மக்களுக்குச் சேவை செய்ய இத்தனை சண்டைகளா…?

அக்கட்சிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை, சிலவேளை அதனையிட்டு மனதளவில் மகிழ்ச்சியடைந்து இருக்கவும் கூடும். ஏனெனில், அது தேசியபட்டியல் ஆசனப் பகிர்வு தொடர்பில், தலைமை மீது ஏற்படும் நெருக்குவாரத்தை இல்லாமல் செய்ததோடு, கட்சி பிளவுபடும் அபாயத்தையும் நீக்கிவிட்டது.

தேசியபட்டியல் ஆசனங்கள் காரணமாக, மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட அரசியல் கட்சி முஸ்லிம் காங்கிரஸாகத் தான் இருக்க வேண்டும். இந்தப் பிரச்சினையால், அக்கட்சி மேலும் இரண்டு முஸ்லிம் கட்சிகளின் தோற்றத்துக்கு வழிவகுத்தது. ஒருமுறை அந்தச் சர்ச்சை, ‘துவா’ என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஜனநாயக ஐக்கிய முன்னணியைத் தோற்றுவித்ததோடு, கடந்த பொதுத் தேர்தலை அடுத்து, அது ஐக்கிய சமாதான முன்னணியைத் தோற்றுவித்தது. ஆனால், அவ்விரு கட்சிகளும் அரசியலில் சோபிக்கவில்லை.

2004ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலை அடுத்து, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு தேசியபட்டியல் மூலமாகக் கிடைத்த ஆசனமொன்றை, பலர் எதிர்ப்பார்த்தனர். அதற்காக, அவரவர் தமக்குச் சாதகமாகப் பல்வேறு வாதங்களை முன்வைத்தனர். ஆனால், ஒருவருக்குத் தான் கட்சித் தலைவர் அதனை வழங்க முடியும். எனவே, அதனை எதிர்ப்பார்த்துக் கிடைக்காதவர்கள், பல்வேறு அரசியல் காரணங்களைக் கூறிக்கொண்டு, கட்சியிலிருந்து விலகினர். அவ்வாறு விலகியவர்களில், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹ்மத்தும் ஒருவர். அவர் மற்றும் சிலருடன் சேர்ந்து, ஜனநாயக ஐக்கிய முன்னணியை உருவாக்கினார்.

கடந்த பொதுத் தேர்தலை அடுத்து, மு.காவுக்கு தேசிய பட்டியல் மூலம் இரண்டு ஆசனங்கள் கிடைத்தன. அந்த இரண்டு ஆசனங்களுக்கான சண்டையே, கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் மற்றும் செயலாளர் ஹசன் அலி ஆகியோர் கட்சியிலிருந்து விலகக் காரணமாகியது. அவர்கள், மு.காவிலிருந்து விலகியதற்கு வேறு காரணங்களைத் தான் முன்வைத்தார்கள். ஆனால், 2015ஆம் ஆண்டில் மு.காவுக்குக் கிடைத்த இரண்டு தேசியபட்டியல் ஆசனங்களுக்கும் அவர்கள் நியமிக்கப்பட்டு இருந்தால், அவர்கள் விலகிச் சென்று ஐக்கிய சமாதான முன்னணியை ஆரம்பிப்பார்களா என்பது சந்தேகமே.

தேசிய பட்டியல் ஆசனங்கள் மூலம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட கட்சி மு.காவாகத் தான் இருக்க வேண்டும் என்பதால், அக்கட்சியில் ஏற்பட்ட சர்ச்சைகளை அலசினோமே தவிர, தேசிய பட்டியல் ஆசனங்களால் உட்கட்சிப் பிரச்சினைகள் ஏற்பட்டுப் பாதிக்கப்பட்ட ஒரே கட்சி மு.கா அல்ல. உதாரணமாக, கடந்த முறை அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலும் அதற்குக் கிடைத்த ஒரு தேசிய பட்டியல் ஆசனம் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சை காரணமாக, கட்சித் தலைவர் ரிஷாட் பதியுதீன், கட்சியின் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீதை கட்சியிலிருந்து நீக்கினார். பின்னர், ஹமீத் நீதிமன்றம் சென்றார். அதனை அடுத்து, ஏதோ ஓர் இணக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு மீண்டும் கட்சியில் சேர்ந்தார்.

பொதுவாக, பிரதான கட்சிகளுக்குள் இந்த விடயத்தால் பாரிய பிரச்சினைகளோ சண்டைகளோ ஏற்படுவதில்லை. அக்கட்சிகளுக்குக் கூடுதலான ஆசனங்கள் கிடைப்பதே அதற்கு ஒரு காரணமாகும். ஆனால், பிரதான கட்சிகளுக்கும் அவற்றோடு இணைந்து போட்டியிடும் சிறு கட்சிகளுக்கும் இடையே, சிலவேளைகளில் சர்ச்சைகள் உருவாவதுண்டு. இம்முறை, ஐக்கிய மக்கள் சக்திக்கும் அதனோடு இணைந்து போட்டியிட்ட சிறு மற்றும் சிறுபான்மைக் கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்ட சர்ச்சையும் அதுபோன்றதாகும்.

ஜனாதிபதித் தேர்தலில், 55 இலட்சம் வாக்குகளைப் பெற்ற சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, பொதுத் தேர்தலின் போது, சுமார் 27 இலட்சம் வாக்குகளையே பெற்றது. தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பங்களிப்பு இல்லாதிருப்பின், ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைமை படு மோசமானதாகவே இருந்திருக்கும். ஆயினும், அக்கட்சிக்கு கிடைத்த 7 தேசியபட்டியல் ஆசனங்களில் ஒன்றையேனும், சிறு மற்றும் சிறுபான்மைக் கட்சிகளுக்கு வழங்காது, சஜித் தமது கட்சி உறுப்பினர்களுக்கே அந்த 7 ஆசனங்களையும் வழங்கினார்.

முதலில், சிறுபான்மைக் கட்சிகள் தேசியபட்டியல் ஆசனங்களைக் கேட்டு சஜித்தை வற்புறுத்தின. ஆனால் அவர் இணங்கவில்லை. அப்போது, தேசிய பட்டியல் ஆசனங்கள் வழங்கப்படா விட்டால், தாம் நாடாளுமன்றத்தில் தனியான குழுவாக அமர்வோம் என தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் எச்சரித்தன. அப்போதும், சஜித் உடன்படவில்லை. இந்த நிலையில், அக்கட்சிகள் திடீரென தேசியபட்டியல் ஆசனங்களுக்கான தமது போராட்டத்தைக் கைவிட்டன.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், அதற்கான காரணத்தை இவ்வாறு விளக்கினார். “சிறுபான்மைத் தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள், சஜித் பிரேமதாஸவை சுவரில் சாய்த்து, பயமுறுத்தி காரியம் செய்து கொள்கிறார்கள் என்ற அபிப்பிராயத்தை, இந்நாட்டு சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்த அரசாங்கம் மற்றும் அரச தரப்பு தனியார் ஊடகங்கள் பெரும் முயற்சி எடுத்தன. இப்படிச் சொல்லியே, இந்த அரசாங்கக் கட்சி அணி, ரணில் விக்கிரமசிங்கவை அழித்தது. நாங்களே உருவாக்கிய ஐக்கிய மக்கள் சக்தி என்ற கூட்டணியை, நாமே சிதைக்கக் கூடாது என நாம் முடிவு செய்தோம். எமது நிலைப்பாட்டை, அனைத்துத் தமிழ் பேசும் மக்களும் இன்று புரிந்து கொண்டுள்ளார்கள் என நம்புகிறேன்”.

உண்மையும் தான். அதேவேளை இது, மிகவும் தந்திரோபாயம் நிறைந்த அறிக்கையும் தான். சஜித் அதனைப் புரிந்து கொண்டாரோ தெரியாது.
ஐக்கிய தேசிய கட்சி, இன்னமும் தமக்குக் கிடைத்த ஒரே ஆசனமான தேசியபட்டியல் ஆசனத்துக்கு, ஒருவரை நியமிக்க முடியாமல் தடுமாறுகிறது. அந்தளவுக்கு அதற்கான கிராக்கியும் போட்டியும் அதிகரித்திருக்கிறது போலும்.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், இம்முறை ஒரு தேசியபட்டியல் ஆசனம்தான் கிடைத்தது. அதற்கும், கூட்டமைப்பின் உறுப்புக் கட்சிகளிடையே போட்டி ஏற்பட்டாலும், கூட்டமைப்பின் தலைமை அவற்றைப் புறக்கணித்து, அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த தவராசா கலையரசனை நியமித்தது. அதனால், இப்போது கூட்டமைப்புக்குள்ளேயும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள்ளேயும் முரண்பாடுகள் தோன்றியிருப்பதாகக் கூறப்படுகிறது.

கலகொடஅத்தே ஞானசார மற்றும் அத்துரலியே ரத்தன ஆகிய தேரர்கள் தலைமையில் உருவான எமது மக்கள் சக்தி என்ற கட்சியும், இம்முறைத் தேர்தலில் போட்டியிட்டு, ஒரு தேசியபட்டியல் ஆசனத்தை மட்டும் பெற்றது. அந்த ஆசனத்துக்காக, அந்தக் கட்சிக்குள் இப்போது பெரும் யுத்தமே நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

கட்சியின் செயலாளரான வேதினிகம விமலதிஸ்ஸ என்ற தேரர், அந்த ஆசனத்துக்கு தமது பெயரை முன்மொழிந்து, தேர்தல் ஆணையகத்துக்கு அறிவித்துவிட்டுத் தலைமறைவாகியுள்ளார். அவரது சகாவான மற்றொரு தேரர், காயங்களுடன் ஊடகங்கள் முன் தோன்றி, தாம் கடத்தப்பட்டுத் தாக்கப்பட்டதாகக் கூறினார். ஞானசார தேரர், அதனை மறுத்தார். இப்போது, பொலிஸாரால் வாக்குமூலம் ஒன்றைப் பெறுவதற்காக, ரத்தன தேரரைக் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறது.

கடந்த காலத்தில், ரத்தன தேரர் சகல கட்சிகளாலும் புறக்கணிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், தமக்காக அரசியல் கிராக்கியை ஏற்படுத்திக் கொள்ளவே அவர் கடந்த காலத்தில் மிக மோசமாக இனவாதத்தைத் தூண்டினார். முஸ்லிம் ஆளுநர்கள் மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இராஜினாமா செய்ய வேண்டும் என, தலதா மாளிகையின் முன் உண்ணாவிரதம் இருந்தார். டொக்டர் ஷாபி ஷிஹாப்தீனை விரட்டி விரட்டி, சிங்கள மக்கள் மத்தியில் குரோதத்தை வளர்த்தார்.

இந்தச் சம்பவங்கள், அரசியல்வாதிகளுக்கு எதிர்க்கட்சியிலேனும் ஒரு நாடாளுமன்ற அல்லது மாகாண சபை ஆசனம் எவ்வளவு பெறுமதியானது என்பதையே காட்டுகின்றன. மக்களுக்குச் சேவை செய்யத்தான் அவர்கள் அதனை நாடுகிறார்கள் என்றால், கோடிக் கணக்கில் சொந்தப் பணத்தைச் செலவழித்து, ஆள்களைக் கொலை செய்து, கடத்தி, தாக்கி வேறு பல சதிகளில் ஈடுபடத் தேவையில்லை. நாடாளுமன்றத்துக்கு ஆரம்பத்தில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் இருக்கிறார்கள். நாடாளுமன்றத்துக்கு வரும் முன், சில அரசியல்வாதிகள் ஏனைய அரசியல்வாதிகளின் சாரதிகளாக இருந்தனர். இன்று, அவர்கள் அனைவரும் கோடீஷ்வரர்கள். அரசியலைப் புரிந்துகொள்ள, இந்தச் சண்டைகளே போதுமானதாகும்.