காலையில் மகாஜனாவின் முன்னாள் அதிபர் புலிகளால் கொலை!

இவருக்கு முன்பிருந்த அதிபர்கள் போலன்றி வரலாற்றின் மிகவும் இக்கட்டான காலகட்டதில் இவர் மகாஜனாக்கல்லுரியின் அதிபர் பணியினைப் பொறுப்பேற்று செயற்படவேண்டியிருந்தது. மகாஜனாக்கல்லுரியினை தற்காலிகமாக 1990 ஆண்டில் அளவெட்டி அருணோதயாக்கல்லுரியிலும், 1991 ஆண்டில் பண்டத்தரிப்பு பெண்கள் கல்லுரியிலும், 1993 ஆண்டில் கோண்டாவிலுள்ள ரியூசன் நிலையத்திலும், 1994 ஆண்டிலிருந்து 1998 ஆண்டுவரை (இவர் மகாஜனாக்கல்லுரியின் அதிபராக பணிபுரியும்வரை) மருதனாமடத்திலும் இயக்குவதில் இவர் பெரும் பங்காற்றினார்.

மகாஜனாக்கல்லுரியின் முன்னாள் அதிபர் படுகொலை செய்யப்பட்ட அதேதினமாகிய இன்று (07-10-2006) இலண்டனில் மகாஜனாக்கல்லுரி பழைய மாணவர்கள் சங்கத்தால் ஒழுங்கு செய்யப்ட்ட ‘மகாஜனா மாலை’ என்ற கலாச்சார நிகழ்ச்சி, முன்னாள் அதிபர் திரு.க.நாகராஜா படுகொலைபற்றிய எந்தவித எதிரொலிப்புமின்றி நடந்துள்ளது.

13 வருடமாக மகாஜனாக்கல்லுரியின் அதிபராக பணிபுரிந்தவர் கொல்லப்பட்ட அதேதினத்தில், மகாஜனாக்கல்லுரியின் பழைய மாணவர்கள் சங்கம் ‘மகாஜனா மாலை’ என்று மகாஜனாவின் பெயரில் எப்படியொரு கலாச்சார நிகழ்ச்சியை நடாத்த முடியும்? இந்தக் கலாச்சார நிகழ்ச்சியென்பது ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தாலும், புகழ்பூத்த முன்னாள் அதிபர் கொலைசெய்யப்பட்டுவிட்டார் அல்லது மறைந்துவிட்டாரென்ற செய்தியை அறிந்தவுடன் நிகழ்ச்சியினை இரத்துசெய்தல்லவா இருக்கவேண்டும்.

மகாஜனாவின் பெயரில் இலண்டனில் நடந்தேறிய இந்த மகாஜனாவின் மாலை, 96 வருட கால மகாஜனாக்கல்லுரியின் சரித்திரத்தில் நிகழ்ந்த மகாஜனாவின் கலாச்சாரக்கொலை. இது மகாஜனாவின் கலாச்சாரம் மற்றும் மனித உரிமைப்பண்புகளுக்கும் ஜனநாயகப்பாரம்பரியங்களுக்கும் முரணானது. தற்போதைய மகாஜனாக்கல்லுரியின் மாணவர்களும் மற்றும் உலகெங்கிலும் வாழும் மகாஜனாக்கல்லுரியின் பழைய மாணவர்கள் இதையெண்ணி வெட்கப்பட வேண்டும்.

1983 யூலைக்கலவரத்தின்போது கொல்லப்பட்ட தமிழ்பேசும் மக்களை நினைவுகூரும் நிகழ்வினை இலண்டனில் ‘பைலா’ ஆட்டத்துடன் கொண்டாடும் எமது தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட வகையினர், புலிகளால் கொல்லப்பட்ட தமது பாடசாலையின் முன்னாள் அதிபரின் பூதவுடலின் மேலிருந்து களியாட்ட விழாதானே நடாத்துவார்கள்.

இலங்கை தமிழ்பேசும் மக்களின் கடந்த இரு சகாப்தகால யதார்த்தம் யுத்தம். இந்த யுத்தத்தின் எல்லாவித பரிமாணங்களையும் சூழல் பிரதிபலிக்கின்றது. இந்த பிரதிபலிப்பினை எல்லாரையும்போலவே மகாஜனாக்கல்லுரரியின் பழையமாணவர் சங்கங்களும் உள்வாங்க வேண்டும்.

இல்லாவிடின் மகாஜனாக்கல்லுரரியின் பழையமாணவர்களெனக்கூறி சங்கங்களை உருவாக்கி பிரான்சிலும் இலண்டனிலும் கனடாவிலும் இவர்கள் ஏதோ பிழைப்பு நடாத்தும் கூட்டமென்றுதான் கூறவேண்டிவரும். முன்னாள் அதிபர் திரு.க.நாகராஜா மகாஜனாவிற்கு ஆற்றிய பணியினை மகாஜனாக்கல்லுரரியின் பழையமாணவர் சங்கங்கள் நினைவுகூர மறுத்தாலும், இவரது 13 வருட பணியினை மகாஜனாவின் உண்மையான மாணவர்கள் என்றும் இதயத்தில் வைத்திருப்பர்.

மகாஜனக்கல்லுரியின் புகழ்பூத்த அதிபர்களான அமரர் பாவலர் துரையப்பாபிள்ளை, அமரர் திரு.ஜெயரட்ணம், திரு.கனகசபாபதி வரிசையில் அதிபர் திரு.க.நாகராஜா அவர்களும் மகாஜனக்கல்லுரியின் வரலாற்றில் அழியாது இடம்பெற்றிருப்பார்.-முதுகெலும்புள்ள மகாஜனா பழைய மாணவர்கள்தேனீ இணையத்தளம்07-10-2006