கண்டேன் தோழர் ஸ்ராலின் அண்ணனை…….!(பகுதி 3)

தோழர் ஸ்ராலின் அண்ணாவிற்கு வாழ்கைத் துணையாக அமைந்த அண்ணி இந்திரா திருச்சியைப் பாரம்பரியமாக கொண்டவர். இவர் தனது உறவினர்களை பார்க்க இடையிடையே குடந்தை(கும்பகோணத்தை குடந்தை என்று அழைப்பர் நாம் திருகோணமலையை திருமலை என்று அழைக்கவில்லையா அதுபோல்)யில் இருந்து போய் வருவதுண்டு. தமிழ் நாட்டுப் பெண்கள் கணவரைவிட்டு தனியே பயணம் செய்யும் வழக்கங்களை தவிர்க்கும் கலாச்சாராப் பிடிக்குள் கட்டுப்பட்டு இருந்தவர்கள். ஆண்களும் இவற்றை அனுமதிக்காத ஆண் மேலாதிக்க சிந்தனையில் பலரும் இருந்தனர். தமது மனைவியை தனக்கு கீழானவர் என்று நடத்தும் பண்புகளுக்கு மத்தியில் அண்ணியை இந்திரா என்று அன்புடன் விழிப்பதைத் தவிர நான் வேறு எந்த முறையிலும் அழைப்பதைக் காணவில்லை.

அண்ணி சுதந்திரமாக தனது காரியங்கள், விரும்பிய இடங்களுக்கு சென்று வருதல் போன்றவற்றை ஸ்ராலின் அண்ணா அனுமத்தித்தவர். சந்தர்பம் வரும் போதெல்லாம் எங்களில் ஒருவரை அண்ணி கேட்கும் பட்சத்தில் கூடவே அனுப்பி வைப்பார் இவ்வாறு நான் ஒரு தடவை அண்ணியுடன் திருச்சி சென்ற அனுபவம் உண்டு. உறவினர்கள் கூட இந்த தமிழ்நாட்டுக் கட்டுப்பெட்டி முறைக்கு அப்பாலான இந்திரா அண்ணி ஸ்ராலின் அண்ணா அவர்களுடன் கூடிய எங்களின் உறவுகளை கொண்டாடி மகிழ்ந்தது ஆச்சரியமாகவும் மகிழ்சியாகவும் இருந்த அனுபவம் எனக்கு இந்தப் பயணத்தின் போது ஏற்பட்டது.

தொடர்சியாக இல்லாவிட்டாலும் பல நாட்கள் அண்ணா – அண்ணி வீட்டில் தங்கியிருகிகின்றேன். அன்றைய காலகட்டத்தில் எனது காதலுக்குள் இருந்தவரும் இன்று எனது வாழ்கைத் துணைவியாரும் ஸ்ராலின் அண்ணா வீட்டு மொட்டை மாடியில் தங்கிய காலங்கள் பல. தமிழ்நாட்டு தனி வீடுகள் (மாடி வீடுகளும் அவ்வாறே பெரும்பாலும் அமைக்கப்படுவதுண்டு) ஓடுகளினால் வேய்வதற்கு பதிலாக சீமந்து தட்டுக்களால் உருவாக்கப்பட்டிருக்கும். இதனை மொட்டை மாடி என்றழைப்பர். ஸ்ராலின் அண்ணா வாடகைக்கு வயல் வெளியிற்கு நடுவில் இருந்த அந்த வீடும் அவ்வாறே இருந்தது.

இந்த மொட்டை மாடி வத்தல், வடகம், அப்பளம், உடுப்புக்கள் காய்வதற்கு மட்டும் அல்ல ஏன் இரவுகளில் இயற்கைக் காற்றாடுடன் தூக்கம் என்றும் காதல் கனி மொழிக்கான தனிமையான இடம் என்றும் ஒரு பல் தேலைகளை பூர்த்தி செய்யும் இடமாக வாவனைக்கு உட்படுதப்படும். சிலர் இந்தப்பகுதியை கொட்டில் கால்களை நாட்டி கிடுகினால் வேய்ந்து வைத்திருப்பர். விசேட தினங்களில் விருந்தினர்கள் வந்தால் மேலதிகமாக இரவுகளின் படுப்பதற்கும் பகலில் பல்வேறு தேவைகளுக்கு பாவிப்பதற்கும் இந்தப் பகுதி பாவிப்பர். சென்னை போன்ற இடங்களில் இடம் நெருக்கடி காரணமாக இந்த மொட்டை மாடியை வாடகைக்கும் விட்டுவிடுவார்கள். ஆனால் கும்பகோணம் போன்ற இரண்டாம் மூன்றாம் நிலை நகரங்களில் தமது வீட்டுத் தேவைகளுக்கு மட்டும் இதனைப் பாவிப்பர். ஈழவிடுதலைப் போராளிகளான எமக்காக அண்ணா இந்த இடத்தை வேய்ந்து எமது பாவனைக்காக தந்துவிட்டார். காலை மாலை எவ்வேளையிலும் நாம் மாடியில் இருந்தால் அண்ணியின் உணவுப் பரிமாற்றங்கள் எங்களுக்கும் உண்டு.

என் உடம்பில் ஓடும் இரத்தத்தின் பெரும் பகுதி இப்படியான அண்ணி அம்மா அக்கா ஆச்சிமார்களினால்தான் ஓடுகின்றது. எம்ஜிஆர் இன் ‘இரத்தத்தின் இரத்தமே’ என்பதில் ‘அரசியல்’ இருந்தது. நான் கூறும் ‘இரத்தத்தின் இரத்தத்தில்’ ‘அரிசி’யலே இருக்கின்றது. எம்மைப் போன்றவர்கள் நாம் அதிகம் சார்ந்திருந்த மக்களை ‘இரத்தத்தின் இரத்தமே!’ என்று எமக்கு உணவூட்டியவர்களை அழைக்கும் உருத்துடையவர்கள் என்று நான் அடிக்கடி நினைப்பதுண்டு. இதில் இந்திரா அண்ணியின் விருந்தோம்பலும் எம்மை தமது குடும்பத்தில் ஒருவர் என்று நடாத்தும் பண்பு பெரியார் வழியில் வந்த அண்ணாவிடம் இருந்து வந்ததா? அல்லது இயல்பில் இந்திரா அண்ணியும் முற்போக்கு சிந்தனை வழிதடத்தில் தன்னை வளர்த்தெடுத்தவரா? என்பது எனக்குள் இருக்கும் கேள்விகள்.

பெரியாரின் மறைவிற்கு பின்பு திராவிட கழகத்தில் ஏற்பட்ட கொள்கை, நடைமுறைப் பிறழ்வுகள் கழகம் 3 பிரிவுகளாக உடைவுற்றது. இதில் ஸ்ராலின் அண்ணாவை தோழர் ஆனைமுத்து தலமையில் உள்ள பிரிவில் செயற்பட வைத்தது. இந்தப்பிரினர் தமிழ்நாட்டின் பல பாகங்களில் செயற்பட்டு வந்தனர். திராவிட கழகத்தின் பிளவுகளால் உருவானவற்றில் இடதுசாரிச் சிந்தனை செயற்பாடாளர்கள் இவர்களே எம்மை போன்ற இடதுசாரி செயற்பாட்டு ஈழவிடுதலைப் போராளிகளுக்கு உறுதுணையாகவும் ஆதரவுசக்திகளாகவும் தமிழ்நாட்டில் செயற்பட்வர்கள். இவர்களின் செயற்பாடும் இவர்களுடன் உறவில் இருந்த எம்மையும் தமிழநாட்டு உளவுப்பிரினர் தொடரந்தும் கண்காணிப்பில் வைத்திருந்தனர் என்பது ஒரு மேலதிக தகவல்.

இதில் தோழர் அருணமுறுவலும் அடக்கம் தனது ஆசிரியர் பதவியை ஈழவிடுதலைக்காக துறந்து முழுநேரமாக எம்முடன் இணைந்து செயற்பட்டவர் தோழர் அருணமுறுவல். இவருடனும் மிக நீண்ட காலம் வேலை செய்த அனுபவங்கள் உண்டு. குறிப்பாக திருவல்லிக்கேணியல் அமைந்திருந்த எமது விடுதலை அமைப்பின் தேவநேயபாவாணர் அச்சகத்தின் நிருவாக் பொறுப்பை சிலகாலம் நான் கவனித்ததும் உண்டு. இந்த ஆனபவங்களை தனியாக ஒரு புத்தகமாக போடும் அளவிற்கு எழுத முடியும்.

குடந்தையில் இருந்து மறைந்த தோழர் வள்ளி இன்றும் எம்முடன் இருக்கும் தோழர் இராஜவேலு எல்லாம் ஈழவிடுதலைக்காக செய்த பங்களிப்புகள் மகத்தாவை. தோழர் பக்கிரி, தோழர் கணேஸ் இப்படியே அடுக்கிக் கொண்டு போகலாம். இவர்கள் ஒவ்வொருவரும் எம்மவர்களால் அடையாளப்படுத்தப்படாத ஈழவிடுதலைக்காக எம் மக்களுக்காக தம்மை. தும் குடும்பத்தை முழமையாக அர்பணித்த தியாகிகள். அண்ணாவால் எமக்கு அறிமுகப்படுதப்பட்ட இன்னொருவர் கும்பகோணம் சேகர். இவரை ஈழவிடுலை அமைப்புகளிடையே ஓவியர் என்றால் அல்லது சே(ய்) என்றாலே தெரியும். இதுவும் ஆரம்பகால ஈபிஆர்எல்எவ் இல் எமது வெளியிடுகளில் வந்த அத்தனை ஓவியங்களையும் எமது சிந்தனைக்கு ஏற்ப உயிர் கொடுத்தவர் இந்த சே(ய்). இன்று ஆனந்தவிகடன் போன்ற வியாபர ரீதியல் மன்னணியல் இருக்கும் சஞ்கிகைகளில் ஓவியர் சே(ய்) என்ற பெயரில் ஓவியம் வராமல் இருப்பது அரிது. இவர் அண்ணால்வால் முன்னிலைப்படுத்தப்பட்டு எமது பாசறையில் வளர்ந்த கலை பொக்கிஷம். நான் இந்தியா செல்லும் நாட்களில் இவர்களை சந்திக்காமல் வருவதில்.

ஆண்டுகள் 40 கடந்துவிட்ட நிலையிலும் இன்றும் இவர்கள் யாரும் தமது முற்போக்கு சிந்தனைகளில் செயற்பாடுகளில் பிறழ்வின்றி இருப்பது எனக்கு இவர்கள்பால் மதிப்பையும் மரியாதையும் கூட்டியே வைத்திருக்கின்றது. ஈழவிடுதலைப் போராட்டத்தை வைத்து பிழைப்பு வருமானம் தேடும் நபர்கள் அரசியல்வாதிகள் மத்தியில் இவரிகள் யாவரும் வித்தியாசமான மனிதர்கள்தான். பிழப்புவாதிகளும் உசுப்பேத்தி காலத்தை ஓட்டுபவர்கள் விளம்பரப்படுதப்பட்டு பிரபல்யமாக இருக்கும் தமிழ்நாட்டில் மேற்கூறிய அர்பணிப்புக்கள் செய்தவர்கள் இவை மறைகாயாகவே இன்றும் இருக்கின்றனர். இவர்கள் யாவரும் தோழர் ஸ்ராலின் அண்ணாவின் கண்டு பிடிப்புக்கள். எனவேதான கூறுகின்றோம் ஈழ விடுதலையில் இந்திய மூலவர் தோழர் ஸ்ராலின் அண்ணா என்று….!
(தொடரும்)