ருவாண்டா படிப்பினைகள் – 02

போராளிகளுடன் மதிய உணவுண்டு தன் நாட்டில் இனி இனக் கலவரங்கள் நடைபெறாது. எனது காலத்தில் நாடும் நாட்டு மக்களும் அமைதியாக வாழ்வதற்கான வழி பிறக்கப் போகிறது என்ற கனவுகளில் மிதந்தவராக தனது நீண்ட நாள் நண்பரான வுறுண்டி(Brunti) நாட்டின் துடியரசுத் தலைவர் சைப்ரின் ன்ரர்யமிரா(Cyprien Ntaryamira) உடன் சிறப்பு விமானத்தில் மாலை வேளையில் டொடோமாவிலிருந்து புறப்பட்டார்.

தனது நாட்டின் எல்லைக்குள் விமானம் நுழைந்ததும் அளவிலா மகிழ்ச்சியுடன் அருகிலிருந்த தன் நண்பருடன் தனது எதிர்காலத் திட்டங்களைப் பகிர்ந்து கொண்டு ருவாண்டாவின் தலைநகரான கிகாலி (Kigali) மேலால் பறந்து தரையிறங்க சில நிமையங்களே இருந்த வேளையில் பறந்து கொண்டிருந்த விமானத்தினை ஓட்டிச்சென்ற விமானியின் அலறல் ஓய முன்னரே அவர்கள் பயணித்த அந்த விமானத்தை ஏவுகணைகள் தாக்குகின்றன.

விமானம் துண்டு துண்டுகளாக சிதறுகின்றது. பயணம் செய்த அனைவருமே துண்டுகளாகி சாவைத் தழுவிக் கொள்கிறார்கள்.

1973 ஆம் ஆண்டிலிருந்து 21 ஆண்டுகள் ருவாண்டா நாட்டின் தலைவராக இருந்த ஜுவன்ட் கவியரிமான அவர்களின் வாழ்வு அவரது 57 அவது வயதில் முற்றுப்பெற்றது.

நாடு பதற்றமான நிலைக்கு சென்று கொண்டிருந்தது. நாட்டின் பிரதமர் நிலைமையை சமாளிக்க வேண்டிய நிலைக்குச் செல்கின்றார். நாட்டின் பிரதமராக இருந்தவர் கூட்று இனத்தைச் சேர்ந்தவர்.

கொல்லப்பட்ட நாட்டின் குடியரசுத் தலைவரும் கூட்டு இனத்தைச் சேர்ந்தவர்தான்.

அப்போது ருவாண்டாவின் பிரதமராகப் பதவியிலிருந்த அகதே உவிலிங்கியிமான( Agathe Uwilingiyimana) அவர்கள் நடுநிலையாகச் செயற்பட்ட ஒரு செயற்பாட்டாளர், இனவெறி அவரிடம் இருக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

1994.04.07 ஆம் நாள் ருவாண்டாவின் பிரதமர் இனந்தெரியாதவர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

நாட்டினை வழி நடத்த பொறுப்பானவர்கள் யாரும் இருக்கவில்லை.

நாட்டின் தலைநகரான ககாலியில் பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியது. இருவரையும் கொலை செய்தவர்கள் யார் என்பது நாட்டு மக்களிடையே விடைகாணா வினாவாகியது.

ருவாண்டாவின் ஊடகங்கள் இனக்குரோதத்தைத் தூண்டும் விதமான தகவல்களையும் செய்திகளையும் கருத்துக்களையும் வழங்கிக் கொண்டிருந்தன.

ருவாண்டா நாட்டின் மக்கள் சனத்தொகையில் 85 வீதமானோர் கூட்று(Hutu) இனத்தையும் 14 வீதமானோர் ருட்சி(tutsi) இனத்தையும் 1 வீதமானோர் ருவா(Twa) இனத்தை சேர்ந்தவர்களுமாவர்.

(தற்போது ருவாண்டாவின் சனத்தொகை ஒரு கோடியே இருபத்தி மூன்று இலட்சங்களாகும்.)

கூட்று இன மக்களுக்கும் ருட்சி இன மக்களுக்கும் இடையேயான மனக் கசப்புகள் பல ஆண்டகளாக நீறு பூத்த நெருப்பாக இருந்து வந்தது.

அந்த நீறு பூத்த நெருப்பு 1994 ஏப்பிரல் 07 ஆம் நாள் கொழுந்து விட்டு எரியத் தொடங்கி 1994 ஜுலை மாதம் 04 ஆம் நாள் வரை வெறும் 100 நாள்களுக்குள் ஏறத்தாள பத்து இலட்சம் மக்களின் உயிர்களைக் காவு கொண்டதன் பின்னர் அணைந்தது.

ருவாண்டா முழுவதும் மனித இரத்தம் ஆறாக ஓடியது. கத்திகள், வாள்கள், கோடரிகள் போன்ற ஆயுதங்களால் ருட்சி இன மக்கள் வெட்டிக் கொல்லப்பட்டார்கள்.

நாளொன்றுக்கு சராசரியா 8000 தொடக்கம் 10000 வரையான மக்களின் உயிர்கள் அவர்களின் சாவு ஓலங்களினூடே பிரித்தெடுக்கப்பட்டன.

வீடுகள், தெருக்கள், தேவாலயங்கள், கிணறுகள் என எங்கு பார்த்தாலும் பிணக் குவியல்கள்.

உலகமே உறைந்து போனது.

(ஏன் இந்த சாவுகள் – அடுத்த பகுதியில்)

படத்தில்: கொல்லப்பட்ட ருவாண்டாவின் குடியரசுத் தலைவர்.