சர்வதேசத்திடம் அடிபணியும் அரசு! மகிந்த ஆதங்கம்!

வீண்வம்பை விலைக்கு வாங்கிவிட்டு புலம்புவதில் பயன் இல்லை. வெற்றிகள் மகிழ்ச்சியை, மனநிம்மதியை தரலாம். ஆனால் நான் என்ற இறுமாப்பில் எவருக்கும் அடிபணியேன் என்ற பிடிவாதம் எதிர்ப்பாளர்களை ஒன்றிணையச் செய்து அவர்களின் தாக்குதலுக்கு உள்ளாக வேண்டிவரும். முன்னாள் ஜனாதிபதியின் இன்றைய நிலையும் அதுதான். 2005ல் பதவி ஏற்றபோது, மகிந்த புலிகளுடன் சமரசம் பேசவே விரும்பினார். தன்வெற்றிக்காக புலிகளுடன் பணப்பரிமாற்றம் செய்ததால் தான் அந்த முடிவை அவர் எடுத்தார் என கூறப்படுவது மட்டும் காரணம் அல்ல. உண்மையில் அப்போது புலிகள் மிகவும் பலம் பொருந்தியவர்களாகவும், ராணுவம் சோர்வு நிலையிலும் இருந்ததுமே கள நிலவரமாகும். சகோதரர் கோத்தபாய பாதுகாப்பு செயலாளராக செயல்பட தொடங்கியதும், அவரே சரத் பொன்சேகாவை ராணுவ தளபதியாக நியமிக்கும்படி சிபாரிசு செய்ததும் மகிந்தவுக்கு சற்று தெம்பை கொடுத்தபோதும் அவர் யுத்தத்துக்கு தயாராகவில்லை.

ஒருவரின் வெற்றி அவரின் எதிரி விடும் தவறினாலும் தீர்மானிக்கப்படும் என்பது போல அதுவரை நோர்வே ஏற்படுத்தி கொடுத்த சர்வதேச ஆதரவை புலிகள் மாவிலாறில் கரைத்து விட்டனர். அதுவரை புலிகளுக்கு கரிசனை காட்டிய சர்வதேசம், நீரை அரசியல் ஆயுதமாக்க முற்பட்ட புலிகளின் செயலை கடுமையாக கண்டித்தது. இதுதான் தருணம் என மாவிலாறு நீரை மீட்க சென்ற ராணுவம் அடைந்த வெற்றி, தொடர் வெற்றியாக மாறவேண்டும் என சூழ்நிலை அறிந்து, யுத்தத்தை தொடரும்படி தூண்டிய சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் கொடுத்த அழுத்தம் தான், மகிந்தவை பிடரி சிலிர்க்க வைத்து யுத்தத்தை தொடரும் முடிவுக்கு இட்டுச்சென்றது. கதிர்காமரின் படுகொலை தந்த அதிர்வு ஐரோப்பிய நாடுகளை புலிகளை தடை செய்யும் முடிவை எடுக்கவைத்தது. அதன் எதிர் நடவடிக்கையாக அதுவரை யுத்த மீறல்களை கண்காணித்த குழுவினர் கூட வெளியேறும் நிலையை புலிகள் ஏற்படுத்தினர்.

புலிகள் தாமே தமது செயல் மூலம் எதிரிகளை அதிகரிக்க செய்தனர். நிலைமைகளை சாதகமாக்க முயன்ற அரசுக்கு சர்வதேசம் துணை நின்றது. அடங்க மறுக்கும் புலிகளுக்கு பாடம் புகட்ட அரசு முடிவெடுத்த வேளையில் இந்தியாவின் ஆதரவை கோத்தபாய தன் தொடர் அணுகுமுறையால் பெற்றார். உண்மையில் மகிந்தவின் தலைமைத்துவம் தான் யுத்த வெற்றிக்கு காரணம் என்ற போதும் அது அவரின் தனிப்பட்ட வெற்றி அல்ல. கோத்தா, சரத் பொன்சேகா, மற்றும் களத்தில் நின்ற ராணுவ தளபதிகளின் வெற்றியோ அல்லது களத்தில் முன்னரங்கில் நேருக்கு நேர் மோதிய ராணுவத்தின் தனிப்பட்ட வெற்றியோ அல்ல. புலிகளை அப்புறப்படுத்தி சிறீலங்காவில் தங்கள் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்த முடிவெடுத்த அண்டை நாடான இந்தியா உட்பட ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளின் வெற்றி. தலைமை கொடுத்தவர் மகிந்த. ஒழுங்குபடுத்தியவர் கோத்தபாய. செயல்ப்படுத்தியவர் சரத்பொன்சேகா. நடைமுறைபடுத்தியது தளபதிகள். முடித்துவைத்தது ராணுவவீரர்கள்.

ஆகவே இது ஒரு கூட்டு முயற்சியின் வெற்றி. மூலகர்த்தா இந்தியா. துணை நின்றது சர்வதேசம். இதை யுத்தத்தின் பின் கவனத்தில் எடுக்காத மகிந்த வெற்றி பெருமிதத்தில் அதுவரை எவரும் அடையமுடியாத வெற்றியை அடைந்தும், அதனை தக்கவைக்க வேண்டிய வழிமுறைகளை தவறவிட்டார். பேராசிரியர் புல்ஜீன்ஸ் குறிப்பிட்டதுபோல “போராளிகளை கொல்வதன் மூலம் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர முடியாது. போராட்டத்துக்கான காரணத்துக்கு தீர்வு காணவேண்டும்” என கூறியதை மகிந்த யுத்த வெற்றிக்கு பின் கவனத்தில் எடுக்கவில்லை. அவர் அதனை கவனத்தில் கொண்டிருந்தால் இன்றும் அவர்தான் ஜனாதிபதி. சிறீலங்காவில் துட்டகைமுனு மன்னனுக்கு பின்பு மாபெரும் தலைவன் என சிங்கள மக்களால் புகழப்பட்ட மகிந்த, இன்று தன்னை மீண்டும் நிலைநிறுத்த படாதபாடு படுகிறார். பிரபாகரன் போலவே மகிந்தவும் எதிரிகளை அதிகரிக்க செய்தது மட்டுமல்ல, அவர்கள் தனக்கு எதிராக அணிதிரள்வதையும் கவனத்தில் கொள்ளவில்லை.

சகபோராளி இயக்கங்களை அழித்து, இந்தியாவை எதிர்த்து, ஐரோப்பிய, அமெரிக்க தடைகளை கவனத்தில் கொள்ளாது புலம்பெயர் தமிழர்களின் நிதி பங்களிப்பில் வரும் ஆயுதங்கள், தனது வெற்றியை தீர்மானிக்கும் என்ற சுத்த ராணுவக் கண்ணோட்டம் தான் பிரபாகரனின் கனவை முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு கொண்டுவந்தது. அதே போல் யுத்த வெற்றிக்கு மூலகாரணமாக இருந்த இந்தியாவை புறம்தள்ளி சீனாவுடன் நெருங்கிய மகிந்தவும், நெடுஞ்சாலைகள் போடுவதும், பாலங்கள் கட்டுவதும், சிறீலங்காவை ஆசியாவின் அதிசயமாக்குவதும், தன்னை நிரந்த ஜனாதிபதியாக்கும், என்ற கனவில் மிதக்க, இந்திய அமெரிக்க கூட்டு முயற்சி அதனை மைத்திரியை கொண்டு கலைத்தது. யானையை அடக்கும் அங்குசமாக அமெரிக்கா கையில் எடுத்தது யுத்த அத்துமீறல்கள். நிகழ்வுகள் நடக்கும் போது ஒவ்வொரு அசைவையும் தன் சற்லையிற் மூலம் படம்பிடித்தது அமெரிக்கா.

அப்போது அதுபற்றி மௌனித்துவிட்டு இப்போது தமிழருக்கு நடந்த அநீதிக்கு ஐ நா விடம் நீதி கேட்கிறது. இதன் தொடர் நிகழ்ச்சிதான் சர்வதேச விசாரணை. அதற்கு மைத்திரி ரணில் அரசு துணைபோவதாக குற்றம் சுமத்துகிறார் மகிந்த. ஆனால் இந்த நிலைமைக்கு வித்திட்டது மகிந்த என்பது தான் உண்மை. புலிகளின் அழிவை விரும்பிய எவரும் மக்களின் மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, என்ற விடயத்தில் எதிர் நிலையை கொண்டிருக்கவில்லை. யுத்த காலத்தில் இந்தியா அரசியல் அமைப்பின் 13திருத்தத்தில் உள்ளதை நடைமுறைபடுத்தும்படி கூறிய போது மகிந்த அதற்கு ஒரு படி மேலே சென்று 13 பிளஸ் (13+) என்றார். இணைத்த முறை தவறு என்ற நீதிமன்ற தீர்ப்பால் பிரிக்கப்பட்ட வடக்கு கிழக்கை தான் மீண்டும் இணைப்பேன் என்றார். ஆனால் யுத்த வெற்றிக்கு பின் அதை அவர் மறுதலித்தார். இந்த முடிவுகளை அவர் எடுத்ததற்கு காரணம் அவர் தன்னை ஒரு சூழ்நிலை கைதியாக மாற்றியமையே என அவருக்கு முன்பு நெருக்காமாக இருந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

பாராளுமன்ற பிரதிநிதியாக அவர் இருந்த காலத்தில் அவருடன் நெருங்கி பழகிய பல தமிழ் முஸ்லிம் நண்பர்கள் அப்படி இருந்தவரா பின்பு இப்படி மாறினார் என அங்கலாய்க்கும் அளவிற்கு, அவரை சுற்றி ஒரு சுயநல கூட்டம் செயல்பட்டு மகிந்தவை ஒரு கூண்டு கிளியாக்கி விட்டனர். சுயமாக செயல்படவிடாது தமது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப அவரை நடத்த அவர்கள் முனைந்துள்ளனர். தனது அரசை பலமானதாக்க அனைத்து கட்சிகளிலும் இருந்து உறுப்பினரை விலைக்கு அல்லது பதவிக்கு அல்லது கொள்கைக்கு என பேரம் பேசும் நிலைக்கு தள்ளப்பட்டார். அதனால் மந்திரி சபையில் பல சித்தாந்த சிந்தனைகள் முட்டி மோதும் போதெல்லாம், எது சரி எது பிழை என எண்ணக்கூட முடியாத இக்கட்டான நிலையில், அவர் தவறாக செயல்ப்பட வேண்டிய சூழ்நிலை கூட ஏற்பட்டது. யுத்தம் முடிந்ததும் யுத்தத்துக்கான காரணங்களை தீர்ப்பதற்கும் யுத்த பாதிப்புக்கு உள்ளான மக்களின் மீள்எழுச்சிக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை விட நெடுஞ்சாலைகள் அமைப்பதும் பாலங்கள் போடுவதும் வடக்கையும் தெற்கையும் இணைக்கும் என அவரை நம்பவைத்தனர்.

அவரும் நம்பினார். அதற்கு தேவைப்பட்ட பெருநிதியை தந்த சீனாவை நெருங்கி இந்தியாவை புறம் தள்ளினார். பிராந்திய வல்லருசுகளுடன் எவ்வாறான உறவை பேண வேண்டும் என்பதில் முன்னாள் பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்காவின் அணுகுமுறையை மகிந்த பின்பற்ற தவறினார். சீனாவுடன் உறவும் இந்தியாவின் ஆதரவும் பெற்றவராக அவர் செயல்பட்டது போல மகிந்த செயல்பட்டிருந்தால் இன்று நிலைமை வேறு விதமாக இருந்திருக்கும். ஆனால் அவரை சுற்றி இருந்த இந்திய எதிர்ப்பாளர்களின் அணியின் ஆளுமை, மகிந்தவை சீனா பக்கம் முழுமையாக சாயவைத்தது. யுத்த வெற்றிக்கு உதவிய இந்தியாவை உதாசீனம் செய்தது தவறு என தன் பேட்டியொன்றில் கோத்தபாய கூறினார். தன்னை மீறி செல்லும் மதம் பிடித்த மகிந்தவை அடக்க அமெரிக்காவை தட்டிவிட்டது இந்தியா. அதற்கு அங்குசமாக தமிழர் பிரச்சனையை கையில் எடுத்தது அமெரிக்கா.

பிள்ளையை கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் இந்தியா அவ்வப்போது ஐ நா வில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானங்களில் தன் சித்து விளையாட்டை செய்தது. யுத்த வெற்றிக்கு பின் மகிந்த என்ன தீர்வை முன்வைத்திருந்தாலும் அதனை தென்னிலங்கை எதிர்த்திருக்க மாட்டாது. அந்தளவு மன நிம்மதியை அவர் சிங்கள மக்களுக்கு கொடுத்திருந்தார். ராணுவத்தில் பணியாற்றிய தம்மவர் பாதுகாப்பாய் வீடு திரும்ப வேண்டுமென்று, பன்சலையில் வேண்டுதல் செய்த இலட்சக்கணக்கான உறவுகள் யுத்தம் முடிந்தது என அறிந்ததும் கூறிய முதல் வார்த்தை “கடவுளே இனி வேண்டாம் இந்த கொடிய யுத்தம்” என்பதே. காரணம் அதுவரை தினம் தினம் சிங்கள கிராமங்களில் கேட்ட மரண ஓலம் அவர்களை கலங்கவைத்தமை. அந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தவிடாது மகிந்தவை தடுத்தவர்கள், வடக்கு கிழக்கின் வளங்களை தாம் சூறையாடும் திட்டங்களை தான் முன்னெடுக்க செய்தனர். பாசிக்குடா முதல் அறுகம்பை வரை கடற்கரைகள் கபளீகரம் செய்யப்பட்டன.

குடாநாட்டின் விளைநிலங்கள் ராணுவம் பயிர்செய்யவும், மீன்பிடி துறைமுகங்கள் கடற்படை வசமும் மக்களின் வீடுகள் ராணுவ முகாமாகவும் மாறியதால், புலிகள் அழிந்தார்கள் என அவர்களால் பாதிக்கப்பட்ட, அடக்கி ஒடுக்கிவைக்கப்பட்ட மக்களின் சந்தோசம் நிலைக்கவில்லை. தன்னை சுற்றி இருந்தவர்களுக்கு, அவர்கள் இஸ்டம்போல செயல்படும் அதிகாரம் கொடுத்து, அவர்களின் அராஜக செயலுக்கு அனுமதி வழங்கியது வடக்கு, கிழக்கில் மட்டுமல்ல தெற்கிலும் தொடர்ந்தது. தொடர் வெற்றிகளை குவித்த புலிகளை ஆதரித்த மக்களே, பின்பு ஆளணி பற்றாக்குறைக்கு பலாத்தகாரமாக தம் பிள்ளைகளை புலிகள் பிடித்தபோது வெறுத்தனர். அதுபோலவே வடக்கிலும் கிழக்கிலும் அரச அனுசரணையுடன் நடந்த அராஜகங்களை கவனத்தில் கொள்ளாத சிங்களம் அது தெற்கிலும் ஆரம்பித்ததும் மகிந்தவை திட்ட தொடங்கியது. பொது பலசேனா மூட்டிய தீ தென்னிலங்கை முஸ்லிம்களை சிந்திக்க வைத்தது. நீர்மாசு பற்றி தெருவில் இறங்கி போராடிய மக்களை ராணுவம் அடக்கியது சிங்கள மக்களை சீற்றமுற செய்தது.

அத்தனை பழிகளும் மொத்தமாக மகிந்த தலையில் தான் விழுந்தது. சுற்றி இருந்தவர் செயலுக்கு மகிந்த பலியானார். யுத்த நாயகனை எதிர்க்கும் மனநிலை மக்களுக்கு ஏற்பட்டது. தங்கள் உளவு பிரிவுகள் மூலம் நிலைமைகளை அறிந்த நாடுகள் மகிந்தவை வீழ்த்தும் சதி வலையை பின்ன தொடங்கினர். நாட்டு நடப்புகளை தமக்கு சாதகமாக பயன்படுத்தும் மந்திரிகளின் கூற்றை நம்பிய மகிந்த, மக்கள் என் பக்கம் என்ற மாயையில், சீனாவின் பக்கபலமாக இருக்கும் என்ற இறுமாப்பில், சர்வதேசத்தை கவனத்தில் எடுக்கவில்லை. ஹம்பாந்தோட்டையில் துறைமுகம், மத்தளவில் விமான நிலையம், கொழும்பில் தாமரை தடாகம், மற்றும் துறைமுக நகரம் என சீன செழிப்புடன் “காலமெல்லாம் நீங்கள் தான்” என மகிந்தவை ஜனாதிபதி கனவில் மிதக்கவைத்தவர்களில் பலர் இன்று மைத்திரி ரணில் அரசில் அமைச்சர்கள். மைத்திரி ரணில் அரசில் இணைக்காது கைவிடப்பட்டவர்கள் ஆதங்கத்தில்.

விடுபட்டுப்போன, பதவிபறிபட்டு போன உதிரிகள், தாம் மீண்டும் தலைநிமிர, மகிந்த துணை வேண்டும் என்ற சுயநல, சுயலாப சிந்தனையில் அவரை முன்னிறுத்தி, புதிய கோசங்களுடன் அரசின் மீது வசைபாட வைக்கின்றனர். அதில் ஒன்றுதான் சர்வதேசத்துக்கு அடிபணியும் அரசு மற்றும் ராணுவத்துக்கு எதிரான நடவடிக்கை என்ற மகிந்தவின் ஆதங்கம். ஜனாதிபதி தேர்தலில் தோற்க்கடிக்கப்பட்ட பின்பு மகிந்த சிந்தனை சற்று தெளிவாக இருந்தது. அவர் நாட்டுக்கு ஆற்றிய சேவையை மனதில் கொண்டு, மைத்திரி அவருக்கு மிக உயரிய கௌரவ பதவி ஒன்றை வழங்கும் நிலையில் தான் இருந்தார். ஆனால் அந்த உயரிய நிலைக்கு அவர் சென்றால் தாம் அரசியலில் செல்லாகாசாகி விடுவோம், என்ற பயத்தில் சில உதிரிகள் மீண்டும் அவரை சகதிக்குள் விழுத்தும் சதியை செய்கின்றனர். கடந்த ஜனாதிபதி தேர்தலை கவனித்தால் தமிழ் முஸ்லிம் வாக்குகளை தவிர்த்து சிங்களவாக்குகளில் மகிந்தவுக்கும் மைத்திருக்கும் பாரிய வித்தியாசம் இல்லை.

எனவே தனி சிங்கள வாக்குகளை மட்டும் முன்னிறுத்தி வகுக்கும் வியூகம், ராணுவத்தை பாதுகாப்பது போல ஆரம்பித்து தாம் பதவிக்கு வருவதற்கான சூதாட்டம். சகுனியின் வியூகத்தில் வீழ்ந்த தருமன் போலவே பல சுயநல கௌரவர்கள் ஒன்றுகூடி மகிந்தவை ஆடவைத்து, மைத்திரி அரசை சர்வதேசத்தின் அடிவருடிகள் என அடையாளப் படுத்துகின்றனர். சாதுவை மிரளவைத்தால் பாதகம் விளையும் என்பது யோசித ராஜபக்ச விளக்க மறியல் சென்ற பின்பும் இவர்களுக்கு விளங்கவில்லை. நாளை சிராந்தி ராஜபக்ச மற்றும் முக்கிய முன்னாள் பெரும் புள்ளிகள் கூட அந்த நிலைக்கு ஆளாகலாம். கௌரவ பதவியுடன் வலாற்று நாயகனாக வேண்டியவரை ஊழல் விசாரணைக்கும், விளக்கமறியலில் இருக்கும் மகனை கண்கலங்க பார்க்கும் நிலைக்கும் உட்பட வைத்த கூட்டம் தாம் நினைத்ததை அடைய எதை வேண்டுமானாலும் செய்வர். அன்று இந்திய இலங்கை ஒப்பந்தத்தால் உருவான இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையை உருவாக்க மூத்த அரசியல் கட்சி முன்வரவில்லை.

அதனால் அதுவரை போராட்ட இயக்கமாக இருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் அரசியல் கட்சியாக பதிவு செய்து தன்னை முன்னிலைப் படுத்தியது. அதன் பின்பே ஏனைய இயக்கங்கள் அரசியல் கட்சியாக பதிவு செய்தன. அரசியல் போராளியாக இருந்த வரதராஜபெருமாள் முதல்அமைச்சர் ஆனதும், முதல்வர் ஆகும் கனவு மற்றவர்களையும் தொற்றிக்கொண்டது. அரச ஆதரவில் பிள்ளையான் முதல்வரான பின்பு அது அரசுடன் இணைந்து இருந்தவர்களின் எதிர்பார்ப்பாகவும், ஏக்கமாகவும் மாறியது. அதுபோல மகிந்தவின் அனுசரணையில் நினைத்ததை செய்யும் அமைச்சர்களாயிருந்து இன்று உதிரிகளாய் போனவர்கள் மகிந்த தலைமை ஏற்றால் தாம் மீண்டும் அமைச்சர்கள் ஆகலாம் என எழுப்பும் குரல், மகிந்த சிந்தனையை குழப்பி இன்று அவரை மீண்டும் தெருவில் இறக்கிவிட்டது. தனது மூத்த சகோதரரின் யுத்த வெற்றிக்கு வியூகம் வகுத்த கோத்தபாயவும் மகிந்தவின் மீள் எழுச்சிக்காக அரசியல் களம் காணலாம். அதேவேளை இவர்களுக்கு முகம் கொடுக்க முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா பாராளுமன்றம் சென்றுள்ளார்.

யுத்தத்துக்கு தலைமை தாங்கிய மகிந்தர், வியூகம் வகுத்த கோத்தபாய, இராணுவத்தை வழிநடத்திய பொன்சேகா என்ற நேராடி மோதலின் பின்புலத்தில் சர்வதேச நகர்வுகள், மைத்திரி அரசை தக்கவைக்க முயலும். காரணம் தற்போது தணிந்துள்ள சீனப்பிரசன்னம் மகிந்தவின் மீள் வருகையால் மீண்டும் முக்கியத்துவம் பெற்று பிராந்தியத்தில் சில அதிர்வுகளை ஏற்படுத்தும். அதேவேளை இன முறுகல் நிலைமைகளும் தோற்றுவிக்கபடலாம். மகிந்தவை முன்னிறுத்தி சிங்கள மக்களையும் இராணுவத்தையும், தங்கள் பக்கம் அணிதிரட்டும் இவர்களின் சுயநல செயலை மைத்திரி ரணில் அரசால் தடுக்க முடியாவிட்டால்…? இன்று தோன்றியுள்ள புதிய சூழ்நிலை எதிர்வரும் காலங்களில் பெரும் புயலையா? அல்லது தென்றலையா? தெற்கில் ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை. ஆனால் அது வடக்கு கிழக்கில் சுனாமியாகி விடக்கூடாது. ஏனென்றால் பதவிக்கு வருவதற்காக இனவாதத்தை தூண்டுவதும் கலவரங்களை ஏற்படுத்துவதும் நாம் கடந்து வந்த வரலாற்று அனுபவம்.

(ராம்)