மழை வெள்ளத்தில்….! மக்கள் வெள்ளம்……..!!

(சாகரன்)
(முதற்கண் சென்னையின் வெள்ள அவலங்களில் சிக்கித் தவிக்கும் சகல மக்களின் துயரங்களுடனும் நானும் இணைந்து கொள்கின்றேன். இவர்களுக்கான நிவாரணப் பணிகளில் உள சுத்தியுடன் ஈடுபடும் அனைவரின் அர்பணிப்பு உணர்வு, மனித நேயத்திற்கு தலை வணங்குகின்றேன். ஆனாலும் என் மன உணர்வுகளை இவ்விடத்தில் பதிவிடவே விரும்புகின்றேன்…….!)


கடந்த ஒருவாரமாக தமிழர்கள் பலராலும் விரும்பப்படும் சென்னை மாநகரம் மழை வெள்ளத்தால் அல்லோலகல்லப்படுகின்றது. பல சமயங்களில் சென்னை மழை வேண்டி, தண்ணீர் வேண்டி தத்தளித்ததே வரலாறு. நிலத்தடி நீரை சேமிக்கும் எந்வித எற்பாடுகளும் இல்லாத கட்டமைப்பு இதற்கு முக்கிய காரணியாகும். பலவேளைகளில் பெரு மழை பெய்த மறு(கணமே)தினமே கிணற்றிற்குள் காய்ந்த மண்ணை அள்ளும் நிலமைகளை காண முடியும். இவையெல்லாம் நான் அனுபவத்தில் கண்டது. காட்டுவெயில், கத்திரி வெயிலில் என தாங்கமுடியாத வெப்பம் ஏற்படும் போதெல்லாம் மழை கிடைக்காதா என்று ஏங்கும் போது அனுபவப்பட்ட நண்பர்கள் இந்த காட்டு வெயில் பரவாய் இல்லை சிறிய மழையே வீதிகளையும், தண்ணீர் பாய எத்தனிக்கும் கால்வாய்களையும் நாறடித்துவிடும். கூடவே வேக வாகனங்கள் பொது மக்களின் மேல் சேற்றையும் கழிவு தண்ணீரையும் வாரியடித்துவிட்டுச் செல்லும் அவலங்களே இதற்குக் காரணம் என்று கூறுவர். இதனை சென்னை நண்பர்கள் என்னிடம் கூறியதற்கு அப்பால் நேரில் அனுபவித்த அனுபவங்கள் அதிகம்.

ஆனாலும் சென்னை எனது கனவு நகரங்களின் ஒன்று அந்த மக்கள்…அவர்களின் பேச்சுக்கள்….. அந்த கடைகள்….. இதில் வண்ண வண்ணமாய் தொங்கும் சேலைகள்….. கடைகளுக்குள் உற்சாகத்துடன் புரண்டோடும் பாவாடை…. தாவணிகள்….. மடிச்சார் புடவைகள்…. தற்காலத்து ஜீன்ஸ்… ரீ சேட்டுக்கள்…. என்ற தேவதைகளின் கூட்டங்களும் இவர்கள் பின்னால் இழுபடும் வேஷ்டிகளும் கழுசான்களும்…. சும்மா சொல்லக் கூடாது ஒரே திருவிழாக் கோலம்தான்… வீதியில் இறங்கினால் தலைக்கு வைக்கும் மல்லிகை மாலைகளும், குளிர்பானங்கள், தோசை, வடை, இட்லி வகையறாக்களும் கையை சுரண்டி பிச்சை கேட்கும் வறிய, தொழில் ரீதியான ‘பிச்சைக்காரர்’கள் ஆட்டோ, பஸ் என்ற வாகனங்களின் சத்த ஒலிகளும்…. சினிமா போஸ்ரல்கள், கடை விளம்பர போஸ்ரல்கள், அரசியல் ‘தலைவர்’களின் கட் அவுட்டுக்கள்…. போங்கள் ஒரே அமர்களமாக இருக்கும். உறங்காமல் ஓடிக் கொண்டிருக்கும் நகரம் சன நெரிசல், வெப்பத்தை தணிக்கும் குளிர் பானங்கள் ‘லசி’, சாத்துக்குடி எனப் பானங்களும் என்நேரமும் கிடைக்கும் மசால தோசை, பொங்கல்,பூரி,  காரக் குழம்புடன் கூடிய (மதிய) சாப்பாடு என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

மழை நீரைச் சேகரித்து இதனை தேவைப்படும் போது பாவிக்கும் பொறி முறையை யாரும் இதுவரை இங்கு பாரியளவில் செயற்படுத்தவில்லை. உலகத்திற்கே தொழில் நுட்பத்தை ஏற்றுமதி செய்யும்… சொல்லிக் கொடுக்கும் தேசம் என்று புகழ்பெற்ற இந்தியாவின் வளர்ச்சியடைந்த ஒரு நகரத்தின் நிலை இது. வீராரணம் என்றும், பாலாறு என்றும் கடல் நீரை நன்னீராக மாற்றுதல் என்றும் கூவத்தின் நாற்றத்தை நீக்கி அழகியல் பூங்காகவாகவும் நன்நீர் நிலையாக மாற்றுதல் என்று பகுத்தளிவாளர் கட்சிகள் சத்தியசாயிபாவை சந்தித்து விளம்பரப்படுத்தியதாகட்டும் என்று அவ்வப் போது அரசியல் கோஷங்களை எழுப்பினாலும் ஏதும் உருப்படியாக இதுவரை நடைபெறவில்லை என்பதே இங்கு கவனிக்கத்தக்கது.

காவிரி நீர்படுக்கையும் வைகை ஆறும் பாலாறும் மண் கொள்ளையர்களர் நாசப்படுதப்பட்டு ‘வட்டம்’ ‘மாவட்டம்’ என்று லாரி லாரியான கொள்ளைகள் நடைபெறும்போது இதனைத் தடுத்து நிறுத்தாது தேர்தலுக்கு பின்பு தாம் ஆட்சி அமைத்தால் தாமும் எவ்வளளை அள்ளலாம் என்பதே தமிகத்தின் அரசியல் தலைவர்களின் கனவுகளாக இருக்கின்றது. இவையாவற்றையும் தெரிந்திருந்த வாக்காளர்களும் சரியான தலமைகளை உருவாக்குவதற்குப் பதிலாக இனாம்களை தேடி அலையும் அவலங்களின் வெளிப்பாடே இந்த மக்கள் வெள்ளத்தை மூழ்;கடித்த மழை வெள்ளம் ஆகும். நீர்கள் தேங்கிநிற்குத் தேவையான குளங்கள் வாவிகள்? தற்போது கட்டங்களால் நிரப்பப்பட்டுவிட்டன. கட்டங்களல் நிரப்பப்படும்போது மேலதிக நீர் வழிந்தோடுவதற்குரிய எந்த அமைப்புக்களும் உருவாக்கப்படுவதில்லை. உருவாக்கிய காய்வாய்களும் குப்பைகளினால் மூடி மறைக்கப்படும் அவலம் இவற்றை மழைக்காலத்திற்கு முன்னு துப்பரவு செய்து அடைப்பெடுத்தல் என்பது நடைபெறாத காரியங்களில் ஒன்று.

யாருக்கும் சமூக அக்கறை இல்லை. சமூக அக்கறை உள்ளவன் ‘பிழைக்கத் தெரியாதவன்’ என்ற அடைமொழிக்குள் வறையறுக்கப்படும் கையறு நிலை. நகரத்தில் இருக்கும் மரங்கள் ஒன்றே நம்பிக்கை தரும் விடயம். இதுவும் எத்தனை நாளுக்கு என்ற பதட்டம் எம்மிடம் இல்லாமல் இல்லை. இவற்றின் திரட்சியே இந்த தூங்கா நகரம் இன்று மழை வெள்ளத்தினால் தூங்கா மக்கள் வெள்ள நகரமாக ஈரத்தில் நனைந்து, குளிரில் அமிழ்ந்து, பசியில் வாடி அக்கிரகாரத்துக்காரர், மசூதியிலும்….. சேரிகள், மாடியிலும்… மாடு அறுத்தவன் கையால் தீர்த்தமும்….. தீட்டுப்பட்டுவிடும் என்று விலக்கிவைத்தவர்களால் தோளில் சுமந்து காப்பாற்றப்பட்டும்… சாதி சமயம் குலம் கோத்திரம் ஏழை பணக்காரன் தமிழன் தெலுங்கன் என்று பிரிந்திராமல் எல்லோரையும் தற்காலிகமாகவேனும் இணைத்திருக்கின்றது.
(இன்னும் வரும்…….மழை வெள்ளம்……..?)