யாழ்ப்பாண நுாலகம் எரிக்கப்பட்டமைக்கு பிரதமர் ரணில் மன்னிப்பு கோரினார்!

யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்டமைக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க மன்னிப்பு கோரியுள்ளார் . 1981ம் ஆண்டில் யாழ்ப்பாண பொதுநூலகம் எரிக்கப்பட்டமைக்காக மன்னிப்பு கோருவதாக அவர் நாடாளுமன்றில் வைத்து செவ்வாய்க் கிழமை தெரிவித்தார்.

இதுவரை காலத்தில் யாழ் பொதுநூலகம் பற்றிய ஆவணங்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் தொகுத்து வெளியிட்டவர் நூலகவியலாளர் என் செல்வராஜா. ஆங்கிலத் தொகுப்பை தேசம் வெளியீட்டகமே வெளியிட்டு இருந்தது. அந்நூல்கள் யாழ் நூலகத்துக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அந்நூல் விற்கப்பட்டு அந்நிதியை நூலகம் பயன்படுத்திக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களுக்காக மன்னிப்பு கோருமாறு கூட்டு எதிர்க்கட்சியினரிடமும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார்.

1981ம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்த போது யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டதாகவும் இது பிழையானது எனவும் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் ரணில் தெரிவித்துள்ளார்.

உங்களது அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட தவறுகளுக்காக நீங்களும் மன்னிப்பு கோர வேண்டும் என பிரதமர் கூட்டு எதிர்க்கட்சியினரைப் பார்த்து தெரிவித்துள்ளார்.

தற்போது நூலகவியலாளர் என் செல்வராஜா தமிழாராய்ச்சி மாநாடு பற்றிய தகவல்களைச் சேகரித்து தொகுக்க முற்பட்டு உள்ளார். இச்சம்பவத்துடன் நேரடியாகத் தொடர்புடையவர்கள் தகவல்கள் ஆதாரங்களை வழங்க விரும்புபவரகள் அவருடன் தொடர்பு கொள்ளவும்.

(Jeyabalan Thambirajah)