டாக்டர் கோட்னீஸ் அவர்களின் 110ஆவது பிறந்த தினம்

கோட்னீஸ் இந்தியாவின் மகாராஸ்டிர மாநிலத்தில் ஒரு நடுத்தர பிராமணக் குடும்பத்தில் 1910 ஒக்ரோபர் 10 இல் பிறந்தவர். பல பல்கலைக்கழகங்களில் பயின்ற அவர் ஒரு வைத்தியராகத் தகைமை பெற்றிருந்தார்.

இந்தச் சூழலில் 1938இல் யப்பான் சீனாவை ஆக்கிரமித்தது. யப்பானின் ஆக்கிரமிப்புக்கு எதிராக மாஓ சேதுங் தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மக்களை அணிதிரட்டி தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க ஆரம்பித்தது. கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான மக்கள் விடுதலை இராணுவத்தின் தளபதியாக ஜெனரல் சூ டே இருந்தார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சி பல உலக நாடுகளின் மக்களிடம் தமது போராட்டத்துக்கு உதவும்படி வேண்டுகோள் விடுத்தது. கனடிய – அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து கனடியரான நோர;;;மன் பெதூன் (Norman Bethune) என்ற சத்திர சிகிச்சை நிபுணரை சீனாவுக்கு அனுப்பி வைத்தன. அவர் அங்கு நோய்த் தொற்று ஏற்பட்டு அங்கேயே மரணத்தைத் தழுவிக் கொண்டார்.

இந்த நிலையில் ஜெனரல் சூ டே இந்தியாவின் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜவகர்லால் நேருவிடம் தமக்கு உதவியாக சில டாக்டர்களை அனுப்பி வைக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். அந்த வேண்டுகோளை ஏற்ற காங்கிரஸ் கட்சியின் அப்போதைய தலைவர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் சீன மக்களின் போராட்டத்துக்கு தொண்டர் அடிப்படையில் உதவக்கூடிய இந்திய மருத்துவர்களை முன்வரும்படியும், பொதுமக்கள் நிதி தந்துதவும்படியும் 1938 யூன் 30இல் ஒரு வேண்டுகோள் விடுத்தார். அத்துடன் சீனாவை யப்பான் ஆக்கிரமித்ததைக் கண்டித்து ‘மொடேர்ன் றிவியூ’ (Modern Review) என்ற பத்திரிகையில் சுபாஸ் சந்திரபோஸ் கட்டுரை ஒன்றையும் எழுதினார். (இதே சுபாஸ் சந்திரபோஸ்தான் பின்னர் பிரித்தானியாவுக்கு எதிரான இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு யப்பானின் உதவியை நாடினார் என்பது ஒரு முரண்நகையாகும்)
பல மருத்துவர்கள் முன்வந்தனர். அவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 மருத்துவர்கள் சீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் அவர்களில் டாக்டர் கோட்னீசும் ஒருவர். அந்தக் குழுவுடன் ஒரு அம்புலன்ஸ் வண்டியையும், சேர்க்கப்பட்ட பணம் 22,000 ரூபாயையும் இந்தியத் தலைவர்கள் சீனாவுக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் குழுவினர் சீனாவுக்குச் செல்ல முன்னர் நேரு சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

1938 செப்ரெம்பர் 05இல் வூஹான் துறைமுகத்தைச் சென்றடைந்த இந்திய மருத்துவர் குழு, பின்னர் அங்கிருந்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அமைந்திருந்த யெனான் தளப் பிரதேசத்தைச் சென்றடைந்தது. அவர்கள் அங்கு சென்றபொழுது தலைவர் மாஓ சேதுங், தளபதி சூ டே உட்பட சீனக் கம்யூனிஸட் கட்சித் தலைவர்கள் அவர்களுக்கு உற்சாகமான வரவேற்புக் கொடுத்தனர்.

ஆரம்பத்தில் கோட்னீஸ் மாஓ தலைமையில் செயல்பட்டுக் கொண்டிருந்த எட்டாவது மார்க்க இராணுவத்தில் (Fourth Route Army) மருத்துவராகப் பணியாற்றினார். பின்னர் யெனானில் அமைந்திருந்த நோர்மன் பெதூன் சர்வதேச சமாதான வைத்தியசாலையின் முதலாவது பணிப்பாளராகவும், பெதூனின் பெயரில் செயற்பட்டுக் கொண்டிருந்த சுகாதாரக் கலாசாலை விரிவுரையாளராகவும் பணி புரிந்தார். அந்த நேரத்தில் அங்கு தாதியராகக் கடமை புரிந்த ஸிங்லான் ஹோ என்ற சீனப் பெண்மணியை விரும்பி 1941இல் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ஜின் – Yin – (அர்த்தம் இந்தியா) குவா – Hua (அர்த்தம் சீனா) எனப் பெயரிட்டனர். கோட்னீஸ இறக்கும் பொழுது அவரது மகனுக்கு 3 மாதங்களே நிரம்பியிருந்தன.

கோட்னீஸ் இரவு பகல் என்று பராமல் சில வேளைகளில் நித்தரை கூடக் கொள்ளாமல் தொடர்ச்சியாக 72 மணித்தியாலங்கள் கூட காயமுற்ற விடுதலைப் போராளிகளுக்குச் சிகிச்சை அளித்துள்ளார். அவ்வாறு சுமார் 800 வீரர்கள் வரை அவரால் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலைமையில்தான் அவர் நோய்த் தொற்றுக்குள்ளாகி 1942 டிசம்பர் 09ஆம் திகதி மரணத்தைத் தழுவிக் கொண்டார். இறக்கும் பொழுது அவருக்கு 32 வயதுதான் நிரம்பியிருந்தது. இறப்பதற்கு சில மாதங்கள் முன்பு, அதாவது 1942 யூலை 07இல் அவர் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து கொண்டதாகவும் ஒரு தகவல் உண்டு.

டாக்டர் கோட்னீஸ் அவர்களின் சேவையும், அர்ப்பணிப்புணர்வும், உயிர்த்தியாகமும் ஒரு உன்னத கம்யூனிட்டுக்கு உரிய சர்வதேசியத்துவ உணர்வாகும். அவரது இழப்பு சம்பந்தமாக தலைவர் மாணு சேதுங் பின்வருமாறு கூறியுள்ளார்:
“எமது இராணுவம் ஒரு உதவும் கரத்தை இழந்துவிட்டது. நமது நாடு ஒரு நண்பனை இழந்துவிட்டது. அவரது சர்வதேசியத்துவ உணர்வு எமது மனங்களில் என்றும் நிலைத்திருக்கும்”.

டாக்டர் துவாரகாத் கோட்னீசின் நினைவு சீன – இந்திய மக்களின் மனங்களில் மட்டுமின்றி, விடுதலைக்காகப் போராடும் உலகின் கோடானுகோடி மக்களிலும் என்றும் நிறைந்திருக்கும்.
தனது கணவரான டாக்டர் கோட்னீசுடன் தான் வாழ்ந்த வாழ்க்கை சம்பந்தமாக அவரது மனைவி ஸிங்லான் ஹோ எழுதிய நூலொன்று “கோட்னீசுடன் எனது வாழ்க்கை” (My life with Kotnis) என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.