்சிகளுக்கு அன்று எனது குடும்பமே எதிராக இருந்து வந்துள்ளது. அதில் முக்கியமானவர் எனது மூத்த சகோதரர் நாவேந்தன். நான் கே. டானியல்,செ. கணேசலிங்கன், என். கே. ரகுநாதன், இளங்கீரன் ஆகியோரின் கதைகள் மற்றும் கலாநிதி க. கைலாசபதி, கலாநிதி கா. சிவத்தம்பி ஆகியோரின் கட்டுரைகள் ஆகியனவற்றை வாசித்துவிட்டு அவருடன் தர்க்கம் புரிவேன். அவர் எதிரணியில் இருந்தாலும் அவரிடம் முற்போக்கு எழுத்தாளர்களின் நூல்கள் அனைத்தும் கையிருப்பில் இருக்கும். இதற்கு நான் காரணம் கேட்டபொழுது,”எதிர்த்தரப்பினரைப் படித்தால்தான் அவர்களுக்கு நான் பதில் சொல்ல முடியும்” என்று அவர் பதில் தந்தார்.

எனக்கு முற்போக்கு எழுத்தாளர்களின் படைப்புகளே திருப்தியளித்தன.அவை எம் மக்களின்  பிரச்சினைகளை, அவலங்களைக் கூறுபவையாக, யதார்த்தப் பண்புடையனவாக எனக்குத் தெரிந்தன. சகோதரர் நாவேந்தனின் படைப்புகள் எனக்கு உவப்பானவையாக இருக்கவில்லை.

நான் கோப்பாய் கிறிஸ்தவ கல்லுரியில் உயர்தரம் படித்துக் கொண்டிருந்தபொழுது எனது ஆசிரியர்கள் பலரும் இடதுசாரியக் கருத்துடையவர்களே. அதில் முக்கியமானவர்கள் ஆசிரியர் சோமசுந்தரம் மற்றும் செல்வரத்தினம். அதிபர் ஈ. கே. சண்முகநாதன் அவர்களும் இடதுசாரி அனுதாபியே. இவர்கள் யாவரும் லங்கா சமசமாஜக் கட்சியின் ஆதரவாளர்கள். கோப்பாய்த் தொகுதியில் அன்றைய காலத்தில் சமசமாஜக் கட்சிக்குப் பெரும் ஆதரவு இருந்தது. துரைராஜா என்பவர் இத்தொகுதியில் அக்கட்சியின் சார்பாகப் போட்டியிட்டுக்  கணிசமான வாக்குகள் பெற்று வந்தார்.

1964 -ல் இலங்கைக் கம்யூனிசக்கட்சி சீனச் சார்பு, மொஸ்கோ சார்பு எனப் பிளவுபடுகின்றது. அதன் பின்னர் 1966 முதல் வடபகுதியில் பெரும் போராட்டங்கள் வெடிக்கின்றன. அக்காலத்தில் சீனச் சார்பு கட்சியின் ஏடான “தொழிலாளி” பத்திரிகை வாரத்துக்கு ஒரு முறை பல பக்கங்களுடன் தொடர்ந்து பிரசுரமாகியது. அந்தப் பத்திரிகையைத் தொடர்ந்து வாசிக்கத் தொடங்கினேன். அக்கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் என். சண்முகதாசனின் உரைகளைச் செவிமடுத்தேன். அவரது கட்டுரைகளைத் தேடிப் படித்தேன். அவர் நம்பிக்கைக்குரிய பெருந்தலைவராக, ஆசானாக எனக்குத் தெரிந்தார். அத்துடன் முற்போக்கு எழுத்தாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டேன். என் மனதுக்குப் பிடித்த  எழுத்தாளரான கே. டானியலுடன் தொடர்புகளை ஏற்படுத்திச் செயற்படத் தொடங்கினேன்..

கம்யூனிச சித்தாந்தங்கள் காலப்போக்கில் இலங்கையிலே அரசியல் செயல்பாடுகளிலிருந்து நீர்த்துப் போனதுக்கு அடிப்படையிலான காரணங்கள் என்ன..?

 அடிப்படையில் மார்க்சியம் ஓர் விஞ்ஞானப் பொறிமுறை. அது ஒருபோதும் அழிவதில்லை. அது வளர்ச்சியடைந்தே செல்லும். மார்க்சியத்தைப் பேசியவர்கள் அல்லது அதன் வழியொற்றி நடந்தவர்கள்  பலர் அதற்கு விசுவாசமாக இருக்கவில்லை என்பதே உண்மை. அத்துடன் உலக ஒழுங்கியலில் ஏற்பட்ட மாற்றங்களினால் சில பின்னடைவுகளை மார்க்சியக் கட்சிகள் சந்திக்கவேண்டி வந்திருக்கலாம். ஆனால் கம்யூனிச சித்தாந்தம் அரசியல் செயற்பாடுகளிலிருந்து முற்றாக நீர்த்துப் போய்விட்டது என்ற உங்கள் பார்வையினை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. முக்கியமாக உங்கள் கேள்வியின் அடிப்படையில் பார்த்தால் இலங்கையில் மார்க்சிய சிந்தனைகளைக் கொண்ட தலைவர்கள் என்று சொல்லப்பட்ட பலர் அதற்கு விசுவாசமாக இல்லாது சந்தர்ப்பவாத அரசியல் குட்டையினுள் வீழ்ந்தது முக்கிய காரணம். அத்துடன் இலங்கையின் இரு பெரும் சமூகங்களான சிங்கள தமிழ் சமூகங்களிடையே இனவாதம் தலைதூக்கியமை.

1960 -ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தல்களில் இலங்கையில் வடக்கே பருத்தித்துறை பனைமுனையிலிருந்து தெற்கே தேவேந்திரமுனை ஈறாக அனைத்து இனமக்களுக்கும் சம உரிமை கொடுத்து, தமிழுக்கும் சிங்களத்துக்கும் சம அந்தஸ்து கொடுத்து ஆட்சி அமைப்போம் என்று கொள்கைப் பிரகடனம் செய்து, வாக்குறுதி அளித்துச் சமசமாஜக் கட்சி வடக்கிலும் தெற்கிலும் எல்லாத் தொகுதிகளிலும் போட்டியிட்டது.  தமிழர்கள் தமது உரிமைக்காக இவர்களுக்கு வாக்களித்து ஒரு பிரதிநிதியைத் தானும் தெரிவு செய்தார்களா..?

“தமிழர்க்கான பிரதேச சுயாட்சியை ஏற்படுத்தித் தருகின்றோம், எல்லோருக்கும் வேலை வாய்ப்பை வழங்குவோம், தமிழ் மக்களுக்கான மொழிப் பிரச்சனையைத் தீர்க்கின்றோம்” என்று கம்யூனிட் கட்சி 1956 -ல் தேர்தலில் நின்றபோது வடக்கில்  பருத்தித்துறைத் தொகுதியில் பொன். கந்தையா மட்டுமே வெற்றிபெற முடிந்தது.சனங்கள் இடதுசாரிக் கட்சிகளுக்கு பெரும்பான்மையாக வாக்களிக்கவில்லை.

இன்றுவரை நிலைமை இதுதான்..! காரணம் என்னவென்றால் நாங்கள் எவ்வளவுதான் உண்மையையும் இடதுசாரிச் சிந்தனைகளையும் எடுத்துச் சொன்னாலும் வெறும் உணர்ச்சி அரசியலிலேயே சனங்கள் மயங்கிக் கிடந்தார்கள். எனக்கு இப்பொழுதும் நினைவில் உள்ளது. அப்போதைய உணர்ச்சி அரசியல் வாதிகளின் முக்கிய சுலோகங்கள். “தமிழ்த்தாய் சாகடிக்கப்படுகின்றாள், தமிழரசு அமைப்போம், சிறைச்சாலை எமக்குப் பூஞ்சோலை, துப்பாக்கிக் குண்டு விளையாட்டுப் பந்து” என்பதாகும். இந்த உணர்ச்சி அரசியல் பேச்சாளர்களில் முக்கியமானவராக அன்று எனது சகோதரர் நாவேந்தனும் இருந்தார்.

இந்த உணர்ச்சி அரசியல் கோசங்களின் பின்னால் சனங்கள் அள்ளுப்பட்டார்கள்.

அன்றிலிருந்து இன்றுவரை இரு பெரும்பான்மை இனங்களிடையேயும்  வெறும் உணர்ச்சி அரசியலே புரையோடிப் போயுள்ளது. இந்த இருதரப்பு அரசியல் கட்சிகளுமே போட்டிபோட்டு தமது வர்க்க நலன்களுக்காக இனவாத உணர்ச்சி அரசியலை நடாத்திக் கொண்டு இருக்கிறார்கள். அன்று ஜே. ஆர். ஜெயவர்த்தனா களனி மாநாட்டில் தனிச்சிங்கள சட்டத்தை கொண்டு வருவேன் என்றுரைக்க, பின்னர் எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்க ஒருபடிமேல் போய் 24 மணி நேரத்தில் தனிச்சிங்களச் சட்டத்தை நிறைவேற்றுவேன் என்றார்.

மறுதலையாக வடக்குக் கிழக்கில் பார்த்தால் “தமிழ் அரசு” என்று முழங்கினார்கள். ஆனால் கட்சியின் உண்மையான பதிவு என்னவென்றால் ‘பெடரல் பார்ட்டி” அதாவது சமஸ்டிக் கட்சி. சமஸ்டிக் கட்சிக்கும் தமிழ் அரசுக்கும் என்ன தொடர்பு..? என்று உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள். இங்கே உணர்ச்சி அரசியலே பாமரனுக்கு முன்னிலைப்படுத்தப்பட்டது.

தென்னிலங்கையில் 65 – 70 இடைப்பட்ட காலப்பகுதியில் ஓர் புரட்சிகர சூழல் உருவாகி வந்ததுதான். அப்பொழுது ரோகண விஜேவீரா தோழர் என். சண்முகதாசன் தலைமையிலான  புரட்சிகரக் கம்யூனிஸ்ட் கட்சியை உடைத்துக்கொண்டு சென்று ஜனதா விமுத்தி பெரமுனை கட்சியை ஆரம்பித்தார். கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளுக்கு முரணாக அவர் ஓர் இனவாத ஊர்வலத்தில் கலந்து கொண்டமையினால் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். அந்த ஊர்வலத்தில் முக்கியமான சுலோகம் என்னவென்றால் “மசாலை வடே தோசை அப்பிட்ட எப்பா” என்பது..! “தமிழ்மொழி விசேட விதிச் சட்டமூலத்திற்கு” எதிராக நடாத்தப்பட்ட அந்த ஊர்வலத்தில் இனவாதத்தையே கக்கினார்கள். தமிழரசுக்கட்சி டட்லி சேனநாயக்கா அரசுடன் சேர்ந்து  திருச்செல்வம் மந்திரிப் பதவியும் பெற்று ஒத்துழைத்த காலத்தில் தமிழ் மொழி விசேட விதி சட்டமூல உருவாக்கத்திற்கு எதிராக சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் மொஸ்கோ சார்பு கொம்யூனிஸ்ட் கட்சியும் ஊர்வலமாக சென்ற வேளை ரோகண விஜேவீராவும் அதில் கலந்து கொண்டார். அந்த ஊர்வலத்தைக் கலைக்குமுகமாக காவல்துறை துப்பாக்கிப்பிரயோகம் செய்ததில் ஒரு பௌத்த பிக்கு “கொள்ளுப்பிட்டி” சந்தியில் கொல்லப்பட்டார். அந்தப் பிக்குவுக்கு அந்த இடத்தில் கொள்ளுப்பிட்டி சந்தியில் பின்னர் நினைவு ஸ்தூபியும் அமைக்கப்பட்டது.

இலங்கை அரசியலில் இனவாதம் பேசினாலேயே தங்கள் இருப்பைத் தொடர்ந்தும் பேண முடியும் என்ற கட்டமைப்பை இந்த இருதரப்பு அரசியல்வாதிகளும் உருவாக்கிவிட்டார்கள். உதாரணமாக மகிந்த ராஜபக்சகூட “இலங்கை இந்திய ஒப்பந்தத்தின்படி 13 -வது (13 +) பிரிவிற்கும் மேலாக அதிகாரப் பகிர்வு தருவேன்” என்றார். ஆனால் இனவாதம் அவரைக் கட்டிப்போட்டது.

அதைப்போலவே தமிழர்கள் தரப்பில் “தனித் தமிழ் ஈழம்” பெறுவோம் என்று 1977 -ல் வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். தேர்தலில் வென்று அன்று எதிர்க்கட்சித் தலைவர் பதவி பெற்று முடிசூடிக் களித்தபின் மாவட்டசபையை ஏற்றார்கள். மாவட்டசபைக்கும் தனித்தமிழ் ஈழத்துக்கும் என்ன சம்மந்தம்..?  மாவட்டசபையும் பின்னர் காலாவதியாகியது. பின்னர் ஆறம்சக் கோரிக்கை – பேச்சுவார்த்தை என்றார்கள்.

உணர்ச்சி அரசியலின் உந்துதலினாலேயே  ஆயிரக்கணக்கான இளைஞர்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டது. மக்கள் சொல்லொணாத் துன்பத்தை அனுபவித்தார்கள். உடமைகள் அழிந்தன.

வடக்குக் கிழக்கு ஒன்றிணைந்த தமிழர்களுக்கான தீர்வு தவிர வேறு எதனையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றவர்கள் இறுதியாக வடக்கையும் கிழக்கையும் பிரித்து உப்புச்சப்பற்ற மாகாண சபையில் ‘’தமிழ்த்தாயின் வாழ்வு” வந்து நிற்கின்றது. சொந்த நிலத்தில் – சொந்த வீட்டில் போயிருக்கப் பிச்சை கேட்கும் நிலைமையை உருவாக்கிவிட்டதுதான் மிச்சம்.

ஆகவே  எம் நாட்டில் உணர்ச்சி அரசியலையும் இனவாத அரசியலையும் பேசிநின்றமை இலங்கையின் சாபக்கேடே என்றுதான் சொல்வேன். இந்த யதார்த்தங்களை எங்களைவிட பெரும்பான்மை சமூகத்தில் மக்கள் பலரும் நன்றாகவே விளங்கிக் கொண்டாலும்  அவர்களால் கதைக்க முடியாத சூழலிலேயே இன்றும் இருக்கின்றார்கள். கருத்துச் சுதந்திரம் இல்லாமையும்  உயிர்ப்பாதுகாப்பின்மையும் பெரும்பான்மை சமூகத்திடமும் உள்ளது. ஆகவே உணர்ச்சி அரசியலும் –  இனவாத அரசியலும் தான் இலங்கையில் மார்க்சிய  – இடதுசாரிகளை இருட்டடிப்பு செய்தவைகளே ஒழிய இடதுசாரிய – மார்க்சிய தத்துவங்களல்ல.

கே டானியலுடனான தொடர்புகள் எப்படியாகக் கிடைத்தன..? அவருடனான அனுபவங்களைப் பற்றி சொல்லுங்கள்..?

 நான் ஏலவே கூறியபடி எனது பாடசாலைக் காலங்களிலேயே முற்போக்கு எழுத்தாளர்களுடைய நூல்களை விரும்பி வாசிப்பேன். குறிப்பாக கே டானியலுடன் 60 -களிலேயே எனக்கு தொடர்புகள் ஏற்பட்டது. 71-ம்  ஆண்டு ஏப்ரல் கிளர்ச்சியின்போது அவர் கைது செய்யயப்பட்டு சிறை சென்று வந்ததின் பின்னர் இன்னும் தொடர்புகள் இறுக்கமானது. எமது சந்திப்புகள் அவரது கராஜ்லேயே இடம்பெறும்.மரபுசார் கதைசொல்லிகள் காதல் கதைகளை எழுதிவந்த காலத்தில் இவர்களது படைப்புகளே அடிமட்டத்து மக்களின் பிரச்சனைகளை, தீண்டாமைக் கொடுமைகளை, சமூக அவலங்களை புடமிட்டுக் காட்டின. கதை சொல்லும் பாணியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தின. அது எனக்கு ஒருவிதமான கிளர்ச்சியை உருவாக்கியது.

அவரது மக்கள் பணி மகத்தானது. தினசரி அவரைத் தேடி ஏதோ வகையில் தங்கள் துன்பங்களுக்கு பரிகாரம், ஆறுதல், உதவி கேட்டு மக்கள் வந்தவண்ணமிருப்பர். அவருடன் சேர்ந்து கலை இலக்கிய அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டேன். அவர் பேசுகின்ற அதிகமான கூட்டங்களில் எனக்கும் கவிதை படிக்கவோ அல்லது பேசவோ சந்தர்ப்பம் வழங்கப்பபடும். அவர் தலைவராக விளங்கிய ”மக்கள் கலை இலக்கியப் பெருமன்றத்தின்” செயலாளராகவும் பணிபுரிந்தேன். அந்த மக்கள் பணியாளனின் – மகத்தான படைப்பாளியின் இறுதி மூச்சுவரை உடன்நின்றேன்.

ஆனால் கே. டானியலின் அதிகமான கதைகள் பிரசார நெடியிருப்பதாகக் கூறப்படுவது குறித்து..?

 எல்லா இலக்கியங்களிலும் பிரசாரம் உண்டுதான்..!. அவை எந்த வர்க்கத்திற்கு உதவுகின்றன என்பதுதான் கவனிக்கப்பட வேண்டியது. டானியலின் கதைகள் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் அவலங்களைத் தொட்டுச்சென்று வாசகர் மனதில் ஓர் பொறியைக் கிளப்பி விடுவன. வேறு ஒரு சில முற்போக்கு எழுத்தாளர்களின் கதைகளில் கம்யூனிசக் கருத்துக்கள் வலிந்து திணிக்கப்பட்டிருப்பததாக விமர்சகர்கள் சொல்லியதுண்டு.  டானியலின் கதைகளில் அவ்வாறானன வலிந்த திணிப்புகள் இல்லை. டானியலின் ஆரம்ப காலக்கதைகளில் அழகியல் குறைபாடுகள் உண்டு என்று சொன்னவர்களும் உண்டு. ஆனால் அவரின் கடைசிக்காலத்தில் அவரின் “கானல்” நாவலை பேராசிரியர் கா. சிவத்தம்பி உட்படப் பலர் மிகச் சிறந்த    நாவல் என்று புகழ்ந்துள்ளதைக் கவனத்திற்கொள்ள வேண்டும்.

எதற்காக கே. டானியல் சிறை சென்றார்..?

1971 ஏப்பிரல் 4- ம் திகதி  இரவு தொடங்கிய “சேகுவரா” கிளர்ச்சியின் போது சுமார் 30000 இளைஞர்கள் அரச படைகளால் சுற்றி வளைக்கப்பட்டு 15000 பேர்வரை படுகொலை செய்யப்பட்டதாகவும் சொல்லப்பட்டது…

நாட்டில் இனவாத சக்திகளை முறியடித்து தொழிலாளி விவசாயி -உழைக்கும் வர்க்கம் ஒன்றிணைந்து மார்க்சிச லெனினிச மாஓ சிந்தனை அடிப்படையில் புரட்சியை நடாத்தி கொடுங்கோலாட்சியைத் தூக்கி எறிந்து பொதுவுடமை அரசை ஏற்படுத்த வேண்டுமென இலங்கைக் கம்யூனிசக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் என். சண்முகதாசன் விளக்கமளித்து வந்தார். அப்பொழுது சிறிது காலம் ரோகணவிஜேவீர புரட்சிகரக் கம்யூனிசக் கட்சியின் வாலிபர் சங்கச்செயலாளராக இருந்தார். பின்னர் தோழர் சண்முகதாசனிடம் இருந்து பிரிந்து சென்று இனவாதத்தை கையில் எடுத்தார். அவரது வாயில் இருந்து கொமரேட் சண்முகதாசன் போய் “நாகலிங்கம் சண்முகதாசன் மக்களுக்கு ஒருபோதும் விடுதலையைப் பெற்றுத்தரமாட்டார்” என்றார். அதன் மறைமுக செய்தி என்னவென்றால் சண்முகதாசன் ஓர் தமிழன். பின்னர் தென்னிலங்கையில் 5 பிரதான அரசியல் வகுப்புகளை விஜேவீரா நடாத்தினார். அதில் முக்கியமானது “மலையகத் தமிழர் எதிர்ப்பு வாதம்”. அதாவது மலையக மக்களைச் சாட்டாகவைத்து இந்திய விஸ்தரிப்புவாதத் திட்டத்தின்படி இந்தியா இலங்கையை விழுங்கி விடும் என்றார்.

1971 ஏப்ரலில் ரோகணவிஜேவீரவின் “மக்கள் விடுதலை முன்னணி” தொடங்கிய காட்டிக் கொடுப்பிலான இந்தக் கிளர்ச்சியையடுத்து நாடு முழுவதும் சிவப்பு நிறங்கொண்ட நூல்கள் – உடைகள் வைத்திருந்தவர்கள்கூடக் கைதுசெய்யப்பட்டனர். பலர் கொலைசெய்யப்பட்டனர். கதிர்காமம் அழகு ராணியாகத் திகழ்ந்த மனம்பெரி என்ற இளம்பெண் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டதாகச் செய்தி வெளியாகியது.

சீனச் சார்பினர் எனச் சொல்லப்பட்ட சண் தலைமையிலான இலங்கைக் கம்யூனிசக் கட்சியினர் பலரும் தேடப்பட்டனர். தோழர் என். சண்முகதாசன் உட்படக் கட்சித் தலைமைக் குழுவினர், தோழர்கள் பலரும் கைதுசெய்யப்பட்டனர். கட்சியின் தலைமைக் காரியாலயம் சேதமாக்கப்பட்டது. வடபுலத்துத் தலைமைத் தோழர்களள் பலரும் தலைமறைவாகினர்.கே. டானியலும் பல மாதங்கள் தலைமறைவாகியிருந்தார். பின்னர் ஒருநாள் பண்ணைக்கடலில் மீன் பிடிப்பதற்காக தூண்டில் போட்டுக்கொண்டிருந்த வேளையில் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். சுமார் ஒரு வருடத்தின்பின் விடுதலையானார்.

பிரான்ஸில் அகஸ்தியர் காலத்தில் நீங்கள் இருந்திருக்கின்றீர்கள். அவருடனான தொடர்பும் அனுபவங்களும் எப்படியாக இருந்தன..?

 1964 வரை தாயகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபடாது இருக்கும்போது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் ஈழத்து எழுத்தாளர்கள் பலரும் ஒன்றிணைந்திருந்தார்கள்.

சோவியத் யூனியனில் ஸ்டாலினின் மறைவின் பின்னர் பதவிக்கு வந்த குருசேவ் கியூபாப் பிரச்சினையின் பின்னர்   “சமாதானத்தின் மூலம் ஓர் சோசலிச அரசை அமைக்கலாம்”  என்றும்   ஏகாதிபத்தியத்துடன் சமாதான சகவாழ்வு என்ற    மார்க்சிச விரோத திரிபுவாதக் கொள்கைப் பிரகடனத்தை வெளியிட்டார். இந்தத் திரிபுவாதம் அங்கு மார்க்சியப் பொருளாதாரக் கட்டுமானத்தையே கேள்விக்குள்ளாக்கியது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி இதனை நிராகரித்து திரிபுவாதம் எனக் கண்டித்தது. மாஓ  பகிரங்கமாகக் கண்டனம் தெரிவித்தார்.

குருஷேவ்வின் கூற்றானது அடிப்படையில் திரிபுவாதமே. ஏனெனில் சோவியத் ரஷ்யாவில் லெனின் சமாதான சகவாழ்வு மூலம் அரசை நிறுவியிருக்கவில்லை. புரட்சியின் மூலமே அரசை நிறுவினார். அதேபோலவே சீனாவிலும் கியூபாவிலும் மற்றும் உலக அரங்கில் புரட்சியின் மூலமே அந்தந்த நாடுகளின் தலைவிதிகள் மாற்றி எழுதப்பட்டன. ஆகவே புரட்சி என்பதே இங்கு முன்னிலைப்படுத்தபட்டது. ஆனால் குருச்சேவ்வின் சமாதான சகவாழ்வு என்ற மார்க்சியத் திரிபுவாதம் உலகெங்கிலும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே பிளவுகளை ஏற்படுத்தியது.

மாஓவின் மறுதலிப்பு எதிரொலி இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியிலும் எதிரொலித்தது. பெரும்பான்மையானோர் கம்யூனிஸ்ட் கட்சியின் பலம்மிக்க அமைப்பான  இலங்கைத் தொழிற்சங்க சம்மேளனப் பொதுச்செயலாளராக விளங்கிய தோழர் என். சண்முகதாசன் தலைமையில் சீனச்சார்பு நிலையை மேற்கொண்டனர். இந்தவேளையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராக இருந்தவர் பிரேம்ஜி ஞானசுந்தரம். அவர் மொஸ்கோ சார்பு அணி ஆதரவாளரானார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் பிளவு ஏற்பட்டது.

ஆளுமை மிக்க படைப்பாளிகளான கே. டானியல், சில்லையூர் செல்வராசன், என். கே. ரகுநாதன், சுபைர் இளங்கீரன்,செ. கணேசலிங்கன், நீர்வைப் பொன்னையன், பெனடிக்ற் பாலன், முருகையன், செ.கதிர்காமநாதன், செ.யோகநாதன், சுபத்திரன், கலாநிதி கைலாசபதி உட்படப் பலரும் சீனச் சார்பு நிலையெடுத்தனர். டொமினிக் ஜீவா, அகஸ்தியர், தெணியான், கலாநிதி கா. சிவத்தம்பி ஆகியோர் மொஸ்கோ சார்பு நிலையெடுத்தனர்.

1974-ல் திருகோணமலை இந்துக்கல்லூரியில் இடம்பெற்ற “புரட்சிகர கலைஞர் எழுத்தாளர் மகாநாட்டை” இளம் தலைமுறையினராகிய நாங்கள் புதுவை இரத்தினதுரை, நல்லை அமுதன், திருமலை நவம், ஷெல்லிதாசன், நந்தினி சேவியர் ஆகியோர் ஒழுங்கமைத்திருந்தோம். இந்த மாநாட்டில் மூத்த படைப்பபாளிகளான  கே. டானியல்,  என். கே. ரகுநாதன், சில்லையூர் செல்வராசன்,  செ.. கணேசலிங்கன்  ஆகியோர் பங்குபற்றினர். அதன் தொடர்ச்சியாகப் பின்னர் தேசியக் கலை இலக்கிய பேரவை, மக்கள் கலை இலக்கியப் பெருமன்றம் என்பன    செயற்பட்டுக்கொண்டு வந்தன.

மொஸ்கோ சார்பு அணியில் செயற்பட்டுவந்த அகஸ்தியர் அதிக காலம் மாத்தளையில் கடமை புரிந்தார். இடைக்கிடை வடபகுதிக்கு வந்து செல்வார். அவரோடு நெருக்கமான பழக்கம் எனக்கு இருக்கவில்லை. காணும் இடத்தில் பேசிக்கொள்வோம். அவ்வளவு தான்..!

நான் பிரான்ஸ் வந்தபோது நண்பர் எஸ். எஸ். குகநாதன் ரஜனி பதிப்பகத்தின் மூலம் அகஸ்தியரின் நூல் ஒன்றைப் பதிப்பித்தார். அப்பொழுதே அகஸ்தியரின் நெருக்கமான தொடர்பு எனக்கு கிடைத்தது. அந்த நூல் வெளியீட்டில் என்னைப் பேசுமாறு அகஸ்தியர் கேட்டுக்கொண்டார். அவரிடம் எல்லோரையும் அரவணைத்துச் செல்கின்ற ஓர் சிறப்பான பண்பு இருந்தது.

முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஈழத்து இலக்கியப் பரப்பில் ஏற்படுத்திய அதிர்வு தான் என்ன..?

 நிட்சயமாகப் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியது என்றுதான் சொல்வேன். ஏனெனில் சமகாலத்தில் ஈழத்து இலக்கியப் படைடப்புகள் பலவும் யதார்த்தப் பண்பினையுடையனவாக, தேசிய சிந்தனை மேலோங்கியவையாக, மண் வாசனையுள்ளவையாக, சமூக மேம்பாட்டைக் கருத்தில் கொண்டவையாகப் படைக்கப்படுகின்றன என்றால் அவற்றுக்கு வழிவகுத்தது   முற்போக்கு எழுத்தாளர் சங்கமே.

இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தில் இருந்து வெளியாகிய கலைமகள், ஆனந்தவிகடன், தீபம், குமுதம் போன்ற சஞ்சிகைகளுக்குத் தமிழகத்து கதைக்களங்களையும்  கதைமாந்தர்களையும் ஈழத்திலிருந்து புனைவுகளாக எழுதிக்கொண்டிருந்த கதை சொல்லிகளின் மத்தியில், ஈழத்தில் அவலத்தில் வாழும் சாதாரண மக்களின் அவலங்களை முன்நிறுத்தி, ஒடுக்குமுறைகளைச் சுட்டிக்காட்டி, மண்வாசனை சார்ந்த கதைக்களங்கள், தேசியப் பிரச்சனை தொடர்பான கதைக்களங்கள் போன்றவற்றை முன்நிறுத்தி எழுதத் தூண்டியதும் அவற்றை விமர்சித்து வழிகாட்டியதும் முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கமே. தமிழகம் ஈழத்து எழுத்தாளர்களை வியப்புடன் திரும்பிப் பார்க்க வைத்தது முற்போக்கு எழுத்தாளர் சங்கமே.

இந்த முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை ஊக்குவித்து திசைகாட்டியவர்களில் முக்கியமானவர்கள் பேராசிரியர் க. கைலாசபதியும் பேராசிரியர் கா. சிவத்தம்பியும் ஆவார்கள். ஈழத்தில் மரபுசார் விமர்சன முறைமையிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒப்பியல் ஆய்வு மற்றும் விஞ்ஞான ரீதியிலான விமர்சன மரபை அறிமுகப்படுத்தியவர்கள் இவர்களே. தமிழகத்தில் வானமாமலையையும் கோ. கேசவன், அ. மார்க்ஸ் ஆகியோரையும்   குறிப்பிடலாம். கோ. கேசவன் அ. மார்க்ஸ்  போன்றோரும் பேராசிரியர் கைலாசபதியை ஆதர்சமாகக் கொண்டவர்கள் தான்..!

ஒரு பேனை எப்படியான மையை கசிய விடவேண்டும்..?

 சுருங்கச் சொன்னால் உண்மையை அதாவது யதார்த்தத்தைப் பிரதிபலிக்க வேண்டும். அந்தப் படைப்பை வாசிக்கின்றவன் மனதில் ஓர் பொறியைக் கிளப்ப வேண்டும். அதுவே காலத்தை வென்ற படைப்பாகும்.

இந்தப் பேனைகளின் வீச்சானது துவக்குகள் பேசிய காலத்திலும்சரி அதற்குப் பின்னரான காலத்திலும் சரி எப்படியாக இருந்தது..?

 துவக்குகள் பேசிய காலத்தில் வண்டிலுக்குப் பின்னால் பூட்டிய மாடுகள் போல் பேனைகள் இருந்தன. அவைகள் யதார்த்தத்தைப் பிரதிபலிக்கவில்லை. மாறாக வாசகனை ஓர் கற்பனை உலகில் சஞ்சரிக்க வைத்துக்கொண்டிருந்தன. வண்டிலின் ஓட்டத்துக்கு நுகத்தடியில் பூட்டியிருக்கும் மாடுகள் இணைந்து செல்லவேண்டும்.

வண்டிலுக்குப் பின்னால் மாடுகள் பூட்டப்பட்டால் எப்படி வண்டில் ஓடும். கொள்கை – இலக்கு – நண்பன் யார் எதிரி யார் என்ற கணிப்பு பின்னுக்குத் தள்ளப்பட்டு துவக்கில் மாத்திரம் நம்பிக்கை வைத்து முன்சென்றால் அல்லது  அதற்குப் பேனைகள் முண்டு கொடுத்தால் எப்படி விடிவு பிறக்கும்..?

நல்ல காலம் கே. டானியல் போன்றவர்கள் முன்னரே இறந்து விட்டார்கள். மனச்சாட்சி உள்ளவர்கள் உயிர்வாழ வேண்டின் மௌனமாக இருக்கவேண்டிய அவலநிலை..!

துப்பாக்கி தனது பேச்சை நிறுத்தியதன் பின்னர் சமகால இலக்கியப் போக்கானது கிசு கிசு இலக்கியமாக, பாலியல் வடிகாலாக  இருக்கின்றது. அதிகரித்த தொழில் நுட்ப வசதி வாய்ப்புகளால் எல்லோருமே இலக்கியவாதிகளாக மாறிவிடுறார்கள் போலும். இந்தப் போக்கினால் வாசகர்களுக்கு கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. முகநூலில் எழுதுகின்றவர்கள் எல்லோரும் இலக்கியவாதிகளாக  எண்ணத் தொடங்கிவிட்டார்கள். இத்தகைய நிலை சமூகச் சீர்கேட்டுக்கு வழிவகுக்கின்றது.

அப்படியானால் இலக்கியமானது எப்படியாக இருக்க வேண்டும் என்று சொல்கின்றீர்கள்..?

 சிலர் கூறுவதுபோல இன்பம் தருவது,பொழுதுபோக்க உதவுவது,  அறிவை வளர்த்திட உதவுவது என்பது மட்டுமல்ல, அதற்கும் அப்பால் மக்களுக்காக மக்களின் பிரச்சனைகளை அதாவது அவர்களின் துன்ப துயரங்கள், அவலங்களை எடுத்துச் சொல்கின்ற, அவர்களின் எழுச்சிக்குச் சிந்தனை மாற்றத்தைத் தருகின்ற மக்கள் இலக்கியமாக இருக்க வேண்டும். வாசிக்கின்றவர்கள் மனதில் ஓர் பொறியைக் கிளப்புகின்ற உந்துசக்தியாக இருத்தல் வேண்டும்.

அன்றிருந்த இலக்கியக் குழுமச்செயற்பாடுகள் ஈழத்து இலக்கியப்பரப்பைச்செழுமையடைய செய்திருக்கின்றனவா..?  ஆம் என்றால் எவ்வாறு

ஆம். நிட்சயமாக… இலக்கியப் பரப்பில் அதிர்வுகளைக் கொடுத்தன. அன்றைய இலக்கியக் குழுமங்கள். 60 – 70 -களில் இரண்டுவிதமான குழுமச் செயல்பாடுகளே உச்சத்தில் இருந்தன. ஒன்று மரபுசார் இலக்கியக் குழுமமாகவும் இரண்டாவதாக மரபுசார் எழுத்துக்களைக் கேள்விக்குட்படுத்தி நவீனங்களை உள்வாங்கிய  மக்கள் இலக்கிய முற்போக்கு எழுத்தாளர் குழுமம். இவர்களுக்கிடையே நடுநிலை இலக்கியர் குழுமம் என்ற ஒன்றும் இருந்தது. அவர்களில் சு. வித்தியானந்தன், இரசிகமணி கனக. செந்தில்நாதன், வ. அ. இராசரத்தினம் போன்றவர்கள் முக்கியமானவர்கள். அப்பொழுது இந்த இரண்டு குழுமங்களிடையேயும் ஓர் ஆரோக்கியமான நிலைகள் இருந்தன. காரசாரமான கருத்தாடல்கள் இடம்பெற்றன. ஆனால் இன்றுள்ளது போல் கிசு கிசுப் போக்காக அல்லது ஆளுக்கு ஒரு அடிபொடிகளை வைத்துக்கொண்டு எல்லோருமே மேதைகள் என்ற எண்ணத்தில் அன்று இருக்கவில்லை. ஒருவரை ஒருவர் அங்கீகரிக்கின்ற மனப்பக்குவம் இன்று குறைவு. மொத்தமாக சொல்வதானால் அன்றைய இலக்கியக் குழுமங்கள் ஈழத்து இலக்கிய பரப்பை முன்நகர்த்தி செல்ல வைத்தன. இப்பொழுது இருக்கின்ற மேதமை எண்ணங்கொண்ட சிறு குழுமங்களாக அவைகள் ஒருபோதும் இருக்கவில்லை.

டானியல் அறிமுகப்படுத்திய ‘பஞ்சமர்‘ என்ற சொல்லாடல் தலித் என்று மாறியதன் நுண்ணரசியல்தான் என்ன?

பஞ்சமர் என்பது தலித்தாக மாறவில்லை. கே. டானியல் தனது ‘பஞ்சமர்”  நாவலில் ஒடுக்கப்பட்ட மக்களை ‘பஞ்சமர்’ என்று குறிப்பிட்டார். முன்னர் வடபகுதியில் ஒடுக்கப்பட்ட மக்களை ‘தாழ்த்தப்பட்ட மக்கள்” என்றே அழைத்துவந்தனர்.

இந்த மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய இயக்கங்களில்  ‘சிறுபான்மைத் தமிழர் மகா சபை’, தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்’ என்பன முக்கியமானவை.

கே. டானியல் 1979 காலப்பகுதியில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காகப் பாடுபடும் பல சிறிய சங்கங்களையும் ஒன்றிணைத்து  ‘ஒடுக்கப்பட்டோர் ஐக்கிய விடுதலை முன்னணி’ என்ற அமைப்பை உருவாக்கினார். அதில் சிறுபான்மைத் தமிழர்களை ‘ஒடுக்கப்பட்டோர்” என்ற சொல்லையே பாவிக்கும்படி வலியுறுத்தினார்.

‘தலித்” என்ற சொல் மராட்டியச் சொல்லாக இருந்தாலும் அதன் பொருள் ஒடுக்கப்பட்டோரையே குறித்தது. இந்தத் ‘தலித்” என்ற சொல்லாடல் தமிழுக்கு 1990 -களிலேயே வந்தது. அதற்கு முன்னர் இந்த சொல்லாடல் பாவிக்கப்படவில்லை. ஆனால் டானியலின் நூல்களைத் தமிழகத்தில் வெளியிட அயராதுழைத்த தோழர்   பேராசிரியர் அ.  மார்க்ஸ் போன்றவர்கள் கே. டானியலை ‘தலித் இலக்கியப் பிதாமகர்” – “தலித் இலக்கிய முன்னோடி” என்ற சிமிழுக்குள் அடைக்கப் பார்க்கின்றார்கள். என்னைப் பொறுத்தவரையில் நான் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டேன். தலித்துகள்தான் தலித்துகளுக்காகப் போராட வேண்டும் –  தலித்துகளுக்காக எழுத வேண்டும் என்றெல்லாம் சொல்கின்றார்கள். அது தவறானதும் கூட.

ஒடுக்கப்பட்டவர்களின் பிரச்சனைகள்  முற்றுமாகத் தீரவேண்டுமாயின் வர்க்கப்புரட்சி நடைபெற்றாலே சாத்தியமாகும்.

அதுவரை பொறுத்திருக்க முடியுமா என்ற கேள்வி எழுப்பலாம்..

நாளாந்தம் ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தீர்க்க – உரிமைகளை நிலைநாட்ட சகல முற்போக்கு சக்திகளுடனும் ஐக்கியத்தை ஏற்படுத்திப் போராடத்தான் வேண்டும். இதனையே டானியல் வலியுறுத்தினார்.

உதாரணத்துக்கு ‘தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்” நடாத்தி வெற்றிகொண்ட போராட்டங்களைக் குறிப்பிடலாம். இந்த இயக்கப் போராட்டத்திற்கு சிங்கள – முஸ்லீம் மக்கள் உட்படச் சகல முற்போக்கு சக்திகளும் ஆதரவளித்தன. இதனாலேயே வெற்றிகளைப் பெற முடிந்தது.

‘தலித்’ என்ற சொல்லைத் தமிழகத்தில் அரசியல் வாதிகளும் பாவிக்கத் தொடங்கித் தேர்தல் சகதியில் சீரழிவதையும் பார்க்கலாம்; கே. டானியல் இப்படி அழைப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்.

அன்றைய காலகட்டங்களில் ஈழத்து தமிழ் சமூகம் இறுகிய சாதீயக் கட்டமைப்புகளைக் கொண்டிருந்தது. அப்பொழுது அதற்ககெதிரான போராட்டங்கள் எப்படியாக இருந்தது ?

வடபகுதியில் சுமார் ஐந்து இலட்சத்திற்கு மேற்பட்ட எண்ணிக்கையைக் கொண்ட தாழ்த்தப்பட்ட மக்கள் சாதியத் தீண்டாமைக் கொடுமைகளுக்கு ஆளாகியிருந்தனர்.

அந்த மக்களின் உரிமைகளுக்காகக் குரல்கள் அன்றுதொட்டு எழுந்தன.

வடபகுதி தொழிலாளர் சங்கம் (1910), யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் (1920), ஒடுக்கப்படும் தமிழ் ஊழியர் சங்கம் (1927), வட இலங்கை கள் இறக்கும் தொழிலாளர் சங்கம், (1933), சன்மார்க்க ஐக்கிய வாலிபர் சங்கம் (1941), வட இலங்கை சிறுபான்மைத் தமிழர் மகாசபை (1943), வடபகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி (1945), 1966 அக்டோபர் 21 எழுச்சி, தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் (1967) ஆகியன ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல்கொடுத்த  – பாடுபட்ட இயக்கங்கள் –  நடவடிக்கைகளாகும்.

எனக்குத் தெரிந்தவரையில் 1960 -களில் சாதியத் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக ஏற்பட்ட போராட்டங்களே இழப்புகளைச் சந்தித்த போதிலும் வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்தன.

1957 -ல் ‘சமூகக் குறைபாடுகள் ஒழிப்புச் சட்டம்’ பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதாவது ஆலயத்திற்குள் செல்வதை தடை செய்வது மனித உரிமை மீறல் என்பதை இந்த சட்டம் வரையறை செய்தது. ஆனால் என்ன நடந்தது..? அமைதிக்குப் பங்கம் என்ற போர்வையில் ஆலயப்பிரவேசம் தடுக்கப்பட்டது. சட்டத்தை அமூல்படுத்த வேண்டிய காவல்துறை ஒடுக்குவோருக்கு ஆதரவாக நின்றது.

இந்த சமூக குறைபாட்டுகள் ஒழிப்புச் சட்டத்தை முறையாக அமூல்படுத்த வேண்டி 1966 -ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21-ம் திகதி சுன்னாகத்தில் இருந்து யாழ்ப்பாணம் வரை ஓர்  எழுச்சி ஊர்வலம் நடாத்தப்பட்டது. முஸ்லீம் மக்கள் உட்பட மற்றும் சகல முற்போக்கு சக்திகளும் அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள். அதில் காவல்துறை ஊர்வலத்தைக் கலைக்கத் தடியடிப் பிரயோகம் செய்தது.

காயங்களுக்குள்ளான முன்னணித் தோழர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டனர். இருப்பினும் ஊர்வலத்தில் திரண்டிருந்தோர் கலைந்துசெல்ல மறுத்து நின்றனர். தவிர்க்க முடியாத நிர்ப்பந்தத்தில் ஊர்வலம் யாழ்நகர் நோக்கிச் செல்ல அனுமதிக்க வேண்டிதாயிற்று. யாழ் முற்றவெளியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச்செயலாளர் தோழர் என். சண்முகதாசன் எழுச்சியுரையாற்றினார்.  தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகத் தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னெடுக்கும் போராட்டங்களுக்குப் புரட்சிகரக் கம்யூனிஸ்ட் கட்சி வழிகாட்டித் தலைமைதாங்கும் என அவர் அறைகூவல் விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து வடபகுதியின் பல கிராமங்களிலும் தேநீர்க் கடைகளில் சமத்துவம் – ஆலயங்களில் சமத்துவமாக வழிபட உரிமை கோரிப் போராட்டங்கள் – ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நடைபெற்றன.

யாழ்ப்பாண மாநகரசபை மண்டபத்தில் 21 – 10 – 1967 ல் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் முதலாவது மாநாடு நடைபெற்றது.

இதன் அமைப்பாளராகக் கே. டானியல்,தலைவராக எஸ். ரி. என். நாகரட்ணம்,  இணைச்செயலாளர்களாக சி. கணேசன், எம். சின்னையா, உப தலைவர்களாக டாக்டர் சு. வே. சீனிவாசகம், கே. ஏ. சுப்பிரமணியம், நா. முத்தையா (மான்) ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

மாநாட்டின் பின்னர் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் திறக்கப்படாத ஆலயங்கள் அனைத்தும் திறக்கப்பட வேண்டும், தேநீர்க் கடைகளில் இரட்டைக்குவளை முறை தவிர்க்கப்படல் வேண்டும், ஆலயங்களில் சமத்துவம், தேநீர்க் கடைகளில் சமத்துவம் பேணப்பட வேண்டும் எனப் பெரிய ஆலயங்களுக்கும் தேநீர்க் கடைகளுக்கும் சுற்றுநிருபம் அனுப்பியது. யாழ்ப்பாண நகரிலுள்ள தேனீர்க் கடைகளில் சமத்துவம் பேணப்பட்டது. கிராம மட்டங்களிலும் மெதுமெதுவாக சமத்துவ நிலைக்கு திரும்பின. இந்த போராட்டங்கள் 1966 –ல் இருந்து 1970 வரை உச்சநிலையில் நடந்தன.

உயிரிழப்புகளும் ஏற்பட்டன. சங்கானை, நெல்லியடி, கரவெட்டி – கன்பொல்லை, மாவிட்டபுரம்,  மட்டுவில், கொடிகாமம், காங்கேசந்துறை ஆகியமிடங்களில் நடைபெற்ற போராட்டங்கள் குறிப்பிடத்தக்கன. இழப்புகள் சில ஏற்படாலும் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டமக்களுக்கு வெற்றியளித்தன. இதற்கு கம்யூனிஸ்ட் கட்சியும் தோழர் என். சண்முகதாசனின் வழிகாட்டுதலும் துணைபுரிந்தன. இந்தப் போராட்டங்கள் இலங்கைப் பாராளுமன்றம் முதல் சீன வானொலி வரை பேசப்பட்டன. மாவிட்டபுரம் ஆலயப் பிரவேசப் போராட்டம் இலங்கை நீதிமன்றங்கள் முதல் பிரித்தானியாப் பிரிவுக்கவுன்சில் வரை பேசப்பட்டது.

தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம், சிறுபான்மைத் தமிழர் மகாசபை போன்றவற்றின் செயல்பாடுகளானது உங்களது காலத்திலே உச்சம் பெற்றிருந்தது. பின்னர் அவை படிப்படியாக மறையத்தொடங்கின. இதற்கு ஏதுவான காரணிகள்தான் என்ன?

படிப்படியாக மறையத்தொடங்கின என்று சொல்வது சரியல்ல.பேரினவாத அடக்குமுறையும் இனவாத அரசியலின் உச்சமும் ஆயுதங்களின் மேலெழுச்சியினாலும் இவைகள் அடக்கப்பட்டன என்பதுதான் சரி. ஆயுத முன்னெடுப்புக்களின் காரணமாக இவர்களின் குரல்கள் அடைக்கப்பட்டன. பிரச்சினை நீறுபூத்த நெருப்பாகவே இருந்தது.

நீங்கள் நிச்சாமம், கன்பொல்லை, மட்டுவில் ஆகிய இடங்களில் நடைபெற்ற சாதிய அடக்கு முறைகளுக்கு எதிரான போராட்டங்களின் நேரடி சாட்சியமாக எம்மிடையே இருக்கின்றீர்கள். அங்கு என்னதான் நடந்தது?

இல்லை. உங்கள் பார்வை தவறானது. நான் நேரடிச் சாட்சியாக இருந்தவனல்ல. ஆனால் இவைகளை நன்றாக அறிந்து கொண்டவன். இந்தப் போராட்டங்களை வழிநடத்திய கட்சியுடனும், வெகுஜன இயக்கத்தின் அமைப்பாளரும் தலைசிறந்த படைப்பாளியுமான கே. டானியலுடனும் பல ஆண்டுகள் செயற்பட்டதனால் அறிந்துகொண்ட அனுபவங்களாகும்.  நிச்சாமத்தில் இரண்டு சமூகங்கள் இருந்தன. ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்கள் தங்கள் பக்கத்தில் இறந்தவரின் உடலை இறுதிக்கிரியைகளுக்காக மயானத்துக்கு கொண்டுசெல்வதற்கு ஆதிக்க சமூகம் வாழ்ந்த வீதியினுடாகவே எடுத்துச்செல்ல வேண்டும். இதை ஆதிக்க சமூகத்தவர்கள் தடை செய்தார்கள். போராட்டம் வெடித்து துப்பாக்கிச்சூடுகளும் நடந்தன.

நெல்லியடிச்சந்தியில் இருந்து தெற்குப் பக்கமாக இருக்கின்ற கன்பொல்லை கிராமம் மிகவும் அடக்கியொடுக்கப்பட்ட கிராமங்களில் ஒன்று. அன்று அந்தக் கிராமத்து மக்கள் நெல்லியடி சந்தியில் பொது இடங்களில் ஒன்றுகூட முடியாத அளவிற்கு அடக்கியொடுக்கப் பட்டார்கள். வடக்கில் அடக்கியொடுக்கப்பட்ட கிராமங்கள் அனைத்தும் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தில் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்தார்கள். குறிப்பாக பெரிய ஆலயங்களான செல்வச்சன்னதி,மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம்,பன்றித்தலைச்சி அம்மன் ஆலயம்,வல்லிபுர ஆழ்வார் ஆலயம் போன்றவற்றில் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் மூலமாகவே பூட்டப்பட்ட கதவுகள் திறந்தன. அதில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் போராட்டம் பிரபல்யம் பெற்ற போராட்டம். 1968 ஆம் ஆண்டு மட்டுவில்  பன்றித்தலைச்சி அம்மன் ஆலயப் பிரவேசப் போராட்டத்தின்போது கைக்குண்டு வெடித்தது.

குண்டுவீச்சில் சம்பந்தப்பட்டதாகச் ‘செல்லக்கிளி” என்ற பெண்போராளியைப் பொலிசார் தேடுவதாகப் பத்திரிகைச் செய்தி தெரிவித்தது.

அடக்குமுறைக்கு எதிரான முதல் பெண் போராளியாகச் “செல்லக்கிளி”பத்திரிகைகளால் அடையாளப்படுத்தப்பட்டாள்.

சங்கானை – நிச்சாமப் போராடத்திலும் பெண்கள் முன்னின்று போராடினார்கள். ஆனால் இவைகள் இன்றைய காலத்தில் பெரிய அளவில் தெரியவரவில்லை. இவர்களைப் போல் பல பெண்கள் கம்யூனிஸ்ட் புரட்சிகர அமைப்பில் இயங்கினார்கள்.

சமகாலத்தில் சாதீயத்தின் இருப்பானது தமிழ் சமூகத்தில் எப்படியாக இருக்கின்றது?

நீறு பூத்த நெருப்பாகவே இருக்கின்றது. நான் அண்மையில் தாயகம் சென்ற பொழுது வடமராட்சிப் பகுதியில் சில தோழர்களைச்  சந்திக்க நேரிட்டது. அவர்களின் தகவல்களின் அடிப்படையில் இன்றுங்கூட கரவெட்டிப் பகுதியில் ஒரு சில ஆலயங்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் சமத்துவமாக வழிபடுவதை தடைசெய்து வைத்துள்ளன. அத்துடன் சாதிக்களுக்கென மயானங்கள் கட்டப்படுகின்றன. சில இடங்களில் மயானங்களுக்கு அருகில் ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். மயானங்களை மக்கள் குடியிருப்புகளுக்கு அப்பால் கொண்டுசெல்லுமாறு கேட்டு போராட்டங்களும் நடக்கின்றன.

அந்நிய நாட்டில் இருந்து எம்மவர் சிலரால் அனுப்பப்படும் பணமானது நவீன முறையில் சில இடங்களில் சாதிக்கொரு மயானங்களை உருவாக்கியுள்ளது. புலம் பெயர்ந்த சிலராலும் தாயகத்தில் இருப்பவர்களாலும் சாதியமானது வளர்க்கப்படுகின்றது. ஆலயங்களிலும் இந்த நடைமுறையே பின்பற்றப்படுகின்றன. இத்தகைய போக்குகளுக்கு புலம்பெயர்ந்தவர்களின் நிதிப்பங்களிப்பானது அங்குள்ள நிலைமைகளை மேலும் சிக்கல்களுக்குள் கொண்டு செல்கின்றது. ஒருவகையில் புலம்பெயர்ந்த சிலரே தாயகத்தில் சாதியத்தை வளர்த்தெடுப்பதில் முன்னணியில் நிற்கின்றார்கள்.

ஆலயங்களையும் மயானங்களையும் பொதுவாக திறந்து வைத்தால் இப்படியான சூழ்நிலைகள் தோன்றுவதற்கு சந்தர்ப்பங்களே இல்லை. ஆனால் அவர்கள் இதற்கான வழிமுறைகளைக் காணத்தவறுகின்றனர். இப்படியான போக்குகள் இருக்கும் வரையிலும் சாதியமானது நீறு பூத்த நெருப்பாகவே இருக்கும்.

ஒரு கவிதையின் மொழியானது எப்படியாக இருக்கவேண்டும்?

முக்கியமாக மக்களுக்கு அதாவது வாசகனுக்கு விளங்க வேண்டும். உள்ளடக்கத்தின் ஒரு வரியேனும் வாசகனின் நினைவில் அடுத்த சில நிமிடங்களாவது ஓடி பொறி கிளப்பினால் அது கவிதை..!  கவிதை என்பது வாசகனுக்கு விளங்கும் வகையில் அது எந்த உருவத்தையும் எடுக்கலாம்.

உங்கள் காலத்தில் இலக்கிய சிற்றிதழ்களின் தாக்கம் எப்படியாக இருந்தது ?

காத்திரமான படைப்புகளின் பிறப்புகள் சிற்றிதழ்களினாலேயே வளர்த்தெடுக்கப்பட்டன.

எங்கள் காலத்திற்கு முன்னர் வெளிவந்த ”மறுமலர்ச்சி” இலக்கிய இதழே ஈழத்தின் இலக்கியச் சிற்றிதழ் வரலாற்றைத் தொடக்கி வைத்தது என்று குறிப்பிடுவர்.

நாம் அறிந்த காலத்தில் இளங்கீரனின் ‘மரகதம்’ சில இதழ்கள் வெளிவந்தாலும் காத்திரமான படைப்புகளைத் தாங்கி வெளிவந்தது.

‘சிற்பி’ சரவணபவன் நடாத்திய ‘கலைச்செல்வி” தொடர்ந்து வெளிவந்து பல எழுத்தாளர்களை வளர்த்தெடுத்தது.

மேலும் ‘வசந்தம்”, ‘விவேகி” என்ற சிற்றிதழ்களும் வெளியாகின. இவைகள் அனைத்தும் ஈய எழுத்துக்களில் ஒவ்வொன்றாக அச்சுக்கோர்க்கப்பட்டு அச்சுப்பதிப்பில் வெளியாகின. சமகாலத்து தொழில் நுட்ப வசதிகளுடன் ஒப்பிட்டுப்   பார்க்கையில் அன்றையகாலத்தில் அச்சுப்பதிப்பில் வெளியாகிய சஞ்சிகைகள் ஓர் சாதனை என்றே சொல்வேன். அவற்றை வெளியிட்ட சிலர் மீது அவர்தம் இலக்கியக் கோட்பாடுகள்மீது விமர்சனங்கள் இருந்தாலும் அவர்களது முயற்சிகளை நாங்கள் குறைத்து மதிப்பிட முடியாது. ‘மல்லிகை” சஞ்சிகை தொடர்ந்து 47 வருடம் இடையில் சிறுசிறு தடங்கல்களுடன் தொடர்ந்து வெளியாகியது. அந்தவகையிலேயே ஜீவா இன்றும் பேசப்படுகின்றார்.

உங்களுக்கும் மறைந்த எஸ். பொ. விற்குமான தொடர்புகள் எப்படியாக இருந்தது..? அவர் ஓர் கலகக்காரன் என்றே அறியப்பட்டிருந்தார். இதுபற்றி.. ?

எனக்கும் எஸ். பொ. வுக்கும் தொடர்புகள் இருந்ததில்லை. நீங்கள் சொல்கின்ற ‘கலகக்காரன்” என்ற பட்டத்தை அவர் தனக்குத்தானே சூட்டிக்கொண்டார். ஆரம்பகாலத்தில் அவர் ஓர் சிறந்த கதை சொல்லி. பின்னர் அவருடைய எழுத்துகளிலும் பார்க்க அவருடைய நச்சரிப்பு – வசைபாடல் தொகை அதிகமாக இருந்தது. அவரிடம் திறமைகள் இருந்தன. அதேவேளையில் வக்கிரகுணங்களும் அதிகமாகவே இருந்தன. எல்லாவற்றிலுமே ‘நான்” என்ற சுய தம்பட்டம். பம்மாத்துகளே அதிகம் இருந்தன. ஆரம்பகாலத்தில் அவர் எழுதிய கதைகளின் பின்னர் அவரது படைப்புகள் யாவுமே அவரது திசை மாற்றங்களினால் தோல்வியைத் தழுவின. அவருடைய பேனை பாலியலைச் சொட்டச் சொட்ட எழுதியது. இது ஒருவகையான சுயஇன்பமும் மனநோயுமாகும். பாலியல் இரசமானது இலக்கியத்தில் ஒரு பகுதியே தவிர அதுதான் முதன்மையானது அல்ல. எஸ். பொ. ‘இந்திரிய எழுத்தாளராகவே” கணிக்கப்பட்டார். அத்துடன் ஓர் வசைபாடியாகவும் அடையாளப்படுத்தப்பட்டார். இந்த வசைபாடிக் குணத்தினால் அவரது திறமைகள் மெல்ல மெல்ல அடிபடத்தொடங்கின. அவர் இலக்கிய வரலாற்றில் வாழ்ந்திருந்தாலும் இலக்கிய உலகில் அவரது படைப்புகளால் பேசப்படவில்லை என்பதே உண்மையானது.

உங்களுடைய ஊடகத்துறை மற்றும் எழுத்துத்துறையில் உள்ள அரசியல்தான் என்ன?

எல்லாவற்றிலுமே ஓர் அரசியல் உண்டு. எனது எழுத்துக்களும் அவ்வாறே. எனது எழுத்துக்களில் அரசியல் எதுவுமே இல்லை என்று சொன்னால் அது இன்னுமோர் அரசியலுக்கு சேவை செய்வதாக அர்த்தப்படும். நான் ‘நடுநிலைமை வாதி’ என்று சொல்லி என்னை நான் ஏமாற்றிக்கொள்ள விரும்பவில்லை.

‘சிரித்திரன்’ ஆசிரியர் சுந்தர், கே. டானியல் இறந்தபோது எழுதிய அஞ்சலிக் குறிப்பில்,  ”டானியல் தனது மோட்டார் சைக்கிளில் இடதுபுறம் சரிந்திருந்துதான் ஓடுவார். ஏன் அப்படி என்று ஒருமுறை அவரிடம் கேட்டேன்”.

“இடதுபுறம் சரிந்திருந்து ஓடுவதில் ஒரு சுகம் இருக்கிறது” என்றார். ஆமாம்… .. அவர் வாழ்க்கையை இடதுசாரியாகவே ஓடி முடித்துள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதுபோலவே நானும் இடதுசாரி அரசியலை நம்புகின்றேன். அதன்வழி செயற்படவே விரும்புகின்றேன்.

இறுதியாக வளர்ந்துவருகின்ற இளைய தலைமுறை படைப்பாளிகளுக்கு என்ன சொல்ல வருகின்றீர்கள்?

மன்னிக்க வேண்டும். நான் போதனை செய்கின்ற போதகர் அல்ல. இருப்பினும் எமது இலக்கிய வரலாற்றினை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். நிறைய வாசிக்க வேண்டும். வாசிப்பு அவர்களுக்கு நல்ல படைப்புகளை இனங்காட்டும். நல்ல படைப்புகளைப் படைக்க உந்துதல் அளிக்கும்.

வி.ரி. இளங்கோவன்-பிரான்ஸ்.