மண்டைதீவு படுகொலைகளின் 36ஆவது நினைவு தினம் இன்று.

அதிகாலை 4 மணியிருக்கும். திடீரென அந்த அமைதியைக் கிழித்துக்கொண்டு உலங்கு வானூர்திகள் மண்டைதீவு வான்பரப்பை வட்டமிடத்தொடங்கின. நித்திரை கலைந்த மக்கள் அடிக்கடி நடக்கும் நிகழ்வுதானே என்று நடக்கப்போகும் பயங்கரம் புரியாமல் மீண்டும் போர்வைக்குள் முடங்கியவேளை…..

அந்தோ பயங்கரம்! வானில் வட்டமிட்ட உலங்கு வானூர்திகளிலிருந்து தொடர்ச்சியான துப்பாக்கி சூடுகள் நடத்தப்பட்டன. அதுவும் குறிப்பிட்ட ஒரு திசையை நோக்கியே ஒலித்தது.

மக்கள் நித்திரை கலைந்து ஏதோ விபரீதம் நடக்கின்றது என்று மட்டும் புரிந்து குழம்பிப்போயினர். மண்டைதீவு சித்திவிநாயகர் ஆலய முன்றல் கூரிருள் அகலாத அந்தப்பொழுதிலும் மக்களால் நிறையத்தொடங்கியது.
உறவுகள் ஒருவரை ஒருவர் பதற்றத்துடன் வினவியபடி இருந்தனர்.

யாருக்கும் பதில் தெரியவில்லை. “ஜெற்றியடிப்பக்கம் தான் அடிக்கிறாங்கள்” சிலர் கூறிய தகவல் இது மட்டும்தான்.

ஆறு மணியிருக்கும். அதே திசையில் நிலப்பகுதியிலிருந்தும் விட்டு விட்டு சில வெடியோசைகள் கேட்டன.”பெடியள் வந்திற்றாங்கள் போல” இது மக்கள் சிலர் வாயிலிருந்து வந்த வார்த்தைகள். வானில் வட்டமிட்ட வல்லூறுகள் சில நிமிடங்களின் பின் எமது வான் பரப்பை விட்டு
அகன்றுவிட்டன. அதைத்தொடர்ந்து எந்த சத்தங்களுமின்றி மயான அமைதி நிலவியது. சிறிது நேரத்தின் பின் மக்கள் சிறிதுசிறிதாக தத்தம் வீடுகளை நோக்கி நகரத்தொடங்கினர்.

அந்த சமயம் என் பெயரைச் சொல்லி அழைத்தபடி எனது பால்ய நண்பர்களில் ஒருவன் என்னருகில் வந்தான். இருவரும் ஒருவரை ஒருவர் விசாரித்துக்கொண்டோம். ஜெற்றியடிப்பக்கம் போய்ப்பார்ப்போமா? என்று யோசித்தோம். செல்வது என்று முடிவெடுத்ததுடன், வீட்டில் தெரிந்தால் பேச்சுடன் அடி விழும் என்பதால் யாருக்கும் தெரியாமல் செல்வது என்றும் தீர்மானித்தோம்.

கிராஞ்சிக்குள பாதையால் சென்று பண்டகசாலை வழியாக ஈச்சந்தரவையை அடைந்தோம். பெரியவர்கள் சிலர் பதற்றத்துடன் வேளாங்கண்ணி மாதா கோவில் இருந்த திசைநோக்கி போவதும் வருவதுமாய் இருந்தார்கள். நாங்கள் செல்வதைக்கண்ட பெரியவர் ஒருவர் நீங்கள் சின்னப்பிள்ளைகள் அங்கு செல்லக்கூடாது என்று கண்டிப்புடன் கூறிவிட்டார்.

எமக்கு மிகுந்த ஏமாற்றமாகப் போய்விட்டது. ஆனாலும் ஏமாற்றத்தையும் விட எமது ஆர்வக்கோளாறு அதிகமாயிருந்தபடியால் சிறிது திரும்பி செல்வது போல் சென்று மீண்டும் கடற்கரையை அண்மித்த பற்றைப் பகுதியூடாக சென்றோம். எமக்கு அந்த பகுதியிலுள்ள சந்து பொந்துகள் எல்லாம் நன்கு பரீட்ச்சயம் என்பதால் பிரச்சனை இருக்கவில்லை.

வேளாங்கண்ணி மாதா கோவில் முன்றலிலிருந்து சற்றுத் தொலைவில் நின்று அவதானித்த வேளையில் நாம் அதிர்ச்சியில் உறைந்து போனோம். கற்பனையிலும் நினைத்துப் பார்க்கமுடியாத கொடிய காட்சிகள் அவை.
ஜெற்றியடியின் கரையிலும், சிறிது தொலைவில் நின்ற படகுகளிற்குள்ளும், முழங்கால் மட்டுத்தண்ணீரில் மிதந்தபடியும் சில உடல்கள் தென்பட்டன. பெரியவர்கள் அழுது புலம்பியபடி உடல்களைக் கரையில் சேர்த்துக்கொண்டிருந்தனர். தூர நின்று அவதானித்தாலும் சில உடல்களில் கூரான ஆயுதங்களினால் தாக்கப்பட்டுள்ளதும் புரிந்தது.

அத்துடன் அவர்கள் அதிகாலை வேளையில் கரைவலை இழுக்க வந்த பாசையூர்,குருநகர் அப்பாவி மீனவர்கள் என்பதும் புரிந்து போனது.இவற்றையெல்லாம் பார்த்த எமது கை, கால்கள் எல்லாம் பதறின.

வயிற்றைக்குமட்டிக் கொண்டு வந்தது. நண்பனும் நானும் வீடு நோக்கி ஓடத்தொடங்கினோம். இக்காட்சிகள் பல காலமாக எம் கண்ணைவிட்டும், நெஞ்சசைவிட்டும் அகல மறுத்தன.

அந்த காலை வேளையில் சூரியன் அடி வானிலிருந்து செந்நிறமாய் உதயமாகிக் கொண்டிருந்தான். ஆனால் அன்று பல குடும்பங்களில் அஸ்தமனம் நிகழ்ந்துவிட்டிருந்தது. மண்டைதீவு மண் அப்பாவி மக்களின் செங்குருதியில் சிவந்து போனது.

குறிப்பு: இச்சம்பவத்தில் 31 குருநகர், பாசையூர் மக்களுடன் 3 மண்டைதீவு மக்களும் அன்று தமது இன்னுயிரை நீத்திருந்தனர்.
தலைத்தீவான்.