இலங்கை: மழை நிலவரம்

நாட்டில் 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று (10) பிற்பகல் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பதுளை, கொழும்பு, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, மாத்தளை, கண்டி, நுவரெலியா, குருநாகல் மற்றும் காலி மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மணித்தியாலங்களாக நாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக 13 நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அநுராதபுரம், வவுனியா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

நீர் மட்டம் உயர்வதால், மல்வத்து ஓயாவின் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை அவதானமாக இருக்குமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 10 வான் கதவுகள் நான்கு அடிக்கு திறக்கப்பட்டுள்ளன என்றும் அங்கமுவ மற்றும் மஹாவிலச்சிய நீர்த்தேக்கங்கள் மற்றும் 20 குளங்கள் நிரம்பி வழிகின்றன என்றும்  திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் பி அபேசிறிவர்தன தெரிவித்தார்.

நாட்டில் கடந்த இரு நாள்களாக பெய்து வந்த மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளில் கடற்படையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்படி, கடந்த 48 மணி நேரத்தில் அதாவது நேற்று முன்தினம் (08) முதல் இன்று (10) வரையான காலப் பகுதியில் 288 பேர், கடற்படையினால் மீட்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட பொதுமக்கள், பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர்களுக்கான உடனடி நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

களுத்துறையின் பரகொட, இரத்தினபுரி புதிய நகரம், காலியின் உடமலத்த, பாலவிய வணாத்தவில்லு, எலுவன்குளம், மன்னார் வீதி, கல்பிட்டி, உடுபத்தாவ, தாரவில்லுவ, கொடதெனியாவ, புத்தளம், குருநாகல் ஆகிய இடங்களில் இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.