பற்குணம் டி.ஆர்.ஓ (பதிவு 32)

பற்குணம் 1970 இல் இருந்து 1976 வரை திருகோணமலை மாவட்டத்தில் பணியாற்றினார் .இக் காலங்களில் என்னை பல இடங்களுக்கு தன்னோடு அழைத்துச் செல்வார்.திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் தவிர்ந்த ஏனைய பகுதி கிராமங்கள் அனைத்துக்கும் அவருடன் கூடவே போயிருக்குறேன்.ஆனால் எந்த பொது நிகழ்ச்சிகளிலும் என்னை அவர் மேடைகளில் அனுமதித்ததில்லை.சிறுவனான என்னிடம் கர்வம் வந்துவிடக்கூடாது என்பதில் அக்கறை கொண்டிருந்தார்.அன்றைய காலத்தில் அங்கு பணியாற்றிய சகல நண்பர்களுக்கும் பணியாற்றியவரகளுக்கும் பொதுவாக அவரின் தம்பி எனது தெரியும்.

திருகோணமலை விமானப்படைத் தளத்தில் நடந்த கலாச்சார மையத் திறப்பு விழா நிகழ்வு ஒன்றில் மட்டும் நான் விமானப்படையினரின் ஒழுங்குக்கு அமைய அவருடன் கூட இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.அதை திறந்து வைத்தவர் சிறிமாவோ பண்டாரநாயக்கா.அவரை நேருக்கு நேராக பார்த்ததில் எனக்கு மிக சந்தோசம்.

ஆனால் எனக்கும் பொதுவாக மேடைகளில் அமர்ந்திருப்பது விருப்பமில்லை.என் சுதந்திரத்தை இழந்த மாதிரியான உணர்வு.ஒரு தடவை தேசிய விளையாட்டுப் போட்டி திருகோணமலையில் நடைபெற்றது.இதில் இறுதி நாளன்று அமைச்சர் கே.பி.ரத்னாயக்கா பிரதம விருந்தினராக வந்திருந்தார்.நான் பார்வையாளர்களுடன் மைதான மதிலில் இருந்து வேடிக்கை பார்த்தேன்.என்னால் உடம்பு முடியவில்லை.வீட்டுக்கு திரும்பிவிட்டேன்.சாவி இல்லை. வாசலில் படுத்தேன். விழித்துப் பார்த்தபோது டாக்டர் இராசரத்தினம் வீட்டில் இருந்தேன்.அண்ணன் பற்குணம் அருகே நின்றார்.

அவ்வளவு ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் அவர் என்னைக் கவனித்துள்ளார் .அவர் என்மீதான கவனத்தை விடவில்லை.காணவில்லை.அவர் என்னைத் தேடி வீட்டிற்கு வந்தபோது எனக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டு வலிப்பு வந்துவிட்டது.நல்லவேளை அவர் வந்துவிட்டார்.பொதுவாகவே எங்கும் ஓடித்திரியும் என்னைக் காணவில்லை என்றபோது அவருக்கு சந்தேகம் வந்து என்னைத் தேடி வந்தார்

ஒரு தடவை அவரின் வாகனம் இல்லை.திருகோணமலைக்கு பஸ்சில் செல்ல தீர்மானித்தார்.புறப்பட தாமதமானதால் என்னை கொஞ்ச நேரம் பஸ் வந்தால் மறிக்கச் சொன்னார். நானும் விதிக்கு செல்ல பஸ் வந்தது. மறித்தேன்.விசயத்தைக் கேட்ட பஸ் டிரைவர் பஸ்சை வீட்டுக்கு கொண்டுவந்துவிட்டார்.இதைக் கண்ட பற்குணம் அவரை அன்பாக கண்டித்தார் .

இதைக் காரணமாக வைத்து நாளைக்கு உன்னை வேலையில் இருந்து நீக்கினால் உன் நிலமை என்ன.இனிமேல் இப்படியான தவறுகளை செய்யவேண்டாம்.என எச்சரித்தார்.
கடமைகளில் மட்டும் அல்ல சமூகத்திலும்
ஒவ்வொரு தனி மனிதர்களிலும் அவர் தன் அக்கறையைக் காண்பித்தார்.

(விஜய பாஸ்கரன்)
(தொடரும்….)