மெத்தப் படித்தவர்கள் தலைமையில்! வடக்கு மாகாண சபையின் நிலை? [நீட்சி 3]

மன்னார் மற்றும் முல்லைத்தீவில் டெலோ தேர்தல் விண்ணப்பம் சமர்ப்பிக்க தவறியதால், அவர்கள் உள்வாங்கப்படாமல் வடக்கின் உறுப்பினர்களை ஏனைய இரண்டு இயக்கங்களும் பகிர்ந்தன. இருந்தும் நாபா டெலோ உள்வாங்கப்பட வேண்டும் என்ற விருப்பில், ஈ பி ஆர் எல் எப் க்கு கிடைத்த ஆசனங்களை அவர்களுடன் பகிரவிரும்பினார். தாஜ் சமுத்திரா ஹோட்டலில் டெலோ சட்டத்தரணி சிறிகாந்தா தலைமையில் கலந்துரையாடிய போது, அவரின் குறி பேரவை தலைவர் பதவியாகவே இருந்தது. ஐந்து உறுப்பினர்கள் மட்டும் தர முடியும் என்ற முடிவை ஏற்காமல் அவர்கள் வெளியேறினர். ஆக வடக்கு கிழக்கு மாகாண பேரவைதலைவர் பதவி டெலோ பேச்சாளர், ஆலோசகர் சட்டத்தரணி சிரிகாந்தாவால் விரும்பபட்டு ஆனால் மறுக்கப்பட்டு, இளங்கோ என்கின்ற ரவீந்திரனுக்கு வழங்கப்பட்டு பின் அவரால் ஏற்க தயக்கம் காட்டப்பட்டதால் என் வசம் வந்தது. அது எனக்கு விரும்பி வழங்கப்பட்டதல்ல.

நான் மாகாண சபைக்குள் வருவதை விரும்பாத ஒருவர் இருந்தார். யாழில் தேர்தல் விண்ணப்பம் பூர்த்தி செய்து கையொப்பமிட்டு பாரப்படுத்தும் நிகழ்விற்கு பலரும் கொழும்பில் இருந்து தான் செல்லவேண்டிய நிலை. தகவல் அறிந்து அப்போது ஈ பி ஆர் எல் எப் காரியாலயம் இருந்த அரச இலிகிதர் சேவை கட்டிடம் சென்றவேளை, என் வரவை விரும்பாதவர் சொன்ன செய்தி, நாங்கள் ஹெலிஹப்டரில் செல்கிறோம் உங்களுக்கு அதில் இடம் இல்லை.  கபாலி ஸ்டையிலில் மகிழ்ச்சி என கூற நான் என்ன ரஜனிகாந்தா?. யாருக்காக அழுதான் நாகேஷ் போல் என் கூடு திரும்பினேன். அங்கு விதி என் வீட்டு வாசலில் காத்து நின்றது. பம்பலபிட்டி பொலிஸ் உதவி இன்ஸ்பெக்டர் திரு பாலசிங்கம் என் தந்தையின் மரண செய்தியுடன் எனக்காக காத்திருந்தார். அதற்கு இரண்டு கிழமைக்கு முன்பு தான் என் இளைய சகோதரி மரண செய்தியை அவரே கொண்டு வந்திருந்தார். அன்று அவசர செய்தி பரிமாற்றம் பொலிஸ் நிலையம் ஊடாகவே நடந்தது.

அடுத்தடுத்து நடந்த இழப்புகள் இனி எது நடந்தாலும் பரவாயில்லை என்ற மனநிலையை தந்த நேரம். கிளிநொச்சியில் என் தந்தையின் சிதைக்கு தீ மூட்டி, மறுநாள் காடாத்து முடித்து வீடு வந்தவனை வரவேற்றது பத்திரிகை தலைப்பு செய்தி. நாளை வடக்கு கிழக்கு மாகாண சபை தேர்தல் விண்ணப்ப நாள். வலிந்து விதி என்னை அழைத்த நேரம் அது என விளங்கிக்கொண்டேன். எவரிடமும் எதுவும் கூறாமல் அதிகாலை எழுந்து 7 மணி பஸ்ஸில் அமர்ந்து யாழ் பயணமானேன். காலை 9 மணி வெறிச்சோடி கிடந்தது யாழ் நகர். எங்கும் நீக்கமற நிறைந்து நின்றது இந்திய அமைதிப்படை. அப்பாவி போல சக பயணியிடம் என்ன பிரச்சனை என கேட்டேன். இன்று தேர்தல் தினம் அதனால் யாழ் மத்திய கல்லூரி மற்றும் யாழ் செயலகம் பக்கம் போவதை தவிர்ப்பது நலம் என்றார். எனக்கு மத்திய கல்லூரி பக்கம் போவது தான் நலம் என்பது புரிந்ததால் மணிக்கூட்டு கோபுரம் வரை சென்றவனை தடுத்தது இந்திய அமைதிப்படை.

ஒரு இந்திய அமைதிப்படை படை சிப்பாய் ஹிந்தியில் ஏதோ கத்தி கூடவே ஆங்கிலத்தில் டவுன் டவுன் என்றான். ஆங்கிலம் புரிந்ததால் நடுத்தெருவில் ஏற்கனவே டவுன் ஆகிய ஏனையவர்களுடன் நாய்களின் எச்ச மணத்தினை நுகர்ந்த படி அமர்ந்திருந்தேன். நேரம் காலை பத்து மணி. அமைதிப்படை அதிகாரி ஒருவர் தனது அடிமைகளை பார்வையிடும் தோரணணையில் வரும் அரசன் போல செருக்கு நடையில் வந்தார். திடீரென வந்த உத்வேகத்தில் எழுந்து ஐ ஆம் எ கண்டிடேட் பிளீஸ் ஹெல்ப் மீ என கத்தினேன். அடிமை பேசிய ஆங்கிலம் அவருக்கு விளங்கியதால் என்னை அருகில் வருமாறு அழைத்தார். நான் யார்? எங்கிருந்து வருகிறேன்? எந்த இயக்கம்? என்ற தகவல் அறிந்த பின் அவர் உதிர்த்த வார்த்தை ஓ யூ ஸ்பொட்டேர்ஸ் என்பதே. அப்பாவி மக்களை இந்திய அமைதிப்படிடை துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் அவர்களுள் கலந்திருந்த புலிகளை, அடையாளம் காட்டும் புண்ணிய செயலை செய்தவர்களுக்கு, இந்திய அமைதிப்படை அதிகாரிகள் கொடுத்த அடையாள பெயர் தான் ஸ்பொட்டேர்ஸ்.

என் பின்புலம் தெரிந்த பின் என்னை மத்திய கல்லூரி மண்டபம் செல்ல அனுமதித்த அதிகாரிக்கு நன்றி கூறி சென்ற என்னை பார்த்த உடன் முகம் கோணினார், என்னை ஹெலியில் இடம் இல்லை என திருப்பி அனுப்பியவர். வேண்டா வெறுப்பாக என்பக்கம் கையொப்பம் இடும் பத்திரம் வந்ததால் நானும் போட்டியின்றி தெரிவாகி பின் விதி வசத்தால் பேரவை தலைவர் ஆனேன்.  தடைகள் பல தாண்டி வந்த பதவியில் என்னை நான் நிலை நிறுத்த வேண்டிய சவால் என் முன்னால். இங்கு நான் கற்ற கல்லூரி தந்த அனுபவ அறிவு பெரிதும் உதவியது. சிறந்த பேச்சாளர் போட்டியா? நாடக விழாவா? இலக்கிய விழாவா? விவாத அரங்கா? எதுவாக இருந்தாலும் மாணவர்களால் தான் அவை முன்னெடுக்கப்படல் வேண்டும். ஆசிரியர்கள் அனுசரணை மட்டுமே புரிவர்.

வினைத்திறன் உள்ள மாணவர் வசம் சந்தர்ப்பம் தானாக வரும். எந்த சிபார்சும் எடுபடாது. திறமை போற்றப்படும். இந்த சுதந்திரம் எம் ஆசிரியர்களால் தரப்பட அது ஒருவகையில் பொறுப்பையும் தந்தது. நாடக மன்ற தலைவர் மற்றும் செயலாளர், மேடை அலங்கார நிபுணர் கலா ஸ்டேஜ் கதிர்காமத்தம்பி காரியாலய வாசலில் காத்திருக்க, அந்த ஆறடி மனிதர் வித்துவ செருக்குடன் வருவார். எம் நாடகங்களுக்கு ஒப்பனை மற்றும் மேடை அலங்கார வடிவமைப்பு எல்லாம் குறித்து கொள்வார். அடுத்து பரமவுன்ட் சவுண்ட் சேர்விஸ் எமக்கு தேவையான ஒலி ஒளி அமைப்பு பற்றி குறித்து கொள்வர். விழா மலர் அடிக்க மலிவான அச்சகம் தேடி அலைவோம். இத்தனைக்கும் பணம் கொடுக்க விளம்பரதாரர் தேடி புறக்கோட்டை தமிழ் கடைகள் படிகளில் ஏறி இறங்குவோம்.

நாயாய் அலைந்த எம் களைப்பெல்லாம் நிகழ்ச்சி அன்று எம் கல்லூரி மண்டபம் நிறைந்த கொழும்பின் மகளிர் கல்லூரிகள் மாணவிகள், மற்றும் அவர்கள் தாய்மார் முன் எங்கள் அப்பாவின் பட்டு வேட்டி கட்டி நாம் போடும் சீனில் மறைந்து போகும். பிரதம விருந்தினராக பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகள் கூட அழைக்கப்படுவர். ஒருமுறை அப்படி அழைக்கப்பட்ட அப்போதைய தபால் தந்தி அமைச்சர் கௌரவ செல்லையா குமாரசூரியர் முன், நண்பன் திருமலை பாராளுமன்ற உறுப்பினர் திரு ப நேமிநாதன் அவர்களின் ஏக புதல்வன் நவநீதன் மேடையேற்றிய நாடகம் ராஜ ராஜ சோழன். பார்த்து பதட்டம் அடைந்த அமைச்சரும் அது பற்றி சி ஐ டி க்கு தகவல் தர, அதில் நடித்த அனைவரும் நாலாம்மாடிக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டு நல்ல அடிவிருந்தால், கை கால் வீக்கத்துடன் எச்சரித்து விடுவிக்கப்பட்டனர்.

காரணம் அதில் ராஜராஜன் பேசியது முழுவதும் காசி ஆனந்தன் கவிதை வரிகள். அதில் ஒன்றை குறிப்பிடுகிறேன் புரிந்து கொள்ளுங்கள். புலி வரும் முன்னே தமிழ் ஈழம் வரும் பின்னே. மீண்டும் அதே நாடகத்தை கிழக்கில் வீசிய சூறாவளி புனர்வாழ்வு நிதிக்காக கே சி நித்தியானந்தா தலைமையில் இராமகிருஸ்ண மிசன் மண்டபத்தில் மேடையேற்றியது கூட எனக்கு கிடைத்த புது அனுபவம். அதில் ராஜ ராஜ சோழன் தீப்பொறி ஆசிரியர் ம க அந்தனிசில். ராஜேந்திர சோழன் ராம் ராஜகாரியர், பெண் பாத்திரம் ஏற்றவர் திரு ஜெயதேவன். மறுநாள் தனது பத்திரிகை தலைப்பு செய்தியாக அவர் போட்டது, “ராஜ ராஜ சோழனாக தீப்பொறி ஆசிரியர் பார்வையாளராக சி ஐ டி பொலிசார்”.

கொழும்பு வாழ்க்கை எனக்கு பல தன்னம்பிக்கை அனுபவங்களை தந்தது. மாதம் வரும் மணி ஓடரில் தான் சீவியம் என்றாலும் கற்ற கல்லூரி, கற்பித்த ஆசிரியர்கள், தன் வீட்டில் பின் அறையில் தங்க அனுமதித்த எனது வகுப்பு ஆசிரியர் திரு சிங்கராயர், முன் அறைகளை பங்கிட்ட பட்டதாரி அரச உத்தியோகத்தர்கள், ஆசிரியர் திரு சாம்பசிவம், எழுதுவினைஞர்கள் குணசிங்கம், ஐயர், நிர்வாக அதிகாரி கோழி செல்லத்துரை என எல்லோரும் இளையவனான என்னை காரியங்களில் முந்தி இருக்க தந்த ஊக்கம், பின்நாளில் இரண்டு மாகாணங்களின் தலைமை பதவியை தயக்கம் இன்றி பொறுப்பேர்க்கும் தைரியத்தை தந்து என்றால் அது மிகை இல்லை. என்னை அவையத்து முந்தி இருக்கும் அனுபவம் தந்த அவர்களை இன்றும் என்றும் என் இதயத்தில் நினைவில் கொள்வேன். போகும் பாதை பற்றிய கவலை என்றும் எனக்கு இருந்தது இல்லை. அடையும் இலக்கு பற்றிய குறிப்பு மட்டுமே என்னை முன்னிலைப்படுத்தியது.

ஈழ விடுதலை போராட்டத்தில் இணைந்த என் உறவுகள், நண்பர்கள், அறிமுகமானவர் அனைவரும் தெரிவு செய்தது புலிகளை. ஏனோ எனக்கு நாபாவை பிடித்தது. காரணம் என் கல்லூரி தந்த கற்கை. உனக்கு சரி என பட்டதை செய். பலன் தானே வரும் என்ற தாரக மந்திரம், என் மூளையில் ஏற காரணமான கல்லூரி வாசகம் கற்க அன்றேல் வெளியேறுக,[Learn or Depart],[DISCE aut DISCEDE]. மாணவர்களை வினைத்திறன் உள்ளவர்களாக அவர்களின் திறமைகளை அடையாளம் கண்டு ஊக்கப்படுத்தும் நல்லாசான்கள் வாய்த்ததும் நான் செய்த புண்ணியம் என்று உணர்கிறேன். தன்னலமற்ற அந்த ஆசான்களும் புண்ணிய ஆத்மாக்களே.

இந்த வேளையில் நாபாவின் திருமணதிற்கு சென்னை சென்ற நாம், தி நகர் கீதாஞ்சலி ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டோம். உணவு கொண்டு வரும் பணியாளர் கதவை தள்ளி திறந்து உள்ளே வந்ததும் கதவு தானே மூடிக்கொள்ளும். என் நினைவு உடன் மாகாண பேரவை அமர்வு மண்டப கதவுகளை எண்ணியது. நாம் போகும் போது ஊழியர் ஓடி வந்து திறப்பதும் பின் அவரே மூடுவதும் வழமை. இந்த செயலை மாற்றி கதவுகள் தானே மீண்டும் மூடும்சாதனம் பொருத்தல் பற்றிய எண்ணம் வந்ததும் அருகில் இருந்த பல் பொருள் அங்காடிக்கு சென்றேன். விலை மலிவு நிறை தலா 2 கிலோ. மொத்த தேவை பத்து சோடி. 20×2= 40 கிலோவுக்கு விமானத்தில் கட்டணம் அறவிடுவர். என்ன செய்யலாம் என யோசித்த வேளை ஆபத்வாந்தனாய் வந்தார் ஜோர்ஜ் இன் தம்பி நவம்.

இந்திய அமைதிப்படை உதவி அவர் மூலம் கிடைக்க அவர்களின் உணவு ஏற்றி வரும் ஹெலியில் எமது பேரவை அமர்வு மண்டப டோர் குலோசர் பத்து சோடியும் பத்திரமாக திருமலை வந்தது. உண்பது, உறங்குவது, உல்லாசமாய் இருக்கும் வேளையிலும் எம்மை எப்படி நிரூபிப்பது என்ற மன நிலைதான் பெரும் சவாலாக இருந்தது. ஒரு பக்கம் புலிகளின் கர்ஜனை, மறுபக்கம் விளக்கமற்ற மக்களின் காட்டிக்கொடுப்பவர் என்ற தூற்றல், தடங்கல்களாக மத்திய அரசின் செயல் என, உரல் மத்தளம் என எல்லா பக்கமும் நாம் வாங்கிக் கட்டியதை வரலாறு எழுதாது. இறுதிவரை நாம் புலிகளுக்கு துரோகிகள், பத்தி எழுத்தாளருக்கு ஒட்டுக்குழு, பெற்றவர்களுக்கு பிள்ளை பிடிகாரர், இத்தனைக்கும் மத்தியிலும் எம்மை தினம் தினம் வேலை வேண்டியும் பலர் அணுகினர். நல்லது கெட்டது என்பது நாம் பார்க்கும் பார்வை கொண்டது, எம் தேவை பாற்பட்டது என்பதை எமக்கு உணர்த்திய தருணம் அது.

ஒரு உண்மை சொல்வேன். பேரவை செயலகத்திற்கு வேலை தேடி வந்து பதவி பெற்றவர்களில் பெரும்பாலானவர் புலி ஆதரவாளர் அல்லது அவர்களின் உறவினர். இந்திய அமைதிப்படை புலி வேட்டை ஆரம்பித்ததும் காட்டுக்குள் ஓடிய புலிகளை கண்ணி வெடிகள் காத்தன. ஆனால் ஊரில் தங்கிய அவர்கள் உறவுகள், மற்றும் ஆதரவாளரை காத்தது வடக்கு கிழக்கு மாகாண சபை தான் என்பதை மனசாட்சி உள்ள பத்தி எழுத்தாளர்கள் எவரும் இன்று வரை எழுதவில்லை. பிரபாகரன் இருக்கிறாரோ இல்லையோ எனக்கு தெரியாது. ஆனால் ஊடக ஊடுரிவிகள் தலைவர் வருவார் தமிழ் ஈழம் பெறுவார் என்றே இன்றுவரை எழுதுகின்றனர்.எழுத்து இவர்களுக்கு பிழைப்பாக இருக்கும்வரை இனம் பற்றிய கவலை இன்றி தம் வசதி வாய்ப்பிற்காய் புலம் பெயர் தேசத்தில் இருந்த படி எழுந்தமானமாய் எதையும் எழுதும் இந்த பிழைப்பு வாதிகள் வாழ்வாங்கு வாழட்டும் என வாழ்த்தி ஒரு சம்பவத்தை நினைவு மீட்டுகிறேன்.

வழமை போல் காலை காரியாலயம் சென்ற வேளை நன்கு ஆடை உடுத்திய 18 வயது இளைஞன் பேரவை செயலகத்து மலர் தோட்டத்தை சீர் செய்து கொண்டிருந்தை பார்தேன். சிறிதாய் நெஞ்சில் ஒரு நெருடல் ஏற்பட செயலரிடம் விசாரித்தேன். ஆடைகளை சுத்தம் செய்யும் தொழில் பிரிப்பின் சாதி சொல்லி அவன் க பொ த சாதாரணம் வரை படித்தவன், ஏற்ற வேலை இல்லை காலியாக அதனால் தோட்ட பரராமரிப்பு செய்கிறான் என்றார். உடன் அவனை என் காரியாலய பியோனாக அமர்த்துங்கள் என்றேன். அந்த முடிவிற்கு காத்திருந்தவர் போல உடன் அவன் அழைக்கப்பட்டான் நியமனமும் வழங்கப்பட்டது. இங்கு தான் சவாலை நான் சந்திக்க நேர்ந்தது. மறுநாள் எனது காரியவாசலில் அவனை காணவில்லை.

எங்கே என்று விசாரிக்க ஜோர்ஜ் அவனை துரத்தி விட்டதாக பதில் வந்தது. ஜோர்ஜை அழைத்து விபரம் கேட்க அவன் அண்ணன் புலி அதனால் அவனை கலைத்து விட்டேன் என்றார். அவர் வரையில் அவர் செயல் பற்றி குறைகாண என்னால் முடியவில்லை. இருந்தும் வகிக்கும் பதவி சார்ந்து ஒரு உண்மையை அவர்க்கு உணர்த்தினேன். ஜோர்ஜ் உங்களுக்கு தெரியுமா என்னைத் தவிர என் உறவினர் நண்பர் அனைவரும் புலி உறுப்பினர் அல்லது ஆதரவாளர். அப்படி என்றால் என்னை ஏன் நீங்கள் கலைக்கவில்லை என்ற கேள்வியால் திகைத்தவர் எதுவும் கூறவில்லை எழுந்து சென்று விட்டார். சிறிது நேரத்தில் அவரால் துரத்தப்பட்ட இளைஞன் தன் சேவையை தொடர்ந்தான். இங்கு நான் ஜோர்ஜ் தவராஜா தம்பிராசா பற்றி பதிய விரும்புகிறேன்.

அவனை நான் முதலில் சந்தித்தது தமிழ்நாடு ராமநாதபுரம் தங்கச்சி மடத்தில் ராணியின் [வதிவிடம்] கோட்டையில். அப்போது தான் ஜெர்மனியில் இருந்து வந்திருந்தான். அவனது தந்தை திருமலையில் பொலிஸ் அதிகாரியாக பணிபுரிந்தவர். ஜெர்மனிக்கு புலம் பெயர்ந்தது பின்  அங்கிருந்து இயக்கத்தில் இணைந்தவன். ஏனைய போராட்ட இயக்கங்களுடன் ஏற்பட்ட தொடர்பில் கியூபா, நிக்கரகுவா போராளிகளுடன் இணைந்து பயிற்சி பெற்றவன். தாயகம் திரும்ப இந்தியா வந்த வேளையில் தான், புலிகள் மண்ணில் எம்மை தடைசெய்திருந்தனர். உகந்தை காட்டில் இருந்த தோழர்களுடன் இணைந்து போராடும் முன் முயற்சியில் இருந்த வேளை தான், நாபாவிடம் முக்கிய தாவல் ஒன்றை பரிமாற சென்ற வேளை அவனை முதன்முதலில் சந்தித்தேன். ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட சிவந்த மேனியன். சிரிக்க சிரிக்க பேசுவான். விளம்பர படங்களில் நடித்திருந்தால் பெரும் பணக்காரன் ஆகியிருப்பான். விடுதலை வேட்கையில் நாபாவுடன் இணைந்தான்.

அன்று இரவு அருகில் இருந்த உச்சிப்புளி விமான தளத்துக்கு எமக்கான ஆயுதங்கள் வந்து அவை றோ அதிகாரிகளால் எம்மிடம் பாரப்படுத்தப்பட்ட வேளை, அதில் இருந்த கலிபர் 30 கலிபர் 50  இயந்திர துப்பாக்கிகளை அவன் லாவகமாக கையாண்ட விதம் பார்த்து றோ அதிகாரிகளே ஆச்சரியப்பட்டனர். ஆயுதங்களுடன் உகந்தை கரைக்கு கடல் மூலம் வரவேண்டியவன், இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்ப்பட்டதால் இந்திய ஹெலிகளில் மட்டக்களப்பு வந்து, அங்கிருந்து காரைதீவிற்கு இந்திய இராணுவ வாகனங்களில் வந்தான். இரு தினங்களில் அவன் திருமலை வேலைத்திட்டத்திற்கு சென்று விட்டான். அந்த நேரம் தம்மை தவிர எவர் பிரசன்னமும் மண்ணில் கூடாது என்ற நிலையில், புலிகள் முதலில் மட்டக்களப்பில் வாசுதேவா குழுவை தாக்கி அழித்து பின் எம்பக்கமும் திரும்பினர். தோழர்கள் ஆரம்பத்தில் இந்திய அமைதிப்படை முகாங்களிலும் பின் புலிகள் காட்டுக்கு சென்ற பின் தங்கள் காரியாலயங்களிலும் தங்கி வேலைகளை ஆரம்பித்த வேளை, புலி அனுதாபிகள் தோழர்களை பற்றி இந்திய அமைதிப்படை அதிகாரிகளிடம் சிண்டு முடியும் செயலை செவ்வனே செய்தனர்.

அப்போது நான் கொழும்பில் இருந்து அம்பாறை, மட்டக்களப்பு, திருமலை என கிழக்கின் தொடர்பாடல் நடவடிக்கையில் செயல்ப்பட்ட காலம். இயக்கத்தில் ஒரு சிலரை தவிர எவருக்கும் நான் யார் என்பது தெரியாது. அரச அதிகாரி போல நேர்த்தியான ஆடையில், கையில் அரச அதிகாரிகள் காவிச்செல்லும் கறுத்த கனமான தோல் பையுடன் பயணம் செய்வேன். பை நிறைய கோப்புகள் இருக்கும். ஆங்கில பத்திரிகை மறுகையில் மடித்து வைத்தேருப்பேன். கண்ணாடி அணிந்த கண்ணியமான இளம் அதிகாரி என்ற கணிப்பில் சோதனை சாவடிகளில் கூட மதிக்கப்படுவேன். அடையாள அட்டை விலாசம் கொழும்பு பம்பலபிட்டி அரச தொடர் மாடி என்பதால் என்மீதான சந்தேகம் அறவே இன்றி படையினர் மாத்தையா யண்ட என மரியாதையாய் அனுப்பிவைப்பார். இந்த கபட வேட தாரி ஒருமுறை திருமலை சென்ற போது எமது இயக்க காரியாலயம் பரபரப்பாக இருந்தது. போட்டுக்கொடுக்கும் புண்ணியவான்களின் செயலால் இந்திய அமைதிப்படை ஜோர்ஜை கைது செய்துவிட்டனர். அப்போது இந்திய அமைதிப்படை அதிகாரிகள் காரியாலயம் திருமலை  நகரசபை மண்டபத்தில் பின்நாளில் நான் பேரவைதலைவராக அமர்ந்த அதே அறையில் தான் இயங்கியது. [நீட்சி 4ல்]

(ராம்)