கறுப்பு பூஞ்சைக்குப் பின் வெள்ளை பூஞ்சை வருகிறது

ராஜஸ்தான், தெலங்கானா போன்ற மாநிலங்கள் இதனை பெருந்தொற்று நோயாக அறிவித்துள்ளன. கறுப்பு பூஞ்சை நோயை தமிழக அரசும் தொற்று நோயாக அறிவித்துள்ளது.

கறுப்பு பூஞ்சை

ஒடிசா அரசு, கறுப்பு பூஞ்சை நோயை தொற்று நோய்கள் சட்டம் 1897 இன் கீழ் அறிவிக்கப்பட்ட ஒரு தொற்று நோயாக பட்டியலில் சேர்த்துள்ளது. இப்படி ஒரு பக்கம் கருப்பு பூஞ்சை நோயோடு போராடும் நிலையில், பீகார் தலைநகர், பாட்னாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்ட 4 பேருக்கு வெள்ளை பூஞ்சை நோய் பாதிப்பு இருப்பது அறியப்பட்டுள்ளது.

இனப்பெருக்க உறுப்பில் பாதிப்பு

கறுப்பு பூஞ்சை நோயை விட வெள்ளை பூஞ்சை நோய் கொடியதென கூறப்படுகிறது. நோய் பாதித்த 4 பேரில் ஒருவர் பாட்னா நகரில் பிரபல சிகிச்சை நிபுணராகும். இந்த வெள்ளை பூஞ்சை நுரையீரல் தொற்று ஏற்பட காரணமாகிறது. தோல், நகங்கள், வாயின் உட்புற பகுதி, வயிறு, குடல், இனப்பெருக்க உறுப்புகள் மற்றும் மூளை உள்ளிட்ட உடல்பாகங்களில் பெரும் பாதிப்புகளை வெள்ளை பூஞ்சை ஏற்படுத்த கூடும்.

கறுப்பு பூஞ்சையை விட ஆபத்தானது

“பீகார், பாட்னாவில் இந்த புதிய பூஞ்சை நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, மேலும் இந்த தொற்று கறுப்பு பூஞ்சை விட ஆபத்தானது” என்று பராஸ் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் மற்றும் சுவாச மருத்துவம் / நுரையீரல் மருத்துவ தலைமை மருத்துவரான அருனேஷ் குமார் கூறியுள்ளார்.

வெள்ளை பூஞ்சைக்கு என்ன காரணம்?

“நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் இந்த தொற்று ஏற்படலாம்” என்று டாக்டர் குமார் கூறுகிறார், அல்லது சுத்தமற்ற தண்ணீர் போன்றவையும் நோய் பரவலை ஏற்படுத்தக் கூடும். எனவே, “சுகாதாரம் முக்கியம்,” என்று அவர் அறிவுறுத்துகிறார்.
கொரோனா போலவே அறிகுறி

“வெள்ளை பூஞ்சை நோயாளிகளுக்கு கொரோனா போன்ற அறிகுறிகள்தான் தென்படுகின்றன. ஆனால் ஆர்டிபிசிஆர் சோதனையில் நெக்கட்டிவ் என்றுதான் வரும். ஆனாலும், மெத்தனமாக இருக்கக் கூடாது. சி.டி-ஸ்கேன் அல்லது எக்ஸ்ரே மூலம் நோய்த்தொற்றைக் கண்டறிய முடியும், ” என்று மருத்துவர் அருனேஷ் குமார் கூறுகிறார்.

கொரோனா நோயாளிகள் ஜாக்கிரதை COVID-19 நோயாளிகளுக்கு வெள்ளை பூஞ்சை தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது, ஏனெனில், இது நுரையீரலைப் பாதிக்கிறது மற்றும் கொரோனா வைரஸைப் போன்ற அறிகுறிகளும் உருவாக்கப்படுகின்றன. “நீரிழிவு நோய், புற்றுநோய் நோயாளிகள் மற்றும் நீண்ட காலத்திற்கு ஸ்டெராய்டுகளை உட்கொள்பவர்கள் போன்ற நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களை எளிதாக தாக்கும் என்பதால், சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இது ஆக்ஸிஜன் சப்போர்ட்டில் சிகிச்சை பெறும் கொரோனா வைரஸ் நோயாளிகளையும் பாதிக்கிறது, “என்று அவர் கூறுகிறார். ஒரே ஒரு வைரசில் ஆரம்பித்து, அது இப்போது பல்வேறு பிரச்சினைகளுக்கும் காரணமாகிவிட்டது என்பது மட்டும் புரிகிறது.