வாட்ஸ் அப் புதிய ஸ்டிக்கர் பேக் அறிமுகம்: உலக சுகாதார மையத்துடன் இணைந்து முயற்சி

ஊரடங்கால் வீட்டிலேயே நேரத்தைக் கழிக்கும் மக்களுக்காக சமூக வலைதளங்கள் புதிய வசதிகளை, அம்சங்களை அறிமுகம் செய்து வருகின்றன. அப்படி, வாட்ஸ் அப் செயலியில், வீட்டிலேயே இணைந்திருப்போம் என்பதை வலியுறுத்தும் விதமாக புதிய ஸ்டிக்கர்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன.

இந்த கரோனா வைரஸ் நெருக்கடி காலத்தில் மக்களின் உணர்ச்சிகள் என்ன, எதிர்வினைகள் என்ன என்பதைச் சொல்லும் வண்ணம் புதிய ஸ்டிக்கர் தொகுப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்டிக்கர்கள் இந்தி, அராபியம், ஜெர்மானியம், பிரெஞ்ச், இத்தாலி உள்ளிட்ட 10 மொழிகளில் கிடைக்கும்.

இந்த ஸ்டிக்கர்களை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சியையும் ஆர்வத்தையும் தெரிவித்துள்ள வாட்ஸ் அப் நிறுவனம், இது கோவிட்-19 நெருக்கடி காலத்திலும், அதற்குப் பிறகும் கூட மக்கள் தங்கள் எண்ணங்களைத் தெரிவித்து இணைந்திருக்க உதவும் என்றும், இவற்றை நகைச்சுவையாக, விழிப்புணர்வாக எப்படி வேண்டுமானாலும், மொழி, வயது வித்தியாசமின்றி பயன்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்த ஸ்டிக்கர்களில் கையைக் கழுவுதல், சமூக விலகல், உடற்பயிற்சி, மருத்துவர்களைக் கொண்டாடுதல் உள்ளிட்ட விஷயங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.