காணி விடுவிப்புப் பேச்சுவார்த்தை தோல்வி

“பலாலி விமான நிலையத்தைச் சூழ்ந்து காணப்படும் 4 ஆயிரம் ஏக்கர் பகுதியை விடுவிப்பது தொடர்பாக இன்று (21) நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தில் முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்கள் மற்றும் திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவித்தல் தொடர்பிலான மாவட்ட உயர்மட்டக் கலந்துரையாடல், யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (21) இடம்பெற்றது. கூட்டத்தின் நிறைவில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “பலாலி விமான நிலையத்தைச் சூழ்ந்த 4 ஆயிரம் ஏக்கர் பகுதி விடுவிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை. பலாலி விமான நிலையத்தை விஸ்தரிப்பதனால் அவற்றை விடுவிக்க முடியாத சூழ்நிலை காணப்படுகிறது.

விமான நிலையம் விஸ்தரிக்கப்படுமா, இல்லையா, விஸ்தரிக்கப்படுமானால் அதற்கு எவ்வளவு காணிகள் தேவைப்படும் என்பது தொடர்பில் உயர் மட்டத்துடன் கலந்துரையாடி முடிவுகள் மேற்கொள்ளப்படும்.

விமான நிலையம் விஸ்தரிக்கப்படுமானால் தனியார் காணிகளைச் சுவீகரிக்க கூடிய சூழல் உள்ளது. இது தொடர்பான தரவுகள், விவரங்கள் தற்போதும் எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன. அதனை வைத்துக்கொண்டு மக்களுடனும் கலந்தாலோசித்து இது தொடர்பில் மேற்கொள்ளவேண்டிய மாற்று நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வோம். அதன்படி நாங்கள் எடுக்கின்ற முடிவுகளின் அடிப்படையில் படைத்தரப்பினருடன் பேச்சு வார்த்தை நடத்துவோம்” என்றார்.