வடக்கு மாகாணசபையில் நினைவுகூரப்பட வேண்டிய தியாகிகள் தினம்.

தோழர் பத்மநாபாவும் அவரது தோழர்களும் இந்தியாவில் வைத்து 1990ஆம் ஆcanadaண்டு தமிழீழ விடுதலைப்புலிகளால் கொடூரமாக கொலைசெய்யப்பட்டனர். அந்த கூட்டு படுகொலை இடம்பெற்ற ஜூன் மாதம் 19ஆம் திகதியை ஈழமக்கள்புரட்சிகர முன்னணியினர்(நாபா) அதாவது தற்போதைய தமிழர் சமூக ஜனநாயக கட்சியினர் தியாகிகள் தினமாக பிரகடனம் செய்து வருடாவருடம் நினைவுகூர்ந்து வருகின்றார்கள்.

ஆயுதமேந்திய அனைத்து தலைமைகள் மீதும் இருக்கக்கூடிய பல்வேறுபட்ட விமர்சனங்களும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிமீதும் இருக்கின்றது. குறிப்பாக இந்தியஇராணுவத்துடன் இணைந்து செயல்பட்ட காலங்களில் இடம்பெற்ற மக்கள் மீதான வன்முறைகள் கட்டாய ஆள்பிடி என்னும் பெயரில் இளைஞர்களையும் மாணவர்களையும் கூட அவர்களின் விருப்புகளுக்கு மாறாக பிடித்தெடுத்து வன்முறைக்கும் தள்ளியது போன்ற கடுமையான விமர்சனங்கள் உண்டு.

இந்தகைய விமர்சனங்கள் அனைத்துக்கும் அப்பால் பத்மநாபாவும் அவரது தோழர்களும் தமிழர் அரசியலில் மேலதிக முக்கியத்துவம் ஒன்றினை பெற்றிருக்கின்றார்கள். அதாவது பத்மநாபாவின் அரசியல் சாணக்கியத்தின் பெறுபேறாகவே வடக்கு கிழக்கு வாழ் சிறுபான்மை இனங்கள் இன்றைய மாகாண சபை முறைமையை அனுபவிக்கும் சந்தர்ப்பத்தை பெற்றிருக்கின்றார்கள்.

இலங்கை தமிழர் முன்னெடுத்த போராட்டங்களின் அடிப்படையில் காலத்துக்கு காலம் பல்வேறு விதமான ஒப்பந்தங்களும் தீர்வுகளும் முன்வைக்கப்பட்டு வந்த போதிலும் அவை எல்லாமே தோல்வியையே தழுவியிருக்கின்றன. ஆனால் விதிவிலக்காகவோ அதிஷ்டவசமாகவோ 1987ஆம் ஆண்டு இடம்பெற்ற இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட மாகாண சபை முறைமைகள் மட்டுமே இன்று எஞ்சியுள்ளன. அதிலும் மூன்றாம் நாடொன்றின் (இந்திய) நடுநிலைமையுடன் உருவாக்கப்பட்டதும் இலங்கையின் அரசியல் யாப்பு திருத்தத்தின் ஊடாக சட்ட வலுவாக்கம் பெற்றதுமான ஒரே தீர்வு இந்த மாகாண சபை முறைமையேயாகும்.

இந்த மாகாண சபை தீர்வை ஏற்றுக்கொண்டு பின்னர் படிப்படியாக அதனை ஒரு சமஸ்டி அல்லது மாநில அந்தஸ்து நோக்கி நகர்த்தலாம் என்பதே இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட அமைப்புகளின் திட்டமாக இருந்தது. அதன்படி தமிழீழ விடுதலை புலிகள் கூட இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு ஏனைய ஆயுதமேந்திய இயக்கங்களைப்போல ஆயுதங்களை ஒப்படைத்தனர். ஆனாலும் மாகாண சபைக்கான தேர்தலை விடுத்து தற்காலிக நிர்வாக கட்டமைப்பை தமது தலைமையில் தரவேண்டும் என்னும் கோரிக்கையில் புலிகள் முரண்டு பிடித்தனர். தேர்தலூடான மக்களின் தீர்ப்புகளுக்கு அஞ்சிய புலிகள் மாகாண சபை உருவாக்கத்தை நிராகரித்தனர். அதிகாரத்தை வேறு யாருடனும் பங்கு பகிர்ந்து கொள்வதில் என்றுமே உடன்படாத புலிகள் இந்த மாகாண சபையை ஏற்றுக்கொண்டு அதனை நடைமுறைப்படுத்திய இயக்கத்தினரை துரோகிகள் என சித்தரித்தனர்.

இதன்காரணமாக அன்று ஸ்ரீலங்காவில் ஆட்சியிலிருந்த பிரேமதாசா தலைமையிலான அரசுடன் இரகசிய உடன்பாடுகொண்டு மாகாண சபை ஆட்சி முறையை நிர்மூலமாக்கினார்.அரச இராணுவத்தின் ஒட்டுக்குழுக்களாக செயல்பட்டு மாகாண சபை உறுப்பினர்களையும் மாகாண சபைக்கு வந்து செல்லும் மக்களையும் கூட கொன்று வீசினர். இத்தனை இழப்புகளையும் எதிர்கொண்டுதான் தோழர் பத்மநாபா இந்த மாகாண சபைக்கு அத்திவாரமிட்டார்.

இறுதியில் இந்தியாவில் வைத்து தோழர் பத்மநாபாவையும் அவரது தோழர்கள் அனைவரையும் புலிகள் கொன்று குவித்தனர். புலிகளுடன் சேர்ந்து இந்த மாகாண சபைகளை உருவாக்கியவர்களை துரோகிகள் என்றவர்கள் புலிகளுக்கு ஓத்தூதியவர்கள் புலிகளால் தமிழீழம் கிடைத்துவிடும் என்று அப்பாவித்தமிழ் மக்களை நம்பச்செய்தவர்கள் புலிகளை வைத்து கோடிகோடியாக சம்பாதித்த பண முதலைகள் அனைவருமே இன்று சுமார் இருபத்தைந்து வருடகாலத்துக்கு பின்னர் மீண்டும் இந்த மாகாண சபையைத்தவிர வேறு எதுவும் கிடைக்காது என்பதை ஒத்துக்கொண்டிருக்கின்றார்கள்.

1983ஆம் ஆண்டு உக்கிரமடைந்த ஆயுத போராட்டம் வெறும் நாலு ஐந்து வருடங்கள் மட்டுமே நடைபெற்றிருந்த வேளையில் பாரிய உயிரிழப்புகளோ பொருளாதார அழிவுகளோ இல்லாத நிலையில் அந்த தீர்வினை எல்லோரும் ஏற்றுக்கொண்டிருக்கலாம் என்பதை இப்போதுதான் பெரும்பாலானோர் உணருகின்றார்கள்.

சுருங்க சொன்னால் பத்மநாபா என்று ஒருமனிதனின் தீர்க்கதரிசனம் மிக்க தற்றுணிச்சல் இல்லாவிடில் இன்று இந்த மாகாண சபைகள் கூட இருந்திருக்காது.

அதேபோன்றுதான் இருபது வருடங்களுக்கு பின்னர் துருப்பிடித்து கிடந்த மாகாண சபைகளுக்கு உயிரூட்டியது கிழக்குமாகாணத்தின் எழிற்சியேயாகும். ஆனால் அப்போதும்கூட கிழக்கு மாகாணசபையை தனித்து உருவாக்கிய சந்திரகாந்தனை நோக்கி சவால்களும் சாபங்களும் மட்டுமே வீசப்பட்டன. அத்தனை பரிகாசங்களையும் செரித்துக்கொண்டு அன்று பிள்ளையான் என்னும் சந்திரகாந்தன் கிழக்கு மாகாணசபை தேர்தலை எதிர்கொண்டபோது தமிழீழ விடுதலை புலிகளுடன் சேர்ந்து இத்தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் அந்த தேர்தலை நிராகரித்தனர்.

ஆனால் தமது அரசியல் குருட்டுத்தனங்களெல்லாம் அம்பலமாகி போன நிலையில் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கிழக்கு மாகாண சபைக்கு கூட்டாட்சியும் வடக்கு மாகாண சபையில் தனித்தும் ஆட்சி செய்கின்றனர்.

ஆனால் இந்த மாகாண சபைகளை உருவாக்கிய அதற்காகவே தனது உயிரையே தியாகம் செய்த அந்த மனிதனை இவர்கள் நினைத்துப்பார்ப்பதேயில்லை.எதற்கெல்லாமோ தீர்மானம் நிறைவேற்றும் வடமாகாண சபையானது மாகாண சபைகளின் உருவாக்கத்துக்கு அடிகோலிய மனிதனுக்கு ஒரு அஞ்சலி தீர்மானம் நிறைவேற்றியுள்ளதா? தோழர் பத்மநாபாவின் பாசறையில் வளர்ந்தவர்களும் அவரது அரசியல் தொடர்ச்சியில் பதவி பெற்றவர்களுமாக பலர் இந்த மாகாண சபைகளில் அங்கம் வகிக்கின்றனரே? அவர்கள் அவற்றுக்கான முன்முயற்சிகளில் இதுவரை ஈடுபட்டுள்ளனாரா? என்கின்ற கேள்விகள் எழுப்பப்பட வேண்டியவையாகும்.

எம்.ஆர்.ஸ்டாலின்

நன்றி : தேனி இணையத்தளம்