யாருக்கு அருகதை உண்டு தமிழர் தரப்பில்…?

அன்றைய புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளரின் கருத்துக்களை….கட்டளைகளை… பதில் கருத்திற்கு வாய்புக்கள் இல்லாமல் மறுப்பும் தெரிவிக்காமல் நிறைவேற்ற முயலும் பாராளுமன்றச் செயற்பாட்டாளராக தமிழ் அரசுக் கட்சி, மேலும் ஏனைய சில ஆயுதம் ஏந்தி பின்பு ஜனநாயக வழிக்கு திரும்பிய கட்சிகளை இணைத்து உருவாக்கப்பட்ட அமைப்புத்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு.

2009 மே மாதம் புலிகள் என்ற அமைப்பின் ஆயுதச் செயற்பாடு நின்று போனதன் பிற்பாடு இன்று வரையிலான 11 வருட அரசிலில் தமிழர்களின் அரசியலில் இதே கூட்டமைப்பு மூன்றாக பிளவு பட்டு தாமே மிகப் பெரிய தேசியவாதிகள் என்று முழங்குவதில் போட்டா போட்டி போட்டுச் செயற்படுகின்றனர். இதன் விளைவுகளே இவற்றிற்கிடையே தொடர்ந்தும் ஒன்றாக பயணிக்க முடியாமல் போனதற்கான அடிப்படைக் காரணியாக இருக்கின்றது.

பிரதானமாக தமிழரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு, விக்னேஸ்வரனை முதலீடாக பார்க்கும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, அகில் இலங்கை தமிழ் காங்கிரசை பிரதான கட்சியாக கொண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி போன்றவற்றின் முன்னணி செயற்பாட்டளர்களான சுமந்திரன், விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் போன்றவர்கள் ஆயுதப் போராட்டம் முனைப்புடன் செயற்பட்ட காலத்தில் அதில் பங்காளிகளாக இராமல் தாம் உண்டு தமக்கென்ன என்று தலைநகர் கொழும்பில் வாழ்வை ஓட்டியவர்கள். இதற்கான பின்புலங்களை, வளங்களை, வாய்புகளை கொழும்பில் கொண்டிருந்தவர்கள்.

யுத்தம் முடிவற்று யுத்தமற்ற சூழல் ஏற்பட்டதும் சம்மந்தரால் தனது செல்லப் பிள்ளையாக அழைத்து வரப்பட்ட சுமந்திரனாக இருக்கட்டும், தனது முக்கியத்துவம் குறைந்து விடக் கூடாது என்பதற்காக கனடா போவதற்கான விசாவை எதிர்பார்த்திருந்த விக்னேஸ்வரனாக இருக்கட்டும், காரண காரியங்களுடன் குமார் பொன்னம்பலத்தின் கொலையும் இதனைத் தொடர்ந்து மாமனிதர் பட்டமும் இதன் பின்பே விழித் தெழுந்த தனையன் கஜேந்திரகுமாராக இருக்கட்டும் இந்த ஆயுதப் போராட்டத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த பங்களிப்பையும் செய்யாதவர்கள். வடக்கு கிழக்கு மக்களின் யுத்த வலிகளை அனுபவத்திற்குள் வாழாதவர்கள் இதனை உணராதவர்கள்.

இலங்கை அரசின் இராணுவ ஒடுக்கு முறைகளுக்கு முகம் கொடுக்காத வாழ்வை கொண்டிருந்தவர்கள் மட்டும் அல்ல இந்த ஒடுக்கு முறைக்கு முகம் கொடுத்துக் கொண்டிருந்து இதனால் ஆயுத் போராட்டத்திற்குள் தள்ளப்பட்ட இளைஞர்களுடன், மக்களுடன் எந்த வகையிலும் இணைந்தவர்கள் அல்ல.

ஒரு துப்பாக்கி சூட்டிற்கு அஞ்சி உயிர்ப் பாதுகாப்பிற்காக ஓடி ஒழியும் நிலையில் வாழந்தவர்கள் அல்ல. இதனை அவர்கள் பல பேட்டிகளில் ஒத்துக்கொள்ள வேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டவர்கள். அண்மைய விக்னேஸ்வரன் சுமந்திரன் பேட்டிகள் இவற்றிற்கு சான்று.

ஆனால் இன்று தமிழ் மக்கள் மத்தியில் தேர்தலில் முன்னணியில் ‘தேசியம்’ என்று போலித் தேசியத்தை பேசிய வண்ணம் தாமே தமிழ் மக்கள்களின் மீட்போர் என்று வலம் வருவதும் அதற்கான பிரதிநிதித்துவத்தை இவர்கள் கோரி நிற்பதுவும் வேடிக்கையாக இருக்கின்றது.

இவர்கள் மக்களிடம் தமக்கான பாராளுமன்ற மகாண சபை ஏன் உள்ளுராட்சி சபை அங்கத்துவத்தை கோருவதற்கு எந்தத் தகுதியும் அற்றவர்கள். இவர்கள் பின்னால் அணிதிர முற்படுபவர்களை என்னவென்று சொல்வது.

எந்த குடிமகனும் தேர்தலில் பங்கு பற்றலாம் என்ற வகையில் அவர்கள் தேர்தலில் நிற்கும் ஜனநாயகத்தை ஏற்கும் நாம் இவர்கள் உண்மையான மக்கள் பிரதிநிதிகளா இதற்கு தெரிவு செய்வதற்குரிய தகுதிகளைக் கொண்டு இருக்கின்றார்களா…? என்றால் இல்லை என்பதை நாம் கூறவேண்டியதில்லை என்பதை வரலாறு கூறி நிற்கின்றது.

இவர்களைத் தவிர்த்து பல நூறு பேர்கள் தேர்தல் பிரதிநிததுவத்தைப் பெறுவதற்கு தகுதிகளை கொண்டிருக்கும் நிலையில் இவர்களைக் கருத்தில் கொள்வதுசரியானது என்பதே எமது வாதமாகும்.

இதில் இன்னொரு வேடிக்கை, எரிச்சல் ஊட்டும் செயல் இவர்கள் மூவரும் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயுதம் தாங்கி போராடிய விடுதலை அமைப்புகளை போராளிகளை தாம் ஏற்கப் போதில்லை என்று பகிரங்கமாக பல தளங்களிலும் கூறி வருபவர்கள். கஜேந்திரகுமார் அண்மைக் காலங்களில் இதனை நேரடியாக அதிகம் சொல்லாவிட்டாலும் அவரின் கொழும்பு வாழ்வும் விடுதலை அமைப்புகளுடன் இணைந்து செயற்படாத இவரது தன்மையும் இதன் வெளிப்பாடுதான். அதுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உடைவின் பின்னரான மூன்று அணியின் பின்புலமும் ஆகும்.

1980 களில் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராடுவதற்குரிய தார்மீக நிலமைகள் இருந்தன என்பதை யாரும் மறுக்க முடியாது. தமிழ் மக்களின் உரிமைகளை… சுயநிர்ணய உரிமையை நிலை நாட்ட…. ஒடுக்கு முறையில் இருந்து சிறுபான்மை மக்களை விடுவிக்க ஆயுதம் தாங்கி எதிரிக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்துவதற்கு நிர்பந்திக்கப்பட்டவர்கள்.

இதில் தவறு காண்பது எந்த வகையில் நியாயமாக இருக்க முடியும். இந்த ஆயுதம் ஏந்தலைத்தான் தாம் ஏற்கவில்லை என்கின்றனர் இந்த மூவரும். இவர்களைத் தலமையாக கொண்ட அரசியல் கட்சிகளும் இந்த நிலைப்பாட்டை ஆதரிப்பவர்கள் என்ற முடிவிற்குள் நாம் தள்ளப்படுவதில் நியாயம் உண்டுதானே. ஆயுதப் போராட்டத்தை கொச்சைப்படுத்துபவர்கள் இவர்கள் என்ற முடிவிற்கு வருவதற்குரிய எல்லா நியாயங்களும் எமக்கு உண்டு தானே.

தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு தனி நாடு என்ற மட்டிலும் தனி ஈழம்தான் அது உழைக்கும் மக்களின் தலமையில் நடைபெற வேண்டும் என்றும் இலங்கையின் ஒட்டு மொத்த வர்க்கப் புரட்சியின் முதற் படியாக தனி ஈழம் என்றும் இதன் பின்பு சிங்கள் தமிழ் பாட்டாளி மக்கள் இணைந்து முழு இலங்கையிற்கான போராட்டம் என்ற அரசியற் கொள்கையின் அடிப்படையில் செயற்பட்ட விடயங்களில் விமர்சனம், சரி பிழை இருக்கலாம். ஆனால் இளைஞர்கள், மக்கள் போராடுவதற்கு ஆயுதம் ஏந்துவதற்கு நிர்பந்திக்கப்பட்டார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இதில் அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் உசுப்பேத்தல்கள்…., இந்தியா தனது நலன்களுக்கான போராட்டத்தை வீங்க வைத்தது…, 1986 களின் பின்பு ஏக போக தலமையாக உருவெடுத்து பாசிச செயற்பாடாக போராட்டம் இழுபட்டுச் சென்று மக்களும், தாமும் அழிந்து போனது என்ற வரலாறுகளின் இடையே ஒரே ஒரு அரசியல் யாப்பில் உள்ள 13 வது திருத்தச் சட்ட மகாணசபை தீர்வைப் பெற்றுக் கொடுத்ததும் இந்த ஆயுதப் போராடம் தான்.

இதனை ஏற்று செயற்பட மறுத்த தரப்பினர்தான் இன்று அதிகம் மகாண சபைத் தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலிலும் ‘தேசியம்’ என்ற கூறிக் கொண்டு தமிழர்களின் அர்பணிப்பு நிறைந்த போராட்டத்தில் விளைத்த விடயங்களை தமக்கே என்று சொந்தம் கொண்டாட முயல்கின்றனர்.

இன்னும் சிலர் இந்த 13 வது திருத்தச்சட்ட அரசியல் யாப்பு தீர்வின்போது இதற்கு எதிராக இதனை முழு மூச்சாக எதிர் செயற்பாட்டைக் கொண்டிருந்த பிரேமதாசாவுடன் இணைந்து செயற்பட்டு மகாண சபை அதிகாரம் செயற்பாடுகளை எள்ளி நகையாடியவர்கள்.

இவர்கள் யாவரையும் இனம் கண்டே இத் தேர்தலில் மக்கள் வாக்களிக்க வேண்டும். புது முகங்களையும தகுதி காண் பெண்களையும் கட்சிகளின் பிரபல்யத்திற்கு அப்பால் தெரிவு செய்து மாற்றுத் தலமையை உருவாக்க வேண்டும் தேர்தலின் பின்பு செயற்பாட்டு மிக்க ஒரு ஐக்கிய முன்னணி அமைக்கப்பட வேண்டும். தேர்தலின் முன்பு அமையாதவிடத்து இதனை நாம் செய்தாக வேண்டும்.

இறுதியாக கடந்து 30 வருட கால அரசியலில் பணநாயகம், ஜனநாயகத்தை விஞ்சும் அளவிற்கு வளர்ந்து விட்டது. இதற்கான பணம் வயல் உழுதோ, கடற்தொழில் செய்தோ, அல்லது வேறு உடல் உழைப்புக்களால் கிடைத்ததா என்றால் இல்லை என்பதே பதில். அல்லது பாராளுமன்றக் கதிரைச் சம்பளத்தில் சேமித்ததா…? என்றால் அது முடியாத காரியம்.

வேணும் என்றால் அமைச்சராக ஒரு பகுதி மக்கள் பணத்தை தமது பணமாக மாற்றதால் அல்லது இலங்கை அரசு வழங்கிய பணப் பெட்டி அல்லது சர்வதேச சக்திகளிடம் விலை போனவர்களுக்கு கிடைக்கும் டாலர் பணம் இதற்கும் அப்பால் புலம் பெயர் தேசத்தில் உள்ள சிலர் தமது பண வசூல் ‘வியாபாரங்கள்’ சிறப்பாக ஓட தமிழ்த் ‘தேசியத்தை’…. போலித் தேசியத்தை தூக்கி பிடிக்க வழங்கும் பணமாக இருக்க வேண்டும்.

தேர்தல் நடைபெறுவது இலங்கை மக்களுக்கு அதிக தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலில் நிற்பது இலங்கை வாழ் தமிழ் மக்களுக்காக என்றால் அவர்களின் சொல் கேட்கும் அவர்களின் நலன் காக்கும் புதியவர்களை தெரிவு செய்யுங்கள். இளைஞர்களை தெரிவு செய்யுங்கள் மாறாக உசுப்பேத்தல்களையும் அமைச்சரானால் பணம் பண்ணலாம் என்று வாழ்ந்தவர்களையும் தவிருங்கள்.

இந்தத் தேர்தல் மக்களுக்கானதா…? மற்றவர்களுக்கானதா…? என்பதை தீர்மானிக்கக் கூடிய ஒரே சக்தி மக்கள்தான். எனவே மக்களே சரியான தெரிவுகளை நோக்கி நகருங்கள்