மக்களை மீட்க….உயிர்த்து எழவில்லை ஞாயிறு


அவரவர் ‘தூய்மையான நம்பிக்கைகளை நாம் மதித்து நிற்கின்றோம். இது ஒவ்வொரு தனி மனிதரின் சுதந்திரமும் கூட.

மருத்துவ விஞ்ஞானத்தினால் இது வரை மருந்து கண்டு பிடிகப்படாத நிலையில் கொரானாவின் தாக்கம் ஈஸ்ரர் ஞாயிறையும் தாண்டி தமது கோரத்தைக் காட்டி வெறித்தனமாக பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றது.


இதனை எழுதும் இந்த கணத்திலும் உலகத்தின் ஒரு முலையில் எங்கோ ஒரு மரணம், பலருக்கு வைரஸ் தொற்றும், இதனையொட்டிய பயங்களும், விரக்திகளும், இயலாமைகளும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. கடவுளும் இதனை தாங்கிப் பிடிக்கும் மார்க்கங்களும் இதனை பிரதானப்படுத்தி உருவாக்கப்பட்ட மதங்களும் செய்வது அறியாது கைவிரித்து நிற்கின்றன.


எல்லா வல்லமையும் கொணடவர் ‘அவர்’ என்ற நம்பிகைகைள் நொருங்கிக் கொண்டு இருக்கின்றன. விழ்பாட்டுத் தளங்களும் மணியோசை அடங்கி கரபக் கிரகத்திற்குள் இருட்டில் ஒழிந்து கிடக்கின்றன. அவை அங்கே தமது நிரந்தரமான தூக்கத்திற்கு சென்று கொண்டிருக்கின்றன.


ஆனால் இதுவரை தடுப்பூசி மருந்து கண்டு பிடிக்காத மருத்து விஞ்ஞானம் மட்டும் இன்றோ நாளையோ, அல்லது வரும் மாதமோ அதற்கு பின்னரான மாங்களிலோ, ஏன் வருடங்களிலோ இதற்கான மருந்து, தடுப்பூசியை கண்டு பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் பயணதித்துக் கொண்டே இருக்கின்றது. ஆராய்ச்சிகளுடன் இதில் மனிதன் நினைத்தால் முடியும் என்பது மீண்டும் நிரூபணமாகும் தேதியை நோக்கி.


இப்படியான பயணங்களின் வெற்றிகளை நாம் கடந்த கால மருத்துவ விஞ்ஞான வரலாற்றில் கண்டிருக்கின்றோம். இவற்றின் விளைவே பிளேக் இல் இருந்து சின்ன அம்மை ஊடாக எபோலா வரை மனித குலத்தை அழிவின் விளிம்புகளில் இருந்து மீட்டிருக்கின்றது.


மாறாக கூட்டுப் பிரார்த்தனையோ, தொழுகையோ, வேண்டுதலோ, அடியழிப்புக்களோ இந்த மனித குல அழிவை தடுத்த நிறுத்த முடியவில்லை. அப்படியான வரலாற்று ஆதாரங்கள் ஏதுத் இருப்பதாக அறிய முடியவில்லை.


மனித நம்பிக்கை, உறுதிபாடு, கொடூரங்களை அழிவுகளை எதிர்த்த பயணம் அதனை ஒட்டிய பயணங்கள் என்பது வேறு. மாறாக மதங்களே, கடவுளர்களே இதனைத் தடுத்து நிறுத்தியதாக வரலாற்று சான்றுகள் இல்லை. மனிதன் இதனைத்தான் தேடிக் கொண்டு இருக்கின்றான்.

மாறாக தமது இயலாமைகளை, தவறுகளை மறைக்க ஒரு முக மூடியாகவே மூட நம்பிக்கைகளை பயன்படுத்துகின்றான். அது ‘கோசலம்” ஐ குடித்தல் வரை நீண்டு செல்கின்ற அருவருகத் தக்க விடயங்களை தன்னகத்தே கொண்டது.


என்னைப் பொறுத்த வரை ஒரு யேசுநாதர் பிறந்தார் அவரும் மரணித்துவிட்டார். ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை உடன்பாடும் இல்லை. மாறாக மறுகன்னத்தில் அறைய முன்பே அதனை அறுத்தெறிந்து விடு என்பதில் நம்பிக்கையுள்ளவன். நம்மில் பலரும் அவ்வாறே ஒடுக்கு முறைகளை எம்மை நோக்கி வரும் போது செயற்பட்டிருக்கின்றோம்.


அம்மை, அப்பனை சுற்றி வந்து உலகை சுற்றி வந்ததாக கூறியதை நம்பி ‘மாப்பழம்” ஐ கொடுக்க நான் தயாரில்லை. அசுரர்களை எதிர்த்து தீமைகளை…? அழித்தவன் இன்றும் கொரனா கொடூரனை அழித்து மனித குலத்தை காப்பாற்ற வருவான் என்பதை நம்பத் தயார் இல்லை. இதற்காக மக்களை அழைத்து இராமர் கோவில் கட்டவோ, கூட்டுப் பிரார்த்தனை செயவோ, மத மகாநாடு நடத்தவே தயார் இல்லை.


இவை நடத்தினால் கொரனா கொடூரன் அடங்கியிருப்பான் என்றால் 200 நாடுகள் வரையில் 600 ஆயிரம் மக்கள் வரை தொற்றி ஒரு இலட்சம் உயிர்களை காவுகை கொள்ளும் வரை இவை எங்கே போய் ஒழிந்து கொண்டன. எங்கே போய்விட்டது இங்கு மனித நேசம், மரணமும், நோய் வலிகளும் ஏற்புடையவை, தண்டனை என்று இவை நம்புகின்றனாவா…?


மதுரை மன்னன் சபையில் தனது கணவனுக்காக நீதி கேட்டு அந்த மதுரையை எரித்த கண்ணகியின் சிலம்பு அதிகாரத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் தவறு செய்த மன்னனை எரிப்பதற்கு பதிலாக முழு மதுரையையும் எரித்து அங்குள்ள மக்களை எரித்ததை எவ்வாறு நியாப்படுத்த முடியும்.


தண்டிக்கப்பட வேண்டியது எரிகப்பட வேண்டியது மன்னனும், அவரைத் தாங்கும் பரிவாரங்களும் மட்டுமே. மாறாக மக்களோ, மரம், செடி, கொடி, உயிரினங்களோ அல்ல.


தனி ஒருவனுககு உணவில்லை என்றால் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம் என்பதில் உடன்பாடு இல்லை. பெரும்பான்மை(முழு) மக்களுக்கும் உணவில்லை என்பதே இங்கு பிரச்சனை. அப்படித்தான் நாம் பார்க்க வேண்டும். தனிமனிதனை விட சமூகமே முக்கியம்.


இன்று அரசுகளின் தலைவர்கள் கிருமித் தொற்று முக மூடிகளை அணிந்து கொண்டு தனிமையில் வீட்டில் இருந்தவண்ணம் இருக்க, வீட்டை விட்டு வெளியேறி முன்னிலை மருத்துவ ஊழியர்களும், பின்நிலை தூய்மைத் தொழிலாளர்களும் முகம் மூடியின்றி நோய் தொற்றிற்கு உள்ளாகி உயிரிழப்புகள் தனி மனித்தனை முன்னிலைப்படுத்துவது போன்றதல்லவா…?


இதற்கும் ட்றம் மற்றய நாடுகளுக்கு செல்லவிருந்து மருத்துவ பொருட்களை திசை திருப்பி ‘திருடி” தனது நாடு மட்டும் காப்பாற்றப்பட வேண்டும் அமெரிக்கா முதன்மையானது என்ற பார்ப்பதற்கும் இடையில் வேறுபாடுகளை நான் காணவில்லை.


பிரபஞ்சத்தின் முழு மக்களும் சமமாக பார்க்கப்பட்டு சகல மக்களுக்கும் மருத்துவ உபகரணங்கள் சென்றடைய வேண்டும் என்று பார்ப்பதே, செயற்படுவதே சரியானதாகும். சில வேளை மோடி இற்கு ட்றம் இன் ‘அமெரிக்கா முதன்மையானது” இந்துகள் முதன்மையானவர்கள் என்பது போல் ஏற்புடையதாக இருக்கலாம்.


அதனால்தான் மிரட்டலுக்கு பணிந்து தடை செய்திருந்த மருந்தை உடனடியாக அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்த செயற்பாடாகும். தமக்கு எதிரானவர்களாக இருந்தாலும், தன் மீது பொருளாதார தடை விதித்தவர்களையும் மனிதாபிமானமாக பார்த்து தனது மருத்துவக் குழுக்களை இத்தாலியில் இருந்து ஆரம்பித்த கியூபாவின் வழி முறையை ஒட்டி இந்தியா தன்னிடம் இருந்து மருந்தை மனிதாபிமான அடிப்படையில் உலக மக்களுக்கு பகிர்த்தல் சரியானது.


மாறாக ஒரு ருவிட்டர் இல் போட்ட மிரட்டலுக்கு பயந்து….பணிந்து… ஒரு கிழமையிற்க முன்பு போட்ட தடுப்புத்தரவை இந்தியா நீக்குதல் பிழையானது. தனி ஒரு நாட்டிற்கு மருந்து இல்லையென்றால் இந்த உலகத்தையே அழித்துவிடுவோம் என்ற ட்றம் இன் ‘போர்” மிரட்டலும்… தனி ஒருவனுக்கு உணவில்லை என்றால் இந்த யுகத்தின அழித்திடுவோம் என்பதற்கும் என்னால் வேறுபாட்டை காண முடியவில்லை. இங்கு ‘தனி ஒருவன்” என்பது ‘மனித குலம்;” இற்கு என்று மாற்றப்பட்டிருக்க வேண்டும்.


இதற்கு வியாக்கியானம் கூறுபவர்கள் அவ்வாறு அர்த்தப்படும், இவ்வாறு அர்த்தப்படும் என்று கூறும் இதிகாச இலக்கியங்கள் எமக்கு தேவையில் எமக்கு தேவை மக்களுக்கான இலக்கியங்கள் அல்லது வேறு ஒரு கவிதையை இங்கிழுத்து தவற்றை சமன் செய்ய முற்படுவதும் எற்புடையது அல்ல.


யேசுநாதர் வாழ்ந்த காலத்தில் அவரின் சீடர்களுக்கும், அவருக்கும் நேர்ந்த கொடுமையிற்காக குரல் கொடுத்தார் என்பதில் சில நியாங்கள் இருக்கின்றது. ஆனால் வெள்ளி சிலுவையில் அறைந்து ‘மரணித்து” ஞாயிறு உயிர்த்தெழுந்து இன்றவரை எல்லாக் கொடுமைகளையும், அழிவுகளையும் தடுத்து தற்காத்து நிற்கின்றார் என்பதில் நம்பிக்கைகள் இருப்பதற்கான சான்றுகள் இல்லை. எனவேதான் கூறுகின்றேன் ‘உயிர்த்த ஞாயிறு அன்று யேசுநாதர் உயர்த்தெழவில்லை” என்று.


ஐந்து ஆண்கள் ஒரு பெண்ணை மனைவியாக வைத்திருந்தார்கள் அந்த பஞ்ச பாண்டவர்கள் வணக்கத்திற்கு உரியவர்கள் சீதையின் கற்பை பரிசோதிக்க தீக்குழிக்க சொன்ன இராமனுக்கு கோவில். வணக்கத்திற்குரிய? அவரின் நம்பிக்கைகள்…. கோமயம்… கோசலம்… இந்த கொரானை ஒன்றும் செய்ய முடியவில்லை.


மாறாக ஒருபக்கமே கற்பு என்பதை கூறி பெண்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் குடும்பதிற்குள் வன்முறைகளை நியாப்படுத்தவே இந்த ‘வீட்டிற்குள் இருத்தல்” காலத்திலும் பெண்களுக்கு எதிராக பாவிக்கப்படுகின்றது. இதனை விளாவாரியாக ஊடகங்களும் விபச்சாரம் செய்து வருகின்றன.


மாறாக மனிதனினிடம் உயிரினங்களிடம் இயல்பாக இருக்கும் கூர்பினால் பரிணாம வளர்ச்சியில் உருவான நோய் எதிர்ப்புச் சக்தியும், மீளுவாக்கவும் பகுத்தறிவும் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் தடுப்பூசி மருத்துவ விஞ்ஞான மருந்துகளும், பிளாஸ்மாக்களும்தான மனித உயிர்களை இன்று வரை காத்து வருகின்றது.


இது தான் நடக்கும் என்ற நம்பிக்கையும், இதனை நாம் எதிர் கொண்டு வேல்வோம் என்ற உறுதிப்பாடே மனித குலத்தை காப்பாற்றும்…. காபாற்றி வருகின்றது.


கொரனா தீமைகளை சுமந்து கொண்டு பிறக்கும் புதுவருடத்தை, விடைபெறும் வருடமாகவே பார்க்க முடிகின்றது. கூதூகலித்து வரவேற்கும் வகையில் கடந்து செல்லும் வருடம் அமையவில்லை. தடை ஓட்டத்தில் கம்பு கொண்டு தருபவர் முந்தி அல்லது நம்பிகையூட்டுவதாக தடியை தரவில்லை. எனவே முந்தி ஓடி வெற்றியைப் பெறுவது இயலாமல் உள்ளது. ஆனாலும் விளையாட்டின் பண்புகளுக்கு அமைய ஓட்டப் போட்டியை முடிப்பது போல் ஓடியே முடிக்க வேண்டும் இந்தப் புது வருடத்தையும்.


இதில் நாம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் புதுவருடத்தை எதிர் கொள்வோம் எமது உறவுகளுக்கு புதிய வருட வரவேற்று வாழ்த்துகள் நம்பிக்கையுடன் இடரை… பேரிடரை எதிர்கொள்வோம்.


வாழ்ந்தால் எல்லோரும் வாழ்வோம்…! வீழந்தால் எல்லோரும் வீழ்வோம்…!!


(யாரின் மனதை நோகடிக்கும் எண்ணத்துடன் எழுதப்பட்ட பதிவு அல்ல இது. எனவே நம்பிக்கைகளின் நல்லிணகத்திற்கு எதிரான கருத்திடல்களை தவிருங்கள்)