மரம்

ஆசிரியர்கள் அவரை மரமண்டை … பேசாம போய் மரக்கடையிலேயே உக்காரு என்றும் திட்டுவார்கள். பள்ளிக் காலம் முடிந்து ஆளுக்கு ஒரு திசையில் சென்றுவிட்டோம். நமது நண்பர் தனது தந்தையின் மரக்கடையிலேயே பொறுப்பெடுத்துக் கொண்டார். பின்னர் ஆறேழு வருடங்கள் கழித்து அவரை ஒரு முறை சந்திக்கும் போது சொந்த அத்தை மகளை திருமணம் எல்லாம் முடித்து கைக் குழந்தையுடன் இருந்தார். 28 வயதுக்குள் தனி வீடு, சொந்தமாக ஒரு புதிய மரக்கடை, கார், வேலையாட்கள், வெளிநாட்டுப் பயணம் என சகல வசதிகளுடன் இருந்தார். யார் வாழ்க்கையில் உருப்படமாட்டார், மரமண்டை என்று இகழப்பட்டாரோ அவரே எங்கள் அனைவரையும் விட உச்சத்தில் இருந்தார்.

கிட்டத்தட்ட இருபது ஆண்டு இடைவெளியில் மீண்டும் அவரை சந்தித்தேன். என் கண்களை நம்ப முடியவில்லை. ஆள், மிகவும் தளர்ந்து சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு ஒரு வித மன நோயாளியைப் போல இருந்தார். ஆதரவாக கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருந்தேன். அவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். மிகச் சிறிய வயதிலேயே திருமணம் முடித்த காரணத்தால் பிள்ளைகள் எல்லாம் இப்போதே பெரியவர்களாக இருந்தார்கள். ஆனால், குடும்பம் பல வேறு சிக்கல்களில். ஐந்து வருடம் முன்பு சிறுநீரக கோளாறில் மனைவி இறந்து விட்டார். மூத்த மகன் கல்லூரியில் படிக்கும் போது சாலை விபத்தில் ஒரு காலை இழந்து விட்டார். இரண்டாம் மகனுக்கு பிறவியிலேயே கொஞ்சம் மன நல கோளாறு, மகள் அமெரிக்க மாப்பிளைக்கு மணமுடிக்கப் பட்டு, இரண்டே வருடத்தில் விவாகரத்தை பெற்று வீட்டில் குழந்தையுடன் இருக்கிறார். இப்போது நண்பரோ, கோடிகளின் அதிபதி என்றாலும் ஜாதக புத்தகத்தை கையில் தூக்கிக் கொண்டு கோவில் கோவிலாக பரிகார பூஜைகள் செய்து வருகிறார்.

எங்கள் சந்திப்பில் அவரைப் பற்றிய பல விஷயங்கள் பேசிய பின் என்னை பற்றிய பேச்சு வந்தது. ஒரு கால கட்டத்தில் மனதுக்கு ஒவ்வாத வேலையை விட்டு விலகியதை பற்றி பேசியதும், அவரால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இரவி, இந்த மரக்கடை தொழில் எனக்கும் ரொம்ப நாளாகவே பிடிக்கவில்லை. கடை முழுசும் மரங்கள் வெட்டி வெட்டி அடுக்கி இருக்கிறதை பார்க்கும் போது எல்லாம் ஒரு பிணக்குவியலுக்கு நடுவே இருக்கிறதை போலவே தோணும். ஆனாலும், எனக்கு இதை தவிர வேறு எதுவும் தெரியாதே… இத்தனை மரத்தை வெட்டி அழிச்சி வயிறு வளர்த்த பாவமோ என்னவோ என் குடும்பம் இப்படி சீரழிஞ்சி கிடக்கு என்று அழுது விட்டார். அவரை ஆறுதல் படுத்தவே சில மணி நேரம் ஆனது.

பின்னர், அருகில் இருந்த இன்மையில் நன்மை தருவார் கோவிலுக்குப் போனோம். மிகச் சிறிய வயதில் இருந்தே எல்லாவற்றையும் வியாபாரமாகவே பார்த்துப் பழகிய அவருக்கு என்ன சொல்வது என்று யோசித்தேன். மரம் என்னும் உயிர்களை வெட்டி வெட்டி அதையே வியாபாரமாக பார்த்த காரணத்தாலேயே குடும்பம் பல இன்னல்களில் இருப்பதாக உணரும் மனிதர் எந்த கோவில் போய் எப்படி பாவங்களை தொலைக்க முடியும். மனதின் பிரச்சனை ஆரம்பித்த இடத்திலேயே முடிவையும் தேட வேண்டும். எனவே நண்பருக்கு மர நாற்றுக்களை உற்பத்தி செய்யும் பண்ணை ஒன்றை ஆரம்பிக்கச் சொல்லி அறிவுறுத்தினேன். உற்பத்தி செலவு என்னவோ அதை தாண்டி பெரிய லாபம் இல்லாமல் அனைவருக்கும் மரகன்றுகளை கொடுங்கள் என்றேன்.

என்னுடைய இந்த கருத்து அவருக்கு மிகவும் பிடித்துப் போனது. இன்னும் ஓரிரு மாதங்களில் இதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுப்பதாக உறுதி சொன்னார். எதோ என் மூலமாக ஒரு தெய்வ வாக்கு கிடைத்த சந்தோசத்தில் அவர் என்னை பிரிந்து சென்றார். விரைவில் அவர் மூலமாகவும் இந்த இயற்கைக்கு சில நன்மைகள் நடக்கட்டும் என்று வேண்டிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

நண்பரைப் பற்றி மறந்தாலும் அவரின் வேதனைகளின் ஊற்றாக இருந்த மரம் வெட்டி செய்யும் வியாபாரம் அத்தனை பாவமானதாக இருக்குமா என்று வழக்கம் போல கூகுளை அலசினேன். எனக்கு கிடைத்த பதில்கள் …..

பச்சை மரத்தை வெட்டுபவருக்கு வந்து சேரும் பாவங்கள்:-

அரச மரம் = அற்ப ஆயுள்,விபத்தில் மரணம்,

ஆல மரம்= வம்சம் அழியும்

இலந்தை மரம்=செல்வம் கொள்ளை போகும்

ஈச்ச மரம்= மாரடைப்பு,நாவரட்ச்சியால் மரணம்

உதிய மரம்= தலையில் அடிபட்டு மரணம்

ஊஞ்ச மரம்= மருத்துவம் பலன் தராமல் மரணம்(தவறான மருத்துவம்)

எலுமிச்சை மரம்=இடி விழுந்து மரணம்

புளிய மரம்= ரத்த கொதிப்பு,மாரடைப்பால் மரணம்

வேப்ப மரம்=காமாலை,உடம்பில் புண் ஏற்பட்டு மரணம்

பனைமரம்= வம்சம் அழியும்

தென்னை மரம்= வளர்ந்த குழந்தைகள் கண்முன்னே இறக்கும்

புங்க மரம் = தீராத நோய் வரும்

… … …

ஆக மொத்தம் எந்த மரத்தை வெட்டினாலும் பாவம் நிச்சயமாம். இதை படிக்கும் போது நண்பர் காளிமுத்து தங்களாச்சேரி கிராமத்தில் சாலை ஓரங்களில் இருந்த பனை மரங்களை விழுங்கிய சில குடும்பங்களில் நிகழ்ந்த துர்மரணங்கள் பற்றி சொன்ன செய்திகள் உண்மையாக இருக்குமோ என்று கருதத் தோணுகிறது. நண்பர் கிருஷ்ணமூர்த்தி கூட இது போன்ற சில மர முழுங்கிகளைப் பற்றி பேசி உள்ளார். அவர்களின் குடும்பங்களும் நாசமானது தெரிந்ததே. இப்படி சில நூறு மரங்களை வெட்டி சாய்த்து வயிறு வளர்த்தவர்கள் நிலையே இப்படி என்றால் சாலையோரங்களில் இருக்கும் ஆயிரம் ஆயிரம் மரங்களை அழிக்கும் திட்டங்களை இடுபவர்கள் என்ன நிலைக்குப் போவார்கள். வாழ்வின் தேவைகளுக்காக மரங்களை வெட்டுவதற்கும், அதையே வியாபாரமாகச் செய்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.

மரங்களை வெட்டினால் பாவம் வரும் என்று சொல்வது எல்லாம் உண்மையோ, பொய்யோ எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்த ஒரு செவ்விந்திய பழமொழிஎன்ன என்றால் “உயிர் வாழ்விற்காக இயற்கையில் இருந்து நீங்கள் ஒன்றைப் பெறலாம்… ஆனால், உங்கள் குழந்தைகள் உயிர் வாழ அங்கே இயற்கையை மிச்சம் வையுங்கள். ஏன் என்றால் இயற்கை என்பது அடுத்த தலைமுறைகளுக்கான சொத்து. அதை அனுபவிக்க மட்டுமே உங்களுக்கு உரிமை உள்ளது… அழிக்க அல்ல”. எந்த சிந்தனையும் இல்லாமல் இயற்கையின் மீது மனிதர்கள் பேராசை கொண்டு நடத்தும் வெறியாட்டம், அடுத்த தலைமுறையை சவக்குழிகளில் நிரந்தரமாக தள்ளிவிடும். –

(Raveendran Natarajan.)