வடக்கு, கிழக்கு இணைப்பு விவகாரம்: நாடி பிடிப்பு

(மொஹமட் பாதுஷா)

தீர்வுத்திட்டத்தின் அடித்தளமாகக் கருதப்படுகின்ற வடக்கு, கிழக்கு மாகாணங்கணை இணைத்தல் பற்றிய கருத்துக்கள் பரவலாக முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம்கள் இதைப் பற்றி என்ன நினைக்கின்றார்கள் என்று அறிந்து கொள்வதற்கான பூர்வாங்க பணிகளை தமிழ் அரசியல்வாதிகள் ஆரம்பித்திருக்கின்றார்கள்.

தமிழ்த் தரப்பிலிருந்து பலவாறாக, பலகோணங்களில் இருந்து அபிப்பிராயங்கள் அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனாலும் தீர்வுப்பொதி எந்த வடிவம் கொண்டதாக இருக்க வேண்டும் என்ற விடயத்தில் சில தமிழ் அரசியல்வாதிகளுக்கு சிற்சில அபிப்பிராய பேதங்கள் இருந்தாலும், அந்தப் பொதிக்குள் என்ன உள்ளடங்கி இருக்கின்றது என்ற விவாதத்தை ஒருபுறம் வைத்துவிட்டு, அந்தப் பொதி இரு மாகாணங்களையும் இணைத்துக் கட்டிய பொதியாக இருக்க வேண்டும் என்ற விடயத்தில் எந்தத் தமிழ் அரசியல்வாதிக்கும் மாறுபட்ட கருத்து இருப்பதாகத் தெரியவில்லை.

மறுபுறமாக, முஸ்;லிம் அரசியல் தலைவர்கள், அரசியல்வாதிகள் உருப்படியான முறையில் தம்முடைய எந்தவொரு நிலைப்பாட்டையும் பகிரங்கமாக வெளியிடாமல் இருக்கின்றனர். இவ்வாறு அவர்கள் இவ்விடயத்தில் மெத்தனப் போக்கை கடைப்பிடிப்பதானது, முஸ்லிம் மக்கள் தமது அபிலாஷைகளை அரசியலமைப்பின் ஊடாக, தீர்வுத் திட்டத்தின் ஊடாக நிறைவேற்றிக் கொள்வதற்கு இருக்கின்ற காலஅவகாசத்தையும் வீணடிக்கும் செயற்பாடாகவே உள்ளது. மௌனமாக இருப்பதன் மூலம், வாய்க்கும் மூளைக்கும் சம்பந்தமில்லாமல் பேசுதல், அல்லது யாருக்கும் விளங்காத பல சிலேடைச் சொற்களின் மூலம் முஸ்லிம்களின் அரசியல் நகர்ந்து கொண்டிருக்கின்றது.

உத்தேச அரசியலமைப்பு மறுசீரமைப்பின் மூலமாக தீர்வுத்திட்டம் ஒன்றை அல்லது அவ்வாறு தோற்றமளிக்கும் ஓர் அரசியலமைப்பு ஏற்பாட்டை முன்வைப்பதற்கு அரசாங்கம் முடிவு செய்திருக்கின்றது. முன்னைய அரசாங்கங்கள் தமிழ் மக்களுடன் நடந்து கொண்ட விதம் மற்றும் யுத்தகால செயற்பாடுகள் பற்றிய சர்வதேச நெருக்கடிகள் இலங்கை அரசாங்கத்தை, அவ்வாறான ஓர் ஒற்றை வழிப்பாதை தொடங்கும் சந்தியில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்றன. தமிழர்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆட்சிபீடமேறிய அரசாங்கம் என்றபடியாலும், ஆட்சியாளர்களிடையே மனநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதாலும் விரும்பாமல் என்றாலும் தமிழர்களுக்கு ஒரு தீர்வுப் பொதியை வழங்க வேண்டிய கடப்பாடு இந்த அரசாங்கத்துக்கு அதிகமுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து ஒரு தீர்வுத் திட்டத்தைப் பெறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளடங்கலாக அநேக தமிழ்க் கட்சிகள் திடசங்கற்பம் பூண்டிருக்கின்றன. ஆனால், அரசாங்கத்துக்கு இதில் பாரிய சிக்கல் இருக்கின்றது என்பது யாரும் அறியாத இரகசியமல்ல.

இலங்கையில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர் என்பது வெறும் புள்ளிவிபரம் மட்டுமல்லƒ அதன் ஆழஅகலங்கள் எந்த நேரத்திலும் மாறுபடலாம். அதுபோல, இன்று வரைக்கும் இனவாதம் கொதிநிலையிலேயே இருந்து கொண்டிருக்கின்றது. அது எந்த நேரத்திலும் தனது விகாரமான முகத்தைக் காட்டத் தொடங்கலாம். இதுதான் யதார்த்தம். இப்படியிருக்கையில், வடக்கையும் கிழக்கையும் இணைத்து ஒரு தீர்வுத்திட்டத்தை வழங்க, சிங்கள அரசியல்வாதிகளும் அடிப்படைவாத பௌத்தர்களும் விடுவார்களா என்பது வழக்கமான கேள்வியாகும். இதோ வடக்கு, கிழக்கை தமிழர்களுக்கு கொடுத்து விட்டார்கள் என்று தென்பகுதி சிங்களவர்கள் ஆட்சேபம் தெரிவிக்கலாம். அதனைத் தமிழீழம் என்று பெருப்பித்துக் காட்டும் வேலையை இனவாதிகள் கனகச்சிதமாகச் செய்யலாம். எவ்வாறிருப்பினும், உத்தேச அரசியலமைப்பு மறுசீரமைப்பின் ஊடாக ஒரு தீர்வை வழங்கியாக வேண்டிய நிலையில் நல்லாட்சி அரசாங்கம் இருக்கின்றது.

வடக்கையும் கிழக்கையும் இணைத்து தமிழர்களுக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுப்பது மட்டுமன்றி இன்னும் பல காய்நகர்த்தல்களைச் செய்வதற்கான சர்வதேச நிகழ்ச்சி நிரலொன்று தயார்நிலையில் இருப்பதாகவும் முஸ்லிம் அரசியலில் ஊர்ஜிதமற்ற செய்திகள் வலம்வருகின்றன. அதாவது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைப்பது என்றால் அங்கு வாழ்கின்ற எல்லா இன மக்களும் பெரும்பான்மை ஆதரவை வெளிப்படுத்த வேண்டும் என்பது சட்டத்தின் தேவைப்பாடாகும். அந்த அடிப்படையில் முஸ்லிம்களின் ஆதரவைப் பெறாவிட்டால் இணைந்த வடகிழக்கை மையமாகக் கொண்ட தீர்வுப்பொதி சாத்தியமில்லை என்ற யதார்த்தத்தை, அரசாங்கம் தமிழர்களுக்கும் சர்வதேசத்துக்கும் சொல்லாமல் சொல்லியிருப்பதாக தெரிகின்றது.

இந்த விடயத்தில் முஸ்லிம்கள் ஒரு மிக முக்கிய கருவியாக பயன்படுத்தப்படுவார்கள் என்று ஊகிக்க முடிகின்றது. மிக முக்கியமாக, பிரதான முஸ்லிம் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான ரவூப் ஹக்கீம், நாடாளுமன்ற உறுப்புரிமையின் அடிப்படையில் அக்கட்சிக்கு சமமான அளவு முன்னேறியுள்ள மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீனை சமாளிப்பது குறித்தும் சிந்திக்கப்படும். இவர்களை சர்வதேசமும் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் மட்டுமல்ல அரசாங்கமும் தமக்குச் சாதகமான காரியங்களைச் சாதிப்பதற்காக பயன்படுத்தும்.

விளக்கிக் கூறினால், தமிழர்களும் புலம்பெயர் சக்திகளும் சில வெளிநாடுகளும் எதிர்பார்க்கின்ற தீர்வுத் திட்டத்தை முற்றுமுழுதாக கொடுப்பதற்கு, நாம் மேற்குறிப்பிட்ட காரணங்களின் அடிப்படையில் சிங்களப் பெருந்தேசியம் விரும்பப் போவதில்லை. எனவே, முஸ்லிம்களின் தலையில் பாரத்தைப் போட்டுவிட்டு, தமது முடிவுகளை நியாயமாக்குவதற்கு அரசாங்கம் நினைக்கக்கூடும். முஸ்லிம்களின் கணிசமான ஆதரவோடு ஒரு தீர்வுத் திட்டம் வழங்கப்பட்டு, அதனை சிங்கள மக்கள் எதிர்ப்பார்களாயின், அரசாங்கமானது சர்வதேச அழுத்தங்களை மட்டுமன்றி முஸ்லிம்களையும் ஒரு காரணியாக, சிங்கள மக்களுக்கு காண்பிக்கலாம். அவ்வாறே, முஸ்லிம்களின் ஆதரவில்லாத காரணத்தினாலோ அல்லது முஸ்லிம்களுடன் தொடர்புபட்ட வேறு ஏதாவது அடிப்படையிலோ தமிழர்கள் 100 வீதம் திருப்திப்படும் ஒரு தீர்வுப் பொதியை வழங்க முடியாது போகும் பட்சத்தில், ‘நாங்கள் தயாராகத்தான் இருக்கின்றோம். முஸ்லிம்கள் விடுகின்றார்கள் இல்லையே’ என்று சொல்லி அரசாங்கம் கைவிரிக்கவும் சாத்தியம் இல்லாமலில்லை. அதேநேரத்தில் முஸ்லிம்கள் தங்களது அபிலாஷைகளை உறுதிப்படுத்த முயற்சிக்கும் வேளையில், தமிழர்களுக்கான தீர்வுத்திட்டக் குட்டை குழப்பப்படுமாயின், மிக இலகுவாக தமிழ் அரசியல்வாதிகளும் முஸ்லிம்களை பழிசொல்வார்கள். எனவேதான், இவ்விடயத்தில் முஸ்லிம்கள் பயன்படுத்தப்படுவார்கள் என்று சொல்கின்றோம்.

வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்தில் சில முஸ்லிம் அரசியல்வாதிகள் தம்முடைய ஆட்சேபத்தை இப்போது வெளியிட்டிருக்கின்றார்கள். தேசிய காங்கிரஸின் தலைவர் அதாவுல்லா, இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா போன்று கிழக்கைச் சேர்ந்த பல அரசியல்வாதிகள் இவ்விணைப்புக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். வடக்கில் பிறந்து, தனியொரு முஸ்லிம் கட்சியின் தலைவராக இருக்கின்ற றிசாட் பதியுதீன் இவ்விரு மாகாணங்களையும் இணைப்பதற்கு உடன்பட மாட்டார் என்ற விடயம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கே தெரியும். அப்படியென்றால் இதற்கு மிகப் பொருத்தமானவர் என்று புலம்பெயர் சக்திகளாலும் தமிழ்த் தரப்பினாலும் கருதப்படக் கூடிய ஒரேயொரு அரசியல்வாதி ரவூப் ஹக்கீமே என்றால் மிகையில்லை. வடக்கு, கிழக்குக்கு வெளியே பிறந்து, வடக்கு, கிழக்கில் நிலைகொண்டுள்ள ஒரு கட்சியின் தலைவராக இருக்கின்ற சமகாலத்தில், சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் நோகாமல் அரசியல் செய்கின்ற கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான இவரை வைத்தே காய்களை நகர்த்துவதற்கு சர்வதேசமும் தமிழர்களும் விரும்பலாம். அதே காரணத்திற்காக, அதாவது எவ்வகையிலும் சிங்கள மக்களை ஹக்கீம் பகைத்துக் கொள்ள மாட்டார் என்ற அடிப்படையில் அவரை இத் தீர்வுத்திட்டத்தில் ஒரு துருப்புச் சீட்டாக சிங்கள தேசியம் பயன்படுத்தக் கூடும்.

அரசாங்கம் ரவூப் ஹக்கீமை (அதனூடாக முஸ்லிம் சமூகத்தை) வைத்து இவ்விவகாரத்தை கையாளலாம் என்பதை தமிழ்த் தரப்பினரும் நாடுகடந்த செயற்பாட்டாளர்களும் முன்னுணர்ந்து கொண்டுள்ளதாக தெரிகின்றது. அந்த அடிப்படையிலேயே அரசாங்கம் ஹக்கீமை வசப்படுத்தும் முன்னர் தமக்கு சாதகமானவராக அவரை ஆக்குவதற்கான குளிர்விக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் பேச்சு அடிபடுகின்றது.

அதேநேரத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகளின் மனநிலையை நோட்டமிடும் வேலையையும் தமிழத்; தேசியக் கூட்டமைப்பு ஆரம்பித்திருக்கின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், ‘இணைந்த வடகிழக்கு மாகாணத்திற்கு முஸ்லிம் முதலமைச்சரை ஏற்றுக் கொள்ள தாம் தயார்’ என்று எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்திருந்தார்;. அதற்குப் பலளிக்கும் விதத்தில் கருத்துத் தெரிவித்திருந்த மு.கா தலைவர் ஹக்கீம், ‘சேதாரமில்லாத விட்டுக் கொடுப்புக்கு தயார்’ என்று கூறியிருந்தார். ஆனால் அது எவ்வகையான சேதாரம் என்று அவர் விளக்கவே இல்லை. அத்துடன் சில முஸ்லிம் காங்கிரஸ் அரசியல்வாதிகள் ஓரிருவர் நிபந்தனையுடனான ஆதரவு என்று சொல்கின்றனர். அந்த நிபந்தனை என்னவென்று சரியாக வரையறுத்துத் தெளிவாக கூறவில்லை.

சில தினங்களுக்கு முன்னர் குடாநாட்டில் நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் வடக்கையும் கிழக்கையும் இணைப்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் அதேநாளில் கல்முனையில் நடைபெற்ற முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் மாநாட்டில் இவ்விணைப்புக்கான பகிரங்கக் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் நோக்குகையில், இவ்விரு மாகாணங்களையும் இணைப்பதால் தமக்குக் கிடைக்கும் அனுகூலங்களை விடப் பாதிப்புக்களே அதிகமாக இருக்கும் என்று பெரும்பாலான முஸ்லிம்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். கிழக்கில் வாழ்கின்ற ஆனால் ஹக்கீமுக்கு வால்பிடிக்கின்றவர்கள் அல்லாத முஸ்லிம் அரசியல்வாதிகளும் இந்த நிலைப்பாட்டிலேயே இருக்கின்றனர். நிலைமை இவ்வாறிருக்கையில், மு.கா தலைவர் இவ்விணைப்புக்கு திடீரென ஆதரவளிக்கமாட்டார். மக்களின் மனநிலை இப்படியிருக்க, கட்சிக்குள் பல முரண்பாடுகளும் கட்சிக்கு வெளியே கிழக்கின் எழுச்சி நடவடிக்கையும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற ஒரு சூழலில், வடக்கு, கிழக்கை இணைப்பதற்கு ஹக்கீம் ஆதரவளிப்பார் என்றால், சொந்த செலவில் சூனியம் வைத்தவர் போல் ஆகிவிடுவார். எனவே அவர் நிபந்தனையற்ற வகையில் செயற்படமாட்டார் என்பதே தற்போதைய அனுமானமாகும்.

ஒருவேளை ஹக்கீம் நிபந்தனை (நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணம் அல்லது தனி முஸ்லிம் அலகு) எதுவுமில்லாமல், ஆறுதல் பரிசுகளுக்காக ஆதரவளித்தால் கூட முஸ்லிம்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறுவது மிகக் கடினமாகும். வடக்கு, கிழக்குக்கு வெளியே இருக்கின்ற ஒருவர் ஆதரவளித்தால் இவ்விரு மாகாணங்களிலும் பிறந்து அரசியல் செய்கின்ற பலர் ஒன்றிணையக் காத்திருக்கின்றார்கள்.

எது எவ்வாறாயினும், மு.கா தலைவரும் மற்றைய முஸ்லிம் அரசியல்வாதிகளும் தம்முடைய நிலைப்பாட்டைத் தெளிவாக வெளியிட வேண்டும். இவ்வாறு விளங்காத வார்த்தைகளால் பேசிக் கொண்டிருப்பது முஸ்லிம்களுக்கு மாத்திரமன்றி தமிழர்களுக்கும் அரசாங்கத்துக்கும் கூட சிக்கலானதாகும். எல்லா வரைபும் வரைந்த பிற்பாடு எங்களுக்கு அதுவேண்டும் இதுவேண்டும் என்று கூறினால் முஸ்லிம்களுக்கு எதுவும் கிடைக்காமல் போய்விடும் என்பது ஒருபுறமிருக்க, தமிழர்களின் எதிர்பார்ப்பையும் சிதறடித்துவிடும். இரு தினங்களுக்கு முன்னர் வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன், முஸ்லிம்களுக்கு அதிகார சபை வழங்குவதில் தமிழர்களுக்கு ஆட்சேபனை இருக்க முடியாது என்று கூறியுள்ளார். ஆக, முஸ்லிம்கள் தமக்கு என்ன வேண்டும் என்றும் தம்முடைய நிபந்தனை என்னவென்றும் சரியாகச் சொல்லாத நிலையில், அதைத் தரலாம், இதைத் தரலாம் என்று ஆளுக்கொரு கதையை தமிழ் அரசியல்வாதிகள் கூறிக் கொண்டிருக்கின்றனர். இது தொடரக் கூடாது. இதில் இருக்கின்ற முக்கிய விடயம் என்னவென்றால், முஸ்லிம்கள் தமக்கு என்ன தேவை என்று தமிழர்களிடம் கேட்டுப் பெற வேண்டியதில்லை. அவர்கள் அரசாங்கத்திடமே கோர வேண்டும்.