சம்பியா: கடன் பொறிக்குள் சிக்கிய நாடு

கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்  ஹக்கெய்ண்டே ஹிச்சிலேமா (Hakainde Hichilema) சம்பியாவின் புதிய ஜனாதிபதியாக  பதவியேற்றாா். முன்னாள் ஜனாதிபதி எட்கர் லுங்கு (Edgar Lungu) பெற்ற பெரும் கடனிலிருந்து நாட்டை மீட்பதற்கு  ஹிச்சிலேமா கடந்த ஒரு வருடமாக போராடி வருகிறார்.

சம்பியா பெற்றுள்ள  கடன்  14.1 பில்லியன் அமொிக்க டொலா்களுக்கும் அதிகம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு, சம்பியாவின் முன்னாள் ஜனாதிபதி  லுங்கு, சம்பியாவின் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தாத காரணத்தினால், கடனைத் திருப்பிச்  செலுத்த முடியாத  முதலாவது ஆப்பிரிக்க நாடாக சம்பியா பெயா் பெற்றது.

ஹிச்சிலேமாவின் அரசாங்கம் அதன்  கடன் வழங்குநர்களோடு தொடராக கதைத்து வருகிறது. சம்பியாவை கடன் பொறி ராஜதந்திரத்தில் சிக்க வைத்தது தொடா்பாக அந்நாட்டின் பொருளாதார நிபுணா்கள்  சீனாவை  குற்றம் சாட்டி வருகின்றனா். 

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சம்பியாவின் விடயத்தில், சீனா மிகப்பெரிய கடன் வழங்குநர் என்ற நிலையில் கடனை மறுசீரமைப்பதில் மிகவும் தயக்கம் காட்டி வருகிறது.

வாஷிங்டனில்  உள்ள சீன ஆப்பிரிக்க ஆராய்ச்சி முன்முயற்சி நிறுவனம் (The China Africa Research Initiative) 2000 ஆம் ஆண்டு முதல், பதினெட்டு  சீன நிதி வழங்குநர்கள் சம்பியா நாட்டுக்கும் மற்றும்  அரசுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கும் கடன்களை வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

சீனாவிற்கு சம்பியா செலுத்த வேண்டிய  கடன் தொகை  6.6 பில்லியன் அமெரிக்க டொலா்கள் என கணிக்கப்பட்டுள்ளது. சம்பியாவின் முன்னாள் ஜனாதிபதி  லுங்குவின் அரசாங்கம்  ஒப்புக்கொண்டுள்ள  கடன் தொகையை விட, இது கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாகும்.

சீனாவிடமிருந்து முன்னாள் ஜனாதிபதி லுங்கு, இரகசியமாகவும் கடன் பெற்றிருக்கிறாா். தற்போது இடம்பெற்று வரும் கடன் மறுசீரமைப்பு பேச்சுவாா்த்தைகளில் இந்த விவகாரம் பெரும் தடைக்கல்லாக இருந்து வருகிறது.  

கடன் வழங்குநா்களாக இருக்கும் ஏனைய நாடுகள், சம்பியாவின் கடன்களின் அளவை நிர்ணயிக்க  முடியாமல் திணறி வருகின்றன.  நிவாரணமாக கிடைக்கவிருக்கும் பணத்தின் மூலம் சீனக் கடன்கள் இரகசியமாக அடைக்கப்படுமோ  என்ற அச்சத்தில் சம்பியாவிற்கு கடன் நிவாரணம் வழங்கும் நாடுகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கின்றன.

சம்பியா  சீனாவின் கடன் பொறி இராஜதந்திரத்தின் விளைவுகளை அணுவணுவாக அனுபவித்துக் கொண்டிருக்கிறது. நாடுகள் கடன் சுமையாலும் பொருளாதார நெருக்கடியாலும் தவிக்கும் போது கூட, சீனா தனக்கு  இலாபம் ஈட்டும் ஒரு பொறிமுறையை கையாளும் நிலைப்பாட்டில் கடுமையாக இருக்கிறது.

சீனாவிடமிருந்து  பெறப்பட்ட கடன்களால்  பாகிஸ்தானும், இலங்கையும் பாரிய பொருளாதார அழிவுகளை  சந்தித்துள்ளன. இதே பாதையில் தான் சம்பியாவும் பயணித்தது. இருப்பினும், சம்பியா சீனாவுடனான  ஒப்பந்தங்களை கைவிட்டு வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்கும் பேச்சுவாா்த்தைகளில் வெற்றிகரமாக இறங்கியிருப்பதாக  “பைனான்சியல் போஸ்ட்” தகவல் வெளியிட்டுள்ளது.

கனிம வளங்களில் ஒன்றான  தாமிரம் அல்லது செப்பை அதிகம் கொண்டுள்ள சம்பியா, 2000-2018 காலப்பகுதியில்  69 க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு சீனாவிடமிருந்து கடன்களைப் பெற்றுள்ளது. தாமிர வணிகத்தை இலக்கு வைத்து போக்குவரத்து மற்றும் மின்சாரத் தேவைகளுக்கு சீனாவின் இந்தக் கடன்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாட்டினதும் பௌதீக மற்றும் இயற்கை  வளங்களை இலக்கு வைத்தே  சீனா தனது கடன் வழங்கும் பொறிமுறையை வடிவமைத்து வைத்திருக்கிறது. 

சீனாவின் கடன் பொறி ராஜதந்திரம்

சீனாவிடமிருந்து கடன் பெற்று பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நாடுகளைப் பாா்க்கும் போது, சீனக்  கடன்களில் உள்ள வெளிப்படைத் தன்மையின் மீதுள்ள  சந்தேகம்  ஊா்ஜிதமாகியிருக்கிறது. 

சீனாவின் கடனுதவியும், அபிவிருத்தித் திட்டங்களும்  அந்தந்த நாட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும்  நோக்கம் கொண்டவையல்ல என்பது நிரூபணமாகியிருக்கிறது.  இதற்கு சமகால அரசியல், பொருளாதார நெருக்கடி நிகழ்வுகள் சான்று பகா்கின்றன. 

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள சம்பியாவும், இலங்கையும், பாகிஸ்தானும் இதற்கு சிறந்த உதாரணங்களாகும்.

சம்பியாவில் 60 சதவீத மக்களுக்கு மின்சாரம் இல்லை, 77 சதவீத மக்களுக்கு சுத்தமான குடிநீர் இல்லை, 46 சதவீத மக்களுக்கு இணைய வசதி இல்லை என ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பியா மற்றும் சீன அரசாங்கங்களுக்கிடையில் இடம்பெற்ற ஒப்பந்த  விதிமுறைகளில்  வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருந்தது இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

கடன் வழங்குவதின் மூலம் அந்தந்த நாடுகளின் மூலோபாய சொத்துக்கள் மீது சீனா தனது  ஆா்வத்தையும், பிடியையும்  வைத்திருக்கிறது என்ற   குற்றச்சாட்டுகளை  பல நாடுகள் எழுப்பி வந்திருக்கின்றன.

கடன் பொறி இராஜதந்திரம் என்பது சீனாவின் “ஒரு பட்டி ஒரு பாதை”  (Belt and Road Initiative)  திட்டத்தின் கீழ் சீனாவால் நடைமுறைபடுத்தப்படும்  ஒர் ஏமாற்று பொறிமுறை என்று பிாித்தானியாவில் இடம்பெற்ற  ஜி 7 நாடுகளின் மாநாட்டிலும் பிரஸ்தாபிக்கப்பட்டது. 

சீனாவின் கடன் பொறி ராஜதந்திரத்திற்கு  மாற்றீடாக, அமொிக்கா ‘சிறந்த உலகத்தை மீண்டும் உருவாக்குவோம்”  (Build Back Better World – B3W) என்ற ஒரு பொருளாதார உதவித் திட்டத்தை  கடந்த 2021 ம் ஆண்டு ஜூன் மாதம் இடம்பெற்ற ஜி7 மாநாட்டில் முன்வைத்தது. 
 
சீனா  ஒவ்வொரு நாட்டிற்கும்  தனது அரசியல்,  பொருளாதார, இராணுவ நலன்களை  அடிப்படையாக வைத்து கடனை வழங்குகிறது. கடன் பெறுநரின்  மூலோபாய சொத்துக்களை இலக்கு வைத்து அவற்றை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்குகிறது என்பது ஜி 7 நாடுகளின் குற்றச்சாட்டாகும்.

அபிவிருத்தியின் போா்வையில் சந்தேகத்திற்கு இடமான வகையில், வளரும் நாடுகளுக்கு “ஒளிபுகா கடன்” விதிமுறைகளின் கீழ், பெரியளவிலான நிதியை கடனாகக் கொடுக்கிறது சீனா. கடனை திருப்பிச் செலுத்தத் தவறும் பட்சத்தில் அந்த நாட்டின் மூலோபாய பெறுமதிமிக்க சொத்துக்களை பறிமுதல் செய்யும் வழி முறையையும் அது கையாள்கிறது.

ஆபிரிக்காவை இலக்கு வைத்த சீனா

சீனா, 1990களில் இருந்து ஆபிரிக்க கண்டத்தை இலக்கு வைத்து தனது அரசியல் காய்களை நகர்த்த ஆரம்பித்தது. ஆபிரிக்க கண்டத்திலுள்ள பல நாடுகளோடு தனது உறவை வளர்த்துக்கொண்ட சீனா பொருளாதார ரீதியலான உதவிகளையும் அந்த நாடுகளுக்கு வழங்க ஆரம்பித்தது. 
அமெரிக்க மற்றும் சீன நாடுகளுடன் அரசியல் ரீதியிலான உறவுகளை பேணி வந்த சம்பியா, குறுகிய காலத்தில் இந்த இரண்டு நாடுகளின் உதவியின் மூலம் முன்னேறி வந்தது. 

2010ம் ஆண்டளவில் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளின் பட்டியலில் இடம்பிடிப்பதற்கும் சம்பியாவால் முடிந்தது. என்றாலும் இந்த வளர்ச்சிக்குப் பின்னால் அந்நாட்டு  ஆட்சியாளா்களின் ஊழலும், உலக நாடுகள் பலவற்றிலிருந்து பெற்ற கடன் சுமையும் அந்நாட்டை பின்னடைய வைத்தன.

2015ம் ஆண்டளவில் பெருத்த கடன் சுமையில் தள்ளாட வேண்டிய நிலை சம்பியாவிற்கு ஏற்பட்டது.  தேர்தல் காலங்களில் அந்நாட்டு அரசியல் அரங்கில் ஒரு முக்கிய பேசுபொருளாக இந்த கடன் பிரச்சினை உருவெடுத்தது.

சீனா அதிகளவான கடனை சம்பியாவுக்கு வழங்க ஆரம்பித்தது. காலப்போக்கில் சீனாவிடமிருந்து பெற்ற மிகப்பெரிய கடன் தொகைக்கு வட்டியை கட்ட முடியாமல் சம்பியா தடுமாறியது.   மிகப்பொிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை சம்பியாவில் ஆரம்பித்திருந்த சீனா, மேலும் அதிக வட்டிக்கு கடனை வழங்கி வந்தது.

2019ம் ஆண்டளவில் 12 பில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பியா  கடனாக பெற்றிருந்தது. இந்தத் தொகையில்  4 பில்லியன் அமெரிக்க டொலர்களை சீனாவிடமிருந்து பெற்றிருந்தது.  

சீனா , சம்பியா நாட்டிற்கு  இந்தளவு பாரிய தொகையைக் கடனாக கொண்டு வந்து கொட்டுவதற்கு காரணங்கள் பல இருந்தன.
சம்பியா, ஆபிரிக்க கண்டத்தில் இருக்கும் மிகவும் பெறுமதி வாய்ந்த, கனிம வளங்கள் புதைந்து கிடக்கும் நிலபரப்பாகும். செப்பு வளம் அதிகம் புதைந்து கிடக்கும் ஒரு பூமி சம்பியா. பூமிக்கடியில் புதைந்து கிடக்கும் கனிம வளங்களை கொள்ளையிடும் நோக்கில்தான், சீனா மிகப்பெரிய கடன் சுமையில் சம்பியாவை சிக்க வைத்தது. 

சம்பியாவிலுள்ள செப்புச் சுரங்கம் தொடர்பான வர்த்தகத்திற்கும், தொழிற்சாலை  கட்டமைப்புகளுக்கும்  சீனா அதிகளவான முதலீடுகளை செய்துள்ளது. சம்பியாவின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும்  கொப்பர் பெல்ட்  அதாவது செப்பு பட்டி என்ற வளையத்தை தற்போது சீன நிறுவனங்கள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன.
 
சீனாவின் அதிகமான முதலீடுகள் இந்த  கொப்பர் பெல்ட் வளையத்தை  இலக்கு வைத்தே செய்யப்பட்டிருந்தது. இது தவிர சம்பியாவிற்கு பிரயோசனமற்ற, பொருளாதார ரீதியில் வருமானம் கிடைக்காத  பல வேலைத் திட்டங்களுக்கும் சீன அரசு நிதியுதவி அளித்துள்ளது. 
சம்பியாவின் என்டோலா நகரத்தில் அமையப்பெற்றுள்ள பிரமாண்டமான விளையாட்டரங்கம் இதில் ஒன்றாகும். 65 மில்லியன் அமெரிக்க டொலர்கள்  செலவில் இது அமைக்கப்பட்டுள்ளது. 

சீனாவால் நிர்மாணிக்கப்பட்ட இந்த விளையாட்டரங்கில் 40 ஆயிரம் பார்வையாளர்கள் இருந்து பார்ப்பதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.  ஆனால் இதுவரை இந்த விளையாட்டரங்கின் மூலம் அந்நாடு  எவ்வித பொருளாதார நன்மைகளையும் அடையவில்லை.
 
சம்பியா போன்ற கடன் சுமையில் மூழ்கிப்போயுள்ள ஒரு நாட்டிற்கு இத்தகைய முக்கியமற்ற ஆடம்பர வீண் செலவுகள் தேவையற்றவை. ஆனால் சீனா, அந்நாட்டு மக்களை கவர்வதற்காக இத்தகைய வீணான, பிரயோசனமற்ற  திட்டங்களை கட்டமைத்து அந்த நாட்டை கடன் பொறியில் சிக்க வைத்தது. 

சீனா, சம்பியாவிற்கு வெள்ளை யானைகளை உருவாக்கிக் கொடுத்து அவற்றை நிர்வகிக்க முடியாத நிலைக்கு அந்த நாட்டை தள்ளிவிட்டு, அந்நாட்டின்  வளங்களை கொஞ்சம் கொஞ்சமாக சூறையாடி வருகிறது. 

நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்யப்பட்டுள்ள சீனாவின் முதலீடுகளால் சம்பியாவிற்கு துரிதமாக நன்மைகள் கிட்டாத நிலையில்,. சம்பியா நாளுக்கு நாள் கடன் சுமையில் மூழ்கி, கடனை திருப்பிக் கொடுக்காத நாடுகளின் வரிசையில் இடம்பிடித்தும் விட்டது.

சம்பியாவின் இன்றைய நிலைக்கு நன்கு திட்டமிட்ட முறையில் பெறப்படாத,  வெளிப்படைத் தன்மையற்ற கடன்களும் அந்நாட்டை ஆட்சி செய்த ஊழல் நிறைந்த ஆட்சியாளர்களும் காரணமாகின்றனர்.

2011ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மைக்கல் சாட்டா என்ற என்ற ஜனாதிபதி  மக்களின் பொதுப்பணத்தை சூறையாடியது மட்டுமல்லாமல், சீனாவுடனான வெளிப்படை தன்மையற்ற அதிகமான கொடுக்கல் வாங்கல்களை செய்திருந்தார். 

நிதியமைச்சராக செயற்பட்ட ஜனாதிபதி சாட்டா, நாட்டின் அதி முக்கியமான பொறுப்புகளில் தனது குடும்பத்தினரையே வைத்திருந்தார். பொருளாதார அமைச்சு மற்றும் பிரதி நிதியமைச்சு பதவி கூட அவரது நெருங்கிய உறவினர் ஒருவருக்கே வழங்கப்பட்டது.

இதன் காரணமாக நாட்டு மக்களின் பணத்தை அச்சமின்றி வெட்கமின்றி கொள்ளையடிப்பதற்கான சந்தர்ப்பம் அவா்களுக்குக்  கிடைத்தது. 2014 வரை ஆட்சிலிருந்த அவருக்கு மக்களின் பொதுப் பணத்தை கொள்ளையிட்டதற்காக வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்த போதிலும் இதுவரை அவருக்கு எவ்வித தண்டனையும் வழங்கப்படவில்லை. 

சம்பியாவின் பொருளாதாரம்  நாளுக்கு நாள் அதல பாதாளத்திற்கு வீழ்ச்சியடைந்து வந்த  நிலையில் சீனா மேலும் மேலும் கடன் மற்றும் உதவிகளை வழங்கி  சம்பியாவின் செப்பு வர்த்தகத்தை முழுவதுமாக தனது பூரண கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது.

சம்பியாவின் நாணயான குவாச்சா டொலருக்கு நிகரான அதன் பெறுதியை இழந்து மிகப்பாரிய சரிவை சந்தித்தது. உலக நாடுகளிடமிருந்து மிகக்குறைந்த வட்டிக்கு பெற்ற கடனை திருப்பிக் கொடுக்க வழி தொியாது விழி பிதுங்கியிருந்த சம்பியா  அந்தக் கடனை அடைக்க சீனாவிடமிருந்து அதி கூடிய வட்டிக்கு மேலும் மேலும் கடனைப் பெற்றது.

சீனாவிற்கு செலுத்த வேண்டிய கடன் நாளுக்கு நாள் அதிகரித்து மீள முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட சம்பியா தனது நாட்டின் வளங்களை கடனுக்கு சீனாவுக்கு வழங்க வேண்டிய நிா்ப்பந்த நிலைக்கு தள்ளப்பட்டது.

சம்பியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பலவற்றை    சீனா      கைப்பற்றியுள்ளதாகவும், சம்பியாவின்  சர்வதேச விமான நிலையம் போன்ற பல முக்கிய இடங்கள் தற்போது சீனாவின் ஆதிக்கத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பியா படிப்படியாக சீனாவின் ஆக்கிரமிப்புக்குள் விழுந்து விட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

சீனா அந்த நாட்டில்  வீதிகள், பாலங்கள், புகையிரத வீதிகள் மற்றும் அடிப்படை வசதிகளை  அமைத்துக் கொடுத்திருந்த போதும்  அவற்றை அனுபவிக்கும் வாய்ப்பு சம்பிய மக்களுக்கு இல்லாமல் போயிருக்கிறது. 

கொடுத்த  கடனுக்காக அந்த நாட்டை சீனா  கபளீகரம் செய்து வருகிறது. சம்பியாவின் இன்றைய வீழ்ச்சிக்கு,  சீனாவின் கடன் பொறி ராஜதந்திரமும், அந்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒழுங்காக திட்டமிடாத அபிவிருத்தி திட்டங்களும், ஊழல் நிறைந்த ஆட்சியாளர்களும், வெளிப்படைத் தன்மையற்ற கொடுக்கல் வாங்கல்களும் காரணங்களாக அமைந்திருக்கின்றன.