இலங்கை: கொரனா செய்திகள்

நாட்டில் தற்போது காணப்படுகின்ற கொரோனா நிலைமை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டமொன்று ஜனாதிபதி தலைமையில் நடக்கின்றது. இந்த சந்திப்பு தற்போது ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. முன்னதாக, சுகாதார தரப்பினர்கள் நாட்டை சில நாட்களுக்கு முடக்கி கொரோனாவை கட்டுப்படுத்துமாறு கோரிக்கை விடுத்து வந்திருந்தனர். இந்த நிலையில், இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அம்பாறை மாவட்டத்தில் தற்போது கொரோனாத் தொற்றுப் பரவலானது தீவிரமடைந்து வருகின்றது. நேற்றைய தினம் (11) மாத்திரம் இம்மாவட்டத்தில் 411 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், இதுவே இம்மாவட்டத்தின் உச்ச எண்ணிக்கை எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ”மக்கள் அலட்சியப் போக்குடன் செயற்படாது, மிகக் கவனமானதும் இறுக்கமானதுமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது காலத்தின் தேவையாகும்” என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ.சுகுணன்
தெரிவித்தார்.

யாழ்ப்பாணம்-பருத்தித்துறையில் உள்ள மதுபான விற்பனை நிலையங்கள் இரண்டுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இன்று (12) முதல் 14 நாள்களுக்கு அவ்விரு மதுபான விற்பனை நிலையங்களும் திறக்கப்படாது என பருத்தித்துறை பொதுசுகாதார பரிசோதகர் காரியாலயம் அறிவித்துள்ளது. பருத்தித்துறையில் கோட்டு முற்சந்தி மற்றும் அனலைத்தீவு பி​ரதேசத்திலுள்ள மதுபான விற்பனை நிலையங்களே இவ்வாறு பூட்டப்பட்டுள்ளன.