சுதந்திர தினத்தோடு மீண்டும் அழிப்பதற்கான திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதா?

இலங்கை என்ற சிறிய தீவை பிரித்தானிய காலனியாதிக்கம் விடுதலை செய்து தனது உள்ளூர் முகவர்களிடம் ஆள்வதற்காக ஒப்படைத்த நாளான பெப்ரவரி 4ம் திகதியை இலங்கையின் சுதந்திர நாளாகக் கொண்டாடுகிறார்கள். தமிழர்களுக்கு மட்டுமல்ல, இலங்கையின் எந்தப் பகுதியில் வாழ்கின்றவர்களுக்கும் இந்த நாள் சுதந்திர நாள் அல்ல. இலங்கையை நேரடியாக ஆட்சிசெய்த பிரித்தானியா தமது முகவர்களூடாக அதனை ஆள்வதற்குரிய அரசை ஏற்படுத்திய சுதந்திர தினத்திலிருந்து இலங்கையில் ஒரு சுழற்சி போல இரத்தம் ஆறாகப் பாய ஆரம்பித்தது. தொடர்ச்சியாகப் பத்தாண்டுகள் இலங்கையில் ஆயுதப் போராட்டமற்ற சூழல் காணப்பட்டதில்லை. சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீதான வன்முறைகளை இனக்கலவரங்கள் என அழைத்துக்கொண்டனர். தெற்கிலிருந்து எழுந்த ஜே.வி.பி இன் ஆயுதப் போராட்டங்களையும், தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தையும் பயங்கரவாதம் என அழைத்தனர். இந்த இரண்டு போராட்டங்களையும் அழித்து ஆயிரமாயிரமாய் மக்களை கொன்று குவிப்பதற்கு பிரித்தானிய அரசு நேரடிப் பங்களிப்பைச் செலுத்தியது. தனது ஆலோசகர்களை இலங்கைக்கு அனுப்பியது. ஆட்கொல்லி ஆயுதங்களை இலங்கைக்கு வழங்கிற்று.

விடுதலை இயக்கங்களை அழிப்பதற்கு ஏதுவான கட்டமைப்புக்களைக் கொண்டதாக வளர்த்து இறுதியில் மனிதகுலத்தின் ஒரு பகுதியை அழித்து அப்பாவிகளின் இரத்தத்தின் மீது தமது காலனிய வெறியை மீட்டுக்கொள்ள உதவிற்று. சிங்கள மக்கள் மத்தியிலிருந்து அரசிற்கு எதிரான போராட்டங்கள் தோன்றிய போதெல்லாம், அரசு தன்னைப் பலப்படுத்திக்கொள்ள சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீதான ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டது. பேரினவாதத்தை வளர்த்து சிங்கள மக்கள் மத்தியில் இனவெறியை வளர்த்து அவர்கள் மத்தியிலிருந்து எழுந்த போராட்டங்களைத் தணித்தது. இதன் மறுபக்கத்தில் தமிழ்ப் பேசும் மக்கள் இலங்கை என்ற ஒற்றையாட்சி அமைப்பு முறைக்குள் வாழ்வது சாத்தியமற்றது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். தமிழ் மக்கள் ஏற்பட்ட விரக்தி மனோபாவத்தை வாக்குகளாக மாற்றிக்கொண்ட தமிழரசுக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி போன்ற கட்சிகள் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை இனவாதமாக மாற்றின. மக்கள் மத்தியிலிருந்து உணர்வு பூரவமான எழுச்சிகளை ஏற்படுத்துவதற்குப் பதிலாக உணர்சிவ்சப்பட்டுத்தப்பட்ட சமூகத்திலிருந்து வாக்குகளைத் திரடிக்கொண்டன தமிழ்க் கட்சிகள்.

சிங்கள இனவாதத்தால் தமிழ் இனவாதமும், தமிழ் இனவாதத்தால் சிங்கள இனவாதமும் பலமடைந்தன. பேரினவாத ஒடுக்குமுறை இராணுவ ஒடுக்குமுறையாக வளர்ச்சிபெற இலங்கை அரசு பிரித்தானியக் காலனியாதிக்க அரசுடன் இணைந்து தனது இராணுவபலத்தை வளர்க்க ஆரம்பித்தது. அதன் எதிர்த்தரப்பில் தமிழரசுக் கட்சியின் தொடர்ச்சியாக ஆயுதப் போராட்டக் குழுக்கள் தோன்றின. அவை அனைத்தும் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை இனவாதம் கலந்த பிரிவினைக்கான போராட்டமாக தமிழரசுக் கட்சியின் ஆயுதப் பிரிவுகள் போன்றே ஆரம்பித்தன.

ஆயுதப் போராட்ட அமைப்புக்கள் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்டு பரிணாம வளர்ச்சி பெறுவதற்குப் பதிலாக புலம்பெயர் நாடுகளிலுள்ள ஏகாதிபத்தியக் கைக்கூலிகளின் ஆளுமைக்கு உட்பட்டன. ஆயிரமாயிராமய் தியாகிகள் உயிரிழந்து போயினர். வடக்கும் கிழக்கும் தமது குழந்தைகளை ஆயுதப் போராட்டத்திற்காக அர்பணம் செய்தது. இளமையைத் துறந்து, கல்வியை இழந்து, தமது உயிர்களை அர்ப்பணித்த அனைவரதும் தியாயகங்கள் இன்று மீண்டும் இலங்கையில் சமஷ்டிக் கோரிக்கையில் வந்து நிற்கிறது.

இலங்கையில் கூட்டாட்சி என்ற கோரிக்கையைக் கூட முன்வைப்பதற்கு தமிழ்ப் பேசும் மக்கள் மத்தில் குறைந்த பட்ச அரசில தலைமை கூடக் கிடையாயது. புலம்பெயர் நாடுகளிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட தமிழ் மக்கள் பேரவை இதன் ஒருபடி மேலே சென்று சமஷ்டி அரசு பிரிந்துசெல்ல முற்படுமானால் இலங்கை அரசு அதனைக் கலைத்துவிடலாம் என்று திட்டத்தை முன்வைத்து பேரினவாதத்தின் அடியாள் அமைப்புப் போன்று செயற்படுகிறது. வலைப்பாடு மீனவர்களின் கட்டாய கருத்தடை போன்ற இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளைக் கூடக் கண்டுகொள்ளாத விக்னேஸ்வரன் கும்பல் தயாரித்த தீர்வுத் திட்டத்தில் கடற்பாதுக்காபுக்கூட இலங்கை அரசின் உரிமை என்கிறது. கேட்டால் இந்தியாவும் அமெரிக்காவும் ஏற்றுக்கொள்ளாது என்கிறார்கள்.

இந்தியாவும் அமெரிக்காவும் ஆப்கானிஸ்தானைப் போலவும், சிரியாவைப் போலவும், வன்னியில் நடந்ததைப் போலவும் உயிர்ப்பலி கேட்கிறது என்றால் அதனையும் ஏற்றுக்கொள்வார்களா? அமெரிக்காவும் இந்தியாவும் பிரித்தானியாவும் ஏற்றுக்கொள்வதைத்தான் உரிமைப் போராட்டம் என்றால் யார் இவர்கள்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான மாற்று அரசியல் உருவாகிவிடக்கூடாது என்பதற்காகவே பேரினவாதிகளாலும், ஏகாதிபத்தியங்களாலும் களமிறக்கப்பட்ட மக்கள் விரோதிகள் அல்லவா இவர்கள்! இத் திட்டத்தை யாருடைய அனுமதியுடன் யார் தயாரித்தனர்? யாருடன் பேச்சு நடத்தப் போகிறார்கள்? மீண்டும் பிரித்தானிய காலனீயக் கொடுங்கோலர்களின் காலடியிலா தமிழ் மக்களை அடிபணிய வைத்து அழிக்கப் போகிறார்கள். இதனால் தானா சுன்னாகத்தில் அழிப்பை ஆரம்பித்தனர்? மக்கள் மீண்டும் அண்ணார்த்து பார்த்துகொண்டிருக்க அழிவுகளுக்கான புதிய யுகம் ஆரம்பித்துவிட்டதா?

(வியாசன்)