மூதூர் திருகோணமலைக்கான கடல் பயணங்களும். ஒரு பயணத்தின் துயர மொழிஒரு நினைவுக் குறிப்பு

இந்த வசதியினை தரை வழிப் பாலங்கள் அமைவதற்கு காரணமாக இருந்தவர்களை நாம் பாராட்டித்தான் ஆக வேண்டும்.இயந்திரப் படகுகள் வருவதற்கு முன்னர் வத்தைகள் வழியிலான கடல் பயணம் பாய் மரக் கப்பல்களுமாக பயணிகளும் பண்டங்களும் ஏறி இறக்கப் பட்டன .

இயந்திரப் படகுகளின் அறிமுகம் திருகோணமலக்க்கான அதி வேகப் பயணத்தை சாத்தியப் படுத்தியது..திருகோணமலைத் துறமுகம் இயற்கை துறைமுகம் என்பதால் பெரும் கப்பல்கள் தங்கு தடையின்றி துறைமுகத்துக்குள் நுழைந்து தங்கள் வியாபார நடவடிக்கைகளை ஆபத்தின்றி மேற் கொண்டன.

வத்தை பயணங்கள் பற்றி அப்புச்சி நிறையவே சொல்லியிருக்கிறார்.அவர் ரி ஆர்.மகாலிங்கத்தின் ரசிகர் இதயகீதம் படம் பார்க்க தனி வத்தை பிடித்துப் போய் திருகோணமலை வெலிங்டன் தியட்டரில் படம் பார்த்து வந்ததாக சொல்வார்.அப்புச்சியின் மூத்த சகோதரி யோகாம்பிகை மாமியின் கலியாணத்துக்கு வத்தையில் சாமான்களும் சொந்தக் காரரும் தனி வத்தையில் போன கதையும் உண்டு

மூதூர் திருகோணமலை கடல் பயணம் எப்போதும் ஆபத்து நிறைந்ததாகவே இருந்திருக்கிறது.மூதூருக்கும்திருகோணமலைக்கும் இடையிலான கடல் எப்போதும் கொந்தழிப்பு நிறைந்ததாகவே காணப்படும்.குறிப்பாக கச்சான் காத்துக் காலங்களும் மாரி காலமும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பாணம் செய்ய வேண்டி இருக்கும்.

பாதாள மலையடி இது பற்றி நிறையவே கர்ண பரம்பரைக் கதைகள் உலாவுகின்றன பாதாள உலகத்தின் திறவு கோல் பாதாள மலையடியில் இருப்பதாக கதைகள் பல பலரும் முயன்று ஆழம் அறிய முடியாத இடம் என்றும் அந்த இடத்தில் மின்சாரம் பாயும் பெரும் நீரோட்டம் உள்ளதாகவுமது மிக ஆபத்தான இடம் எனவும் கடல் பேய்கள் உலாவும் இடம் எனவும் கதைகள் பல.

ஆனால் ஒரு உண்மை கடல் அமைதியாக இருக்கும் கால கட்டங்களில் கூட பாதாள மலையடியால் படகுகள் பயணிக்கும் போது ஆடி அசைத்து அதிரச் செய்யும் காட்சி தொடரும் அந்த இடம் கடக்கும் வரை தவிர்க்க முடியாதபடி பயம் நம்மை பற்றிக் கொள்ளும்.

மூதூரில் கடல் பயணத்த்குக்காக ஆரம்ப கால துறைமுகம் கங்கை துறையடியில் ஐம்பது வருடங்களுக்கு முன் அமைந்திருந்தது முகத்துவார மண் மேட்டால் அது கை விடப்பட வட்டத்து துறை முகம் அமைக்கப் பட்டது அதுவும் மண் மூட இப்போதைய துறை முகம் அமைக்கப் பட்டது .

அன்றய நாட்களில் தனியார் படகுகளே சேவையில் இருந்தன ஜெகனதன் பிரதர்ஸ்,வடிவேல் பிரதர்ஸ்,தணிகாசலம் கொம்பனி,அல்வீஸ் லோஞ் என பல இயந்திரப் படகுகள் சேவையில் இருந்தன இவை உண்மையில் மூதூர் கடல் பயணத்துக்காக வடிவமைக்கப் பட்டவையல்ல .துறை முகத்துக்கு வரும் கப்பல்களில் வேலை செய்யும் ஆட்களை ஏற்றி இறக்கும் சேவைக்கானவை .

ஆனல் பின்னர் அரச அனுமதியுடன் மூதூருக்கான கப்பல் சேவைக்கு பயன் படுத்தப் பட்டன.இந்த படகுகளில் பயணம் செய்வது என்பது பல வேளைகளில் நம்மை பயமும் அச்ச்சமும் குடி கொள்ள பயணம் செய்ய வேண்டியிருக்கும் கடல் கொந்தழிப்பும் பாதாள மலையும் எப்போது அச்சம் தரும் விடயங்கள்தான் ஆனால் அதைவிட அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றுவதும் கொள்ளளவிற்கு மேலாக பொருட்களை திணிப்பதும் படகு எப்போது உடையுமோ என பீதியயை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும்.

பயணத்தின் போது நறு நறுவென சத்தமிடுவதும் கடலுக்குள் இருந்து படகின் நீக்கல் வழியே தண்ணிர் ஏறுவதும் ஆதை படகின் ஊழியர்கள் வாழி கொண்டு அள்ளி இறைப்பதும் நம் உயிர் மேல் விளையாடும் கணங்களாய் தொடரும்.பின்னய நாட்களில் மூதூர் கூட்டுறவுச் சங்க புதிய படகுகளை வாங்கி படகுச் சேவையய்டை தொடங்கியது ஆரம்பத்தில் சிறப்பாக செயல் பட்டது என்றே சொல்லலாம்.

மக்கள் கொஞ்சம் அச்சமின்றி அந்த படகுகளில் பயணித்தனர்.அதுவும் சில வருடங்களில் கட்டையில் ஏற மூதுற் போக்குவரத்துச் சபை படகு சேவையயை தொடங்கியது அது இன்னமும் வசதியானதாக அமைய கடல் பிரயாணம் ஆப்த்து குறைந்ததாய் அமைந்தது ஆனாலும் அவற்றின் சேவை மட்டுப் படுத்தப் பட்டதாய் அமைய சிறிய படகுகள் தொடர்ந்தும் சேவையில் இருந்தன அவை ஆபத்தான விளையாட்டாகவே இருந்தது.

பின்னாளில் துறைமுக அதிகார சபையின் கப்பல் சேவை மனதுக்கு மகிழ்ச்சி அளிப்பதாய் அமைந்தது ஆனாலும் யுத்த காலங்களில் மூதூர் துறை முகமே தமிழ் மக்களுக்கு அச்சமூட்டும் ஒரு இடமாகவே இருய்ந்த்தது யுத்தம் முடிவுக்கு வரும் வரை பலர் அந்த இடத்தில் வைத்தே கடத்தப் பட்டு கொலை செய்யப் பட்டும் காணாமலும் போயினர்.

கடல் பயண வழியில் இடையில் கடற்படையினர் வந்து வழி மறித்து சோதனையிடுவதும் பலரை கைது செய்வதும் அப்படி கைது செய்யப் பட்ட பலர் காணாமல் போனதும் மூதூர் தமிழ் மக்கள் மறக்காத ரணத்தின் வடுக்கள்.பல ஆட்டிக் கொடுப்புகளும் தலையாட்டிகளும் கடல் வழிப் பயனத்தின் பயங்கர முகங்கள்.

இந்த பின்னணியில்தான் இருபத்தைந்து வருடங்களுக்கு முன் மூதூர் திருமலை பயணத்தின் மிக பயங்கரமான கோர விபத்து நடந்த நினைவழியா நாள் இன்று.மூதூர் கடல்பயண மரணத்தின் 25,ம் ஆண்டு நினைவு தினம் இன்றுதிருகோணமலை மாவட்டம் மூதூர் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத சோகத்த சுமந்த நாள். விட்டு அகலாத சோகமும், கண்ணீரும், அவலமாய் முடிந்த ஒரு பயணத்தின் மொழியிது.

1993 ஜனவரி 25ஆம் திகதி அன்று பிற்பகல் 2.30 மணியளவில் திருகோணமலை துறைமுகத்திலிருந்து வழக்கம் போலவே அதிக பிரயாணிகளுடன் ஒரு படகு புறப் பட்டது மூதூரை நோக்கி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட 130 பயணிகளுடன் பயணித்த தனியார் இயந்திரப் படகு அது.மாரிக் கடல் குமுறிக் கொண்டே துறை முகத்தை தாண்டி வழி விட்டது.

கடல் எவ்வளவு கொந்தழித்தாலும் நம்பிக்கையுடன் பயணிக்கும் நம்மவர்கள் பல வேளைகளில் கடல் அதிக கொந்தழிப்பால் கிண்ணியா கரையில் ஒதுங்குவதும் உண்டு.அன்றும் அப்படித்தான் வானம் இருட்டாகி மழையும் தூறத் தொடங்கிய போது படகு பாதாள மலையயை நெருங்கிய வேளை இடியும் மின்னலும் காற்றுமாய் கடல் கனத்து கிழிந்து அலைகள் உயர எழுந்து படகை தூக்கி எறிய முருகா,யேசுவே ,அல்லா என தங்கள் கடவுளர்களை அழைக்க படகு தூக்கி வீசப் பட அலையில் அள்ளுண்டு போனது உயிர்கள் பல.

படகில் பயணம் செய்தவர்களில் 30 பேர் மட்டுமே காப்பாற்றப்பட்டதுடன் 13 பேரின் சடலங்கள் மட்டுமே மக்களால் மீட்கப்பட்டது. இந்த அவலம் நிகழ்ந்து 25 ஆண்டுகள் ஓடிப் போனாலும் நினைக்கும் போதெல்லாம் உள்ளம் துணுக்குறும் உயிர் வந்து மீளும் தருணங்கள் இவை கொட்டியாரத்து மக்கள் மனங்கள் என்றும் மாறாத சோக நினைவை சுமந்தவர்களாய் இன்றும்.

இந்த சம்பவத்தில் பல உறவினர்களும் நண்பர்களும் இறந்து போனார்கள் .எங்கள் நெருங்கிய உறவினர் கோவிந்த மாமாவின் மகள் யோகா எங்கள் பக்கத்து வீடு எப்படி அவளை மறக்க முடியும் நான் தூக்கி வளர்த்த பிள்ளை அவள் .

வர்ணவதி அக்கம்மாவின் பேத்தி சந்திராவின் மகள் என் தங்கையுடன் ஒன்றாய் படித்தவள் ஜோதி தோழர் வைரவநாதனின் மனைவி வசந்தி, தோழர்கள் கவிஞன்,செளந்த்ரராஜனின் தங்கை,என் மாணவன் மல்லிகைத்தீவு உதயகுமாரின் சகோதரி,மூதூரின் முஸ்லிம் நண்பர்களின் உறவுகள் என எத்தனை உறவுகள் எல்லோருக்கும் இந்த சிறு கட்டுரை அஞ்சலியாக சமர்ப்பணம்பாலசுகுமார்மேனாள் முதன்மையர்கலை கலாசார பீடம் கிழக்குப் பல்கலைக் கழகம்