மன்பிரட் மக்ஸ்-நீவ்: வெறுங்கால் பொருளாதாரம்

இந்த உண்மையை விளங்காமல், செல்வத்தைப் பெருக்குவது தான், வளமான வாழ்க்கைக்கு வழி என்று நம்பி, மக்கள் அதன் பின்னே ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

இன்று பேசப்படுகின்ற பொருளாதாரக் கோட்பாடுகள், அடிப்படையில் இலாபம் சார்ந்தவை; மனித நலன் சாராதவை. பணத்தையும் சொத்துகளையும் மூல நோக்காகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட இந்தப் பொருளாதார கோட்பாடுகளும் விதிகளும் காட்டுருக்களும், மகிழ்ச்சியையும் நிம்மதியையும், பணமே தரும் என்ற பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்கின்றன.

ஆனால், பணம் ஒருபோதும் நிம்மதியையும் அமைதியையும் வளமான வாழ்வையும் நமக்கு உறுதிப்படுத்தாது என்ற உண்மையை, நாம் அறிவோம்.

ஆனாலும், பணத்தை நோக்கித் தொடர்ந்து ஓடுகின்றோம். இது எதைக் காட்டி நிற்கின்றது, இதை எவ்வாறு விளங்கிக் கொள்வது?

மேற்சொன்ன கேள்விகளுக்கு, முக்கியமான பங்களிப்பு செய்தவர், தனது 86ஆவது வயதில், கடந்த வாரம் காலமாகிய சிலி நாட்டின் பொருளாதார பேராசிரியராக விளங்கிய மன்ஸ்பிரட் மக்ஸ்-நீவ் (Manfred Max-Neef). தனது, நீண்ட கள அனுபவங்களினூடாக மாற்றுப் பொருளாதாரத்தின் அவசியத்தையும் பொருளாதாரம் என்பதன் பெயரால், எமக்குக் கற்பிக்கப்படும் கோட்பாடுகளினதும் தத்துவங்களினதும் அபத்தத்தை ஆதாரங்களோடும் நிறுவியிருந்தார்.

1983ஆம் ஆண்டு, ‘மாற்று நோபல் பரிசு’ என அறியப்பட்ட, வாழ்வாதார உரிமைகளுக்காக விருதை (Right Livelihood Award) இவர் பெற்றார். இவர் எழுதிய, ‘வெளியில் இருந்து உள்நோக்கிப் பார்த்தல்: வெறுங்கால் பொருளாதாரத்தின் அனுபவங்கள்’ (From the Outside Looking In: Experiences in Barefoot Economics) நன்கறியப்பட்ட நூலாகும்.

இந்த நூலில், பொருளாதாரக் கோட்பாடுகள் எவ்வளவு தவறானவை என்பதை, பின்வருமாறு விளக்கியுள்ளார் மக்ஸ்-நீவ்.

‘வறுமையில் அளவு கடந்த படைப்பாற்றல் எப்போதும் இருக்கும். நீங்கள் தப்பிப் பிழைக்க வேண்டுமாயின், நீங்கள் முட்டாள்களாக இருக்க முடியாது. ஒவ்வொரு நிமிடமும், அடுத்தது என்ன என்பது பற்றிச் சிந்தித்தபடியே இருக்க வேண்டும். அடுத்தவேளை உணவை, எங்கே, எவ்வாறு, எப்படி, எவரிடமிருந்து பெற்றுக் கொள்வது என்ற வினா, நிலைத்தபடியே இருக்கும். இந்தக் கேள்விகள், வறியோரைத் தொடர்ந்தபடியே இருக்கும். அவர்களும் தங்கள் வாழ்வுக்கான போராட்டத்தைப் போராடுவதற்கு, புதிய வழிகளைக் கண்டுபிடிப்பர். அவர்களின் படைப்பாற்றல் என்பது, நிலையானதும் தொடர்ச்சியானதுமாகும். உங்களுக்கு என்ன தெரியும், உங்களுடைய தொடர்புகள் என்ன, வலைப்பின்னல்கள் என்ன, அவற்றுடன் எப்படி ஒத்துழைப்பது? பரஸ்பர உதவிகள் செய்வதும் பெறுவதும் போன்ற அனைத்தும், வறுமை நிலவுகின்ற சமூகங்களில் இருக்கும். இந்தச் சமூகங்கள், எங்களது வழமையான சமூகங்களில் இருந்து வேறுபட்டவை. எங்களது சமூகங்கள், தனிநபர் மய்ய, பேராசை மய்ய, தன்முனைப்பு மய்யச் சமூகங்கள்; எமது பொருளாதாரக் கோட்பாடுகள், மேற்சொன்ன வறுமை நிலையிலுள்ள சமூகங்களை, மய்யப்படுத்தியவை அல்ல. எமது சமூகங்கள், எமது தனிச்சொத்தையும் இலாபத்தையும் சுயநலத்தையும் மய்யப்படுத்தியவை’.

மாற்றுப் பொருளாதார முறையின் தேவை

மக்ஸ்-நீவ், ‘வெறுங்கால் பொருளாதாரம்’ பற்றிக் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: ‘வெறுங்கால் பொருளாதாரம் என்பது ஓர் உருவகம். அது, எனது அனுபவத்தின் வழி பிறந்தது. நான், இலத்தீன் அமெரிக்காவிலுள்ள மிக வறுமைப்பட்ட கிராமங்களில், காடுகளில், நகர்ப்புறங்களில் பத்து ஆண்டுகள் வசித்தேன். அதன் தொடக்க காலத்தில் ஒருநாள், பெரு நாட்டில், பழங்குடிகள் வாழுகிற கிராமத்தில் நின்றிருந்தேன். அது ஒரு மோசமான நாள். நாள் முழுவதும் மழை பெய்தபடியே இருந்தது. நான், ஒரு வீட்டுக்கூரையின் கீழ் நின்றிருந்தேன். எனக்கு எதிரே, இன்னொரு மனிதன் சகதியில் நின்றிருந்தான். நாங்கள், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். அந்த மனிதன், குள்ளமான மெலிந்த உடலமைப்பைக் கொண்டிருந்தான். அவன், பசியால் பலவீனமா இருந்ததுடன், வேலையில்லாமலும் இருந்தான். அவனுக்கு, ஐந்து குழந்தைகள், மனைவி மற்றும் அம்மா ஆகியோரைப் பராமரிக்க வேண்டிய கடப்பாடுடைய ஒருவன்; நானோ, அமெரிக்காவின் ‘பெர்க்லீ’ பல்கலைக்கழகத்தில் பயின்ற பயிற்றுவிக்கின்ற ஒரு பொருளியலாளன். நாங்கள், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட போதும், அந்த மனிதனுக்குச் சொல்லுவதற்கு, என்னிடம் எதுவும் இருக்கவில்லை என்பது, எனக்கு உறைத்தது. ஒரு பொருளியலாளனாக, எனது மொழி அத்தருணத்தில் பயனற்றது என்பதை உணர்ந்தேன். உங்கள் நாட்டின் பொருளாதாரம், ஐந்து சதவீதத்தால் வளர்ந்துள்ளது என்று, அவனுக்குச் சொல்லுவதில், அர்த்தம் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அந்த வளர்ச்சியைக் கண்டு, ஆறுதலடையச் சொல்வதிலும் பயனில்லை; எனக்கு எல்லாம் அபத்தமாக பட்டது’.
‘அந்த வறுமைப்பட்ட சூழலில் வாழும் மக்களுக்கான வார்த்தைகள், எங்களிடம் இருக்கவில்லை. பொருளாதார மேதைகள், பொருளியலாளர்கள் யாருமே, இந்த ஏழைஎளிய மக்களை, ஒரு பொருட்டாகக் கொள்வதில்லை. ஏனெனில், அவர்களை, இவர்களால் விளங்கிக் கொள்ள முடியாது. பொருளியலாளர்கள் எப்போதும், சகதியில் இறங்குவதில்லை. வறுமை பற்றி, அவர்கள், தங்களது குளிரூட்டப்பட்ட அலுவலகங்களில் இருந்தபடியே ஆராய்கிறார்கள்; அவர்களிடம் தரவுகள், புள்ளிவிவரங்கள் உள்ளன. அவர்கள் புதிய மாதிரிகளையும் கொள்கைகளையும் உருவாக்குகிறார்கள். வறுமை பற்றி, தங்களுக்கு எல்லாமே தெரியும் என்று, அவர்கள் முழுமையாக நம்புகிறார்கள். ஆனால், அவர்கள் வறுமையை அறியவில்லை. இதுதான், இன்றைய பெரிய பிரச்சினை; இன்று வரையும் வறுமை, உலகெங்கும் வியாபித்து உள்ளதென்றால், அதற்கான காரணமும் இதுதான்’.

‘அறிவுக்கும் விளங்கிக் கொள்வதற்கும் இடையில் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. மனித குல வரலாற்றில், கடந்த 100 ஆண்டுகளில், ஏராளமான அறிவை நாம் சேகரித்துள்ளோம். ஆனால், இப்போது நாம் எங்கே நிற்கிறோம் என்று சிந்தித்தால், அந்த அறிவை வைத்து, நாம் என்ன செய்தோம்? என்ற கேள்வி, மேல் எழுந்து நிற்கும். நாம், அறிவைச் சேர்த்து வைத்து இருக்கிறோமே தவிர, நாம் அறிவை விளங்கிக் கொள்ளவில்லை. உதாரணமாக, காதலைப் பற்றி ஆய்வு செய்து, பல்வேறு அடிப்படைகளில், சமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக, உடலியல் ரீதியாக, தத்துவார்த்த ரீதியாக, உளவியல் ரீதியாக எனப் பலவகைகளில், காதல் தொடர்பான அறிவைப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், நீங்கள் காதல் வயப்பட்டால் தான், உங்களால் காதலை விளங்கிக் கொள்ள முடியும். வறுமையும் இவ்வாறு தான்; நீங்கள், வறுமை பற்றிய அறிவைச் சேகரிக்க முடியுமே தவிர, அதை உணரமுடியாது. அதை உணர்ந்தால்தான், அதற்கான தீர்வுகளை வழங்க முடியும். இது, இன்று நாம் எதிர் நோக்குகிற எல்லாப் பிரச்சினைகளுக்கும் பொருந்தும்’.

சாதாரண மக்களுக்கான, உழைக்கும் மக்களுக்கான பொருளாதாரம் என்பது, என்ன என்ற வினா, ஆழமான ஆய்வை வேண்டி நிற்கின்றது.

வளமான வாழ்க்கை என்பதன் அளவுகோல், பொருளாதாரத்தை மய்யமாகக் கொண்டதல்ல என்று, மக்ஸ்-நீவ் வாதிடுகிறார். ‘எல்லாச் சமூகங்களுக்கும், பொருளாதார வளர்ச்சிக்கான ஒரு காலகட்டம் இருக்கும். அக்காலகட்டத்தில், வாழ்க்கைத் தரம் மேம்படும். ஆனால், அவ்வளர்ச்சிக்கும் ஓர் எல்லை உண்டு. அந்த எல்லையை எட்டிய பின்னரான வளர்ச்சி, வாழ்க்கைத் தரத்தைக் குறைக்கும். பொருளாதார வளர்ச்சி, அதிகரித்துக்கொண்டே போக, வாழ்க்கைத் தரம் குறைந்து கொண்டு போகும். இன்று, உலகின் பல நாடுகளில் இது சாத்தியமாகியுள்ளது. எனவே, நிரந்தரப் பொருளாதார வளர்ச்சி என்பது, வளமான வாழ்க்கையின் அளவுகோலன்று’.

இதன் பின்புலத்திலேயே, மனிதகுல அபிவிருத்தி என்ற கோட்பாட்டை, மக்ஸ்-நீவ் முன்மொழிகிறார். அதன்படி, இன்று மனிதகுலம் வேண்டிநிற்பது, பொருளாதார அபிவிருத்தியை அல்ல; மாறாக, மனித குல அபிவிருத்தியையே ஆகும். ஏனெனில், வளமான வாழ்வு என்பது, மனிதனுக்குத் தேவையானதற்கும் ஆசைப்படுவதற்கும் இடையிலான போராட்டமாகும்.

நாம், எமது பிள்ளைகளுக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்க விரும்பினால், இது பற்றிக் கொஞ்சம் தேடிப் படிப்பது பயனுள்ளது. இதற்காக, மக்ஸ்-நீவ்வின் Human Scale Development: conception, application and further reflections என்ற புத்தகத்தைப் பரிந்துரைக்கிறேன்.

பிள்ளைகளுக்குச் சேர்த்து வைக்கிற சொத்தும் வங்கிகளில் குவித்து வைக்கப்படுகிற பணமும் அவர்களுக்கான நிம்மதியையும் வளமான வாழ்க்கையையும் எப்போதும் உறுதிப்படுத்தப் போவதில்லை என்ற உண்மையை, நாம் விளங்க வேண்டும். பிள்ளைகளுக்கான முதலீடு என்பது, வங்கிகளிலோ, பொன்னிலோ, சொத்துகளிலோ இல்லை என்பதை, மக்ஸ்-நீவ் மிகவும் அழகாக இப்புத்தகத்தில் விளக்குகிறார்.

ஐந்து அனுமானங்களும் ஓர் அடிப்படைக் கோட்பாடும்

மக்ஸ்-நீவ், தனது ஆய்வுகளை, ‘ஐந்து அனுமானங்களும் ஓர் அடிப்படைக் கோட்பாடும்’ என்று சுருக்கி, இலகுபடுத்தியுள்ளார்.

  1. பொருளாதாரம் என்பது, மக்களுக்குச் சேவை செய்வதற்கானது; மக்கள், பொருளாதாரத்துக்குச் சேவை செய்வதில்லை.
  2. அபிவிருத்தி என்பது, மக்கள் தொடர்பானது; பொருள்கள் தொடர்பானது அல்ல.
  3. வளர்ச்சி என்பது, அபிவிருத்தி அல்ல; அபிவிருத்திக்கு, வளர்ச்சி கட்டாயமானதுமல்ல.
  4. முழுமையான சுற்றுச்சூழல் உதவியின்றி, பொருளாதாரம் சாத்தியமல்ல.
  5. பொருளாதாரம் என்பது, பெரிய அமைப்பின் (உயிர்க்கோளத்தின்) துணை அமைப்பே; எனவே, நிரந்தர வளர்ச்சி சாத்தியமற்றது.

இந்த ஐந்து அனுமானங்களின் அடிப்படையில், மக்ஸ்-நீவ் முன்மொழியும் அடிப்படையான தத்துவம் யாதெனில், புதிய பொருளாதாரத்தை நின்று நிலைக்கச் செய்ய வேண்டுமாயின், அது எக்காரணம் கொண்டும், பொருளாதார நலன்கள் சார்ந்ததாக இருக்கக் கூடாது. பொருளாதார நலன்கள் எப்போதும், மரியாதையான வாழ்வுக்கு மேம்பட்டதாக இருக்க முடியாது. இது உறுதிசெய்யப்படுமானால், வளமானதும் தரமானதுமான வாழ்வை, எல்லோருக்கும் சாத்தியமாக்கவியலும்.

மன்ஸ்பிரட் மக்ஸ்-நீவ், இன்று எம்மத்தியில் இல்லை. அவரது கருத்துகள் இன்றும் உயிர்ப்புடன் இருக்கின்றன. பொருளாதாரத்தை நாம் விளங்கிக் கொண்டுள்ள முறை, சரியா என்ற வினாவைக் கேட்டாக வேண்டும்.

நுகர்வும் நுகர்வுக்கான உழைப்பும் என்ற சுழற்சி, ஏன் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் பயனடைவது யார் என்ற கேள்வியும், இதனுடன் இணைகிறது. அபிவிருத்தி என்றால் என்ன என்று சிந்திக்கத் தொடங்குவது, நல்ல தொடக்கம். வெறுங்காலுடன் நடந்து போகும் மனிதனை, உள்வாங்காத மனித குல அபிவிருத்தி என்ற பொருளாதாரக் கொள்கைகளுடன் நாம் உடன்படுகிறோமா? கட்டற்ற நுகர்வையும் எல்லையற்ற சுரண்டலையும் கொண்ட ஓர் அமைப்பில், எமது பிள்ளைகளை உலாவ விடப்போகிறோமா என்ற வினாவை, எம்மை நாமே கேட்டாக வேண்டும்.