ஐ.நா தீர்மானம் நிறைவேற்றம்; சிரியாவுக்குள் ஐ.நா கண்காணிப்பாளர்கள்

சிரியாவில் முற்றுகைக்குள்ளாகியுள்ள பொதுமக்கள் வெளியேறுவதைக் கண்காணிக்கவும் நகரங்களில் எஞ்சியுள்ள மக்களின் நலன்களைக் கண்காணிக்கவும், ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பாளர்களை அனுப்புவதற்கான தீர்மானத்தை, ஐ.நா பாதுகாப்புச் சபை நிறைவேற்றியுள்ளது. இது தொடர்பான தீர்மானத்தை, ஐக்கிய அமெரிக்கா கொண்டுவரவிருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு வெளியிட்ட ரஷ்யா, தன் சார்பில் புதிய தீர்மானமொன்றைச் சமர்ப்பிக்க முடிவு செய்திருந்தது. எனினும், பிரான்ஸும் ரஷ்யாவும் இணைந்து தயாரித்த தீர்மானம், திங்கட்கிழமையன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, அலெப்போவில் ஏற்கெனவே காணப்படும் 100க்கும் அதிகமாக ஐ.நா மனிதாபிமானப் பணியாளர்கள், இதற்காகப் பயன்படுத்தப்பட முடியுமென, ஐ.நா அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வெளியேற்றத்தைக் கண்காணிப்பதே இந்தத் தீர்மானத்தின் முக்கிய அம்சம் என்ற போதிலும், பல்லாயிரக்கணக்கானோர், கிழக்கு அலெப்போவிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், கண்காணிப்பாளர்களை ஐ.நா அனுப்பும் போது, வெளியேற்றம் நிறைவடைந்துவிடும் என்ற கருத்தும் உள்ளது. ஏனெனில், வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட வெளியேற்றும் பணிகள், தடங்கலுக்குப் பின்னர், ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் இடம்பெற்று வருகின்றன. திங்கட்கிழமை மாத்திரம், 7,000க்கும் மேற்பட்டோர், அலெப்போவை விட்டு வெளியேறியதாக அறிவிக்கப்படுகிறது.

மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகத்தின் தகவலின்படி, வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட வெளியேற்ற நடவடிக்கையைத் தொடர்ந்து, 4,000 போராளிகள் உட்பட 14,000 பேர் வெளியேறியுள்ளனர். அத்தோடு, குறைந்தது 7,000 பேர், அங்கு இன்னமும் உள்ளனர் எனவும் அக்கண்காணிப்பகம் தெரிவிக்கிறது.

அந்த அமைப்பின் இந்தத் தகவல் சரியாயின், கிழக்கு அலெப்போவில் 21,000 பேர் மாத்திரமே காணப்பட்டனர். ஆனால், ஐ.நா உள்ளிட்ட அனேக அமைப்புகள், 50,000 பேர் வரை காணப்படுகின்றனர் என முன்னர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.