எஸ்.பி பாலசுப்பிரமணியம் குணமடைந்தாரா…? சரண் விளக்கம்

கடந்த ஐந்தாம் திகதி சென்னை சூளைமேடில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

இதையடுத்து, செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவி மூலம் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

கடந்த இரண்டு நாட்களாக எஸ்பிபி உடல்நிலை, சீராக உள்ளது என்று அவரின் மகன் சரண் தெரிவித்திருந்தார். இது தங்களுக்கு ஆறுதல் அளிப்பதாகவும், அனைவரது பிரார்த்தனைகளும் தங்களுக்கு உதவியதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன், தனது தந்தைக்காக பிரார்த்திக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் எஸ்.பி.பி.சரண் கூறியிருந்தார்.

இன்று காலை எஸ்.பி பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என ரிசல்ட் வந்திருப்பதாக சினிமா மக்கள் தொடர்பாளர் நிகில் டுவீட் செய்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள எஸ்.பி.பி சரண், “எப்போதும் மருத்துவர்களிடம் கலந்து ஆலோசித்த பின்னர், தந்தையின் உடல்நலம் பற்றி வீடியோ விடுவேன்.

ஆனால், இன்று காலை எஸ்.பி.பி.க்கு கொரோனா நெகடிவ் வந்துவிட்டதாக தகவல்கள் பரவின. நெகடிவ் அல்லது பாசிடிவ் என்பதல்ல விஷயம். அவர் தற்போதும் எக்மோ மற்றும் வெண்டிலேட்டர் உதவியுடனே சுவாசித்து வருகிறார். அவரின் உடல்நலம் பற்றிய தகவல் எனக்கே முதலில் வரும்.

ஆகவே, தவறான செய்திகளை வெளியிடுபவர்களிடம் கவனமாக இருங்கள்” என்று கூறியுள்ளார். எனினும், எஸ்.பி.பி.க்கு கொரோனா நெகடிவ் என்ற தகவல் உண்மையா என்றும் சரண் விளக்கமாக தெரிவிக்கவில்லை.