காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் 16ஆம் திகதி பொறுப்பேற்பு

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி வரும் 16ஆம் திகதி பொறுப்பேற்கிறார். கட்சித் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான அறிவிப்பு நேற்று அதிகாரபூர்வமாக வெளியாகியது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த 17 ஆண்டுகளாக அப்பதவியில் உள்ளார். சமீபகாலமாக அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து கட்சியின் துணைத் தலைவராக இருந்துவரும் ராகுல் காந்தியை தலைவராக்க வேண்டும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல்கள் நடந்து முடிந்ததையடுத்து தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. தலைவர் பதவிக்கு கடந்த 1-ம் திகதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. ராகுல் காந்தி கடந்த 4-ம் திகதி வேட்புமனுவை தாக்கல் செய்தார். மொத்தம் தாக்கலான 89 வேட்புமனுக்களும் ராகுலை தலைவர் பதவிக்கு அறிவிக்கக் கோரியே தாக்கல் செய்யப்பட்டன. ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிட்டால் 16-ம் திகதி தேர்தல் நடக்கும் என்றும் 19-ம் திகதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. மனுக்களை வாபஸ் பெற 11-ம் திகதி (நேற்று) கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் ராகுலைத் தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியாகியது. காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழ் எதிா்வரும் 16ஆம் திகதி சோனியா காந்தியின் முன்னிலையில் ராகுலிடம் வழங்கப்படும் என்று கட்சியின் மத்திய தேர்தல் அமைப்பின் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் தெரிவித்தார்.

எதிா்வரும் 16ஆம் திகதி காலை 11 மணி அளவில் காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ராகுலிடம் சோனியா காந்தி முறைப்படி ஒப்படைப்பார். உடனடியாக கட்சித் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்பார் என்றும் பின்னர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நாடு முழுவதையும் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர்களை ராகுல் சந்திப்பார் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.