வரலாறு மிகச்சிறந்த ஆசான்

யூதவிழாக்களுக்குத் தடைவிதிப்பதன் மூலமாகவே தன் கணக்கை ஆரம்பித்தான் ஹிட்லர். ஆங்காங்கே எழுந்த மெல்லிய எதிர்ப்புக்குரல்கள் தேசவெறிக்கும்பலின் வெறிக்கூச்சலில் அமுங்கிப்போனது. நொந்துகொண்ட யூதர்கள், மறைந்து ஒளிந்து தங்கள் வீடுகளுக்குள் மதச்சடங்குகளை அஞ்சியஞ்சிக் கொண்டாடினார்கள்.

ஒருவித அவநம்பிக்கையோடுதான் சமூகத்தைத் திரும்பிப்பார்த்தான் ஹிட்லர். எந்தச் சலனமுமின்றி நேர்கோட்டில் மயான அமைதியுடன் இயங்கிக்கொண்டிருந்த சமூகம் அவனது செயலுக்கு அங்கீகாரமளித்தது.. சமூகத்தின் மௌனம் அவனுக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கக்கூடும்.
ஃபியூரர் வாழ்க..!!
ஃபியூரர் வாழ்க..!!
தேசபக்தர்களின் முழக்கங்களுக்குள் யூதர்களின் முனுமுனுப்புகள் மெல்லமெல்ல அடங்கிப்போயின. சமூகம் இன்னும் மூர்க்கமாக தனது மௌனத்தைக் கடைபிடித்தது.
யூதக்குழந்தைகள் கல்வி கற்கத் தடை.. யூதர்கள் அரசு வேலைசெய்யத் தடை.. யூதர்கள் வியாபாரம் செய்யத்தடை.. யூதர்கள் பொது இடங்களில் புழங்கத்தடை… என்றெல்லாம் நீண்டுசென்ற தடைப்பட்டியல் இறுதியாக இப்படி முடிந்தது..
‘யூதர்கள் உயிர்வாழத்தடை..’
இந்தத் தடைகளுக்குப் பின்னுள்ள அரசியலைப் புரிந்துகொண்டு, சமூகம் சுதாரித்து எழுவதற்குள் அறுபது லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
(Samsu Deen Heera)