‘இலங்கைத் தமிழ் அரசியலில் திருப்புமுனை’ சுரேன் எம்.பி தெரிவிப்பு

பத்தரமுல்லையிலுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் ஒவ்வொரு பொசன் மற்றும் வெசக் தினங்களிலும் கைதிகள் விடுவிக்கப்படுகின்றமை வழமையான விடயம் என்றாலும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீ்ழ் கைது செய்யப்பட்டு குற்றவாளியாக இனங்காணப்பட்ட 16 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும் என்றார்.

இந்த விடயம் தொடர்பில் அண்மையில் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் பாராளுமன்றத்தில் நடந்துகொண்ட விதம் துயரமானதென தெரிவித்த அவர் தான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவராக இருந்தாலும் கூட தான் ஆளுநராக இருந்த காலத்திலும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று முன்னெடுத்த முயற்சிகளை தமிழ்த் தேசியவாத அரசியல்வாதிகள் ஏற்க மறுக்கின்றனர் என்றார்.

இன்னும் 106 அரசியல் கைதிகள் சிறையில் உள்ளதாகவும் அவர்களின் விடுதலை குறித்தும் நாம் கலந்துரையாடவுள்ளதுடன் காணாமல் போனோரைப் பற்றிய தீர்மானங்களையும் எடுக்க வேண்டும் என்றார்.

மீதமுள்ள அரசியல் கைதிகளுள் சிலர் நேரடியாகவே பாரிய குற்றங்களைப் புரிந்தவர்கள் என நிரூபிக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகிறார்கள். அவர்கள் தொடர்பிலும் நாம் மீளாய்வு செய்து ஒவ்வொருவரையும் விடுதலை செய்யக்கூடிய முயற்சியில் இருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடனும் திட நம்பிக்கையுடனும் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.