விடுதலைப் புலிகளின் 103 போராளிகளின் மரணம்: உணமைகளை மறைப்பதற்கான கூட்டுச் சதி?

இலங்கை அரசின் தடுப்பு முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டு ஒரு வகையான பய உணர்வை உருவாக்கி விடுதலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் போராளிகள் மர்மமான நோய்களினால் மரணமடைவதாக கடந்த சில வாரங்களாகத் தகவல்கள் வெளியாகின்றன. இதற்காக சர்வதேச விசாரணை வேண்டும் என்று மற்றொரு சிலர் அறிக்கை வெளியிட ஆரம்பித்துவிட்டனர்.

வடமாகாண சபை மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்களிலிருந்து ஆரம்பித்த மரணம் தொடர்பான புரளிகளில் பல எந்தவகையான அடிப்படை ஆதாரங்களும் அற்றவை. இலங்கை அரசு இதுபற்றி அலட்டிக்கொள்ளவில்லை. மனித உரிமை அமைப்புக்கள், ஐ,நா போன்றவை இது தொடர்பாக மூச்சுக்கூட விடவில்லை.

மகிந்த ராஜபக்ச அரசாகட்டும், இன்றைய நல்லாட்சி அரசாகட்டும் போராளிகளின் அரசியல் மறு பிரவேசத்தை கண்காணிப்பதும் அழிப்பதும் பிரதான நோக்கங்களில் ஒன்றாகக் கொண்டிருக்கும் என்பதில் சந்தேகங்கள் இல்லை. மாபெரும் இனப்படுகொலை ஒன்றை நடத்திய மகிந்த அரசு சரணடைந்த பலரைக் கொன்று போட்டிருக்கிறது. அவர்கள் தொடர்பான எந்த விபரங்களும் இன்னும் வெளியிடப்படவில்லை.

பெரிதாக வெளித்தெரியாத ஆபத்தான பேரினவாத அரசு தனது ஆட்சியை நல்லாட்சி என்ற பெயரில் ஆரம்பித்து ஒன்றரை வருடங்கள் கடந்த பின்னரும் அரச தரப்பிலிருந்து உத்தியோகபூர்வமான எந்தத் தகவல்களும் சரணடைந்தவர்கள் தொடர்பாக வெளியிடப்படவில்லை. எதிர்க்கட்சி என்ற தலையங்கத்தில் இலங்கை அரசின் ஊதுகுழல் போன்று செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கூட இத்தகவல்களை வெளியிடுவது அடிப்படை மனித உரிமை தொடர்பான ஒன்று என மக்கள் பக்கத்திலிருந்து அழுத்தங்களை வழங்கவில்லை. விசித்திரமான ‘அறிகை அரசாகச்’ செயற்படும் வட மாகாண சபை இது தொடர்பாக இன்று வரை மூச்சுக்கூட விட்டதில்லை.

இவை அனைத்திற்கும் மேலாக உளவியல் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் விடுதலைச் செய்யப்பட்ட போராளிகள் அடிப்படை வாழ்வாதாரத்திற்கான திட்டங்களுக்கான வரைபக்கூட வட மாகாண சபை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இலங்கை அரசு போன்றன முன்வைக்கவில்லை. சிங்கக்கொடி ஏற்றி மகிழ்ந்த வடக்கு முதலமைச்சரும், சிங்கக்கொடியோடு மேடையில் முஷ்டி போட்ட சம்பந்தனும் இவ்வாறான அடிப்படைப் பிரச்சனைகளைக் கையாள்வதற்குரிய எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.அடுத்த தேர்தல் வரைக்கும் மீளாத் துயில்கொண்டிருக்கும் கஜேந்திரகுமார் குழுவினர் இன்னும் அரசியல் அரங்கில் இருக்கிறார்களா இல்லையா என்பதை காலம் தான் தீர்மானிக்குமோ?

இவ்வாறான சூழலில் 103 போராளிகள் மர்மமான முறையில் மரணமடைந்தனர் எனக் கிளப்பிவிடப்பட்ட புரளி தொடர்பான எந்த ஆதராங்களுமின்றி பெரும் சலசலப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மரணமடைந்தவர்களின் பெயர்கள் விபரங்கள், தடுத்து வைக்கப்பட்டிருந்த முகாம்கள் போன்ற குறிப்பான எந்தத் தகவல்களுமின்றி எழுமாறாகக் கூறப்பட்டு இத் தகவல்களில் உள் நோக்கம் உண்மைகளை மூடி மறைப்பதா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இத்தகவலைப் புரளியாக அன்றி புள்ளிவிபரங்களோடு முன்வைக்க இவர்கள் தவறியதன் காரணம் அறியப்பட வேண்டும். சரணடைந்தவர்கள் தொடர்பாகவும். கொல்லப்பட்டவர்கள் தொடர்பாகவும் இலங்கை அரசிடம் புள்ளிவிபரஙகளைக்கூடக் கேட்கத்தவறியக் இப் புரளிகளின் சூத்திரதாரிகளின் உள் நோக்கம் உண்மையைத் திசைமாற்றுவதா என்பது கண்டறியப்படவேண்டும்.

சுன்னாகம் அழிவிற்குத் துணை சென்ற விக்னேஸ்வரனின் சுகாதார அமைச்சர் இப்போது மரணம் தொடர்பான பிரச்சனையக் கையாளப் போவதாக அறிவித்துள்ளார். தடுத்துவைக்கப்பட்டிருந்த எத்தனை போராளிகள் மரணமடைந்துள்ளனர் என்ற குறைந்தபட்சத் தகவல்களிலிருந்து அவர் கையாள்வதை ஆரம்பிக்கலாமே?
அதனை விடுத்து தமது சுய லாப அரசியலுக்காக, இலங்கை பேரினவாதிகளுக்கு எந்தப் பாதிப்பும் இன்றி புரளிகளைக் கிளப்பிவிடுவது ஆபத்தானது.

(இனியொரு… )