ஈ பி டி பி க்குள் பிளவு வெறு வாய்களுக்கு கிடைத்த அவல்?

காத்திருந்த செய்தி கிடைத்ததும் போட்டுத் தாக்கும் முனைப்பு மீண்டும் முளைவிடுகிறது. உடைந்தது ஈபிடிப!, பிளந்தது கட்சி! வெளியேறினார் சந்திரகுமார்! என தம் விருப்பு தலையங்கம் இட்டு தம்மை திருப்திப்படுத்த முற்பட்ட எதிர்பார்ப்பு அன்பர்கள் அறியாத ஒரு விடயம், ஈபிடிபியில் தலை இருக்க வால்கள் ஆட முடியாது. அவை வாலாட்ட மட்டுமே முடியும் என்பதே. தன்னை முன்னிலை படுத்துவதில் தேவானந்தாவுடன் யாரும் போட்டி போட முடியாது. நண்பர் கூட்டத்திற்கும் தலைமை வகிப்பார், இயக்கத்திலும் முன்னிலை பெறுவார் கட்சியிலும், அரசியலிலும் தன் தலைமையை தக்க வைப்பார்.

1974 தொடக்கம் 1981ல் அவர் சிறை செல்லும் வரை, எமது கொழும்பு வெள்ளவத்தை நண்பர் குழாமின் தலைமை அவர் வசம். 1983 மட்டக்களப்பு சிறை உடைப்பின் பின் ஈ பி ஆர் எல் எப் இராணுவ தளபதி தலைமை அவரிடம். இங்கு ஒரு சம்பவம் குறிப்பிடப்பட வேண்டும். இந்திய ராணுவ பயிற்சிக்காக உத்தரபிரதேச ஜார்கண்ட் மாநிலத்தில் டேராடூன் இராணுவ முகாமில் பயிற்சி எடுத்த வேளை, இந்திய இராணுவ உயர் அதிகாரிகள் கல்லாறை சேர்ந்த சிவாவின் செயல் திறன், சுகவீனமுற்ற சக தோழர்களை அவர் பராமரித்த விதம் என்பவற்றை கவனித்து அவரை இராணுவ பொறுப்பாளராக நியமிக்ககூடிய தகுதி வாய்ந்தவர் என இயக்க தலைமைக்கு அறிவித்தனர்.

ஏற்கனவே கந்தளாய் சின்னவனை ஈரோசில் இருந்து விலகி எம்மிடம் இணையுங்கள் உங்களை இராணுவ பொறுப்பாளர் ஆக்குவோம் என கூறியிருந்த போதும் தேவானந்தா சிறை மீண்டதும் இராணுவ பொறுப்பாளர் ஆகிவிட்டார். இந்த நிலையில் மேலும் சிக்கல்களை தவிர்க்க சிவாவை மத்திய குழுவில் உள்வாங்கும் யோசனை, குண்சியால் முன்மொழியப்பட்ட போது இராணுவத்தை சேர்ந்த இருவர் மத்திய குழுவில் இருக்க முடியாது என்ற தேவானந்தாவின் முடிவு மீறப்படவில்லை. ஆக எங்கும் எதிலும் தன்னை முன்னிலை படுத்துவது தேவானந்தாவின் இறுக்கமான முடிவுகள் மற்றும் விடாமுயற்சி. சரி பிழைகளுக்கு அப்பால் தான் அடைய வேண்டிய இலக்கை எந்த வழியிலாவது அடைவதில் அவர் கில்லாடி.

இந்தநிலையில் கும்பகோணம் பாசறையில் இருந்து யாழ் திரும்பிய தேவானந்தா தன்னை வெறும் ராணுவ தளபதியாக மட்டுமல்ல இயக்கத்தின் தலைவனாகவும் ஏற்கும் அளவுக்கு செயல்களை முடுக்கி விட்டார். இங்கு தான் முந்திரி கொட்டை மூக்கை ஓட்டியது. முதலாவது காரைநகர் கடல் படை தள தாக்குதலுக்கு திட்டமிடப்பட்ட பின்பு, தான் வந்த பின் தாக்குதலை நடத்தும்படி தேவா அறிவித்திருந்த போதும் அந்த வெற்றி தன் தலைமையில் கிடைக்க வேண்டும் என்ற நப்பாசையில் சுரேஸ் தாக்குதலை நடத்தி மண்கவ்விய பின், அதுவரை ஒரு அணியாக இருந்த மக்கள் விடுதலை படை PLA [People Liberation Army] தேவா அணி, சுரேஸ் அணி என செயல்ப்பட தொடங்கியது. தொடர்ந்து மண்ணில் நின்று செயல் பட்டதால் தேவா அணி பலமானதாகவும், காதல் சுகம் தேடி சுரேஸ் அடிக்கடி கடல் கடந்து போனதால் அந்த அணி பலவீனம் அடைந்தது.

நாரதர் தன் வேலையை நாபாவிடம் ஆரம்பித்தார். தேவா தலைமைக்கு சவாலாக மாறுவதாக வத்தி வைத்தார். தலைமைதத்துவத்தை விரும்பாத நாபா அதனைப்பற்றி கவலைப்படவில்லை. கும்பகோணம் ஸ்டலின் அண்ணாவும் தேவாவை நம்பினார். முயற்சி புஸ்வானம் ஆனதால் முடங்கி கிடந்த மூக்கோட்டியர், மூக்கு வியர்க்கும் செயலை தேவா மண்ணில் செய்தார். இயக்கத்திற்கு ஆயுதம் வாங்க பெரு நிதி தேவைப்பட்டது. இயன்றவரை எல்லா இயக்கங்களும் வங்கிகளை வழித்து விட்டனர். எஞ்சியது கோவில்களும், பணம், பொன் உடைய பொதுமக்களும் தான். பெருமாள் கோவில் சங்கு உட்பட அனைத்தும் கபளீகரம் செய்யப்பட்டது. தென்மராட்சியில் தொடங்கி குடாநாட்டு மக்களின் பணம், பொன் இயக்க நிதியாக மாறியது.

சந்தர்ப்பவாதியார் அரசியல் பிரிவை தூண்டிவிட்டார். மக்கள் ஆய்வு பிரிவு[ MAP] முனகத்தொடங்கியது. அனைத்து விரல்களும் ஒருவர் பக்கம் நீண்டது. மத்திய கமிட்டி கூட வேண்டும் என கூற, தேவா அனைவரும் மண்ணுக்கு வாருங்கள் கூடுவோம் என்றார். உடனடியாக வர முடியாததால் காலதாமதம் ஏற்பட தேவா தன்னை பலப்படுத்திக் கொண்டார். தேவாவுடன் ஒத்துளைக்காதவரை சுரேஸ் தன்பக்கம் இழுக்க பிரதேசவாதம் துளிர்விட்டது. மட்டக்களப்புக்கு ஆயுதம் வழங்கவில்லை என்ற குற்றம் தேவா மீது. கோப்பாயில் தங்கவைக்கப்பட்ட மட்டக்களப்பு தோழர்களுக்கு சுரேஸ் புதிய போட் [Boat] ஒன்றை வார்பித்து கொடுக்க, தாளையடியில் இருந்து புறப்பட்ட அந்த போட் இந்தியா சென்று ஆயுதங்களுடன் மட்டக்களப்பு கிரான்குளம் கரையை வந்தடைந்தது.

நிலைமை கைமீறி போகாதிருக்க நாபா மண்ணுக்கு வந்தார். தேவாவின் வரவேற்பு சுமுகமாக இல்லை. கபூர் தான் நாபாவின் பாதுகாப்பு ஏற்பாட்டை செய்தார். நாபா தங்க வீடு கூட இல்லாத நிலையில் கபூர் கேட்டதால், எனது மாமாவின் வீட்டை பெற்றுக்கொடுத்தேன். நிலைமையை சீராக்க வந்த நாபா புலிகள் டெலோ மோதலால் மோசமான நிலைமையை கவனத்தில் கொண்டு, மீண்டும் இந்தியா திரும்பினார். அரசியல் பிரிவு, மக்கள் ஆய்வு பிரிவு, இராணுவ பிரிவு, இராணுவ புலனாய்வு பிரிவு என பிரிந்தே செயல்படும் நிலை தொடர்ந்தது. திரட்டிய நிதியத்தை ஆயுதமாக்க தேவா முனைந்தார். கடல் பயண ஒழுங்கில் ஏற்பட்ட தவறால் இமாம், செண்பகம் உட்பட பல முன்னணி முக்கிய தோழர்கள் கடலுக்கு இரையாகினர். தங்கமாக மாறிய நிதியும் கடலில் சங்கமமாகியது.

விடாகண்டன் சூளைமேட்டில் முகாமிட்டார். நிலைமையை சீராக்கும் பேச்சுவார்த்தையின் இடையில் துன்பியல் சம்பவம். இன்று அதன் நீட்சி வீடியோ கன்பரன்சிங்கில் சாட்சியம். இறந்தவர் வக்கீல். எம் ஜி ஆர் சினம் தணிக்க தேவானந்தாவை இயக்கத்தில் இருந்து நீக்கியதாக அறிவித்து, இயக்கம் தன்னை காப்பாற்றி கொண்டது. அதே வேளை காலம் அறிந்து தாக்குதலை புலிகள் நடத்தி மண்ணை விட்டு ஈபி யை விரட்டியது. வன்னி காட்டில் வெற்றி தலைமையிலும் [பெருமாள் கோவிலடி பேள் மெற்றல் ரவியின் தம்பி] உகந்தை காட்டில் ரட்ணம் தலைமையிலும் தோழர்கள் பதுங்க, சுரேஸ் கொழும்பு தொடர்பூடாக விமானம் மூலம் பாதுகாப்பாக சென்னை விஜயம். குளத்தை கலக்கி கொக்கிடம் கொடுத்தது போல, மூக்கோட்டி சுரேஸ் நெருப்பு தினம் நடத்தியதால் கந்தன் கருணையில் அருணா எனும் புலியால், பல முன்னணி தோழர்கள் பரலோகம் போயினர்.

இயக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட தேவாவின்பின் ரமேஸ் [அற்புதன்] ஈழமணி [டேவிட்சன்] இப்ராகிம் [சிவகரன்] மித்திரன் [அன்டன் மாஸ்டர்] நெடுந்தீவு சகோதரர் உட்பட பலர் சென்றனர். அவர்களில் முக்கியமானவர் அசோக் [சந்திரகுமார்]. நாபா திருமணம் முடிந்த உடன் நான் சந்திக்க விரும்பியது, சென்னை மத்திய சிறையில் இருந்த தேவாவை. ஸ்டாலின் அண்ணனிடம் கூறிய போது தடுத்தார். விளைவுகளை விளக்கினார். ஏற்காத நான் என் மனைவியுடன் 4 மணித்தியாலம் சென்றல் ஜெயில் வாசலில் காத்திருந்து அனுமதி பெற்று சந்தித்தேன். அவருக்கு தலகுளி பிடிக்கும் [எள் உருண்டை]. அனுப்ப வழி கேட்டேன். அசோக்கின் விலாசத்துக்கு அனுப்ப சொன்னார். குமரன் அச்சக உரிமையாளர் கணேசலிங்கத்தின் மகள் குந்தவை என் நண்பி. அடிக்கடி இந்தியா போய் வருபவர் அவர் மூலம் அனுப்புவேன். அதை தாங்கள் தின்றதாக மட்டக்களப்பு மணி பின்னாளில் கூறினார்,

இங்கு முக்கியமானது அன்று தேவா என்னிடம் நம்பிக்கையுடன் அடையாளம் காட்டியது அசோக்கை. ஆனால் யூ டூ ப்ருடஸ் [You Too Brutes] என தோழனை, தலைவனை ஏன் கேட்க வைத்தார் அசோக் எனும் சந்திரகுமார் என்பதே ஏன் ஐயம். நண்பர்கள் எதிரி ஆகலாம். நடுத்தெருவில் சண்டை செய்யலாம் எப்படி துரோகி ஆகலாம். விட்டு விலக எவர்க்கும் தார்மீக உரிமை. ஆனால் மீண்டும் இணைந்து ஒட்டி உறவாடி பெற்றதை எல்லாம் கக்கவா முடியும்? ரமேஸ் கொலை தவறு என கூறி முரண்பட்டு, சுற்றுலா விசாவில் லண்டன் சென்று தஞ்சம் பெற்று 10 ஆண்டுகள் வாழ்ந்து, இடையில் விட்டு விலகி லண்டன் வந்து தஞ்சம் கேட்ட தவராசாவுக்கு ஆலோசனை மற்றும் ஆறுதல் சொல்லி இருந்தபோது, தேவாவின் மறப்போம் மன்னிப்போம் என்ற அழைப்பை ஏற்று தாயகம் வந்து, தேர்தலில் கலந்து பாராளுமன்ற குழுக்களின் தலைவராகியவர் தாளையடி மைந்தன்.

தேவா, அசோக் உறவை என்னால் கணிப்பிட முடியாது. ஆனால் பொறுத்த காலங்களில் அசோக்கின் பங்களிப்பு கணிசமானது. சென்னை மத்திய சிறையில் இலங்கை சிறுவன் கப்பம் கோரி கடத்தப்பட்ட வழக்கில் தேவா, அவரது சகோதரர், ரமேஸ் உட்பட பலர் தடுத்து வைக்கப்பட்டிருந்த வேளை, வெளியில் இருந்து தேவா இட்ட பணிகளை செவ்வனே நிறைவேற்றியவர் அசோக். 1990ல் ஒரு அழைப்பு வந்தது. அழைத்தவர் வரதனின் மாமனார் வேதநாயகம். அப்போது அவர் முதல்வரின் தனிப்பட்ட செயலாளராக பணிபுரிந்தார். கொழும்பில் அசோக் நிற்பதாகவும் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார். எனக்கு இருந்த தொடர்பின் மூலம் விசாரித்ததில் ஈபிடிபி அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட தேர்தல் ஆணையாளர் சந்திரானந்த டி சில்வாவால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதை உறுதிசெய்தேன். தேவா இந்தியாவில் இருக்கும் போதே இயக்கத்தை அரசியல் கட்சியாக்கியவர் அசோக்.

கொழும்பு மீண்ட தேவாவின் சகல சந்திப்புகளிலும் பாதுகாப்பு உட்பட ஏற்பாடுகளை செய்பவர் அசோக். தன் பழைய தொடர்புகளை புதிப்பிக்க தேவா பலரை சந்தித்தார். பம்பலபிட்டி தும்முல்லை சந்தியில் அப்போது இருந்த எலிபன்ட் ஹவுஸ் உணவகத்தில் என்னை சந்தித்து தன்னோடு இணைய விடுத்த அழைப்பை நான் ஏற்க்கவில்லை. அப்போது தேவாவுக்கு பாதுகாப்பாக நின்ற அசோக்கை முதல் முதல் சந்தித்தேன். அந்த வேளையில் தேவாவுடன் இணைந்தவர் தான் தவராசா. பின்பு அபு யூசுப் நாபா ஈ பி ஆர் எல் எப் கட்சி தொடங்குவதாக அறிவித்த போது அதன் பின் புலத்தில் நான் இருப்பதாக நினைத்து என்னுடன் பேச கொள்ளுப்பிட்டி சிங்கப்பூர் காடின் உணவகத்தில் தேவா இரவு உணவளித்தபோது அசோக்கை இரண்டாவது தடவை சந்தித்தேன். தேவாவின் நிழலாகவே செயல்பட்டவர் அசோக். ஆனால் ரமேசின் படுகொலைக்கு பின் நிலைமை மாறியது. அசோக் பதுமன் இருவரும் அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும் லண்டனில் தஞ்சம் கோரினர்.

இவை பலரின் வெறு வாய்க்கு அவலாகின. ஆனால் தேவா அசையவில்லை. அரச தலைமைகளுடனான நெருக்கம் அவரை அமைச்சர் ஆக்கியது. புதிய வரவுகள் கட்சிக்கு கிடைத்தது. 1994 குடாநாட்டில் இருந்து புலிகள் வெளியேற்றப்பட்ட வெற்றிடத்தை தேவா தனதாக்கி கொண்டார். 10 பிரதேச சபைகள் ஈபிடிபி வசம். அது பலருடைய உழைப்பால் கிடைத்த வெற்றி என்றாலும் அவை அனைத்திற்கும் தேவாவின் உறுதியான நிலைப்பாடு, தொடர் செயல்ப்பாடு என்பனவே முக்கிய காரணம். ஒரு தடவை மானே ராஜசிங்கத்தை சந்தித்த வேளை தேவா பாற்றி அவர் கூறியது Tireless Worker. [சளைக்காத முயற்சியாளன்] இயக்கத்தின், கட்சியின் ஆரம்பகாலம் தொட்டு பலரின் பங்களிப்பு இருந்த போதும் அறுவடை வரை அயராது உழைத்தவர் தேவானந்தா.

அவரது ஆலோசகராக 10 வருடங்கள் செயல்பட்ட விக்னேஸ்வரன் விலத்தியபோதும், தேவாவின் அனைத்து முதலீடுகள் உட்பட சகல நடவடிக்கைகளிலும் பங்கெடுத்த தவராசா தலைமறைவான போதும் பல வெறு வாய்களுக்கு அவல் கிடைத்தது மட்டுமே மிச்சம். தேவாவை மீறி எதுவும் நடக்கவில்லை. தனது தொடர்புகளை பேணுவதில் மட்டுமல்ல தனக்கு பாதகம் ஏற்படுத்தும் நிகழ்வுகளுக்கு ஆப்பு வைப்பதிலும் தேவா சளைப்பதில்லை. தேர்தல் காலத்தில் தீவகம் சென்ற மாற்று கட்சி வேட்பாளர் மீதான தாக்குதல் உட்பட தன் கட்சியை, ஆதரவாளரை தன் கட்டுபாட்டில் வைத்திருக்கும் சூத்திரம் தெரிந்த பக்கா அரசியல்வாதி தேவா. தேவா என்றுமே No1. அதன் பின் இணைந்தால் பலன் உண்டு. விட்டு விலகியவர் ஜொலிப்பதில்லை. மீண்டும் இணைந்தால் எதிர்கட்சி தலைவராகவும் ஆகலாம் என்பதற்கு தவராசா நிதர்சன சாட்சி.

10 வருடங்கள் நாட்டில் இல்லாதவர் மீண்டு வந்து எம்பி யாகவும் குழுக்களின் தலைவராகவும் ஆனது தேவாவினால். கடந்த தேர்தலில் ஈபிடிபி அதிக கூடிய வாக்காக 6000 வாக்குகளுக்கு மேல் பெற்றது கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் மட்டுமே. ஏனைய தொகுதிகளில் 3000 த்தை கூட எட்டவில்லை. அதை வைத்து கொண்டு அசோக் தப்புகணக்கு போடுகிறாரோ தெரியவில்லை. காரணம் விருப்பு வாக்கு முறைமையில் கட்சிக்கு வாக்களிக்கும் எவரும் தேவாவுக்கே வாக்களிப்பர். ஈபிடிபி அண்ணளவாக 30 ஆயிரம் வாக்குகளை கொண்டுள்ள கட்சி. தற்போது தேவா அமைச்சர் இல்லாத போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள் விவகாரம் மற்றும் வட மாகாண சபை வினைத்திறன் இன்மை என்பவற்றால் சலிப்புற்ற, உடன் பயன் பெற விரும்பும் பயனாளி வாக்களர், தேவாவுடன் நின்று நிலைக்கலாம் என்பதால் அந்த எண்ணிக்கை குறைய வாய்ப்பில்லை.

ஆக தேர்தல் முறை மாற்றமுறாது, தொகுதிவாரி தேர்தல் முறை வராவிட்டால், ஈபிடிபி தனது ஒரு ஆசனத்தை எப்போதும் தக்கவைக்கும். அது விருப்பு வாக்கு மூலம் தேவா வசமாகும். அசோக் பிரிவு சில 100 வாக்குகளை மட்டுமே சிதைக்கும். எதிர்மறையாக அவரது விலகல் கட்சிக்கு புதிய வரவையும் ஏற்படுத்தலாம். எவர் என்ன தலைப்பிட்டாலும் எந்த விலகலும் ஈபிடிபி யை பாதிக்காது. அது ஒரு தனி மனிதனின் தொடர் உழைப்பை, தலைமையை கொண்ட கட்சி. எந்த விமர்சனத்துக்கும் அஞ்சாத அதன் தலைமை தன்னை மட்டும் முன்னிலை படுத்தி காய்களை நகர்த்தும். தலை இருக்க வாலாட விடாது. வாலாட்ட மட்டுமே அனுமதிக்கும். வந்தால் வரவு சென்றால் செலவில்லை என எண்ணும் தலைமைக்கு தெரியும் காலம் அறிந்து காய் நகர்த்த. வெறு வாய் மெல்வோரே தேவானந்தாவின் தலைமைத்துவ அரசியலில் இது சஜமப்பா.

(ராம்)