பின்னப்பட்ட சதிவலை

1970களில் பத்துடன் பதினொன்றாக தொடங்கிய தமிழீழ விடுதலை புலிகள் ( Liberation Tigers of Tamil Ealam-LTTE ) இயக்கம் 1980களில் ஏனைய இயக்கங்களை பிரதான அரங்கில் இருந்து முடக்கியதன் மூலம் தனிப்பெரும் இயக்கமாக தன்னை உருவாக்கிக்கொண்டது. அத்துடன் 1990களின் ஆரம்பத்தில் இருந்து தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் தாங்கள் மட்டுமே என்கின்ற கருத்தை தீவிரமாக வலியுறுத்தியத்துடன் மிதவாத தமிழ் அரசியலையும் முடக்கத்தொடங்கினர். வெறுமனே போராட்ட இயக்கம் என்கின்ற வடிவத்தில் இருந்து மாறி அரசியல் இயக்கமாகவும் தம்மை வெளிக்காட்ட முயன்றனர்.

புலிகளால் முன்னெடுக்கப்பட்ட வன் அரசியலானது ஒரு கட்டத்தில் இலங்கை சோசலிச ஜனநாயக குடியரசு என்னும் இறைமையுள்ள ஒரு நாட்டின் அரசியலையே தீர்மாணிக்கின்ற சக்தியாக உருப்பெற்றதுடன் இந்த நாட்டின் இருபது மில்லியன் மக்களின் தலைவிதியை தீர்மாணிக்கின்ற ஒரு சக்தியாக புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உருவாகவும் வழிவகுத்தது. இலங்கை அரசியல், பொருளாதார, சமூக அமைப்பை மட்டுமல்லாமல் அரசு படைகளுடனான் போரின் போக்கு, போர்நிறுத்தம், அரசுடனான சமாதான பேச்சுக்கள் என்பவற்றைக்கூட அவரே தீர்மாணித்த்திருந்தார்.

1983 – 1987 வரையான இலங்கை படைகளுடன் புலிகள் மற்றும் ஏனைய இயக்கங்களின் போர் அதன் பின் 1987-1990 வரை இலங்கை அரசின் அனுசரனையுடன் இந்திய இராணுவத்துடனான புலிகளின் போர் எனபன ஈழப்போர் I என வரையறுக்கப்பட்டுகின்றது. அதன் பின் பிரேமதாச அரசாங்கத்துடனான சமாதானபேச்சை தொடங்கிய புலிகள் விரைவிலேயே அதனை முறிந்த்துக்கொண்டு அரசு படைகளுடன் போரில் இறங்கியிருந்தனர். ஏறக்குறைய நான்கு ஆண்டுகளாக போரை தொடர்ந்த புலிகள் 1994 செப்டெம்பர் 13ல் BBC வானொலிக்கு பிரபாகரன் வழங்கிய பேட்டியில் போரை நிறுத்ததுக்கான தனது விருப்பத்தை வெளியிட்டதன் மூலம் முடிவுக்கு கொண்டுவந்தனர். அத்துடன் சந்திரிகா அரசாங்கத்துடன் சமாதான பேச்சுக்களை தொடங்கினர்.

பிரேமதாச அரசாங்கத்துடனான போரை தொடங்கிய புலிகள் சந்திரிகா அரசுடனான போர்நிறுத்தம், சமாதான பேச்சுக்கள் என ஈடுபடத்தொடங்கிய காலப்பகுதி வரைக்குமான போரானது ஈழப்போர் II என க்கூறப்படுகின்றது. ஈழப்போர்II காலப்பகுதியில் தனிபெரும் சக்தியாக புலிகள் உருவாக தொடங்கியிருந்தனர். ஈழபோர் I காலப்பகுதியில் விடுதலை போராளிகளாகவும் மக்களின் பெருத்த ஆதரவுடனும் திகழ்ந்த புலிகளை ஈழப்போர் II காலப்பகுதியில் உலகம் பயங்கரவாதிகளாக பார்க்க தொடங்கியது.

1991 மே 21ல் இந்திய முன்னாள் பிரதமரும் புகழ்பெற்ற மனிதராகவும் திகழ்ந்த ராஜிவ் காந்தியை படுகொலை செய்தமை, அதன் பின் 1993 மே 1ல் இலங்கை ஜனாதிபதி ரனசிங்கே பிரேமதாசவை கொலை செய்தமை அத்துடன் நிராயுத பாணிகளான மென் அரசியல்வாதிகள், மாற்றுக்கொள்களுடையவர்கள், கல்வியியலாளர்கள், என பலரை படுகொலை செய்தமை, வேறு பலருக்கும் உயிரச்சுருத்தலை ஏற்படுத்தியமை, பொதுமக்கள் நிலைகள் மீது குண்டுத்தாக்குதல்கள், தற்கொலைத்தாக்குதல்கள் என பலகுற்றச்சாட்டுகள் புலிகள் மீது சுமத்தப்பட்டு அவர்களை பயங்கரவாதிகளாக உலகம் அடையாளப்படுத்த தொடங்கியிருந்த்தது.

ஆனாலும் இலங்கை அரசு படைகளும் அவர்களுடன் சேர்ந்தியங்கிய துனை ஆயுதக்குழுக்களும் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்ட படுகொலைகள், அட்டூழியங்கள் போன்றவற்றில் இருந்து தங்களை காப்பாற்றக்கூடியவர்களாக புலிகளையே தமிழ் மக்கள் நம்பினர்.

ஈழப்போர்I காலப்பகுதியில் கொரிலா தாகுதல்கள், பதுங்கி தாக்குதல்கள், சிறு முற்றுகை தாக்குதல்கள் மற்றும், அதிரடி தாக்குதல்கள் வழிமறிப்பு தாகுதல்கள் என ஒரு மட்டுபடுத்தப்பட்ட அளவிலான குழுத்தாக்குதல்களை மட்டுமே நடாத்திக்கொண்டிருந்த புலிகள் ஈழப்போர் IIல் இராணுவ நடவடைக்கைகளுக்கான இடைமறிப்பு தாக்குதல்கள், முறியடிப்பு தாகுதல்கள், முழு அளவிலான முற்றுகை தாகுதல்கள் என தமது இராணுவ மற்றும் போரிடும் வலிமையை வளர்த்துக்கொண்டத்துடன், போர் படையணிகளை கொண்ட சிறியளவிலான மரபுமுறை இராணுவமாக வளர்ச்சி பெற்றிருந்தனர். இந்த காலப்பகுதியிலேயே தமது கட்டுப்பாட்டு பகுதிகளில் ஒரு நடைமுறை அரசாங்கத்தை அமைத்து இலங்கையின் இறையாண்மையை கேள்விக்குள்ளாக்கியும் இருந்தனர்.

சந்திரிகா அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளை முறிந்த்துக்கொண்டு ஈழப்போர் III ஐ தொடங்கிய புலிகள் ஒரு முழுமையான தொழில்முறை இராணுவபடைககளை கொண்ட அமைப்பாக மாறியிருந்தனர். தற்காப்பு தாக்குதல்கள், முறியடிப்பு தாக்குதல்கள், வலிந்த தாக்குதல்கள், முற்றுகை தாக்குதல்கள், கொரில்லா தாக்குதல்கள், பதுங்கி தாக்குதல்கள் என்றளவில் இருந்த புலிகள் எதிரிகளின் பிரதேசங்கள் மீது முழுமையான இராணுவ நடவடிக்கையினை நடாத்தும் அளவுக்கு அபரிதமான வளர்ச்சியை பெற்றுக்கொண்டிருந்தர. புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை தவிர கருணா, பால்ராஜ், சூசை, போன்வர்கள் புகழ்மிக்க படைத்தலைவர்களாகவும் மிளிரத்தொடங்கினர்.

இவர்க்ளை தவிர தீரமிக்க வேறு தாக்குதல் தளபதிகளும் உருவாகி இலங்கை அரசுக்குபடைகளுக்கு போர் அரங்கில் சிம்ம சொர்ப்பணமாக விளங்கத்தொடங்கினர். இவ்வாறு பிரபாகரனை தவிரவும் வேறு இரண்டாம் நிலை இராணுவ தளபதிகள் உருவெடுத்தமையினால் இயல்பாகவே உருவான போட்டி பொறாமைகளினால் புலிகள் இயக்கத்தினுள் உள்முரன்பாடிகள், சீர்குலைவுகள் ஆரம்பித்திருந்தாலும் இலங்கை படைகள் போன்று சீராழிவுகள் அவர்களிடத்தில் காணப்பட்டிருக்கவில்லை.

இலஞ்சம், ஊழல், பணத்துக்காக இராணுவ இரகசியங்களை புலிகளுக்கு வழங்குதல், புலிகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு அரசு கட்டுப்பாட்டு பகுதிகளில் உதவுதல், மக்கள் மத்தியில் இராணுவம் தொடர்பில் பயத்தையும் வெறுப்பையும் உருவாக்குவதற்க்காக புலிகளுடன் இணைந்து செயற்படல், அரசியல்வாதிகளையும், உயர் அதிகாரிகளையும் திருப்திபடுத்தல், புலிகளிடம் பணத்தை வாங்கிக்கொண்டு போர்களங்களில் இருந்து தப்பியோடுதல் இதன் மூலம் போரில் இராணுவத்தை தோல்வியடையச்செய்தல் இவ்வாறு பல்வேறு ஒழுக்கவீன செய்ற்பாடுகளால் புலிகளுடனான போரில் வெற்றிபெறமுடியாத ஒரு படைகளாகவே இலங்கை படையினர் ஈழப்போர் III நிறைவு பெறும் வரை இருந்தனர்.

தொழில்முறை இராணுவமாக வெற்றிகரமான இராணுவ நடவடிக்கைகளை அவ்வப்போது அரசு படைகள்செய்த்திருந்தாலும் அதன் மூலம் கைப்பற்றப்படும் பிரதேசங்களின் ஆள்புல ஒருமைபாட்டை பெரும்பாலும் தக்கவைக்க முடியாதவர்களாகவே அரசு படையினர் இருந்திருக்கின்றனர். ஈழப்போர் IIIன் இறுதிபகுதியில் அவர்கள் வெறும் தற்காப்பு தாக்குதலை மட்டுமே செய்யும் இராணுவமாகவும் தம்மை காப்பாற்றிக்கொள்ள வெளிநாட்டுகளின் உதவியை பெரும் நிலைக்குள் தள்ளப்பட்டும் இருந்தனர். புலிகள் போன்றில்லாமல் அரசியல், இராணுவ தலைமைத்துவம் வெவ்வேறானவையாகவும், இராணுவ கட்டமைப்பில் அரசியல் கட்சிகளின் செல்வாக்கு இருந்தமையுமே இலங்கை படைகளின் இந்த நிலைமைக்கு காரணம் இருந்தது.

முன்னைய இரண்டு போர்களிலும் அரசு படைகளை விட புலிகளுக்கே போர்நிறுத்தம் தேவையாக இருந்தது. காரணம் சிதைவடைந்த தமது போர் படைகளை மீள ஒழுங்கமைத்துக்கொள்ளவும், அடுத்த சில ஆண்டுகளுக்கு போரை தொடர்வதற்கான தயார் படுத்தல்களில் ஈடுபடுவதற்கும் அவர்கள் போர்நிறுத்தங்களை பயன்படுத்திக்கொண்டனர். ஈழப்போர் Iன் முடிவில் பிரேமதாச அரசுடனான சமாதான பேச்சுக்களின் போது ஈழப்போர் IIற்கான தயார் படுத்தலிலும் பின்பு சந்திரிகா அரசுடனான பேச்சுக்களின் போது ஈழப்போர் IIIற்கான தயார் படுத்தலிலும் புலிகள் ஈடுபட்டிருந்தனர்.

ஆனால் ஈழப்போர் IIIல் ஏற்பட்ட இழப்புக்களால் அரசாங்கமும் போர்நிறுத்தம் ஒன்றை விரும்பியிருந்தது. அத்துடன் போரை தொடர்ந்து மேற்கொள்ளும் மனவுறுதியை இழந்திருந்த படையினருக்கு ஒரு போர் ஓய்வு அவசியமானதாகவும் இருந்தது. புலிகளின் “ஓயாத அலைகள்” இராணுவ நடவடிக்கையின் மூலம் முல்லைதீவு இராணுவமுகாம் தாகுதல் வெற்றி , வவுனியா வடக்கில் நிலைகொண்டிருந்த படையினரை பின்வாங்கி ஓமந்தை வரை ஓடச்செய்தமை, ஈழப்போர்களின் பெரும் கௌரவமாக இருதரப்பும் கருதிய ஆனையிரவு இராணுவ தளத்தினை தாக்கியளித்ததுடன் யாழ்குடாநாட்டில் நிலைகொண்டிருந்த அரசு படைகளை நெருக்கடிக்குள் தள்ளியமை என தொடர் வெற்றிகளால் ஏற்பட்ட இராணுவ சமநிலை மாற்றம், கட்டுநாயக்க விமாநிலையம் மீதான தாகுதல் மூலம் அரசை ஆட்டம் காணச்செயதமை என வெற்றிப்படியில் நின்றிருந்த புலிகள் 2001 ஆகஸ்ட் 30 அரசு அறிவித்த போர்நிறுத்ததை நிராகரித்திருந்தனர்.

ஆனாலும் 2001செப்டம்பர் 11ல் உலக மகா வல்லரசான ஐக்கிய அமெரிக்க குடியரசுகள் மீது அல்கொய்தாவின் தாக்குதல் ஒரு முக்கியமான திருப்புமுனையை உலக வரலாற்றில் ஏற்படுத்தியது. அதுவரை இருந்த உலகின் தலையெழுத்தை தலைகீழாக மாற்றி எழுதியது. புதிதாக உருவாக்கப்பட்ட உலக ஒழுங்கு ஏனைய நாடுகளை போலவே இலங்கையிலும் மாற்றத்தை உருவாகியது. ஈழதமிழரின் வரலாற்று காட்சிகளும் மாறத்தொடங்கின. அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் கைங்கரியத்தால் அதுவரை எதிரிகளாக இருந்தோர் நண்பர்களாகினர், நண்பர்கள் எதிரிகளாகினர். துரோகிகள் தோழர்களாகினர். தோழர்கள் துரோகிகளாகினர்.

தமது முகத்தில் பூசப்பட்ட கரியை துடைப்பதற்கு அமெரிக்கா உடனடியாகவே நடவடிக்கையில் இறங்கியது. அங்கீகரிக்கப்பட்ட அரசுகளுக்கு எதிராக ஆயுத போரில் ஈடுபட்டவர்களை அதுவரை கண்டுகொள்ளாமல் இருந்த அமெரிக்கா, அவர்களையெல்லாம் “பயங்கரவாதிகளாக” பிரகடணப்படுத்தியது. தமது நாடுகளில் இவ்வாரான ஆயுத போராட்டங்களை சந்தித்து வந்த அரசுகளுக்கெல்லாம் அமெரிக்காவின் உதவி கிட்டியது. இலங்கைக்கும் கிட்டியது.

2001 ஜூலை 24ல் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் மீது புலிகள் நடத்திய தாக்குதலானது இலங்கை அரசுக்கு பெரும் பின்னடைவை கொடுத்தது போலவே 2001 செப்டெம்பர் 11ற்கு பின்பு புலிகளுக்கும் பாதகமாகவே அமைந்தது. அமெரிக்காவின் பயங்கரவாத பட்டியலில் புலிகளும் உள்ளடக்கபட்டனர். பயங்கரவாத எதிர்ப்பு போரில் இறங்கியிருந்த அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் இலங்கையிலும் நேரடியாக தலையிடும் புறச்சூழல் உருவனது.

இவ்வாறு தமக்கு பாதகமாக சூழல் உருவானதை சமாளிக்க ஏதாவது ஒன்றை செய்யவேடிய கட்டாயத்தினுள் புலிகள் தள்ளப்படனர்.ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தொடங்கிய நோர்வே அனுசரணை சமாதான முயற்சிகளை பற்றிக்கொள்ள அவர்கள் முயற்சித்தனர். அத்தோடு தமது ஆயுத போராட்டமானது முற்றிலும் தமிழரின் சுயநிர்ணயம் சார்ந்ததே அன்றி இலங்கையின் இறையாண்மை மீது நடத்தப்படுகின்ற வலிந்த பயங்கரவாத தாக்குதல் அல்ல என்கின்ற தோற்றத்தையும் சர்வதேச அரங்கில் உருவாக்கவேண்டிய தேவை புலிகளுக்கு ஏற்பட்டது.

எனவேதான் அவர்கள் 1980களில் தங்களால் அழித்தொழிக்கப்பட்ட மென் அரசியலுக்கு உயிர்கொடுக்க முன்வந்தனர். புதிதாக உயிரூட்டப்பட்ட மென் அரசியலுக்கு தமது உறுப்பினர்களையோ அல்லது தமது ஆதரவாளர்களையோ பயன்படுத்தி கொண்டால் அது தாம் கூறமுயலும் செய்தியின் மீது சர்வதேச சமூகத்துக்கு நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தும் என்பதால் அவர்கள் வேறு நபர்களையே இதற்காக பயன்படுத்தவேண்டியிருந்தது.

மிதவாத தமிழ் அரசியல்வாதிகளாக சர்வதேச அரங்கில் இலங்கை அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு, அரவணைக்கப்பட்ட சில தமிழ் அரசியல்வாதிகள், ஆயுதங்களை கைவிட்டு ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் இணைந்துவிட்டதாக தங்களை அறிவித்துக்கொண்ட முன்னாள் போராளிக்குழுக்களை சேர்ந்த சிலரையும் அதுவரையும் தமிழரின் அரசியல்வரலாற்று காட்சியில் தோன்றாத ஏனைய சிலரையும் அழைத்து 2001 ஒக்டோபர் 20 ல்“தமிழ் தேசியம்” என்னும் புதிய முகமூடி அணிவித்து அவர்களூடாக தமது செய்தியை புலிகள் சர்வதேச சமூகத்துக்கு வழங்க முயன்றனர்.

அதாவது தமிழர்களின் ஏகபிரதிநிதிகளாக அதுவரை தம்மை முன்னிலை படுத்திக்கொண்ட புலிகள் முதன் முறையாக தமிழ் மென் அரசியல் என்கின்ற பிரதிநிதிகளும் தமிழர்தரப்பில் உள்ளனர் என சர்வதேசத்துக்கு கூறியதோடு மட்டுமல்ல தாமும் ஏற்றுக்கொள்ளவேண்டியதாயிற்று.

சுமார் இரு தசாப்பத்ங்களுக்கும் மேலாக ஈழத்தமிழ் அரசியலுக்கு தலைமை தாங்கிய புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் முதன் முறையாக தமிழ் மென்அரசியலுக்கு தலைமையேற்க 1977 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் திருகோணமலைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரான இராஜவரோதயம் சம்பந்தனை தெரிவுசெய்யவேண்டியதாக இருந்தது.

தமது ஆயுத வன் அரசியலுக்கு தற்காலிக ஓய்வளித்து சம்பந்தன் தலைமையில் மென் அரசியலை முன்னிலைபடுத வேண்டும் என்கின்ற ஒரெயொரு தெரிவு மட்டுமே அன்று பிரபாகரனிடம் இருந்தது. இதனை புலிகளின் ஒரு சாதுரியமான நடவடிக்கையாக இன்றுவரை சிலர் பார்கின்றனர். ஆனால் பதினெட்டு ஆண்டுகளின் பின் சம்பந்தன் தலைமையில் புத்துயிர் அளிக்கப்பட்ட இம்மென் அரசியலின் பாராளுமன்ற பிரவேசம் சர்வதே அரசியல் வியூக வகுப்பாளர்களுக்கு ஒரு செய்தியை வழங்கியிருந்தது“தமிழ்மக்கள் ஆயுத வன்அரசியலை விட, ஜனநாயக மென்அரசியல் விரும்புகிறார்கள் அதுவே அவர்களின் அரசியல் தெரிவு, ஆயுத வன் அரசியல் என்பது அவர்கள் மீது வலிந்து திணிக்கப்பட்ட ஒன்று” என்பதே அந்த அழுத்தமான செய்தியாகும்.

புலிகளின் செயற்பாடுகளில் இணக்கமற்றிருந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசியல் வியூக வகுப்பாளர் அதனையே தமக்கு கிடைத்த துருப்புச்சீட்டாக பயன்படுத்திக்கொள்ள முயற்சித்தனர். புலிகளால் வீரியத்தோடு முன்னெடுக்கப்பட்ட வன் அரசியலை அழித்தொழிக்கும் சதிவலையை பின்னத்தொடங்கினர். பிரதமர் ரணில் விக்ரமசிங்கா தனது அமைச்சர்களான மலிந்த மொரகொட போன்ற இராஜதந்திரிகள் மூலம் இந்திய, அமெரிக்க அரசுகளோடு இணைந்து இச்சதிதிட்டத்திதை மிகசரியாக நகர்த்தி சென்றாதாக கூறப்படுகின்றது.

இதற்கு சமாந்தரமாக முற்றிலும் வேறுமாதிரியான மறைமுக மனவியல் போரையும் புலிகள் இயக்க உறுப்பினர்கள் மீது பிரதமர் விக்ரமசிங்கா தலைமயிலான ஐக்கிய தேசிய முன்னனி அரசு நடத்தியது. இலங்கைக்கு உதவிவழங்கும நாடுகள் அல்லது இணைத்தலைமை நாடுகள் என்று தம்மை அழைத்துக்கொண்ட ஜப்பான், நோர்வே, ஐரோப்பிய யூனியன் போன்றவை பிரதமர் ரணிலின் இந்த முயற்சிக்கு தாராளமாகவே உதவின.

அதுவரை போரில் மட்டுமே ஈடுபாடுகாட்டிய புலிகளின் வலிமைமிக்க படையணிகளை சேர்ந்தவர்களிடம் அவர்களின் மூர்கமான போரிடும் மனநிலையில் சிதைவையை ஏற்படுத்தி அவர்களின் போரிடும் ஆற்றலை நீர்த்துபோக செய்வதோடு, புலிகள் இயக்கதுக்குள்ளேயே முரன்பாடுகளையும் தோற்றுவிக்க முயற்சித்தனர். இச்சதிமுயற்சியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கா வெற்றியும் பெற்றார்.

தமது இயக்க உறுப்பினர்கள் மீதும் வடகிழக்கு தமிழ் மக்கள் மீதும் தமக்கிருந்த பிடி தளர்வடைவதை உணர்த பிரபாகரன் அதில் இருந்து சுதாகரித்துக்கொள்ள முயன்றபோது அவரின் புலிகள் இயக்கம் முன்னெப்போதும் சந்திக்காத பெரும் பிளவை மார்ச் 2004ல் சந்தித்தது. இப்பிளவனது புலிகளின் போரிடும் ஆற்றலை சிதைத்ததோடு பின்நாட்களின் அவ்வியக்கத்தின அழிவுக்கு வித்திட்ட பல காரணிகளில் முதன்மையானதாகவும் மாறியது.

பிரதமர் ரணிலின் இச்செயலுக்காக பழிவாங்க்கும் முகமாக 2005ல் ஜனாதிபதிதேர்தலில் அடுத்துவரும் ஆறு ஆண்டுகளுக்கு அவரின் அரசியலை செயலிழக்க செய்யும் செயலை புலிகளின் தலைவர் பிரபாகரன் செய்ய முனைந்தார். அத்தோடு தன்னைப்போலவே கடும் போகுவாதியாக அறியப்பட்ட பிரதமர் மகிந்த ராஜபக்சாவின் வெற்றிக்கு வழி ஏற்படுத்தும் வகையிலும் பிரபாகரனின் இந்த செயல் அமைந்தது. இதனால் தனக்கு சாதகமான சூழல் சர்வதேச அரங்கில் மீண்டும் ஏற்படும் எனவும் அவர் நினைத்திருக்க கூடும். ஆனால் அது விரைவிலேயே வேறு மாதிரியான காட்சி களத்தை புலிகளுக்கு உருவாகும் என்பதை அவரால் அப்போது அறியமுடியாமல் போனது அவரின் நீண்டகால போராட்ட வாழ்வின் மிகபெரும் சறுக்கலாகவே இருந்தது.

புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட மகிந்த ராஜபக்சவின் இலங்கை வரலாற்ரில் வேறு எவரையும் விட அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்ததோடு சர்வதேச ஆதரவையும் பெற்றுக்கொண்டார். மகிந்த ராஜபக்சவின் எழுச்சியோடு இலங்கை தீவில் தமிழ்பேசும் மக்களுடைய பிரச்சினையை தீர்கவேண்டும் என்பதை ஏற்றுக்கொண்ட சர்வதேச சமூகம் அதற்காக தமிழர்கள் வன் அரசியல் மூலம் அத்தீர்வை அடையமுயல்வதை நிராகரித்ததது. அவ்வரசியலை முன்னெடுத்த புலிகள் இயக்கத்தினரையும் அங்கீகரிக்க மறுத்துவிட்டது. பதிலாக புலிகளால் புத்துயிரளிக்கப்பட்ட மென் அரசியலை ஏற்றுக்கொண்டு அதனை பலப்படுத்தி வன் அரசியலை வலுவிழக்க செய்யவும் முயன்றது. பிரபாகரனின் துனையுடன் எழுச்சிபெற்ற ராஜபக்சாவைத்தே பிரபாகரனின் வீழ்ச்சியை சர்வதேசம் திட்டமிட்டது.

2001 இரட்டை கோபுரதாக்குதலினால் கோபமடைந்த அமெரிக்காவின் பார்வையில் இருந்து தப்பிக்கொள்வதற்காக புலிகள் சமாதானபேச்சுக்களில் தம்மை வலிந்து இணைத்துக்கொண்டபோதே, புலிகளின் திட்டத்தை நன்கு விளங்கி கொண்ட மேற்குலகும் இந்தியாவும் உசாரடைந்தனர். அவர்கள் ஒரு மாற்று திட்டத்தினையும் திட்டமிட்டிருந்தார்கள் என கூறலாம். இதன்படி தமக்கு சாதகமான காலம் வரும்போது புலிகள் மீண்டும் போரைத்தொடங்குவார்கள் என திடமாக நம்பிய அவர்கள் அதையே சாட்டக வைத்துக்கொண்டு புலிகளை ஒழித்துக்கட்டுவதற்குகாக அந்த திட்டத்தை வகுத்திருந்தனர். இலங்கையில் அரசியலிலும் இராணுவத்துக்கும்உறுதியான தலைமைத்துவதை வழங்ககூடியவர்களை அவர்கள் தெரிவுசெய்ய முயன்றனர்.

அப்போதைய ஆளும் ஐக்கியதேசிய கட்சியில் அவ்வாறனவர்கள் இல்லாத நிலையிலும் ஜனாதிபதி சந்திரிக்காவின் பதவிக்காலம் முடிவடைகின்ற நிலையிலும் அவருடைய இடத்துக்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்குள் நான்காவது இடத்தில் இருந்த மகிந்த ராஜபக்சவே அவர்களின் தெரிவாக இருந்தார். அதன்படி கட்சியின் மூத்த உறுப்பினர்களான ரட்ண ஸ்ரீ விக்ரமநாயக்க, டி.எம். ஜெயரட்ண ஆகியோர் புறந்தள்ளப்பட்டு மகிந்த ராஜபக்ச சிறிலங்கா சுதந்திர கட்சிக்குள் ஜனாதிபதி சந்திரிக்காவிற்கு அடுத்த நிலையில் கொண்டுவரப்பட்டு எதிர்கட்சி தலைவராக்கப்பட்டு பின்னர் பிரதமராக்கவும் ஆக்கப்பட்டிருந்தார்.

பிரபாகரனை ஏமாற்றுவதன் மூலமே இவரால் ஜனாதிபதியாக முடியும் என்ற நிலைதோன்றியபோது இவரை கொண்டே பிரபாகரனின் பலவீனத்தை பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டனர்.
ஒரு கட்டத்தில் எதிர்பார்த்தபடியே சமாதான பேச்சுக்களில் இருந்து புலிகள் நழுவதொங்கியபோது திட்டமிட்டபடி ரணில் அரசாங்கம் வெளியேற்றப்பட்டு மகிந்த பிரதமராகப்பட்டார். மகிந்த ராஜபக்ச அரசியல் தலைமைத்துவத்துக்கு உயர்த்தபட்ட அதேவேளை இராணுவத்திலும் மூன்றாவது நிலையில் இருந்த சரத் பொன்சேகாவை ஜனாதிபதி சந்திரிக்கா முதல்நிலைக்கு கொண்டுவந்தார். இராணுவ தளபதியாக பதவிவழங்கப்பட்ட சரத் பொன்சேகா இராணுவத்தை முழு அளவிளான போருக்கு தயார்படுத்தியும் கொண்டார். இறுதியாக முழு அளவில் போர் வெடித்தபோது அரசியல் தலைமையில் மகிந்தவும் இராணுவதலைமையில் பொன்சேகாவும் நன்கு நிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.

தொடரும்..

(Rajh Selvapathi)