கூட்டமைப்பிற்கு மாற்று உடனடியாக சாத்தியப்படுமா?

(விஸ்வா)
DTNF தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றாக ஒரு அமைப்பு – அல்லது கட்சி உருவாகும் சாத்தியம் உள்ளதா? அவ்வாறு ஒரு அமைப்பு உருவானால் அதனால் தமிழ் மக்களின் ஆதரவைப் பெறமுடியுமா? இவ்வாறான கேள்விகள் தமிழ் அரசியல் தளத்தில் நின்று சிந்திப்பவர்களுக்கு எழுகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பை கடுமையாக குறைகூறும் கட்சிகள் எவையுமே அதற்கு மாற்றாக மேலெழுந்து மக்கள் செல்வாக்கைப் பெறும் நிலைமை இதுவரை காணப்படவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக உள்ள சக்திகள் யாவும் ஒன்றிணைந்து ஒரு அமைப்பை- கூட்டணியை உருவாக்கினாலும் கூட அது மக்களின் செல்வாக்கை பெற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை.

தற்போது ஜனாநாயக தமிழ் தேசிய முன்னணி என்ற அமைப்பு ஒன்று தோற்றுவிக்கப்பட்டுள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி, ஈபிடிபியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பிரபா கணேசன் உள்ளிட்ட சில கட்சிகளின் தலைவர்களும் சில அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இணைந்து இந்த அமைப்பை உருவாக்கியுள்ளனர். எல்லாமாக பத்து அமைப்புக்கள் இந்த ஜனநாயக தமிழ் தேசிய முன்னணியில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசியல் கட்சி என்று பார்க்கும் போது டக்ளஸ் தவிர்ந்த ஏனைய அனைவருமே கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்கள். இவர்கள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள இந்த அமைப்பினால் எதனையும் சாதிக்க முடியுமா?  சிறிது சிறிதாகவேனும் மக்கள் செல்வாக்கை- நம்பிக்கையை பெற்று முன்னோக்கி நகர முடியுமா? என்று கேட்டால் அது அவ்வளவு சாத்தியமானதாக இருக்கப் போவதில்லை என்றே கூறலாம்.

ஏனெனில், முன்னரும்- தமிழ் கட்சிகளின் அரங்கம் என்றதொரு அமைப்பு இவ்வாறு உருவாக்கப்பட்டு அது பின்னர் காணாமல் போனது. ஜனநாயக தமிழ் தேசிய முன்னணிக்கும் அவ்வாறான நிலையே ஏற்படலாம்.

கடந்த, மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்கும் அதற்கு மாற்றாக அமைப்புக்கள் தோன்றுவதற்கும் ஆதரவளிக்கப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பை அப்புறப்படுத்தி விட்டு வேறு கட்சிகளின் ஆதரவுடன் தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக, அப்போது உருவாக்கப்பட்ட தமிழ் கட்சிகளின் அரங்கத்திற்கு ஆதரவு வழங்கப்பட்டது.

அந்த அமைப்பு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்து பேச்சுக்களையும் நடத்தியுள்ளது. ஆனால், இப்போது உருவாக்கப்பட்டுள்ள ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி என்ற அமைப்பிற்கு அரசாங்கத்துடன் பேச்சு நடத்துவதற்கு வாய்ப்புக்கள் வழங்கப்படுமா என்பதே சந்தேகம் தான்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போதைய அரசாங்கத்தின் ஆதரவு சக்தியாக இருந்து வருகின்ற நிலையில் அவர்களை தவிர்த்து அவர்களுக்கு எதிரான அமைப்புக்களை சந்திக்க அரசாங்கம் விரும்பாது.

தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி புதிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் சிலரை சந்திக்கவே சிரமப்படுவதாக தெரிகின்றது. சிலரை அவர் சந்தித்து கலந்துரையாடும் போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பற்றி குறை கூறுவதை அவர்கள் விரும்பவில்லை.

தமிழரசுக் கட்சியை மீளுருவாக்கம் செய்தமை மற்றும்,  இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோர் விடுதலைப்புலிகளுடன் தொடர்புகொண்டு கட்சிக்குள் சில நடவடிக்கைகளை மேற்கொண்டமை குறித்து எழுதியும் பேசியும் வரும் ஆனந்தசங்கரி அரசாங்கத் தரப்பினரை சந்திக்கும் போதும் இவற்றையே கூறி வருகின்றார்.

முக்கிய அமைச்சர் ஒருவரை அவர் சந்தித்து இவ்வாறான விடயங்களை கூறிய போது, அவர், “மிஸ்ரர் ஆனந்தசங்கரி எங்களுக்கு சகலதும் தெரியும். பழைய வரலாறுகள் இப்போது தேவையில்லை. எல்லோரும் சேர்ந்து இந்த மக்களுக்கு நல்லது செய்வது குறித்து சிந்திப்போம்” என்று கூறினாராம்.

ஆட்சிமாற்றம் ஏற்பட்டதன் பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க பல தடவைகள் முயன்றும் அதற்கான அனுமதி ஆனந்தசங்கரிக்கு வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, தமிழ் கட்சிகளில் அரங்கம் என்ற அமைப்பினால் முன்னைய அரசாங்கத்துடன் மேற்கொண்ட சந்திப்புக்களைக் கூட இந்த புதிய அமைப்பினால்   தற்போதைய அரசாங்கத்துடன் மேற்கொள்வது  கடினமானதாகவே இருக்கும். அறிக்கைகளை மட்டுமே இந்த அமைப்பினால் விடுக்க முடியும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றாக இல்லாவிடினும் ஒரு அழுத்தத்தை கொடுக்கக் கூடிய அமைப்பாக அண்மையில் உருவானது தமிழ் மக்கள் பேரவை. அதனால் கூட ஒரு வேகமான நகர்வை மேற்கொள்ள முடியவில்லை. நிபுணர் குழுவொன்றை உருவாக்கியதும், அரசியல் தீர்வு யோசனை ஒன்றை முன்வைத்ததையும்  தவிர வேறு ஒரு பணியையும் அதனால் முன்னெடுக்க முடியவில்லை. தமிழ் மக்கள் பேரவை கூட்டமைப்பிற்கு மாற்றாக காலப்போக்கில் உருவெடுக்கக் கூடிய வெளியொன்று காணப்பட்ட போதும் அது தீவிரமாக அதற்குள் பிரவேசிக்க முடியாமல் போனதற்கு வெளிச் சக்திகளின் தலையீடும் ஒரு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.

இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் முரண்பாடுகள் அதிகரித்து வருகின்றமையினை வெளிப்படையாக அவதானிக்க முடிகின்றது. சம்பந்தனும் சுமந்திரனும் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் இயங்குவதாக கூட்டமைப்பிற்குள் ஒரு பிரிவினர் கடுமையாக குற்றம்சாட்டி, மக்கள் மத்தியில் பரப்புரை செய்து வருகின்றனர். குறிப்பாக கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தீவிரமாக இதில் ஈடுபட்டு வருகின்றார். ஆனாலும்,  கூட்டமைப்பிற்குள் ஒரு மாற்று அணியை உருவாக்கக் கூடிய சக்தி அவரிடம் இல்லை.

வடக்கு முதலைமைச்சர் விக்னேஸ்வரனை மாற்றுத் தலைமையாக உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்ற போதும், அவருக்கு பின்னால் இருந்து செய்படுகின்றவர்கள் மக்கள் செல்வாக்கற்றவர்கள். மக்களால் தேர்தல்களின் போது நிராகரிக்கப்பட்டவர்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் மக்கள் சேவையாற்றக் கூடிய ஆற்றலுள்ள சில இளைஞர்கள் அடையாளம் காணப்படுகின்ற போதும், அவர்களுக்கு அரசியல் அனுபவம் போதாத காரணத்தினால் தனித்து மேலெழ முடியாமலுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றாக ஒரு அணி உருவாக வேண்டுமானால் அக்கூட்டமைப்பிற்குள்ளிருந்தே வெடித்தெழும் சக்தியாக அது அமைய வேண்டும். அதற்கான சாத்தியங்களும் உள்ளன. ஆனால் அதற்கு இன்னும் காலமெடுக்கும்.