100/= சம்பள உயர்வுக்காக போராட அமைச்சர்கள் அழைப்பு விடுப்பது வேடிக்கையானது – மக்கள் தொழிலாளர் சங்கம்

கூட்டு ஒப்பந்தம் சட்டப்படி இரத்துச் செய்யப்படாமல் இருக்கும் நிலையில், அதனடிப்படையில் நாளாந்த சம்பளமாக 1000/= வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதாக இருக்கும் பின்னணியில், கூட்டு ஒப்பந்தத்திற்கு வெளியில் நாளாந்த 100/= (மாதம் 2500/=) சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுப்பதற்காக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க கபினட் அமைச்சர்கள் தொழிலாளர்களை போராட்டத்திற்கு அழைப்பு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் விடுத்திருப்பது வேடிக்கையானது என்பதுடன் தொழிலாளர்களின் 1000/= சம்பள உயர்வு கோரிக்கையை காட்டிக் கொடுத்து பெருந்தோட்டக் கம்பனிக்கு துணைப் போகும் நடவடிக்கையாகும்.

1000/= சம்பள உயர்வை இ.தொ.க. முன்மொழிந்திருந்தாலும் அது அனைத்து பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கையாகியுள்ளது. நியாயமான அக் கோரிக்கையை நாளந்தம் 100/= என்ற கோரிக்கைக்கு தாழ்த்துவது நேர்மையான அணுகுமுறையாகாது.

2003ஆம் ஆண்டு பெருந்தோட்டக் கம்பனிகள் சார்பாக இலங்கை முதலாளிமார் சம்மேளனமும் தோட்டத் தொழிலாளர்களின் சார்பாக இ.தொ.கா., இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், பெருந்தோட்டத் தொழிற்சங்க கூட்டு கமிட்டு என்பனவும் செய்துக் கொண்ட பெருந்தோட்டத் தொழிற்துறைக்கான கூட்டு ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்ட சட்டமாக இன்னும் அமுலில் இருக்கிறது. அதை இரத்து செய்ய வேண்டும் எனில் அதில் சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் அல்லது இலங்கை முதலாளிமார் சம்மேளம் தன்னிச்சையாக அறிவித்து முடிவுக்கு கொண்டு வரலாம். அல்லது இரு தரப்பும் இணங்கி முடிவுக்கு கொண்டு வரலாம். அவ்வாறு முடிவுக்கு கொண்டு வரும் போது தொழில் ஆணையாயர் நாயத்திற்கு அறிவித்து அவர் இரத்துச் செய்யப்பட்டதை அரசாங்க வர்த்திமானியில் அதனை வெளியிட வேண்டும். எனவே கூட்டு ஒப்பந்தத்தை தனி நபர்களின் பத்திரிக்கை அறிக்கைகளினால் முடிவுக்கு கொண்டு வர முடியாது.

2003ஆம் ஆண்டு செய்துக் கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் ஒரு ஏற்பாட்டின் அடிப்படையிலேயே 02 வருடங்களுக்கு ஒரு முறை தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் புதிய உடன்பாடு செய்து கொள்ளப்பட வேண்டும். அந்த எற்பாடு கடந்த வருடம் ஏப்ரல் 01ஆம் திகதியுடன் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சம்பள உயர்வு பற்றி இணக்கம் காணப்படாமையால் ஒரு வருடத்திற்கு மேலாகியும் சம்பளம் தொடர்பாக உடன்பாடு எட்டப்படிவில்லை. எவ்வாறாயினும் அதன் காரணமாக கூட்டு ஒப்பந்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கூற முடியாது. தொழிலாளர் சார்பாக கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டும் சங்கங்களின் ஒன்றாகிய இ.தொ.க ஒரு நாள் சம்பளமாக 1000/= அறிவித்திருந்தாலும் அது அனைத்து தொழிலாளர்களின் கோரிக்கையாகியுள்ளமையை மறுக்க முடியாது.

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்ட நிலையில், தனியார் ஊழியர்களுக்கும் 2500 உயர்வை வழங்கும் படி தனியார் துறையை கட்டயாப்படுத்துவதற்காக 2016ஆம் ஆண்டு 4ஆம் இலக்க நிவாரணப் படி சட்டம் அமுலில் உள்ளது. அதன் அடிப்படையில் தோட்டத் தொழிலாளர்களுக்கும் சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என தொழில் அமைச்சர் ஜோன் செனவிரத்தின கூற காரணம் தோட்டத் தொழிலாளகளுக்கு கூட்டு ஒப்பந்த அடிப்படையில் சம்பள உயர்வு தொடர்பில் இணைக்கம் காணப்படாமையினால் ஆகும்.

2016ஆம் சட்டத்தின்படி வழங்கப்பட வேண்டிய மாதாந்த 2500/= கொடுப்பனவு அதாவது நாளொன்றுக்கு 100/= சம்பள உயர்வை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க நிற்பந்திப்பது சட்டப்படி சிக்கலானதாகவே இருக்கும். ஏனெனில் கூட்டு ஒப்பந்தப்படி சம்பளத்தை பெறுகின்றவர்கள், நியதிச்சட்ட அல்லது அரசாங்கத்தின் தீர்மானத்தின்படியான பெற உரித்துடையவர்கள் இதற்கு உரித்துடையவர்கள் அல்ல. கூட்டு ஒப்பந்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டாலும் எந்த அடிப்படையில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட வேண்டம் என தீர்மானிக்கப்பட வேண்டும். இது ஒருபுறமிருக்க நாளாந்தம் 1000ஃஸ்ரீ கோரும் தொழிலாளர்களுக்கு ரூபா. 100/= சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுக்க போவதாக தொழிலாளர்களை போராட்டத்திற்கு அழைப்பது வேடிக்கையானது. இது ஒரு வகையில் தொழிலாளர்களின் 1000/= கோரிக்கையை காட்டிக் கொடுத்துவிட்டு பெருந்தோட்ட கம்பனிக்கு துணைப்போவதாகும். இது வாழ்கை செலவு படியாக 17.50/= வேண்டும் என போராடிய போது வெறும் 10 சதம் போதும் என இணங்கிய காட்டிக் கொடுப்பு வரலாற்றை நினைவுப்படுத்துகிறது.

1000/= நாளாந்த சம்பளமாக பெற்றுக் கொடுக்க இ.தொ.க உட்பட கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்காது வாய் சவடால்களை செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதற்காக பேச்சுவார்தைகளின் ஒரு கட்டத்தில் ரூபா 800/= அதிகமாக வழங்க கம்பனிகளுக்கு உடன்பாடுகள் இருந்த நிலையில், 2016ஆம் சட்டத்தின் படியான நாளாந்தம் 100/= சம்பள உயர்வுக்ககாக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் போராடப் போவதாகவும் அதற்கு தொழிலாளர்களை அழைப்பது வேடிக்கையானது. இதற்கு தொழிலாளர்கள் ஒத்துழைப்பது தற்கொலைக்கு ஒப்பானதாகும்.

எனவே, இருக்கும் வழிமுறைகளில் ஒப்பீட்டளவில் பாதுகாப்பான ஏற்பாடுகளை கொண்டிருக்கும் கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் அதற்கு வெளியிலும் நாளந்தம் 1000/= சம்பளம் என்ற கோரிக்கையை வென்றெடுக்க எல்லா தொழிற்சங்கங்களும் அமைப்புகளும் பொது இணக்கப்பாட்டுடன் பொதுவான நடவடிக்கைகளை மேற்கொள்ளவதே ஏற்புடையதாகும்.

இ. தம்பையா
பொதுச் செயலாளர்
மக்கள் தொழிலாளர் சங்கம்