வரலாற்றில் கரிய நாள் டிசம்பர் 13

இலங்கையின் கிழக்குப் பகுதியில் அமைந்திருந்தது அந்தக் காடு. சூரிய ஒளியை கூட உள்ளே அனுமதிக்காது அடர்ந்து ஓங்கி வளர்ந்த மரங்கள் கொண்ட காடு அது. காட்டுப் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் மட்டும் சுதந்திரமாக உலா வர அனுமதி தந்திருந்த காடு அது. அந்தக் காட்டை ஊடறுத்து பாய்கின்றது ஒரு நீண்ட நெடிய ஆறு.
இந்த ஆற்றை சுற்றி சில முகாம்கள். தொலைத் தொடர்பு நிலையம், ஆயுதக் களஞ்சியம், பயிற்சி முகாம், மருத்துவ முகாம், இவற்றின் நடுவே பிரதான முகாம். இந்த முகாம்களை சுற்றி பல பாதுகாப்பு காவல் அரண்கள் மண் மூட்டைகளால் அமைக்கப்பட்டிருந்தது. மண் மூட் டைகளின் மேல் வளர்ந்த மரங்கள் காவல் அரண்களுக்கு காவலாக நின்றது.

ஆயுதம் தாங்கிய இளைஞர்கள் சிலர் முகங்களில் தாடியுடன் துப்பாக்கி குண்டு பட்டியலை இடுப்பில் தாங்கிய வண்ணம் ஒரு முகாமில் இருந்து இன்னொரு முகாம் என அங்கும் இங்குமாக சுறு சுறுப்பாக நடமாடிய வண்ணம் இருந்தனர். சிலர் கழுத்தில் சைனட் குப்பிகளும் தொங்கிய வண்ணம் இருந்தது.
ஈழ மக்களுக்கான புரட்சிகரமான விடுதலையை முன்னணியில் நின்று வென்றெடுக்கப் புறப்பட்ட ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என அழைக்கப்படும் ஈ.பி.ஆர்.எல்.எப். போராளிகளே இவர்கள் ஆவார்.
இவர்களில் இரண்டு போராளிகள் நீல நிறதில் சேர்ட் அணிந்து, கைகளில் துப்பாக்கியுடன் குறித்த கிராமத்தை நோக்கி காடுகளின் நடுவே அமைக்கப்பட்டிருந்த ரகசியப் பாதை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர்.
திடீர்ரென துப்பாகி சத்தம் கேட்கின்றது. துப்பாக்கி குண்டுகள் இவர்களை நோக்கி பாய்ந்து வருகின்றது. சுதாகரித்துக் கொண்ட இருவரும் ஒரு மரத்திற்கு பின்னால் பதுங்கிக் கொள்கின்றனர். நிலைமையை நோட்டம் இடுகின்றனர். துப்பாக்கி குண்டுகள் தொடர்ந்து இவர்களை நோக்கி பாய்ந்த வண்ணம் உள்ளது. சிறிது நேரத்திலேயே எதிரில் இருப்பவர்கள் இலங்கைப்படை அல்ல புலிப்படை என்பதை உணர்ந்து கொள்கின்றனர். அதே நேரத்தில் ஒருவர் முன் தோளில் இருந்து இரத்தம் இலேசாக கசிந்து கொண்டிருந்தது.
கையில் இருந்த வோக்கி டோக்கி மூலம் தங்கள் முகாம் பொறுப்பாளருடன் தொடர்பு கொண்டு பின்னர் புலிகளின் பொறுப்பாளருடன் தொடர்பு கொள்ளப்படுகின்றது. நீல நிற மேலாடையை கண்டவுடன் தாங்கள் இலங்கை கடற்படை என நினைத்து விட்டதாக புலிகளிடம் இருந்து பதில் கிடைக்கின்றது.
நல்ல பதில் .. இலங்கை கடற்படைக்கு என்ன வேலை சூரிய ஒளி கூட வர மறுக்கும் நடுக் காட்டுப் பகுதிக்குள்? காயத்திற்கு உட்பட்ட போராளியின் உடனடி சிகிச்சைக்குப் பின்னர் தொடர்ந்து தங்கள் பயணத்தை மேற் கொள்கின்றனர்.
அதே நேரம் பல மைல் தொலைவில் உள்ள ஒரு எல்லைக் கிராம இராணுவ முகாம் ஒன்றை தாக்கும் நோக்கோடு முக்கிய போராளிகள் அடங்கிய குழு ஒன்று பிரதான முகாமில் இருந்து புறப்பட்டுச் செல்கின்றனர்.
மறு புறம் இந்தியா செல்லும் நோக்கோடு காயப்பட்ட போராளிகளையும் பழுதடைந்த மோட்டார் ஆயுதங்களையும் ஏற்றிக் கொண்டு டக்டர் ஒன்று கடற்கரையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.
இருப்பது நிமிடங்கள் சென்ற நிலையில் புலிகளின் பொறுப்பாளர்களில் ஒருவன் கையில் ஆயுதத்துடன் டக்டரை நிறுத்துமாறு பணிக்கின்றான். ஏதோ உதவி கேட்பதற்காக மறிக்கின்றான் என நினைத்து டக்டர் நிறுத்தப்படுகின்றது.
அருகே வந்த அந்த பொறுப்பாளன் “தாங்கள் இலங்கை கடற்படை என நினைத்து துப்பாக்கிப் பிரயோகம் செய்த சம்பவம் தொடர்ப்பாக கதைக்க வேண்டும்” எனக் கூறி உங்கள் தலைமை பொறுப்பாளர் எங்கே? அவர் என்ன செய்கிறார்? தூங்குகிறாரா? சாப்பிடுகிறாரா? என கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தான்.
இப்படி கேட்டுக் கொண்டிருக்கும் போது மறைவில் இருந்த புலிகளின் அணி ஒன்று டக்டரை சுற்றி வளைத்துக் கொள்கின்றனர். “நாங்கள் உங்களை தடை செய்து விட்டோம்” எனக் கூறி துப்பாக்கி முனையில் அனைவரையும் ஒரு குறித்த மரத்தை நோக்கி நடக்க பணிக்கின்றனர். அங்கே சென்ற சிறிது நேரத்தில் இன்னொரு புலிகளின் அணி ஒன்று டக்டரில் அட்டகாசமாக வந்து இறங்குகின்றனர்.
அவர்களில் ஒருவன் முக்கிய பொறுப்பாளர். அவனோ பாவிக்கும் ஒவ்வொரு வார்த்தைகளுக்கு நடுவிலும் “பு” என்ற வார்த்தையை மறக்காமல் பாவித்து போராளிகளை வெருட்டிக் கொண்டிருந்தான்.
பின்னர் அங்கிருந்த இரண்டு போராளிகளை துப்பாக்கி முனையில் அழைத்துச் சென்று, அதே ‘கடற்படை கதையை’ வைத்து நாடகமாடி பிரதான முகாமில் இருந்த போராளிகளையும் சுற்றி வளைத்துக் கொள்கின்றனர்.
அதே பாணியில் ஏனைய முகாம்களில் இருந்தவர்களையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகின்றனர். இறுதியாக கடற்கரை சென்றவர்கள் முதல் அனைவரும் ஒரு இடத்திற்கு கொண்டு வரப்பட்டு தரம் பிரிக்கப்படுகின்றனர்.
இதற்கிடையே போராளிகளில் ஒருவர் தாக்குதலுக்கு சென்ற போராளிகள் குழுவிற்கும் பொறுப்பாளருக்கும் தகவல் தருகிறார். “எதிர்பு காட்ட வேண்டாம், உங்கள் உயிரை மட்டும் காப்பாற்றி கொள்ளுங்கள், மிகுதியை பின்னர் பார்த்துக் கொள்ளளாம்” என அங்கிருந்து கடுமையான உத்தரவு கிடைக்கின்றது.
தகவல் பரிமாற்றத்தை இடை மறித்து கேட்டுக் கொண்ட புலிகள் அவர் மறைத்தது வைத்திருந்த தகவல் தொடர்பு கருவியை பறிமுதல் செய்து அவரை கடுமையான சித்திரவதைக்கு உட்படுத்துகின்றனர்.
அனைத்து போராளிகளையும் ஒருவர் விடாது புகைப்படம் எடுத்து அவர்கள் ஒவ்வொருவரது பெயர், ஊர், அப்பா, அம்மா, சகோதரர்கள் போன்ற முழு விபரங்களும் எழுதப்பட்டு ஒரு கோவையை தயாரித்துக் கொண்டார்கள்.
தரம் பிரிக்கப்பட்ட போராளிகளிடம் “உங்கள் ஆயுதங்களை எங்கே மறைத்து வைத்துள்ளீர்கள்? யார் யார் என்ன என்ன பொறுப்பில் இருந்தீர்கள்? தொலைத் தொடர்பு சங்கேத சொற்கள் போன்ற விபரங்கள் கேட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். சித்திரவதைக்கு உள்ளாக்கபட்டவர்களின் அலறல் அந்த அடர்ந்த காட்டு விலங்குகளையும் கண் கலங்க வைத்தது என்றால் மிகையாகாது.
தங்கள் முன்னாலேயே தங்கள் முதன்மைத் தோழர்கள் சித்திரவதைக்கு உள்ளாகுவதையும், பல தோழர்களை இழந்து பல ஆபத்துகளுக்கு மத்தியில் கடல் தாண்டி கரை சேர்த்த ஆயுதங்கள் பலவற்றை புலிகள் பிரித்தெடுத்து மாட்டு வண்டிகளில் ஏற்றிக் கொண்டு செல்வதை மனங்களும் கைகளும் கட்டப்பட்ட நிலையில், கண்கலங்கி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதை தவிர அவர்களுக்கு வேறு வழி இருக்கவில்லை.
தமது சொந்த இனத்தின் விடுதலைக்காக போராடப் புறப்பட்ட போராளிகளுக்கு போராட்ட மறுப்பு செய்து “துரோகிகள்” என தூபமிடுவதற்கு துணை நின்ற நாள் டிசம்பர் 13, 1986 என்பதை அவர்கள் அன்றும் இன்றும் என்றும் மறப்பதற்கும் இல்லை.

(Brin Nath