சகல தமிழ் பேசும் மக்களையும் ஒன்றிணையுமாறு த.வி.கூ அழைக்கிறது

முழு நாடும் ஒரு குழப்பநிலையில் உள்ளது. இல்லாவிடின் சகல இனக்குழுக்களும் அவ்வாறே. ஆண் பெண் ஆகிய நாமனைவரும் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்N;றாம். குழப்ப நிலையில் உள்ள எமது பிள்ளைகள் தமது எதிர்காலத்தைப் பற்றி ஏதும் அறியாமல் கிரிக்கெட்டும், உதைப்பந்தாட்டமும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். எம்முள் உள்ள தேசப்பற்று படிப்படியாக குறைந்து செல்கின்றது. அனைவரும் இன்று பதவியை தேடியே அலைகின்றனர் எனக் கூறுவதற்கு என்னை மன்னிக்கவும். சிலருக்கு நாட்டின் மீதான அக்கறை கடைசியாகவும் அதிகாரத்தை கைப்பற்றுவது முன்னிலையிலும் காணப்படுகிறது.

ஓவ்வொரு இனத்திலுமுள்ள சிறிய அளவினர் பதவிகள் தெய்வீக சக்தியால் கிடைப்பதாக கருதுகின்றனர். ஆனால் சந்தர்ப்பம் சூழ்நிலைகள்தான் பதவியை வழங்குகின்றதேயொழிய தெய்வ சக்தியால் அல்ல என்பதை மறந்து விடுகிறார்கள். சந்தர்ப்பம் சூழ்நிலை எவையென்பதை நான் சுட்டிக்காட்டுவதை தவிர்க்கிறேன். எனது கருத்தை ஏனையவர்கள் ஏற்றுக்கொள்வார்களோ என்பதை நானறியேன். ஆனால் என்னைப்பொறுத்தவரை நடந்து முடிந்தவைகள், இன்று நடப்பவைகள் வெறுப்பையே உண்டாக்குகிறது. அரசியலில் நடந்து முடிந்தவைகள் சில மிகவும் மனக்குழப்பத்தை தருவதால் சில விடயங்கள் பற்றி மக்களின் கவனத்துக்கு அல்லது நினைவூட்டுவதற்காக வெளிக்கொண்டுவர வேண்டியுள்ளது. ஏனெனில் மக்கள் இலகுவாக தவறாக வழிநடத்தப்படுவதும் உணர்ச்சிவயப்படுவதும் சர்வசாதாரணமாகும்.
நான் குறிப்பிடும் விடயங்களில் முதலாவதாக ஆட்சி மாற்றக் கோரிக்கை சகல இன மக்களிடமும் பெரும் ஆதரவை பெற்றிருந்தபோதும், தலைவர்களையும், அரசாங்கத்தையும் தெரிவு செய்த மக்களுக்கு பூரண திருப்தியளிக்கவில்லை. கடந்த காலத்தில் ஆட்சிபீடத்தில் இருந்தவர்கள் அடிக்கடி முறையாக ஆட்சியை நடத்த தவறிவிட்டனர். பல செயற்பாடுகளும் தவறுகளும் எவராலும் கவனிக்கப்படாமலும் எதிர்ப்பு தெரிவிக்காமலும் விடப்பட்டுள்ளன.

இத்தகைய செயற்பாடுகள் சில அரசியல் கட்சிகளாலும் சில சந்தர்ப்பங்களில் அரசாலும் ஏற்படுவதால் நாட்டின் நிர்வாகத்தில் பெரும் குழப்ப நிலைமை ஏற்படுவதை அநேகர் உணர்வதில்லை. எனது கூற்றுக்கு ஆதாரமாக சில உதாரணங்களை முன்வைக்க விரும்புகிறேன். பாராளுமன்ற அங்கத்தவர் பதவியை இராஜினாமா செய்வதும் எதிர்பக்கம் சென்று அமர்வதும் நாட்டில் பெரும் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. பாராளுமன்ற ஜனநாயகத்தோடு சம்பந்தப்பட்ட வேறு எந்த நாட்டிலும் காணப்படாத நமது நாட்டில் இடம்பெற்ற இரு சம்பவங்களை எடுத்துக்கூற விரும்புகிறேன். ஒரு பாராளுமன்றத்தின் கால எல்லையை நீடிப்பது கடுமையாக கூறுவதானால் அது சட்ட விரோதமாகும். நீண்டகால சம்பிரதாயம் யாதெனில் யுத்தம் போன்ற ஏதாவது அவசரகாலநிலை தவிர வேறு எந்த சந்தர்ப்பத்திலும் பாராளுமன்றம் தன்னுடைய கால எல்லையை நீடிப்பதில்லை. இரண்டாவது உலக யுத்தத்தின் போது மட்டும் எமது சட்டசபை கூட தனது ஆயுள் காலத்தை நீடித்தமை நல்லதொரு உதாரணமாகும்.

ஜனநாயக கோட்பாட்டுக்குள் செயற்படும் தமிழர் விடுதலைக் கூட்டணி இலங்கை பாராளுமன்றம் தனது கால எல்லையை நீடித்தபோது அதனை ஆட்சேபித்து தனது 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தத்தம் பதவிகளை துறக்குமாறு பணித்தது. மக்களால் ஆறு ஆண்டுகளுக்கென தெரிவானவர்கள் தொடர்ந்து மேலும் ஆறு ஆண்டுகள் இருப்பது தவறு என்பதை த.வி.கூ சுட்டிக்காட்டியது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் இச்செயலை ஜனநாயகத்தின் வீரச்செயலென சகல உலக நாடுகளும் பாராட்டின. இச் செயலின் விசேட அம்சம் யாதெனில் பதவியை துறந்த 18 பாராளுமன்ற ஆசனங்களும் தொடர்ந்து ஆறு ஆண்டுகளும் காலியாகவே இருந்தன. இப் பெருமை ஜனநாயக கோட்பாட்டுக்கு கட்டுப்பட்டு செயற்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணிக்கே சாரும். இந்த 18 பாராளுமன்ற உறுப்பினர்களில் நானும் திருவாளர்கள் இரா.சம்பந்தன், பி.சூசைதாசன் ஆகிய மூவருமே இன்று இருக்கின்றோம்.

அடுத்த சம்பவம் வெளிநாடுகளுக்குத் தெரியாத துயர சம்பவமாகும். ஜனநாயகத்துக்கு விரோதமான செயலென கண்டிக்கப்பட்டு நடவடிக்கையெடுக்கப்பட வேண்டிய இச்சம்பவம் பற்றி இராஜதந்திர சமூகம் கூட அறிந்திருக்கவில்லை என நம்புகிறேன். இது சம்பந்தமாக அவர்கள் அமைதியாக இருப்பதே எனக்கு அவ்வாறு தோன்றுவதற்கு காரணமாகும். துரதிஷ்டவசமாக அன்றைய அரசு சர்வ சாதாரணமாக இந்த நிகழ்வை எடுத்துக்கொண்டது அல்லது இதைபற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. மேலும் இச் சம்பவம் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததொன்றாகும்.

இங்கு குறிப்பிடப்பட்ட விடயம் சில தமிழ் பிரமுகர்களின் வேண்டுகோளுக்கிணங்க நான்கு கட்சிகள் கொண்ட ஒரு முன்னணி சம்பந்தமானதாகும். 2001-12-20 அன்று இந்த கூட்டு தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய நான்கு கட்சிகளையும் உள்ளடக்கி தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரும் சூட்டப்பட்டது. அனைவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளராகவும், அதன் உதய சூரியன் சின்னத்திலும் போட்டியிடுவதாகவும் உடன்பட்டுக் கொண்டனர். 2002ம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 14 இடங்களை பெற்றுக்கொண்டது. அத் தேர்தலில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் வெற்றிபெற்ற பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஒன்பது பேரில் 36 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகளை பெற்று நான் முதலாவதாக தெரிவு செய்யப்பட்டேன்.

நாம் எதிர்பார்த்தது நடைபெறவில்லை. எமது எதிர்பார்ப்புக்கு மாறாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டமை எமது நோக்கத்துக்கு முரணாக அமைந்துவிட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியில் இரு தடவைகள் தேசிய பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்டு பின்பு இத் தேர்தலில் வெற்றிபெற்ற ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஒரு ஆயுதக்குழு ஒன்றின் தலைவர் ஒருவருடன் கொண்ட இரகசிய உறவு துரதிஷ்டவசமானதே. அவரின் செயற்பாடு தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு பெரும் சங்கடத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியதன் விளைவு தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் பிளவு ஏற்பட்டு த.வி.கூ தனிமைப்படுத்தப்பட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் இடத்துக்கு இலங்கை தமிழரசு கட்சி சேர்ந்துக்கொண்டது. இலங்கை தமிழரசு கட்சியை உள்ளடக்கிய இப்புதிய தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆயுதக் குழுவின் விரும்பத்தகாத பலதரப்பட்ட உதவியுடன் 22 ஆசனங்களை கைப்பற்றியது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தோல்வியுற்ற வேட்பாளர்களும் தேர்தல் கண்காணிப்புக்குழுக்களும் இத் தேர்தல் செல்லுபடியற்றதெனவும் புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனவும் விடுக்கப்பட்ட கோரிக்கை அத்தகைய நடவடிக்கைக்கு தேர்தல் சட்டத்தில் இடமில்லையென கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அப்போதைய அரசு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதால் தேர்தல் சரியென அங்கீகாரம் பெற்றதோடு துரதிஷ்டவசமாக ஒரு ஜனநாயகக் கட்சியின் செயற்பாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டது.

பொதுவாக தமிழ் குழுக்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள ஒற்றுமையின்மையே தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாது இருப்பதற்கு காரணமென ஒரு பொது அபிப்பிராயம் நிலவுவதால் தமிழர் விடுதலைக் கூட்டணி இனப்பிரச்சினை சம்பந்தமற்ற விடயங்களில் நேரத்தை செலவிடுவதை தவிர்க்க வேண்டுமென உணர்கின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு நீண்டகாலமாக முறைப்படி இயங்காமல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெயரை தமிழரசு கட்சி தனது தேவைக்காகவும், வளர்ச்சிக்காகவும் பயன்படுத்துகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏனைய கூட்டுக்கட்சிகளுடன் பாகுபாடு காட்டி நடப்பதால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஊடாக தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்ற நிலைப்பாட்டை இழந்துள்ளது. தமிழ் தேசிய கூட்டுத்தலைமை தமக்குள் உள்ள ஒற்றுமையை நிலைநாட்டுவதோடு தமிழ் பேசும் மக்களுக்காக உழைக்கின்ற ஏனைய தமிழ் கட்சிகள் குழுக்களை ஓரணியின் கீழ் கொண்டுவர தவறின் திருவாளர்கள் தந்தை செல்வா, ஜீ.ஜீ. பொன்னம்பலம், எஸ். தொண்டமான், அ.அமிர்தலிங்கம், மு.சிவசிதம்பரம் ஆகியோருக்கு செய்ய வேண்டிய கடமையாக உணர்ந்து தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடுகின்ற சகல தமிழ் அரசியல் கட்சிகளையும், குழுக்களையும் ஓரணியின் கீழ் இணைத்து செயற்பட வேண்டிய நடவடிக்கைகளை தமிழர் விடுதலைக் கூட்டணி மேற்கொள்ளும்.

வீ.ஆனந்தசங்கரி செயலாளர் நாயகம்- த.வி.கூ