கடல் அட்டை வளர்ப்பும், தீவக கடல்களின் பொருத்தப்பாடும்:– அவைகளின் அரசியலையும், சூழலியலையும் முன்வைத்து – 02

ஏ.எம். றியாஸ் அகமட் (அம்ரிதா ஏயெம்) (சிரேஸ்ட விரிவுரையாளர், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்)

உள்ளுர் அறிவு:

பெனடிக்ற் சின்னமணியை இருத்தி உரையாடுவதற்கு தயாரானேன். றெஜினோல்டும், சசியும் அருகே இருந்தார்கள். கடுமையா களைச்சிப் போயிருப்பயள். உடுப்ப மாத்திக்கி, றெஸ்ட் எடுத்துற்றுக் கதைப்பம் என்றார். நான் களைக்கல்ல. கதைப்பம் என்றேன். என்ன குடிப்பம் என்றார். பிளேன்ரி என்றேன். இஞ்சி போட்டதா, வேர்க்கொம்பு போட்டதா?. வேர்க்கொம்பு என்றேன். சாப்பாட்டுக்கும், நான் தங்குதவற்குமான அறைக்கும் மிகுந்த கவனமெடுக்க ஓடித்திருந்தார்.