போர் மேகம் சூழ் உலகு

இந்த நிலையில் தான், காஷ்மிரில் மேற்கொள்ளப்பட்ட மோசமான தற்கொலைத் தாக்குதலின் பின்னணியில், இந்தியாவும் பாகிஸ்தானும் போரொன்றை மேற்கொள்ளுமா என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. அதிலும், இரு நாடுகளுக்குமிடையிலான எல்லைப் பகுதியில், இல்லாவிட்டால் பாகிஸ்தான் கட்டுப்பாட்டுப் பகுதியில், இந்திய விமானப் படையால் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன என்ற தகவல், இவ்வச்சத்தை அதிகரித்திருக்கிறது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான எல்லைப் பிரச்சினையென்பது, பாகிஸ்தானின் இருப்பு எப்போது ஆரம்பித்ததோ, அப்போதிருந்து காணப்படுகிறது. ஆனால், தற்போது எழுந்திருக்கும் மோதல் சூழல், அதிக அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

முன்னரெப்போதையும் விடப் போருக்கான அச்சம் ஏற்பட்டிருக்கின்றமைக்கான பிரதான காரணமாக, இவ்வாண்டு மே மாதத்தில் இடம்பெறவுள்ள இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தல் காணப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சி அரசாங்கத்துக்கு, மக்களிடத்தில் வரவேற்பில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது என்பது, பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு விடயமாக இருக்கிறது. பொதுமக்களின் ஆதரவை மீளப் பெறுவதற்கு, எதிரி நாடு மீதான போரையோ அல்லது தாக்குதல்களையோ மேற்கொண்டு, தேசியவாதத்தை ஊக்குவிப்பதென்பது, மிகவும் பயன்தரக்கூடிய வழியாக உள்ளது.

உதாரணமாக, காஷ்மிரில் நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, அரசாங்கம் எப்படிச் செயற்பட வேண்டுமென்பது தொடர்பாக அதிக கலந்துரையாடல்கள் காணப்பட்டன. எனினும், இந்திய விமானப் படையால் தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்ற தகவல் வெளியான பின்னர், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, சுயாதீனமான கட்சிகள், விளையாட்டு நட்சத்திரங்கள், சினிமா நட்சத்திரங்கள், ஊடகவியலாளர்கள் என்று, எந்த வித்தியாசமுமின்றி, இந்திய இராணுவத்தைப் புகழ்ந்து, தமது நாட்டின் மீதான பற்றுறுதியை வெளிப்படுத்தியிருந்தனர். அப்படியான சூழலில், ‘பாகிஸ்தான் மீதான தாக்குதலை நடத்திய உறுதியான தலைமைத்துவத்துக்கு வாக்களியுங்கள்’ என்று வாக்குக் கேட்பது, பிரதமர் மோடிக்கு இலகுவாகிறது. அதை எதிர்த்துப் பிரசாரம் செய்வதென்பது, எதிர்க்கட்சிக்குக் கடினமாக அமையும்.

இத்தாக்குதல்களைத் தனது பிரசாரத்துக்காகப் பிரதமர் மோடி பயன்படுத்தக் கூடுமென்ற தகவல், பிரதமர் மோடி மீதான தவறான பார்வையை ஏற்படுத்தலாம். ஆனால் யதார்த்தத்தில், அவருக்கான தெரிவுகள் குறைவு. பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட ஆயுதக்குழுவொன்று, இந்தியாவில் தாக்குதல் நடத்தி, 40க்கும் மேற்பட்ட பொலிஸாரைக் கொன்ற பின்னர், ‘போரெல்லாம் வேண்டாம்; பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போகிறேன்’ என்று அவர் புறப்படுவாராயின், அவரது கடும்போக்கு ஆதரவாளர்களே அவரைக் கைவிட்டுவிடுவர். எதிர்க்கட்சிகளோ, அவரை ‘ஒன்றுக்கும் இயலாத பிரதமர்’ என்று, பலவீனமான ஒருவராக, அவரைக் காண்பிக்க முயலும். எனவே, பிரதமர் மோடிக்கும் வேறு தெரிவுகள் இல்லையென்பது தான் உண்மையானது.

மறுபக்கமாக, பாகிஸ்தானின் பிரதமராக அண்மையில் தெரிவான இம்ரான் கான், அந்நாட்டு இராணுவத்தின் விருப்புக்குரிய ஒருவர் என்று தான் கருதப்படுகிறது. அவரது வெற்றிக்கு, இராணுவத்தின் பங்களிப்பு முக்கியமானது என்ற குற்றச்சாட்டு, சர்வதேச அமைப்புகள் பலவற்றாலும் முன்வைக்கப்படுகிறது. இவ்வாறான சூழலில், பொதுவாகப் போரில் ஈடுபடுவதற்கான விருப்பத்தைக் கொண்ட இராணுவத்தால், போரொன்று மேற்கொள்ளப்பட வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டால், அதை எதிர்ப்பதற்கான பலத்தையோ, திறனையோ அவர் கொண்டிருக்கிறாரா என்றால், இல்லை என்பது தான் பதிலாகக் கிடைக்கிறது.

இவ்வாறு, இரு தரப்புகளுக்குமான தெரிவுகள் இல்லையென்பதற்காக, ஏற்படக்கூடிய போரென்பது, சரியாக அமையுமென்றோ, பிராந்தியத்தில் பாதிப்பை ஏற்படுத்தாதென்றோ உறுதியாகக் கூற முடியாது. மாறாக, உறுதியான பாதிப்பை ஏற்படுத்துமென்று, ஓரளவுக்கு உறுதியாகக் கூற முடியும். ஏனென்றால், பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்குமிடையில் ஏற்படும் எந்த மோதலும், பிராந்திய மோதல்கள் என்பதைத் தாண்டி, உலக வல்லரசுகளின் நிழல் போராக மாறுவதற்கான ஆபத்தைக் கொண்டிருக்கின்றன. உலகில் ஏற்படும் எந்த முரண்பாடும், முன்னெப்போதையும் இல்லாததைப் போல், நிழல் போர்களாக உருவெடுத்திருக்கின்றன.

சிரியாவில், அந்நாட்டு ஜனாதிபதிக்கும் ஆயுதக்குழுக்களுக்குமிடையிலான போராக அது இருந்தாலும், உண்மையில் அது, நிழல் போராகவே இருக்கிறது. ஐக்கிய அமெரிக்காவும் அதன் தோழமை நாடுகளும் ஒரு பக்கம் இருக்கின்றன. ரஷ்யாவும் அதன் தோழமை நாடுகளும், ஜனாதிபதியின் பக்கம் இருக்கின்றன. இப்போரில், பெரும் அழிவுகள் ஏற்படத் தொடங்கியமை, இப்போரில் ரஷ்யா பங்குபற்ற ஆரம்பித்த பின்னர் தான்.

யேமனில், சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணி, ஐ.அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவோடு செயற்படுகிறது. மறுபக்கத்தில், ஆயுததாரிகளுக்கு ஆதரவாக ஈரான் செயற்படுகிறது என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இப்போரில், பிரதான தரப்புகளை விட, சவூதி தலைமையிலான இராணுவக் கூட்டணியின் விமானத் தாக்குதல்களால் கொல்லப்படுவோரின் எண்ணிக்கை தான் மிக அதிகமானது எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இவ்வாறான போர்ச் சூழல் தான், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையில் ஏற்படக்கூடுமென அஞ்சப்படுகிறது. இப்போதிருக்கின்ற நிலையில், பாகிஸ்தான் மீதான எந்தத் தாக்குதலையும், சீனா பொறுத்துக்கொள்ளப் போவதில்லை. பாகிஸ்தானின் மோசமான பொருளாதார நிலையும் அந்நாட்டின் அரசியல் ஸ்திரமற்ற நிலைமையும், பாகிஸ்தானுக்குள் சீனாவின் ஆதிக்கத்தை அதிகரித்திருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில், பாகிஸ்தானுக்கெதிரான தாக்குதலை, சீனா நிச்சயமாகவே எதிர்க்கப் போகிறது. அதிலும், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில், ஏற்கெனவே எல்லை மோதல் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டிருந்த நிலையில், அதற்கான பதிலடி வழங்குவதற்கான வாய்ப்பாகவும், சீனா இதைக் கருதும்.

இந்நிலைமை இவ்வாறிருக்க, ஐக்கிய அமெரிக்காவின் பங்களிப்பு எவ்வாறு அமையுமென்பது அடுத்த கேள்வியாகவுள்ளது. ஏனென்றால், இரு நாடுகளும் வலதுசாரிகளால் ஆளப்படுகின்றன. இரு நாட்டின் தலைவர்களையும், தீவிர வலதுசாரிகள் என்று தெளிவாகவே அழைக்க முடியும். இருவருக்குமிடையில் தனிப்பட்ட உறவென்று வரும் போது, அது சிறப்பாகவே காணப்படுவதாகக் கருதப்படுகிறது. ஆனால் அதைத் தாண்டி, இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் சீரற்ற தன்மையொன்று காணப்படுவதையும் அவதானிக்க முடிகிறது. குறிப்பாக, ஐ.அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின்னர், குடிவரவைக் கட்டுப்படுத்தும் பணியில் அவர் தீவிரமாக ஈடுபட்டார். அதன் ஓர் அங்கமாக, இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள், போலியான பல்கலைக்கழகமொன்றில் இணைந்தனர் என்ற குற்றச்சாட்டில், அந்நாட்டின் குடிவரவுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட போது, இந்திய வெளிவிவகார அமைச்சு, மிக வெளிப்படையான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தது.

ஆனால் மறுபக்கமாக, ஐ.அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான உறவு, கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. அதைத் திருத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், உடனடியாக அதில் மாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புகளில்லை. அத்தோடு, சீனா ஆதரிக்கும் ஒரு நாட்டை, ஐ.அமெரிக்காவும் ஆதரிக்கும் வாய்ப்பில்லை. எனவே, இந்தியாவின் பக்கமே ஐ.அமெரிக்கா சாயுமெனக் கருதப்படுகிறது.

இந்நிலை ஏற்பட்டால், ரஷ்யாவின் நிலைமையென்பது இன்னமும் சுவாரசியமாக மாறிவிடும். ஐ.அமெரிக்காவும் ரஷ்யாவும், இன்னமும் பரம வைரிகளாகவே உள்ளன. ஆனால், இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்குமிடையிலான உறவென்பது, முன்னெப்போதும் இல்லாதளவுக்குப் பலமாக உள்ளது. இரு நாட்டுத் தலைவர்களும் மாத்திரமன்றி, இரு நாட்டு அரசாங்கங்களும் மிகவும் அதிகமாக இணைந்து செயற்படுகின்றன. அப்படியான சூழலில், ஐ.அமெரிக்காவும் ரஷ்யாவும் ஒரே அணியில் இருப்பதற்கான சூழ்நிலையொன்று ஏற்படும். இது, வித்தியாசமான ஒரு நிலையாகக் காணப்படும்.

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, மாபெரும் அழிவை ஏற்படுத்தக்கூடிய போர் ஏற்படக்கூடிய சூழல் தான் இன்னும் காணப்படுகிறது என்பது தெளிவானது. இவற்றுக்கு மத்தியில், பொறுமையாக முடிவெடுக்கும் தலைமைகளின் ஆதிக்கம் அதிகரித்து, போரைத் தவிர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுமா என்பது தான், இப்போது கேட்கப்படும் கேள்வியாக இருக்கிறது.